2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதை

Administrator   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய ‘தனித்த’ அரசியல் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஏழு வருடங்களாகின்றன. ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்டு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்னும் சில முக்கியஸ்தர்களையும் இணைத்துக் கொண்டு, 2010 பொதுத் தேர்தல்க் காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவினார்.  

இதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய உரையாடல்களில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘மாற்று’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. அதற்கு முன்னணி தகுதியானதா? என்கிற கேள்வி இன்னமும் இருக்கின்றது.   

ஆனால், முன்னணியைத் தங்களுடைய தேர்தல்க் கால எதிரியாகத் தமிழ்த் தேசியப் பரப்பில் காட்டிக் கொள்வதில் யாரைக் காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக இருந்து வருகின்றது. அது, எந்தவித அதிர்வினையும் ஆற்றமுடியாத பலமற்ற எதிராளியை வைத்துக் கொள்ள விரும்பும் மனநிலையின் போக்கில் தொடர்வது. அதற்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பின் தலைமையும் முக்கியஸ்தர்களும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.

அது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் முன்னணியின் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் உள்நாட்டு, புலம்பெயர் முக்கியஸ்தர்களுக்கும் தெரியும். ஆனால், கூட்டமைப்பு ‘முன்னணி’யைச் சுருக்க நினைக்கும் இடத்திலிருந்து வெளியேறி மக்களை அடைவது, ஆளுமை மிக்க அரசியல் சக்தியாக வளர்வது உள்ளிட்டவை தொடர்பிலான சதிராட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றத்தினையும் காட்டவில்லை. மாறாக, வீழ்ச்சியின் விரைவுப் பாதையே முன்னணியை நோக்கி திறந்திருக்கின்றது என்று தோன்றுகின்றது.   

இந்த விடயத்தினை இந்தப் பத்தியாளர் கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை நோக்கிக் கூறியிருந்தார். முன்னணி தன்னுடைய அரசியல் செயற்பாடு மற்றும் திட்டமிடல்கள் தொடர்பில் மறு வாசிப்பு செய்ய வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது. இதனைத் தவிர்த்துவிட்டு எந்தவித கனவையும் எதிர்காலத்தில் காண முடியாது.  

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்ட தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சி கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளாக ஒளிபரப்பானது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீளும் அந்த நிகழ்ச்சியை இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒளிபரப்பியிருந்தார்கள்.   

அந்த நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தானும் கலந்து கொண்டிருந்தார். ஆனாலும், 120 நிமிடங்கள் கொண்ட அந்த நிகழ்ச்சியில் சுமார் 30 நிமிடங்கள் அளவில் மாத்திரமே அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மிகுதி 90 நிமிடங்கள் செல்வராசா கஜேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது. இரண்டாவது பாகத்தில் கிட்டத்தட்ட முழுவதுமாக காதர் மஸ்தான் எந்தக் கேள்விளையும் எதிர்கொள்ளாமல், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவரையும் செல்வராசா கஜேந்திரனையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  

இந்த நிகழ்ச்சி முழுவதும் செல்வராசா கஜேந்திரன் ஒருவித குதூகல மனநிலையில் இருந்தார். எதிர்வாதமொன்றுக்கான எந்தவித ஏற்பாடும் அற்ற மேடையொன்றில் தான் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியை இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் நீட்டிச் சென்றிருந்தாலும் அவர் அந்த வேகத்தில் பேசிக் கொண்டியிருப்பார்.   

அது, கடந்த ஏழு வருடங்களில் தாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்கிற உணர்நிலையின் போக்கில் எழுவது. கிடைத்த சந்தர்ப்பத்தை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு எதிராளியைத் தாக்கிவிட வேண்டும் என்கிற தோரணையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அரசியலில் எதிராளியை விமர்சிப்பது என்பது அடிப்படையே. ஆனால், விமர்சனங்கள் மாத்திரம்தான் அரசியல் என்று புரிந்து வைத்துக் கொண்டிருப்பதுதான் முன்னணியின் தொடர் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை கடந்த ஏழு ஆண்டுகள் அவருக்கு கற்றுக் கொடுக்கவில்லை என்று தோன்றுகின்றது.   

ஆனால், முன்னணியின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வழிநடத்துநர்களுக்கு அந்த விடயம் தற்போது தெளிவாகத் தெரியும். அதுதான், முன்னணியைக் கூட்டமைப்பின் மாற்றாக முன்னிறுத்திய அவர்கள், தற்போது தமிழ் மக்கள் பேரவைக்குப் பின்னால் செல்லவும் காரணமானது. இன்றைக்கு முன்னணியைக் காட்டிலும் அவர்கள் பேரவைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.  

தேர்தல் அரசியலில் தொடர்ச்சியாகத் தோற்றுவந்த தரப்புக்கள் தமிழ் மக்கள் பேரவை ஒருங்கிணைத்த ‘எழுக தமிழ்’ இன் வெற்றியைத் தம்முடைய தனிப்பட்ட வெற்றியாக மக்களிடம் வெளியிட்டு வருகின்றார்கள். அதில், முன்னணி முக்கிய பங்கினை வகிக்கின்றது. குறித்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியிலும் அதனை செல்வராசா கஜேந்திரன் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார்.  

“ கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் எழுந்து விட்டார்கள். அதுதான், எழுக தமிழில் வெளிப்பட்டது” என்று கூறியிருந்தார். எதிர்வரும் காலத்தில் அந்த மக்களைத் தங்களின் பக்கம் திரும்பலாம் என்கிற பெரும் ஆசையும் அவரிடம் வெளிப்பட்டது. ஆனால், அது முன்னணியினர் கடந்த காலத்தில் தோற்றுப்போன இடம். ஏனெனில், கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பில் மக்களுக்கு பிரச்சினையில்லை.   

ஏனெனில், மக்கள் தொடர்ச்சியாகக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வந்திருக்கின்றார்கள். கேள்வியெழுப்புவதற்கான ஒட்டுமொத்த உரிமையும் தமக்கு உண்டு என்றும் கருதுகின்றார்கள். அதுபோக, எழுக தமிழில் ஒருங்கிணைந்த கூட்டம், கூட்டமைப்புக்கு எதிரானது என்கிற அடையாளப்படுத்தல்கள் முட்டாள்தனமானது. 

அப்படிப்பட்ட நிலையில், அந்தக் கூட்டத்தினை தம்முடைய ஆதரவாளர்களாக முன்னணி, எழுத தமிழ் நடைபெற்ற நாள் முதல் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. அதற்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ, செல்வராசா கஜேந்திரனோ விதிவிலக்கல்ல. இப்படியான நிலைதான் அவர்களின் தோல்வியின் பக்கத்தினை இன்னும் அகலப்படுத்தி வைத்திருக்கின்றது.  

 

கடந்த காலத்தில் அரசியல் பத்தியாளர்களும் விமர்சகர்களும் முன்னணியின் தோல்விக்கான காரணங்களாகப் பட்டியலிட்ட விடயங்கள் பலவற்றினை செல்வராசா கஜேந்திரன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஏற்றுக் கொண்டிருந்தார்.   
மக்கள் அரசியலுக்கான சிறிய ஜனநாயக இடைவெளி அவசியம் என்று ஆய்வாளர்களும் ஊடகங்களும் பொதுமக்களும் வலியுறுத்திக் கொண்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முடிவை எடுத்தபோது, அதற்கு எதிராக முன்னணி செயற்பட்டு வந்தது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்கள் சந்திப்புக்களையும் நடத்தி வந்தது.  

அப்போது, சிறிய ஜனநாயக இடைவெளிக்கான தேவையின் போக்கில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முடிவெடுத்திருக்கின்றார்கள்; அதனைக் குழப்ப வேண்டாம் என்று தொடர்ச்சியாகக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், முன்னணியும் அதன் புலம்பெயர் வழிநடத்தல் குழுவும் அதற்கு எதிராகச் செயற்பட்டிருந்தது. அப்போதும் முன்னணியின் மக்களை நோக்கிய பயணத்துக்கு ஜனநாயக இடைவெளி முக்கியம் என்று வாதிடப்பட்டது.   

அதனை நிராகரித்த முன்னணி, கடந்த பொதுத் தேர்தல் முடிந்ததும் அதனை ஏற்றுக் கொண்டது. மஹிந்த காலத்தில் தங்களுடைய கட்சிக்கான வேட்பாளர்களைத் தேடிப்பிடிப்பதே முடியாத ஒன்றாக இருந்ததாகவும் தற்போதுதான் ஓரளவுக்கு மக்களை நோக்கிய அரசியலைச் செய்ய முடிகின்றது என்றும் செல்வராசா கஜேந்திரன் கூறினார்.  

முன்னணியின் மீதான தொடர் விமர்சனங்கள் என்பது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் உண்மையில் விளங்கிக் கொள்ளப்படும் என்று நினைக்கின்றேன். அவரைத் தாண்டியும் முன்னணிக்குள் ஆளுமை செலுத்தும் தரப்புக்களின் பிழையான முடிவுகளே அந்தக் கட்சியைத் தொடர்ச்சியாகத் தோல்வி நிலையில் வைத்துக் கொண்டிருக்கின்றது.

ஏனெனில், முன்னணியின் தலைவர் என்கிற நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் செயற்பாடுகளில் அவரின் தனி ஆளுமையைத் தாண்டிய தலையீடுகள் தெரிகின்றது. அதுதான், அவரைப் பல நேரங்களில் சிக்கல்களில் கொண்டு சேர்த்திருக்கின்றது. அது, மக்களை நோக்கி நகர்வதற்கான வழிகளைப் பெரும்பாலும் அடைத்திருக்கிறது.  

கூட்டமைப்பு, குறிப்பாக எம்.ஏ.சுமந்திரன் எதிர்பார்க்கும் அளவுக்கான எதிராளியாக முன்னணி தன்னுடைய காலத்தினை தொடர்ச்சியாக கழிக்க நினைத்தால், இன்னும் சில ஆண்டுகளில் அதன் ஒட்டுமொத்த இருப்பும் கேள்விக் குறியாகிவிடும். தற்போதுள்ள சிறிய ஜனநாயக இடைவெளியைத் தடைகள் தாண்டித் தெளிவாகவும் மூர்க்கமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை முன்னணிக்கு உண்டு.

 மாறாக, பேரவையின் எழுக தமிழில் மக்கள் ஒருங்கிணைத்து விட்டார்கள் என்பதை தங்களுடைய தனித்த வெற்றியாகக் கொண்டு ஊடகங்களில் கருத்து வெளியிட்டுக் கொண்டிருப்பதால் எந்தவித பயனும் இல்லை. அது, மக்களை எரிச்சலாக உணர வைக்கும்.  

இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதாவது, அரசியலில் எதனைப் பேச வேண்டும்; எதனைப் பேசக் கூடாது என்கிற வரையறை எல்லாம் உண்டு. நீங்கள் விடுகின்ற வார்த்தைகளின் போக்கில் உங்களின் ஆளுமையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அப்போதைக்கு அதனை மக்கள் இரசித்தாலும் வெற்றியை பரிசளிப்பார்கள் என்று நம்ப முடியாது.   

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பிரசார மேடைகளில் வடிவேலு முழங்கிய காலம் ஞாபகத்துக்கு வருகின்றது. அவரைக் காணவும் கைதட்டி மகிழவும் இலட்சக்கணக்கானவர்கள் திரண்டார்கள். ஆனால் அந்தத் தேர்தலில் தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது என்பது வரலாறு. 

அதனைப் புரிந்து கொண்டு தங்களுடைய அரசியல் ஆளுமையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் வழிநடத்தல் குழுக்களும் வடிவமைத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .