2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நம்பகமற்ற ஆணைக்குழுவின் கடைசி மூச்சு

Princiya Dixci   / 2016 ஜூலை 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. சஞ்சயன்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் ஆயுள் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகப் போகின்றது.

காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு, போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் இடம்பெற்றவா என்று கண்டறியும் பொறுப்பையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்னர் வழங்கியிருந்தார்.

இந்த இரண்டு ஆணைகளையும் நிறைவேற்றும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த இந்த ஆணைக்குழு இப்போது, செயலிழக்கும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

இம்மாத நடுப்பகுதியில், இடைக்கால அறிக்கை ஒன்றைக் கையளிப்பதுடன் இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முடிவுறுத்தப்படும்.

காணாமற்போனோர் தொடர்பான சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொண்ட இந்த ஆணைக்குழு, அவற்றில் 6,500 முறைப்பாடுகள் தொடர்பாகவே சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

எனினும், காணாமற்போன ஒருவரையேனும் இந்த ஆணைக்குழு கண்டுபிடித்துக் கொடுக்கவும் இல்லை, காணாமற்போனவருக்கு என்ன நடந்தது அல்லது அதற்குப் பொறுப்பானவர் யார் என்று அறிவிக்கவும் இல்லை. இது தான் இந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் சாதனையாக அமைந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து வேண்டா வெறுப்பாக சாட்சியங்களைப் பதிவு செய்கின்ற ஒரு ஆணைக்குழுவாக மாத்திரமே செயற்பட்ட இந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களினது நம்பிக்கையை மாத்திரமன்றி சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையைப் பெறவும் தவறியிருப்பது முக்கியமான விடயம்.

நம்பகத்தன்மையற்ற ஒரு ஆணைக்குழுவாகவே இதுவும் கலைந்து போகின்ற நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம், நடந்த ஐ.நா மனித உரிமை பேரவையின் 29ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக அறிக்கையைச் சமர்ப்பித்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர், செயிட் ராட் அல் ஹுசேன், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு பாதிக்கப்பட்டவர்களின் நம்பகத்தன்மையை பெற்றுக் கொள்ளத் தவறியுள்ளதாகவும், அதனை உடனடியாகவே கலைத்து விட்டு, அதன் பொறுப்புகளை வேறு உரிய அமைப்பு ஒன்றிடம் கையளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு கிட்டத்தட்ட, பத்து மாதங்கள் கழித்து, காணாமற்போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.

காணாமற்போனோர் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டு அதனிடம், இந்த ஆணைக்குழுவின் பொறுப்புகளும், ஆவணங்களும் கையளிக்கப்படவுள்ளன. இனிமேல் காணாமற்போனோர் குறித்த செயலகமே இந்த விவகாரத்தைக் கையாளும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தோல்வியில் முடிந்திருப்பதற்குக் காரணம், அது நடுநிலையானது- பக்கசார்பற்றது என்பதை செயல் ரீதியாக நிரூபிக்கத் தவறியது தான்.

பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதும், அவர்களை அணுகிய விதமும், குற்றம்சாட்டப்பட்ட தரப்பினரைக் காப்பாற்றும் விதத்தில் நடந்து கொண்டதும், இந்த ஆணைக்குழுவின் மீதான பரவலான அதிருப்திகளை ஏற்படுத்தியது.

காணாமற்போனோரைக் கண்டறியும் விடயத்தில் மெத்தனப்போக்குடன் செயற்பட்டமை, இறுதிப்போரில் இடம்பெற்ற மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அதனை மூடி மறைப்பதிலும், அரசபடைகளைக் காப்பாற்றுவதிலும், கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டதும், இந்த ஆணைக்குழுவின் பெரிய பலவீனங்களாகும்.

இறுதிக்கட்டப் போரில், 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச அரங்கில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட போதெல்லாம், அதற்கு வாய்ப்பேயில்லை என்று நிராகரிப்பதில் இந்த ஆணைக்குழு அதீத முனைப்புடன் செயற்பட்டிருந்தது.

அண்மையில், இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி அரசாங்கம் நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையில் கோரியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும், கிளஸ்டர் குண்டுகளைப் போரில் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமான விடயம் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனிவாவில் வைத்து பதிலளித்திருந்தார்.

ஆனால் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்குப் பதிலளிக்கும் வகையில், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம கடந்தவாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், இது நம்பகமான குற்றச்சாட்டு அல்ல என்றும், தமது ஆணைக்குழு அதனைக் கண்டறிந்து, 2015 ஒக்ரோபரில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாகவும், அப்படி கிளஸ்டர் குண்டுகளை இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும் கூட அது சட்டவிரோதமானது அல்ல என்றும் நியாயப்படுத்தியிருந்தார்.

2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே இந்த கிளஸ்டர் குண்டுகளை தடைசெய்யும் பிரகடனம் வெளியானது என்றும், அதற்கு முன்னர் இராணுவத்தினர் இதனைப் பயன்படுத்தியிருந்தால் அது தவறல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது, போரில் இடம்பெற்ற மீறல்களை நியாயப்படுத்துகின்ற, போர்க்கால மீறல்களில் இருந்து படையினரைக் காப்பாற்றுகின்ற ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவதைத் தடை செய்யும் சர்வதேச பிரகடனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது சட்டரீதியானதாகி விடுமா?

ஆபத்துமிக்க ஆயுதம் என்பதற்காகத் தானே அதனைத் தடை செய்ய முயன்றிருக்கிறார்கள். அப்படியானதொரு ஆயுதத்தை பயன்படுத்தியிருந்தாலும் அது தவறில்லை என்று நியாயப்படுத்தும் மனோநிலையில் உள்ள ஒரு முன்னாள் நீதிபதியிடம் நம்பகமான விசாரணையை எதிர்பார்த்தது யாருடைய தவறு?

கிளஸ்டர் குண்டுகளை தடை செய்யும் சட்டம் வருவதற்கு முன்னரே கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியமை சட்டரீதியானது என்ற பரணகமவின் வாதம் சரியானால், 2009இல் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் இலங்கையில் உள்நாட்டு விசாரணையை நடத்த முடியாது.

இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தச் சட்டமும் இன்றுவரை இல்லாத நிலையில், 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த போர்க்குற்றங்கள் பற்றி எவ்வாறு விசாரணை நடத்த முடியும்?

கிளஸ்டர் குண்டுகள் தொடர்பான தாம் ஒரு விசாரணையை நடத்தியதாகவும் அதில், கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் மக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பகமான ஆதாரங்களை அவரது ஆணைக்குழு எங்கு போய் தேடியது? யாரிடம் போய் விசாரணை செய்தது? என்று அவர் தெரிவிக்கவில்லை.

2012ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பில் கிளஸ்டர் குண்டுகளைக் கண்டுபிடித்ததாக ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அந்த அதிகாரியிடம், பரணகம ஆணைக்குழு விசாரணை நடத்தியதா- அல்லது கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட வேறு நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியதா- யாருக்குமே தெரியாது.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்கள் தான் சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த அத்தனை வெடிபொருட்களையும், இராணுவத்தினரிடம் ஒப்படைத்து அழிக்க வேண்டும் என்பது கண்டிப்பான விதிமுறை.

எனவே கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை ஆதாரங்களும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டு விட்ட பின்னர், கிளஸ்டர் குண்டுகளின் ஆதாரங்களை எங்கு தேடினாலும் பெற முடியாது.

எவ்வாறாயினும், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட அமைப்புகள், தாம் கையளித்த வெடிபொருட்கள் பற்றிய தரவுகளை வைத்திருக்கலாம். எனவே அங்கிருந்து விசாரணை நடத்தப்பட வேண்டும், விமானப்படையினரால் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பற்றிய தரவுகளை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவையெல்லாம் நடத்தப்பட்டதா என்று தெரியாமல் நம்பகமான ஆதாரங்களை கிடைக்கவில்லை என்று முந்திக்கொண்டு பரணகம ஆணைக்குழுத் தலைவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஆணைக்குழுவினது இதுபோன்ற செயற்பாடுகள் தான் அதன் நம்பகத்தன்மைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. போர்க்குற்றங்களோ , சர்வதேச சட்ட மீறல்களோ இடம்பெறவில்லை என்று முறையான விசாரணைகளை நடத்தாமல், கருத்துக்களை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் பெயரைக் கெடுத்துக் கொண்டது இந்த ஆணைக்குழு.

இந்த ஆணைக்குழு நடத்திய விசாரணைகள் நம்பகமற்றது என்பதால் தான், நம்பகமான உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச சமூகமும், ஐ.நாவும் வலியுறுத்துகின்றன.

இதனைக் கூடப் புரிந்து கொள்ளாமல், நம்பகமற்ற குற்றச்சாட்டுகள் என்று வலிந்த நியாயங்களை முன்வைத்து, தனது பக்கசார்பு நிலையை ஆணைக்குழு அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.

பரணகம ஆணைக்குழு, இறுதி மூச்சை எடுத்துக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, தனது நம்பகத்தன்மைக்கு களங்கம் விளைவிக்கும் காரியத்தைத் தான் செய்திருக்கிறது.

இதனை படையினரையும் முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களையும் குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சிகளாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு ஆணைக்குழுவின் ஆயுள்காலம் முடிவுக்கு வருவது கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தேடும் நீண்ட பயணத்தின் ஒரு மைல் கல்லாகத் தான் இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X