2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாமலின் கையூட்டல்

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதலே, ராஜபக்ஷ குடும்பம் இலக்கு வைக்கப்பட்டு காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே, அக்குடும்பத்தினரின் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவில் தொடங்கி, யோஷித ராஜபக்ஷ, பின்னர் நாமல் ராஜபக்ஷ என்ற வரிசையில், சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு அக்குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு, இந்த அரசாங்கத்தினதும் அமைச்சர்களினதும் தெரிவாகவே இடம்பெறுவதாக, கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு சிறையிலடக்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, தனது கைதுக்கு முன்னரான 15 மணித்தியாலங்களுக்கு முதல், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

'நல்லாட்சி அரசாங்கம் தற்போது, உயர்நிலையில் உள்ளது. அடுத்ததாகக் கைது செய்யப்படுபவர் யார் என்பதை இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களே தீர்மானிக்கின்றனர். எவ்வாறாயினும், மக்கள் ஆட்சிக்காக, தான் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் போராடுவோம்' என அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆகமொத்தத்தில், தான் கைது செய்யப்படப்போவது உறுதி என்பதை அவர் முன்னரே அறிந்திருந்தார் என்பதே, இதன்மூலம் தெளிவாகிறது.

70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, ஒரு வார காலத்துக்கு, அதாவது, எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கைதானது, அரசியல் பழிவாங்கலே தவிர, வேறு எந்தவொரு காரணமும் இல்லை என்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், குற்றஞ்சாட்டி வருகின்றனர். எவ்வாறாயினும், அவரிடம் திங்கட்கிழமை விசாரணை நடத்திய பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், விசாரணையின் போதே அவரைக் கைது செய்வதற்கான காரணமொன்றை வைத்திருந்திருக்கத்தான் வேண்டும். சட்டத்தை மீறும் வகையிலும் குற்றச்சாட்டுக்கள் இன்றியும் ஒருவரைக் கைது செய்யுமளவுக்கு சட்டத்தில் இடமிருக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

தற்போது வரை வெளியாகியுள்ள தகவல்களின் படி, நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படுவதற்கு, கையூடல் சம்பவமொன்றே வழிவகுத்துள்ளது என்றே, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது. எந்தவொரு வங்கிக் கணக்கிலும் வைப்பிலிடப்படாத நிதி மோசடியொன்றை, மிகவும் இலகுவாக நிரூபிக்கக்கூடிய சாட்சியங்களைக் கண்டுபிடிப்பது கடினமான விடயமென்கின்ற போதிலும், இவ்வாறானதொரு விடயத்திலேயே நாமல் ராஜபக்ஷ சிக்கிக்கொண்டுள்ளார் என்றே தெரிவிக்கப்படுகின்றது.  நாமலுக்கு, 7 கோடி ரூபாயினைக் கப்பமாக வழங்கியதாக, கால்டன் றக்பி சங்கத்தின் முன்னாள் தலைவர் அளித்துள்ள வாக்குமூலமொன்றே, அவர் மீதான விசாரணைக்கும் கைதுக்கும் வழிசமைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, கோட்டையிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நான்கரை ஏக்கர் காணியொன்றை விற்பனை செய்வதற்கு, மஹிந்த அரசாங்கம் தயாராகிக்கொண்டிருந்த போது, அதனைக் கொள்வனவு செய்வதற்காக பல கொள்வனவாளர்கள் முன்வந்தனர். இருப்பினும், அக்காணியை, இந்தியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்துக்கு விற்பனை செய்வதான தீர்மானத்தை, நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே மஹிந்த அரசு எடுத்திருந்தது எனவும் இதன்போதே மேற்படி கப்பப் பணம் கைமாறியுள்ளதாகவும், இது தொடர்பிலேயே நாமலுக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தக் கொடுக்கல் - வாங்கல் சம்பவமானது, கடந்த 2013ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்தக் கொடுக்கல் - வாங்கலானது, நேரடியாக மேற்கொள்ளப்படவில்லை என, சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் கொடுக்கல் - வாங்கலுக்கான பணம், நிமல் பெரேரா என்ற கால்டன் றக்பி சங்கத்தின் முன்னாள் தலைவரின் வங்கிக் கணக்கிலேயே, கிரிஷ் நிறுவனத்தினால் வைப்பிலிடப்பட்டுள்ளது. அவ்வாறு வைப்பிலிடப்பட்ட பணத்தை, நாணயத்தாள்களாக மாற்றியுள்ள நிமல் பெரேரா, அவற்றை நாமல் ராஜபக்ஷவின் கைகளிலேயே ஒப்படைத்துள்ளார் என்று, அவரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வாக்குமூலமளித்துள்ளார் என பொலிஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, நிமல் பெரேராவினால், மேற்படி பணம், நாணயத்தாள்களாக தன்னிடம் ஒப்படைக்கப்பட்டமையை அவர், ஏற்றுக்கொண்டுள்ளார். இருப்பினும், அந்தப் பணமானது, கால்டன் றக்பி விளையாட்டுப் போட்டியொன்றுக்காக வழங்கப்பட்ட உதவிப் பணமாகும் என்றும் அப்போட்டிக்காக, அப்பணம் செலவிடப்பட்டதாகவும், விசாரணைகளின் போது, நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். அத்துடன், அக்காலப்பகுதியின் போது, கால்டன் றக்பி சங்கத்தின் தலைவராக நிமல் பெரேராவே கடமையிலிருந்ததாகவும் அவர், மேற்படி போட்டிக்காக மேற்படி பணத்தொகையை வழங்கியிருந்த போதிலும், நாமல் அப்பணத்தை, போட்டிக்காகச் செலவு செய்தாரா என்பது தொடர்பிலேயே, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.

இருப்பினும், நாமல் கூறிய அந்த கால்டன் றக்பி விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்காக, அதில் பங்குபற்றிய 8 விளையாட்டுக் கழகங்களே போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன என்பது தொடர்பில் விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரிஷ் நிறுவனத்திடமிருந்து, நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட 7 கோடி ரூபாயில் ஒரு சதத்தையேனும், மேற்படி விளையாட்டுப் போட்டிக்குப் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்த, அவரால் முடியாமல் போய்விட்டதாகவே கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டு, கோட்;டை நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கிணங்க, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர், தனது இளம் பராயத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷவின் தந்தையான மஹிந்த ராஜபக்ஷ, அன்றைய தினத்தில் எவ்வாறு சிறைக்குச் சென்றாரோ, அதே முறையில் தான் நாமல் ராஜபக்ஷவும் வணக்கம் கூறிவிட்டு, சிறைக்குச் சென்றுள்ளார். இவ்விருவரும் சிறைக்குச் செல்லும் ஒரு வகையிலான புகைப்படங்களும் தற்போது இணையத்தளங்களில் வெளியாகி, அனைவர் பார்வையிலும் சிக்குண்டுள்ளன.

இந்நிலையில், வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல் ராஜபக்ஷவைப் பார்வையிடுவதற்காக, திங்களன்று மாலை வேளையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ, சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கு சென்ற அவரிடம், சிறைச்சாலை வாயிலில் கூடியிருந்த ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புவதற்கு முன்னரே, 'இப்போது உமக்கு திருப்தியா?... என்றே கேட்க விரும்புகின்றேன்' எனக் கூறியுள்ளார். அத்துடன், 'குறித்த காலத்தில், குறித்த நபரே கைது செய்யப்படுவார் என்று அரசியல்வாதிகளே கூறுகின்றனர். அதுவே இன்றைய மாற்றமாகும். ஆனால், அதைவிடப் பெரிய வெற்றியொன்றை, நீதிமன்றத்தின் ஊடாக நாம் பெற்றுவிட்டோம். விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத வற் வரி விதிப்புக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதையெண்ணி நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்' எனவும் மஹிந்த அங்கு குறிப்பிட்டார்.

'இது, அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறொன்றும் இல்லை. முஸம்மில், இன்னம் சிறையிலேயே இருக்கின்றார். இன்னும் பலரையும் சிறைக்கு அனுப்புவார்கள். இதனை ஒரு சாதாரண விடயமாகவே நாம் பார்க்கின்றோம். சட்டம் ஒரு தரப்பினருக்கு மாத்திரமே செயற்படுகிறது' என ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதும் அவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், அதே நீதித்துறை தான், அவர் கூறிய மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்பதையும் அங்கு சட்டம் தன் கடமையையே செய்தது என்பதையும் மஹிந்தர் மறந்துவிட்டார் போலும்.

இது இவ்வாறிருக்க, வெலிக்கடை புதிய மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' அறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நாமல் ராஜபக்ஷவை, அவ்வறையில் ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் வரவேற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவர் தவிர, மேலும் 20பேர், அவ்வறையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும், விசேட பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திங்களன்று இரவு, சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவையே, நாமல் ராஜபக்ஷ உட்கொண்டுள்ளார். இருப்பினும், வீட்டு உணவை உட்கொள்ள தனக்கு அனுமதி வழங்குமாறு, சிறைச்சாலை அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை காலை, நாமல் ராஜபக்ஷவின் தாயாரான ஷிரந்தி ராஜபக்ஷ, தனது புதல்வரைப் பார்வையிடுவதற்காக, சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். அவருடன், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்றிருந்தனர். நாமலைப் பார்த்த அவரது தாயார், கண்ணீர்விட்டு அழுதார் என, அவருடன் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க, வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அங்குள்ள சிறைக் கைதிகளுக்கு யோகாசனம் கற்றுக்கொடுத்து வருகின்றார் என, அவரைப் பார்வையிட்டுத் திரும்பிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் எம்.பி தெரிவித்துள்ளார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், தங்களது விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில், எதிர்வரும் 18ஆம் திகதியன்று, நீதிமன்றத்தில் அறிவிக்கும் வரையில், அவர் தொடர்பான எந்தவொரும் முடிவினையும் நீதிமன்றம் எடுக்காது என்றே அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .