2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பகடிவதை எனும் பெருங் குற்றம்

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜனவரி 13 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாள்களுக்கு முன்பாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையேயான கைகலப்பில், மூன்றாம் வருடத்தில் பயின்று கொண்டிருக்கும் மாணவர் ஒருவர், ஏனைய மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.   

இந்தத் தாக்குதலைக் அலைபேசியில் பதிவு செய்து ஒருவர், அதைச் சமூக ஊடகங்களில் பரவவிட்ட நிலையில், குறித்த மாணவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பெயரில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  

இந்தச் சம்பவம் பற்றி, மேலும் விவரிக்கும் செய்திக் குறிப்புகளில், இந்த மாதம் எட்டாம் திகதி,பகடிவதைச் சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக உணவு விடுதியில், இந்த மோதல் வெடித்ததாகவும் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், கடந்த சில நாள்களாக, பல்கலைக்கழக வளாகத்திலும் பொரளையில் அமைந்துள்ள மாணவர் விடுதி ஒன்றிலும் முதலாம் ஆண்டு மாணவர்களை, மனிதாபிமானமற்ற முறையில் பகடிவதை செய்ததாகவும் இந்தப் பகடிவதையை எதிர்த்த மூன்றாம் ஆண்டு மாணவரே, உணவு விடுதியில் வைத்துத் தாக்கப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.   

கனிஷ்ட மாணவர்கள் எதிர்நோக்கும் பகடிவதைக் கொடுமையைக் கண்டு தாங்காது, எதிர்த்துக் குரல் எழுப்பிய சிரேஷ்ட மாணவர், காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் பல்கலைக்கழகத்தில் நடப்பது ஆச்சரியமானதோ புதுமையானதோ அல்ல.   

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் அறிவின், கல்வியின் பயிற்சிக் கூடங்களாக இருக்கிறதோ இல்லையோ, வன்முறையின், சித்திரவதையின் பயிற்சிக் கூடங்களாக நிச்சயம் இருக்கின்றன என்பது, இலங்கையர் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.  

இலங்கையில் வாழ்வது பற்றி, ஆயிரம் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் இலங்கையர் அனுபவிக்கும் இரண்டு பெரும் வரங்களானவை, இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் ஆகும். இவை பெயருக்கு இலவசமாக வழங்கப்படுமொன்றாக இல்லாது, தரத்திலும் மதிப்பிலும் சிறந்தாகவே இருந்தன.   

ஆனால், காலவோட்டத்தில் ஊழலும் கட்டமைப்பு ரீதியிலான வினைத்திறன் இன்மையும் குறைபாடுகளும் அவற்றைச் சீர்செய்வதில் அக்கறையின்மையும் முறைகேடுகளும் எல்லாம் சேர்ந்து, இலங்கையின் இலவசக் கல்வியையும் இலவச மருத்துவத்தையும் மதிப்பிழக்கச் செய்து வருகின்றன.  

க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவனின் பெருங்கனவு, இலங்கையின் அரச பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற வேண்டும் என்பதாகவே இருக்கிறது.   

இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம், வௌிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டக் கல்வியை, நிபுணத்துவக் கல்வியை பெறும் வாய்ப்பு, பல்கிப் பெருகியுள்ள நிலையில் முன்னரளவுக்கு, அரச பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற அவா இல்லையெனினும் மருத்துவம், சட்டம், பொறியியல் பயில்வதற்கான முதல் தெரிவாகவும் தனியார் கல்வி நிலையங்களை நாடும் பொருளாதார வசதி இல்லாதவர்களின் ஒரே தெரிவாகவும் அரச பல்கலைக்கழகங்களே தொடர்ந்தும் இருக்கின்றன.   

இந்த நிலையில், வாழ்வின் பெருங்கனவுகளைச் சுமந்துகொண்டு, உலகின் கடுமையான போட்டிப் பரீட்சைகளில் ஒன்றாகக் கருதத்தக்க இலங்கையின் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர்சித்தி பெறக் கடுமையாக உழைத்து, அதில் வெற்றி கண்டு, பல்கலைக்கழக அனுமதி பெறும் உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய ஏறத்தாழ 20 சதவீதமானவர்களில் ஒருவராகி, பல்கலைக்கழகம் ஏகும் ஓர் இளைஞன் அல்லது, யுவதி, அங்கு முதன்முதலாக எதிர்கொள்வது உள, உடல் ரீதியிலான சித்திரவதை என்பது, எத்தனை கொடுமையான விடயம். ஆனால், இதுதான் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் யதார்த்தம்.  

1975 இல் றூபா ரத்னசீலி தொடர்ந்து, எஸ். வரப்பிரகாஷ், துஷார விஜேதுங்க, சமந்த விதானகே, டீ.கே. நிஷாந்த, அமாலி சதுரிகா, டில்ஹான் விஜேசிங்க எனப் பல்வேறு உயிர்கள், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வரும், பகடிவதை எனும் பெருங்குற்றத்துக்குப் பலியாகி இருக்கின்றார்கள்.   

ஆனால், இந்தக் கொலைக் குற்றங்களுக்காக, எவரேனும் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்களா? பண்டைய இலங்கையின் கல்விமுறையில், பகடிவதை போன்ற ஒரு செயல் நிலவியது என்பதை நிரூபிக்க, எந்தப் பதிவுகளும் இல்லை.   

பகடிவதை என்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்திலேயே நடைமுறைக்கு வந்தது. இது, இலங்கையில் பிரிட்டிஷ் கொலனித்துவத்தின் நேரடி விளைவாகும்.   

இரண்டாம் உலகப் போரிலிருந்து திரும்பிய படையினர், பல்கலைக்கழகத்துக்குள் மீண்டும் நுழைந்த போது, இராணுவ முகாமில் கற்ற பகடிவதை நுட்பத்தையும் அவர்களுடன் கொண்டு வந்து சேர்த்தனர். அந்த நுட்பங்கள், தனிநபராகத் தனிநபராகத் தோல்வி அடைவதற்கும், ஓர் அணியாக வெற்றிபெறவும் பயன்படுத்தப்பட்டன.   

ஆனால், காலவோட்டத்தில் குழு ஒற்றுமை சார்ந்த முதன்மை நோக்கங்களை இழந்த பகடிவதையானது, வன்முறை, அபாயகரமான பயிற்சியாகவும் கொடுமையான சித்திரவதையாகவும் மாறியதுடன், மோசமானதும் தீவிரமானதுமான கொலைகளிலும் ஈடுபட வழிசமைத்தது.   

1997இல், பேராதனைப் பல்கலைக்கழக பொறியில் பீட மாணவன் வரப்பிரகாஷ், அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் துஷார விஜேதுங்க ஆகியோரின் பகடிவதைக் கொலைகளைத் தொடர்ந்து, பகடிவதைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கில், 1998 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றம் ஒருமனதாக, ‘கல்வி நிறுவனங்களில் பகடிவதை மற்றும் பிற வன்முறைகளைத் தடைசெய்தல் சட்டத்தை (பகடிவதை எதிர்ப்புச் சட்டம்) நிறைவேற்றியது.   

இதுவே, பகடிவதை தொடர்பான இலங்கையின் முதல் சட்டமாகும். சட்டத்தின் நீண்ட தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கல்வி நிறுவனங்களில் இருந்து, பகடிவதை, பிற வன்முறை, கொடூரமான மனிதாபிமானம் அற்றதும் இழிவானதுமான நடத்தைகளை அகற்றுவதற்கான ஒரு சட்டமாக, இது அடையாளம் காணப்பட்டுள்ளது.  

 ‘ஒரு மாணவர் அல்லது ஒரு கல்வி நிறுவனத்தின் ஊழியருக்கு, உடல், உளவியல் காயம், மனவலி, பயத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலும்’ பகடிவதையாகும் என்று, இந்தச் சட்டம் வரையறுக்கிறது.   

மேலும், குறித்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் படி, கல்வி நிறுவனத்துக்குள் அல்லது வெளியே பகடிவதையில் ஈடுபடும் அல்லது பங்கேற்கும் எந்தவொரு நபரும் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாவார் என்பதுடன், இரண்டு வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனைக்கு ஆளாவார் என்றும் பாதிக்கப்பட்ட நபருக்கேற்பட்ட காயங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் நட்டஈட்டையும் செலுத்த வேண்டும்.   

மேலும், பகடிவதையானது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல், பெரும் காயங்களை விளைவித்தல் போன்றவற்றுடன் சம்பந்தப்படுமாயின், பத்து வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனைக்கு ஆளாவார்.   

மேலும், பாதிக்கப்பட்டவர் செய்ய விரும்பாத ஒன்றைச் செய்ய வைப்பதற்காகவோ அல்லது, பாதிக்கப்பட்டவர் செய்வதற்கு உரித்துடையதொன்றைச் செய்யாது தடுப்பதற்காகவோ பாதிக்கப்பட்டவரைப் பயமுறுத்தும் வகையில் பாதிக்கப்பட்டவர் அக்கறை கொண்டுள்ள ஒருவர் மீதோ, அவரது மதிப்பின் மீதோ, அவரது உடமைகள் மீதோ காயங்களை ஏற்படுத்துவதும் அச்சுறுத்துவதும் குற்றமாக்கப்பட்டுள்ளது.   

அத்துடன், அத்தகைய குற்றம் புரிபவர், ஐந்து வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனைக்கு ஆளாவார். ஒரு தனிமனிதனது தனிமனித சுதந்திரத்தையும் நடமாடும் சுதந்திரத்தையும் தடுப்பவர் குற்றவாளியாவார் என்பதுடன், ஏழு வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனைக்கு ஆளாவார்.   

இவற்றுக்கு மேலதிகமாக, இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டவர், குறித்த கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கப்படவும் முடியும் என்றும் வழங்கப்பட்டுள்ளது.   

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்த பிறகும், இந்தச் சட்டத்தால் பகடிவதையைக் கட்டுப்படுத்த முடிந்ததா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.   
இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.  

முதலாவதாக, அரசாங்கத்தினதும் நிறைவேற்றுத்துறையினதும் மெத்தனப்போக்கும் அலட்சியமும் பகடிவதை இன்றும் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.  

 பகடிவதை பற்றி ஒரு மாணவன், பொலிஸிடம் முறையிடுவதே பெரும் விடயம்; அப்படி ஒரு மாணவன், பொலிஸில் முறையிடும் போது கூட, பொலிஸார் அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதில், அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். இதனை, நிறுவன ரீதியாகக் கையாள வேண்டிய பிரச்சினையாகப் பார்க்கும் தன்மையையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.   

அதாவது, சட்டம் என்ன சொன்னாலும், இதைப் பெருங்குற்றமாக அன்றி, பல்கலைக்கழகம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு பிரச்சினையாகவே பார்க்கிறார்கள்.   

அப்படியானால், பல்கலைக்கழகமாவது நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதே நிதர்சனம்.   

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் கலாசாரமும் அரசியலும் என்றால், அது மிகையல்ல.   

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களானவை பெரும்பாலும், ‘பழைய மாணவர்களின்’ கூடாரமாகவே இருக்கின்றன. குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்கள், பின்னர் அங்கு தற்காலிக விரிவுரையாளராக, பின்னர் நிரந்தர விரிவுரையாளராகி, பின்னர் அவர்களே பேராசிரியர்களும் ஆகிறார்கள்.   

வௌியில் இருந்தொருவர், இலங்கைப் பல்கலைக்கழக அமைப்புக்குள் நுழைவதென்பது, அரிதானதொன்றாகவே இருக்கிறது. இந்தநிலையில், பகடிவதை என்பது, இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஒரு கலாசாரமாகக் கருதப்படும் ஈன மனநிலை, இங்கு இருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.   

இதற்குப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர இடம்பிடித்துள்ள இடதுசாரி அரசியல், ஒரு முக்கிய காரணம். பகடிவதை, இங்கு மாணவர் ஒன்றியங்களால் திட்டமிட்ட முறையிலேயே நடத்தப்படுகின்றது. மாணவர்களை, இந்த மாணவர் ஒன்றியங்கள் கட்டுப்படுத்தி, மந்தைகளைப் போல கையாள்வதற்கு, பகடிவதை எனும் வன்முறை ஆயுதத்தை, அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.   

இதற்குப் பின்னணியில், ஜே.வி.பி, முற்போக்கு சோசலிஸக் கட்சி என்பன செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் எல்லா அநீதிகளையும் எதிர்க்கும் அநுர குமார திஸாநாயக்க போன்ற ஜே.வி.பி தலைவர்கள், பகடிவதை பற்றி வாய்திறப்பதில்லை.   

ஆகவே, குறித்த கலாசாரத்தில் ஊறித்திளைத்தவர்கள், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாக வரும்போது, அவர்கள் பகடிவதைக்கு ஆதரவானவர்களாகவே இருக்கிறார்கள். மேலும், குறித்த அரசியலை ஆதரிக்கும் விரிவுரையாளர்களும் பகடிவதைக்கு ஆதரவானவர்களாகவே இருக்கிறார்கள்.   

மறுபுறத்தில், பகடிவதையை விரும்பாத விரிவுரையாளர்கள் கூட, பகடிவதையில் ஈடுபடும் மாணவர் ஒன்றியம், அதை ஆதரிக்கும் தமது சக விரிவுரையாளர்கள் ஆகியோரோடு முரண்பட விரும்பாது, பகடிவதையைக் கண்டும் காணாது இருக்கிறார்கள்.   

பகடிவதையைத் திராணி கொண்டு எதிர்க்கும் ஒரு சில விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் ஆதரவின் காரணமாகத்தான், மிகச் சிறிய அளவிலேனும் பகடிவதைக்கு எதிராகச் சில மாணவர்களேனும் செயற்படக் கூடியதாக இருக்கிறது.   

ஆகவே, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்ள இந்தத் தன்மையும் பகடிவதையை இல்லாழிப்பதில் பெருஞ்சவாலாக இருக்கிறது. இதைவிடவும், பகடிவதையை ஏதோ சிறுபிள்ளைகள் செய்யும் விளையாட்டுத்தனமான விடயமாக நோக்கும் தன்மையும் அதற்காகச் சட்டநடவடிக்கை எடுத்தால், அது அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் என்ற மனநிலையும், உயர்கல்வி முகாமைத்தவத்தில் உள்ள சில அதிகாரிகளிடம் காணப்படுகின்றது.   

இவ்வாறான சூழ்நிலைகள், பகடிவதைக்கு எதிரான சட்டத்தை, முழுமையாக அமுல்படுத்துவதற்குத் தடையாக இருக்கின்றன.   

பகடிவதை என்பது, மாணவர்களைப் பெரும் உடல், உள ரீதியிலான சித்திரவதைக்கு உட்படுத்துவதுடன், உயிரைக் கூடப் பறிக்கத்தக்கதொரு பெருங் குற்றமாகும். இதை நாம் அவ்வாறுதான் பார்க்க வேண்டும்.   

இது சிறுபிள்ளை விளையாட்டோ, இளைஞர்கள் தெரியாமல் செய்யும் விளையாட்டுத்தனமான காரியமோ அல்ல; எத்தனையோ மாணவர்களின் கனவை மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கையையே சீரழிக்கும் இந்தப் பகடிவதைக்கு முற்றுப் புள்ளி வைக்க, ஒவ்வொரு மட்டத்திலும் உள்ளவர்கள் உறுதியெடுக்க வேண்டும்.   

பகடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மட்டுமல்லாது, அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தரும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பொலிஸார், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் பலமானதும், காத்திரமானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான், பகடிவதையை இல்லாதொழிப்பது தொடர்பில், அவர்களும் அக்கறை காட்டுவார்கள்.   

இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டால், ஒவ்வொரு முறையும் இந்தப் பகடிவதையால், உயிர்கள் பறிபோகும் போதோ, சில மாணவர்களின் வாழ்க்கை நாசமாகும் போதோ மட்டும்தான், நாம் பேசிவிட்டுப் பின்னர் மறந்து போய்விடும் ஒன்றாகவே, பகடிவதையும் மாறிவிடும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .