2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பீஹார் தேர்தல்: மோடியின் செல்வாக்கு குறைகிறதா?

Thipaan   / 2015 நவம்பர் 16 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைவரும் பரபரப்பாக எதிர்பார்த்த பீஹார் மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. பிரதமர் நரேந்திரமோடி முன்னின்று நடத்திய இரண்டாவது மிகப் பெரிய பிரசாரத்துக்கு தோல்வி கிடைத்து விட்டது. முதலில் அவரது பிரசாரம், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது.

அடுத்து இரண்டாவது முறையாக பீஹார் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் என்றால், பீஹாரில் 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல். டெல்லியில், புதிய சக்தியான ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்து பா.ஜ.க போராடியது. இப்போது பீஹாரில் ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள கட்சிகளின் கூட்டணியை எதிர்த்துப் போராடியிருக்கிறது.

பரபரப்பான இந்த தேர்தலில் ஒரே மாநிலத்தில் 46 இடங்களில் பிரசாரம் செய்தார் பிரதமர் நரேந்திரமோடி. இதுவரை இந்திய பிரதமர்கள் யாரும் ஒரு மாநிலத்தில் இத்தனை எண்ணிக்கையில் பிரசாரம் செய்திருக்க மாட்டார்கள். 'பீஹாரில் பா.ஜ.க தோல்வியடைந்தால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்' என்று பா.ஜ.க வின் அகில இந்திய தலைவர் அமித் ஷா பேசியது போல, இதுவரை எந்த அகில இந்தியக் கட்சியின் தலைவரும் அடுத்த நாடு பட்டாசு வெடிக்கும் என்று உள்ளூர் தேர்தல் பற்றிப் பேசியதில்லை. முரண்பட்ட பிரசாரம் அக்கட்சிக்கு முழுமையான ஆதரவை பீஹார் மக்களிடம் பெற்றுத் தராமல் போய் விட்டது.

இதனால் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 58 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பெற்றது. இதில் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த எம்.எல்.ஏ.க்கள் 53. இந்த கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 34.10  சதவீதம். அதில் பா.ஜ.கவுக்கு கிடைத்த வாக்கு வங்கி 24.40 சதவீதம். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி பெற்றதிலிருந்து 5 சதவீத வாக்குகள் குறைவு.

இது தவிர பா.ஜ.க கூட்டணியில் தலித் வாக்குகளின் பிரதிநிதிகளாக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் மாஞ்சியின் கட்சியும், மத்திய அமைச்சராக இருக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியும் இணைந்திருந்தன. அந்த இரு கட்சிகளும் சேர்ந்து 7.10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றன. சென்ற முறை ராம்விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு கிடைத்த வாக்குகளில் இருந்து 2 சதவீத வாக்குகள் இந்த முறை குறைந்து விட்டது.

பீஹார் தேர்தலில், தலித்  கட்சிகளின் கூட்டணி, பா.ஜ.கவுக்கு பொருந்தாத கூட்டணியாக மாறியதற்கு, பா.ஜ.க தலைவர்கள் முன் எடுத்து வைத்த மாட்டுக்கறிப் பிரச்சினைதான் காரணம். ஒருவர் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்று நாடு முழுவதும் எழுந்த இந்த பிரச்சினை, பீஹார் தேர்தலிலும் எதிரொலித்தது. பீஹாரில் வளர்ச்சியா அல்லது அங்குள்ள ஊழலா என்பது பற்றியெல்லாம் பேச்சு எழாமல், நாடு முழுவதும் 'பா.ஜ.க ஆட்சியில் சகிப்புத் தன்மை' இல்லை என்ற பிரசாரம் உக்கிரமானது.

இதன் விளைவாக, பீஹார் தேர்தலில் அம்மாநில பிரச்சினைகள் முக்கியத்துவம் வகிப்பதை விட, நாடு முழுவதும் நிலவிய 'சகிப்புத்தன்மையற்ற பா.ஜ.க அரசு' என்ற பிரச்சினை வந்தது. பா.ஜ.க கூட்டணி பீஹாரில் தோல்வியடைய இது முக்கிய காரணியாக அமைந்தது. எல்லாவற்றையும் விட, 'எங்களால்தான் நிலையான அரசை தர முடியும். லாலு பிரசாத் யாதவ் நிலையான ஆட்சி நடக்க விட மாட்டார்' என்ற பிரசாரத்தை பீஹார் வாக்காளர்களிடத்தில் முன் வைக்க தவறி விட்டதும் இன்னொரு மிக முக்கிய காரணம்.

பா.ஜ.கவை எதிர்த்து வெற்றி பெற்ற லாலுபிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை எலியும் பூனையுமாக இருந்தவர்கள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் எம்.பி. பதவியிழந்த லாலு பிரசாத் யாதவ், இந்திய மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்தார்.

தனது எதிர்காலமா அல்லது கட்சியின் எதிர்காலமா என்பதில் ஒரு தெளிவான முடிவை எடுத்து தனக்கு பரம எதிரியாக இருந்த நிதிஷ்குமாருடன் கூட்டணி வைத்தார். எவ்வித தயக்கமும் இன்றி நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்தார். 'லாலு- நிதிஷ்' கூட்டணி 'பொருந்தாக் கூட்டணி' என்று பேசப்பட்டாலும், லாலு பிரசாத்தின் தீர்க்கமான பிரசாரம் மற்றும் ஒத்துழைப்பு, நிதிஷ்குமார் 10 வருடங்கள் பீஹார் மாநிலத்தில் கொடுத்த நல்லாட்சி ஆகிய இரண்டும் அக்கூட்டணிக்கு கை கொடுத்தது. இரு கட்சி வாக்குகளும் அச்சுப்பிசகாமல் ஒருவருக்கு ஒருவர் டிராஸ்பர் ஆனதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இவர்களுடன் இருந்த காங்கிரஸ் கட்சியும் அசாத்தியமாக இந்த கூட்டணியின் வெற்றிக்கு கை கொடுத்துள்ளது. லாலு-நிதிஷ் கூட்டணி மொத்தம் 41.90 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் அதிக வாக்குகள் பெற்றது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி. அக்கட்சிக்கு 18.40 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அடுத்த படியாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 16.80 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. இந்தக் கூட்டணி மொத்தம் 178 எம்.எல்.ஏ.க்களை பெற்று ஆட்சி அமைக்கிறது. இதில் லாலு கட்சிக்கே அதிக எம்.எல்.ஏ.க்கள். அவர் கட்சியின் சார்பில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். 50 இடங்களில் இவர்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சி 27 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்கிறது.

லாலு- நிதிஷ்குமாரின் வெற்றி அகில இந்திய அளவில் நிதிஷ்குமாருக்கு ஓர் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இப்படியொரு அந்தஸ்து நிதிஷ்குமாருக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே அக்கூட்டணியிலிருந்து தேர்தலுக்கு முன்பே சமாஜ்வாடிக் கட்சி தலைவராக இருக்கும் முலயாம் சிங் யாதவ் விலகினார். ஆனால், எதிர்பார்ப்பையும் மீறி இப்போது தேசிய அளவில் மோடிக்கு போட்டியான தலைவராக நிதிஷ் குமார் உயர்ந்திருக்கிறார்.

இதை நிரூபிக்கும் வகையில் 'இனி அகில இந்திய அளவில் மோடிக்கு எதிராக பிரசாரத்தை தொடக்குவேன்' என்று லாலு பிரசாத் யாதவே அறிவித்து விட்டார். ஆனால், லாலுவுக்கும் நிதிஷுக்கும் இடையில் ஏதாவது பனிப்போர் உருவானால் எதிர்வரிசையில் உள்ள பா.ஜ.கவின் ஆதரவுடன் பீஹாரில் பதவியேற்கும் அரசுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்ற சூழலும் நீடிக்கிறது.

பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் 'அகங்காரத் தலைமை' என்று இப்போது இருக்கின்ற பா.ஜ.க தலைமைக்கு பெயர் வந்து விட்டது. பீஹாரில் உள்ள பா.ஜ.க எம்.பிக்களே மோடியை குறை கூறி விட்டார்கள். பா.ஜ.கவின் சார்பில் பிரதமர் ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடத்தில் எம்.பி.க்களே கேள்வி கேட்ட சம்பவம் பா.ஜ.க வரலாற்றில் புதிய அத்தியாயமாக உருவாகி விட்டது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல், மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்டோர் தலைமையில் சில பா.ஜ.க தலைவர்கள், 'பீஹார் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். ஆத்மபரிசோதனை செய்ய வேண்டும். தோல்வி பற்றி பிரசாரத்தில் முன்னிலை வகித்தவர்களோ (பிரதமர் மோடி), தலைமை வகித்தவர்களோ (அமித் ஷா) விசாரிக்கக் கூடாது. வேறு பொதுவானவர்கள் விசாரிக்க வேண்டும்' என்று வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கி விட்டார்கள்.

அத்வானியின் போர்க்கொடியில் இரு முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பிரதமர் மோடி பதவிக்கு வந்தவுடன் தன்னை ஈவு இரக்கமின்றி ஓரங்கட்டி விட்டார் என்று நினைக்கிறார் அத்வானி. 'பா.ஜ.கவின் வளர்ச்சியில் அத்வானிஜியின் முயற்சி மிக முக்கியம். அவரை இப்படி ஓரங்கட்டியிருக்கக் கூடாது' என்ற கருத்து பா.ஜ.கவில் உள்ள மூத்த தலைவர்கள் மத்தியிலேயே இருக்கிறது. அடுத்து இப்போது இருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017இல் முடிவுக்கு வருகிறது.

அதன் பிறகு வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அத்வானிதான் முன்னிறுத்தப்படுவார் என்று முதலில் பேச்சு அடிபட்டது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது குறைந்து வருவதாக தகவல். பீஹார் தேர்தல் தோல்வியை முன்னிறுத்தி மோடிக்கு எதிராக அறிக்கை விட்ட 'அத்வானியின் அரசியலில்' இந்த விஷயங்களும் ஒளிந்து கிடக்கிறது என்கிறார்கள் டெல்லி அரசியல் பார்வையாளர்கள்.

ஒரு மாநில தேர்தல், மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு பெரும் சவாலாகவே மாறி விட்டது. பா.ஜ.கவுக்கு அவர் 'சொத்து' என்பது, கடந்த தேர்தலில் இருந்தது. இப்போது வர வர அவரது பிரசாரம் பா.ஜ.கவுக்கு 'லையபிளிட்டி' என்ற சூழல் பீஹார் தேர்தலால் வந்து விட்டது.

இதை சமாளித்து கட்சிக்குள் தன் அதிகாரத்தை எப்படி நிலைநாட்டிக் கொள்ளப் போகிறார் மோடி என்பதும், பீஹார் வெற்றி கொடுத்த தைரியத்தில் மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு எதிராக எப்படி அணி திரளப் போகின்றன என்பதும் இனி நடைபெறப் போகும் காட்சிகள்!

ஆனால், மோடிக்கு 'வாக்குகளை திரட்டும்' செல்வாக்கு குறைந்துள்ளது என்று காட்டியிருக்கும் பீஹார் தேர்தல், இந்திய அரசியலில் வேறு மாதிரியான அதிரடி திருப்பங்களுக்கும், அரசியல் கூட்டணிகளுக்கும் அச்சாரம் போடும் என்பதில் சந்தேகமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X