2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மதங்களின் பெயரால் பிணந்தின்னிகள்...

Thipaan   / 2016 ஜூலை 10 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானின் முடிவில், ஈகைத் திருநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ள சில தாக்குதல்கள், ஒரு விதமான அச்சத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற பணயக்கைதிகள் விவகாரம் அதில் முதலாவதுƒ ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அடுத்ததுƒ சவூதி அரேபியாவிலும் இந்தோனேஷியாவிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மூன்றாவது.

டாக்காவில், இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் உணவருந்தும் இடத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள், முஸ்லிம்கள் அல்லாதோரை இனம்பிரித்து நடத்திய கொலைவெறியாட்டத்தில் 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் பக்தாத்தில் ஷியா முஸ்லிம் பிரிவினை நோக்கி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 213 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இத்தாக்குதல்கள் அனைத்தையுமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவே நடத்தியிருந்தாலும் முதலாவது தாக்குதலை நடத்தியது அக்குழு தானா என்பதில் சந்தேகங்கள் காணப்படுவதாக பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவிக்கிறது.

தம்மை 'இஸ்லாமியத் தேசம்' என்றழைத்துக் கொள்ளும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, முஸ்லிம்கள் அல்லாதோரையும் முஸ்லிம்களில் சிறுபான்மையினரையும் (ஷியா) இலக்குவைத்து, முஸ்லிம்களின் புனித மாதத்தில், இஸ்லாமின் பெயரால் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், அதற்கான எதிர்வினைகள் என்பன, கவனிக்கப்பட வேண்டியனவாகவும் ஆராயப்படவும் நடவடிக்கை எடுக்கப்படவும் வேண்டியனவாகவும் காணப்படுகின்றன.

பங்களாதேஷில் பல மாதங்களாகவே சிறுபான்மையினர், மத எதிர்ப்பாளர்கள், சமபாலுறவாளர்களின் உரிமைகளுக்கான செயற்பட்டாளர்கள் எனப் பலரும் இலக்குவைக்கப்பட்டு, கொல்லப்பட்டு வந்தார்கள். இது ஒரு கட்டத்தில் வழக்கமாகிப் போன நிகழ்வுகளாகி, செய்திக்கான பெறுமதி குறைந்த ஒன்றாகக் கூட மாறிவிடடிருந்தது. ஆனால் டாக்காவில் இடம்பெற்றது, அதன் அடுத்த கட்டம். உணவுண்ணும் இடத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்களை பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டு, குர்ஆன் வாசகங்களைச் சொல்ல முடியாதவர்களைத் தாக்கிக் கொன்றிருக்கிறார்கள்.

முன்னரெல்லாம் தனி;த்தனியாகக் கொலைகள் இடம்பெறும்போது, அவற்றுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றாலும் கூட, 'பங்களாதேஷில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இல்லை. இ;து உள்ளூர் இஸ்லாமியக் கடும்போக்குவாதக் குழுக்கள்' என்று, அப்படியென்றால் ஆபத்துக் குறைவானது போன்று காட்டிக்கொள்ளும் பங்களாதேஷ் அரசாங்கம், இம்முறையும் அதே பல்லவியைப் பாடியிருக்கிறது. அதுவும், தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, உயிரிழந்தவர்களின் சடலங்களின் புகைப்படங்களையும் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட போதிலும், தனது கருத்திலிருந்து அவ்வரசாங்கம் மாறியிருக்கவில்லை. அந்நாட்டின் உள்விவகார அமைச்சரோ ஒரு படி மேலே போய், 'ஐ.எஸ்.ஐ.எஸ் கொடிக்கு முன்பாக, ஆயுதங்களுடன் நான் நின்று புகைப்படுமெடுத்துக் கொண்டால், இங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளதாக அர்த்தமாகிவிடுமா?' என்று கேள்வியெழுப்பியுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் நேரடியான பங்குபற்றல் பங்களாதேஷில் இல்லை என்பது வேண்டுமானால் அவரது கருத்தாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அக்குழு இல்லாதபோதும், அக்குழுவின் கொள்கைகளைப் பின்பற்றி, அக்குழுவுக்காக உள்ளூர்வாசிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் மேற்கொள்ளும் தாக்குதல்களிலிருந்து எந்தளவில் சிறந்தவை அல்லது மோசமற்றவை என்பது, அவ்வரசாங்கத்துக்கே வெளிச்சம்.

மறுபக்கத்தில், பக்தாத்தில் ஷியா முஸ்லிம்களை இலக்குவைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், 200 க்கும் மேற்பட்டோரைக் காவுகொண்டதோடு, பெரும்பான்மை முஸ்லிம்களான சுன்னி முஸ்லிம் பிரிவினரால், ஷியா முஸ்லிம்கள் (அஹ்மாதிகளும் தான்) நோக்கப்படும் அல்லது நடத்தப்படும் விதத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. அதுவும், ஈகைத் திருநாளுக்கான கொள்முதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோரைத் தாக்குமளவுக்கு, அந்த வெறுப்புக் காணப்பட்டமை தான், குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டியது.

இவற்றையலெ;லாம் விட, சவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்தான் ஆச்சரியமளிப்பனவாக உள்ளன. அமெரிக்காவில் அல்-கொய்தா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தும்போது, 'அமெரிக்கா வளர்த்துவிட்ட ஆயுதக்குழுக்கள், தற்போது அமெரிக்காவுக்கு எதிராகவே தாக்குதல்களை நடத்துகின்றன. முன்னர் விதைத்ததை, இப்போது அறுவடை செய்கிறது அமெரிக்கா' என்ற பாணியிலான கருத்துகள் பரவலாகப் பகிரப்படும். அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் என்பனவற்றின் பின்னால் அமெரிக்கா என்பது தனியான ஒரு விவாதம். ஆனால் சவூதி அரேபியாவின் பங்கென்பது ஓரளவு தெளிவானது.

சவூதி அரேபியா, கடுமையாகப் பின்பற்றும், கடுமையாக ஊக்குவிக்கும் இஸ்லாமின் கடும்போக்குப் பிரிவான வஹாபிசத்துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு பின்பற்றும் இஸ்லாமுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகத் தெரிவிக்கும் விமர்சகர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு சவூதி அரசாங்கம் நிதியளிப்பதாகவும் அல்லது அந்த இயக்கத்திற்கு நிதி கிடைக்கும் வழிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை சவூதி அரேபியா மறுத்து வந்தாலும், நிபுணர்களால் தெரிவிக்கப்படும் கருத்துகள் சவூதி அரேபியாவின் பக்கம் விரலை நீட்டுவதாகவே அமைகின்றன.

இந்நிலையில் தான், சவூதி அரேபியாவின் இரண்டாவது புனித நகரமான மதீனாவில் உள்ள மிகப்புராதன பள்ளிவாசலுக்கு அருகிலும் ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசலொன்றுக்கு அருகிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு, ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனக்கு ஆதரவளித்த நாட்டுக்கெதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் மேற்கொள்வதென்பது, ஓரளவு விநோதமாகத் தோன்றினாலும், இரு பிரிவுகளுக்குமிடையிலான தொடர்பைக் கவனமாக ஆராய்ந்தால், அதன் உண்மைத்தன்மை புலப்படும். ஒரு பக்கமாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் நிதியியல் உதவிகளை நிறுத்துவதற்கு, சவூதி அரேபியா, போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், மறுபுறத்தில் அக்குழுவுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளிலும் அந்நாடு ஈடுபடுகிறது. இதனால் தான், இரு தரப்புக்கிடையிலான மோதலை 'ஆபத்தான முரண்பாடு' என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். ஒரு பக்கமாக எதிரிகள், மறுபுறத்தில் கொள்கை ரீதியாகவும் உதவிகள் ரீதியாகவும் நண்பர்கள். மிக மிக ஆபத்தான நிலைமை இது.

இந்த முரண்பாட்டை இலகுவாக விளக்குவதற்கு, இந்தத் தாக்குதல்களின் பின்னரான சவூதி அரேபியாவின் எதிர்வினைகளை ஆராய்வதும் அவசியமானது. சவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, குறிப்பாக மதீனாத் தாக்குதல் - சவூதி அரேபியாவின் உயர்நிலை இஸ்லாமிய மதகுருக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்குத் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியதோடு, உண்மையான முஸ்லிம்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தனர்.

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில், பொதுமக்கள் எவரும் கொல்லப்பட்டிருக்கவில்லை. பாதுகாப்பு ஊழியர்கள் சிலர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு ஊழியர்களின் உயிர்கள் ஒன்றும் துச்சமானவை கிடையாது, ஆனால் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், பாதுகாப்பு ஊழியர்கள் மீதான தாக்குதல்களை விட கண்டனங்களை அதிகமாகப் பெறும். அவ்வாறான போதிலும், இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, ஷியா முஸ்லிம்களை இலக்குவைத்து ஈராக்கிலும் ஏனைய நாடுகளிலும் தாக்குதல் நடத்தும்போதெல்லாம், சவூதி அரேபியாவிலுள்ள இந்த உயர்நிலை மதகுருக்கள் வாய் திறப்பதில்லை. பக்தாத்தில், ஈகைத் திருநாள் கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களில் 200க்கும் மேற்பட்டோர், ஒரே தாக்குதலில் கொல்லப்பட்ட போதும், வாய் திறந்திருக்கவில்லை.

தமது நாட்டில் இடம்பெறும் தாக்குதல்களை அவர்கள் கண்டிப்பார்கள் தானே, இன்னொரு நாடென்றால் அவர்கள் வீணாகத் தலையிட மாட்டார்கள் தானே என்ற வாதம் முன்வைக்கப்படலாம். அவ்வாறாக இருப்பதற்குச் சிறியளவு வாய்ப்புகள் உள்ளன தான். ஆனால் உண்மையில் நாடு எல்லையையும் தாண்டி, தங்களது மத நம்பிக்கையின்படி, உண்மையான முஸ்லிம்களெனத் தாம் கருதாத ஷியா

முஸ்லிம்கள் கொல்லப்படுவதை விமர்சிக்காமல் விடுவதன் மூலமாக, அவ்வாறான கொலைகளுக்கு, மறைமுகமான ஆதரவை, இவ்வாறான உயர்மட்டங்கள் வழங்கிவருகின்றன.

ஒன்றில், மதங்களின் பெயரால் ஏனைய மதத்தோரைக் கொல்லுதல், இன்னொன்றில் 'உண்மையான' மதத்தின் பெயரால் 'போலி' மதத்தவரைக் கொல்லுதல் ஆகியன தான், இவ்வாறான மதவாதிகளிடமிருந்து நாம் கண்டுகொள்வது.

இவ்வாறான மத ரீதியான கொலைகள் நிறுத்தப்பட வேண்டுமாயின், எந்த மதத்தின் பெயரால் கொலைகள் இடம்பெறுகின்றனவோ, அதே மதத்தைச் சேர்ந்தோர் ஒட்டுமொத்தமாக, ஒரே குரலில், இவ்வாறான மிலேச்சத்தனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கொல்பவர்களின் கொள்கைகளில் ஒன்றை ஆதரித்துவிட்டு, தமக்கு எதிராக வருபவற்றை மாத்திரம் எதிர்த்துக் கொண்டிருந்தால், இவ்வாறானவற்றை இல்லாதொழிக்க முடியாது. முஸ்லிம்களின் புனித மாதத்தைக் கூட, இரத்த பூமியாக்கும் இவர்களை எதிர்க்காவிட்டால், இவர்களைப் போன்ற மதத்தின் பெயரால் பிணம் தின்னும் கொடூரர்கள் தொடர்ந்தும் பிழைத்துக் கொண்டே இருப்பார்கள் என்பது தான் நிதர்சனம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X