2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முரண்பாடுகளுக்கான மாற்று மருந்து?

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜனவரி 06 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்  - பகுதி - 04

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, இப்பத்தியின் முன்னைய பகுதிகளில் ஆராய்ந்தது போலவே, காலத்தின் தேவை கருதி உருவானதொரு கூட்டணியாகும்.   

கூட்டணிக் கட்சிகளிடையே, பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைப் புள்ளியில், அவை ஒன்றிணைந்து நின்றன. தேர்தல் கூட்டணி என்ற வட்டத்தைத் தாண்டி, அதற்குத் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயகக் குரலாகச் செயற்பட வேண்டிய கடப்பாடும் இருந்தது.   

விடுதலைப் புலிகள் அமைப்பு, கூட்டமைப்பைத் தனது ஜனநாயக அரசியல் முகவராகச் சுவீகரித்துக் கொண்டதானது, கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், சாதகமானதும்  பாதகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்தியது.   

2009ஆம் ஆண்டில் யுத்த இறுதி வரை, கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் ஒருவகையான கட்டுக்கோப்போடு இயங்கியது. உள்ளக முரண்பாடுகள் இருந்தாலும், அவை ஒற்றுமையைச் சிதைக்கக் கூடியளவுக்கு இருக்கவில்லை. இதற்கு, விடுதலைப் புலிகள் அமைப்பு முக்கியமான காரணம் என்றால், அது மிகையல்ல.   

மேலும், ‘கூட்டமைப்பில் ஒரு கழுதை நிறுத்தப்பட்டாலும் அது வெற்றிபெறும்’ என்றளவுக்கு வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பு முக்கிய காரணமாக இருந்தது.   

ஆனால், மறுபுறத்தில் தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துக்குப் பதிலாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ‘புரொக்ஸி’கள் என்ற முத்திரையே, இன்றுவரை கூட்டமைப்பின் மீது தொடர்ந்து வருகிறது.   

இது, தமிழ்த் தேசியத்தின் கருத்துகளைத் தெற்கில் கொண்டு வந்து சேர்ப்பதற்குக் குறிப்பாக, வெகுஜன வௌியில் கொண்டு வந்து சேர்ப்பதற்குப் பெருந்தடையாக மாறிவிட்டது.   

மேலும், கூட்டமைப்பின் தமிழ்த் தேசியச் செயற்பாடுகள், பெருமளவுக்கு விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியச் சித்தாந்த வரையறைகளுக்குள் முடங்கிவிட்டன. அதைத் தாண்டி, தமிழ்த் தேசியம் பரிணாம வளர்ச்சியடையாது போனது, பெரும் துரதிர்ஷ்டமாகும்.

மறுபுறத்தில், 2009இற்குப் பின்னர், கூட்டமைப்புக்குள் உருவான கட்சி முரண்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாகத் தலையெடுக்கத் தொடங்குகின்றன; தனிநபர் முரண்பாடுகளும் மேலோங்கத் தொடங்குகின்றன.   

இதன் விளைவாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், கூட்டமைப்பிலிருந்து விலகியது. அவருடன், விடுதலைப் புலிகளால் அரசியலில் களமிறக்கப்பட்ட கஜேந்திரன் உள்ளிட்டவர்கள், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில், தமது அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.   

மறுபுறத்தில், இறுதி யுத்த முடிவு வரை அரசாங்கத்தோடும் அரசாங்கப் படைகளோடும் இணைந்து செயற்பட்டு வந்த புளொட் அமைப்பு, காலவோட்டத்தில் கூட்டமைப்போடு இணைந்து கொண்டது. வடக்கு, கிழக்கில் கூட்டமைப்புக்கு உள்ள அரசியல் செல்வாக்கு, குறிப்பாகத் தேர்தல் ரீதியான செல்வாக்கு, புளொட் அமைப்பு கூட்டமைப்பில் இணைவதற்கு முக்கியமான காரணமாகும்.    

மறுபுறத்தில், மிக நீண்ட காலமாகக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு, தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப், அத்தனை முரண்பாடுகளுக்கு மத்தியிலும், கூட்டமைப்புக்குள் இருந்ததற்கான காரணமும் தேர்தல் சார்ந்ததுதான்.   

ஏனெனில், கூட்டமைப்பை விட்டுக் கொள்கை அடிப்படையில் வௌியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் எவருமே, இன்றுவரை தமிழ் மக்களிடையே கொள்கை சார் பேச்சுகளாலும் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களாலும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தினாலும், அந்தச் சல சலப்புகளைத் தேர்தல் வெற்றியாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.   

மறுபுறத்தில், கூட்டமைப்பின் ‘பொது வேட்பாளராக’, வடமாகாண சபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று, வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராகப் பதவி வகித்த சீ.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பில் இருந்து விலகி, தற்போது தனிக்கட்சியொன்றை ஸ்தாபித்து இயங்கி வருகிறார். அவரது பிரிவுக்கும், கொள்கை முரண்பாடுகளையே காரணமாக, அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.   

இன்று, கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் என்ற மூன்று கட்சிகளாகக் காணப்பட்டாலும், ஒவ்வொரு கட்சியில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பலரும் கூட்டமைப்பை விட்டு விலகிவருகின்றனர்.   

டெலோ அமைப்போ, புளொட் அமைப்போ கூட்டமைப்பில் நீடிப்பதற்குத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணங்களைத் தவிர, வேறு காரணங்களோ, நியாயங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இந்தக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலர், பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் முடிவாகத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எடுத்த முடிவுகளைப் பொதுவிலேயே விமர்சித்தும் எதிர்த்தும் வந்திருக்கிறார்கள்.  

ஆகவே, இன்று கூட்டமைப்பு என்பது, சித்தாந்த ரீதியில், தமிழரசுக் கட்சி மட்டும்தான்; டெலோ, புளொட் ஆகிய இரண்டும், வெறும் தேர்தல் கூட்டணியாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இருக்கின்றன என்பது வௌ்ளிடைமலை. இந்தச் சூழலில்தான், மீண்டும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமை பற்றிய கேள்வி எழுகிறது.  

வரலாற்றில் இரண்டு முறை, பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில், பெரும் இலட்சிய நோக்கோடு உருவாக்கப்பட்டு, பின்னர் உள்முரண்பாடுகளால் பிளவடைந்துபோனதுதான், தமிழ் அரசியல் கட்சிகள் இடையான கூட்டின் கதையாகும்.   

ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில், தேர்தல் அரசியலும் தனிநபர் முரண்பாடுகளும், இந்த ஒற்றுமை சிதைவடையக் காரணமாக இருந்துள்ளன. ஆனால், இதன் விளைவு, தமிழ் மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.   

தமிழ்க் கட்சிகள் தத்துவ, சித்தாந்த, கொள்கை நிலைப்பாடுகளில் ஒரு குரலாக இயங்கும்போது, தமிழ் அரசியலின் மொத்த வலுவும் தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தவே பயன்படும்.   

மறுபுறத்தில், உள்ளக முரண்பாடுகள் தமிழ்க் கட்சிகளிடையே அதிகரிக்கும் போது, தமிழ் அரசியலின் சக்தியானது, பெருமளவுக்குக் கட்சிகள் இடையேயான ‘குழாயடிச் சண்டை’களுக்காகவே செலவிடப்படுகிறது. இது தமிழ்த் தேசியத்துக்கு மிகப்பெரும் இழப்பாகும்.   
இன்று தமிழர் அரசியலின் வலுவானது, பெருமளவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டுக்கும் இடையிலான கட்சிச் சண்டையிலேயே செலவிடப்படுகிறது என்றால் அது மிகையல்ல.   

ஒருவரையொருவர் விமர்சிப்பதிலும் குற்றஞ்சுமத்துவதிலுமே தமிழ் அரசியலின் சக்தியும் நேரமும் செலவிடப்படுகிறது. உண்மையில், இது தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்குச் செலவிடப்பட வேண்டிய அரசியல் சக்தியும் நேரமுமாகும். ஆனால், அவை அர்த்தமின்றி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.   

மறுபுறத்தில், தனிநபர் முரண்பாடுகள் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையை மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தின் நலன்களையும் சவாலுக்கு உட்படுத்துவதாகவே இருக்கிறது. குமார் பொன்னம்பலமும் நீலன் திருச்செல்வமும் ஒருதளத்தில் இணைவது, எவ்வளவு சிக்கலாக இருந்ததோ, அதைவிடச் சிக்கலாகவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆபிரஹாம் சுமந்திரனும் இணைவது சிக்கலாக இருக்கிறது. இதற்குக் கொள்கை முரண்பாடு என்ற முகத்தைத் தாண்டி, தனிநபர் முரண்பாடு என்ற முகமே முக்கியமான காரணமாகத் தெரிகிறது.  

மற்றக் கட்சிகளுக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைவதுதான், இங்கு பிரச்சினை என்று கருதிவிடவும் முடியாது. ஏனென்றால், தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டு, கூட்டமைப்பில் இருந்து விலகியவர்களால் கூட, மாற்றுத் தளமொன்றில், இதுவரை ஒன்றிணைய முடியாதுள்ளது என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது.   

அவர்கள், மாற்றுத்தளமொன்றில் இணைவது, அவர்களுக்குத் தேர்தல் ரீதியிலான பலத்தைத் தரும் என்றாலும் கூட, அதைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.   

நீதியரசர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய போது, அவரோடு சிவில் சமூக அமைப்பில் இணைந்து இயங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமசந்திரனும் கூட, அவரோடு இணைந்து கூட்டணியாக இயங்கமுடியாது போனது என்பதுதான் துரதிர்ஷ்டகரமான உண்மை. இதற்கு, சுரேஷ் பிரேமசந்திரனுடன் இணைந்து, கஜேந்திரகுமார் இயங்க மறுப்பதுதான் முக்கியமான காரணமாகப் பேசப்பட்டது.   

எல்லா விலகல்களுக்கும், கொள்கை முக்கியமான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும், அந்தக் கொள்கை எனும் முகத்திரைக்குள், தனிமனித முரண்பாடுகள் ஒளிந்திருப்பது, மக்களுக்குத் தெரியாமல் இல்லை.   

ஆனால், இந்தக் கொள்கை, தனிமனித முரண்பாடுகளால் கடைசியில் பாதிக்கப்படுவது தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களுமாகவே இருக்கிறார்கள்.  

இந்த நிலையில், இந்த முரண்பாடுகளுக்கு, உடனடி மாற்று மருந்து என்பது கிடையாது என்ற யதார்த்தத்தை, நாம் புரிந்துகொண்டாலும், இந்த ஒற்றுமையீனத்தால், தமிழ்த் தேசியம் சிதைவுறுவதைத் தடுக்க, குறைந்தபட்ச ஒற்றுமை, புரிந்துணர்வைத் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்படுத்துவது அவசியமாகிறது.   

இது எவ்வாறு ஏற்படுத்தப்பட முடியும் என்பதுதான், சிம்மசொப்பனமான கேள்வி. முதற்கட்டமாக, தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்த் தேசியக் கொள்கை சார்ந்து பேச்சு வார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கக் கூடிய ஒரு தளம் உருவாக்கப்பட வேண்டும்.   

இது தொடர்ந்து செயற்படும் அமைப்பாகவும் தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாடுகளைக் கலந்தாய்ந்து, ஒன்றுபட்ட குரலாக அதை வௌிப்படுத்தும் தளமாகவும் அமைய வேண்டும். இதில் சிவில் சமூகம் அவதானிகளாகப் பங்கெடுத்தாலும், இது முற்று முழுதான அரசியல் தளமாகவே அமைய வேண்டும்.   

சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் கலந்துரையாட ஏலவே, ‘தமிழ் மக்கள் பேரவை’ உள்ளிட்ட தளங்கள் காணப்படுகின்றன. ஒரு கூட்டணியாக, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையாது விட்டாலும், முதற்கட்டமாக, தமிழ்த் தேசியத்தின் நலன் கருதியேனும், கலந்துரையாடல், பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கக் கூடிய ஒரு தளத்தில் இணைவது அவசியமாகிறது.   

ஒன்றோடொன்று முரண்பட்டு நின்ற ஆயுதக் குழுக்கள், ஒருமித்த குரலில் ‘திம்புக் கோட்பாடுகளை’ முன்வைத்தது போல, தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை வலுப்படுத்தவும் எடுத்துரைக்கவுமேனும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு தளத்தில் இணைவது அத்தியாவசியமாகிறது.   

இந்த முதற்படி, வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படும் போது, இயல்பாகவே அடுத்த கட்டம் தொடர்பிலான தௌிவான பார்வை அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைக்கும். அவை, தேர்தல் கூட்டாக அமைகிறதா இல்லையா என்பதை, காலம் தீர்மானிக்கட்டும். ஆனால், குறைந்த பட்சம், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள், தமிழ்த் தேசியத்தை சித்தாந்த, கருத்தியல் ரீதியில் முன்வைப்பதிலேனும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். அல்லாது போனால், இந்த உள்ளக முரண்பாடுகளால் தமிழ்த் தேசியம், இனி மெல்லச் சாகடிக்கப்படும் துர்ப்பாக்கிய நிலைதான் ஏற்படும்.  

ஆகவே, குறைந்தபட்சமாக ஒரு தளத்தில் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசியம் பற்றியும் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் பேசவும் கலந்துரையாடவுமேனும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் தமிழ்க் கட்சிகள் தயாராக இருக்கின்றனவா என்பதுதான் முக்கியமான கேள்வி.   

அவ்வாறு செய்வதற்கு, ஒரு தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சி தயாரில்லை என்றால், அதன் உள்நோக்கம், நிகழ்ச்சி நிரல் பற்றி, தமிழ் மக்கள் ஐயம் கொள்ளவும் கேள்வியெழுப்பவும் வேண்டிய நிலை ஏற்படும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X