2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்கள் மீதான இனவாதமும் அவர்களின் பொறுப்பும்

Thipaan   / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

உலகிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய இனக்குழுமமாக, முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஏறத்தாழ 1.6 பில்லியன் முஸ்லிம்கள், உலகெங்கிலும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும், ஏராளமான நாடுகளின் முதன்மை இனக்குழுமமாகவும் இருக்கிறார்கள். ஆனால், உலகில், அதிக சர்ச்சைகளோடு சம்பந்தப்படுகின்ற இனக்குழுமமாகவும் அவர்களே இருக்கிறார்கள். மியான்மாரில் ஒடுக்கப்படுதலாக இருக்கலாம், பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டோருக்கும் முஸ்லிம்களின் சமயமான இஸ்லாத்துக்கு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் குற்றச்சாட்டுகளாக இருக்கலாம், எண்ணெய்வள நாடுகளின் கட்டுப்பாடுகளாக இருக்கலாம், அங்குள்ள மனித உரிமைகள் விவகாரங்களாக இருக்கலாம், அல்லது முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கைகளில் பாதிக்கப்படுபவர்களாக இருக்கலாம், இவ்வாறான எல்லா விடயங்களிலும், பேசுபொருளாக முஸ்லிம்களே இருந்து வந்துள்ளார்கள்.

அண்மைக்காலத்தில் இருக்கின்ற இரண்டு பிரதான பிரச்சினைகளாக, இஸ்லாமியப் பயங்கரவாதம் எனத் தெரிவிக்கப்படுகின்ற பயங்கரவாதமும் முஸ்லிம்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.

பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த இரண்டு விடயங்களும் முக்கியம் பெற்றிருக்கின்றன.

ஈராக்குக்கும் லெவன்டுக்குமான இஸ்லாமிய தேசம் (லெவன்ட் என்பது சைபிரஸ், எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான், லெபனான், பலஸ்தீனம், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளின் பகுதிகளைச் சேர்ந்த ஒரு கற்பனைப் பகுதி) என்றோ, அல்லது அதன் சுருக்கப் பெயரான ஐ.எஸ்.ஐ.எல் என்றோ, இல்லாவிடில், ஈராக்குக்கும் சிரியாவுக்குமான இஸ்லாமிய தேசம் என்றோ அல்லது அதன் சுருக்கப் பெயரான ஐ.எஸ்.ஐ.எஸ் என்றோ, டேஷ் என்றோ அல்லது, ஐ.எஸ் என்றோ பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பயங்கரவாதக் குழு, உண்மையில் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பது முதலாவது வினா.

 

உலகிலுள்ள அனேகமான எல்லா மதங்களும், ஒரு கட்டத்தில் வன்முறையைத் தங்களது அங்கமாகக் கொண்டே வந்திருக்கின்றன. சிலுவைப் போர்கள், சைவம் - சமணம் சார்ந்த முரண்பாடுகள் போன்றன, அவற்றின் சில உதாரணங்கள். இவற்றின் போதெல்லாம், அந்த சமயங்களில் பாரியளவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புகள் ஏற்பட்டன. கிறிஸ்தவ சமயம், மிகப்பெரியளவு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே, நடப்பிலுள்ள சமயமாக மாற்றமடைந்தது. ஆகவே, இஸ்லாமிய சமயத்தை, ஐ.எஸ்.ஐ.எஸ் குழு சரியாக எடுத்துக் கொள்கிறதா, அல்லது தவறான முறையில் எடுத்துக் கொள்கிறதா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, அக்குழுவுக்கும் இஸ்லாத்துக்குமிடையில் ஏதோவொரு வகையில் தொடர்பு இருக்கிறது என்ற யதார்த்தத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. ஆகவே, ஏனைய சமயங்கள் செய்ததைப் போன்று, மார்க்கத்தில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய தேவையிருக்கிறதா என்பது தொடர்பான கலந்துரையாடல்களைச் செய்ய வேண்டிய பொறுப்பு, முஸ்லிம்களிடத்தில் இருக்கிறது.

அதேபோல், தங்களுடைய மதங்களிலிருந்து வெளியேறிய அல்லது மறுசீரமைப்பாளர்களாக மாறியிருப்போரை, இணைத்துச் செயற்பட வேண்டிய தேவையிருக்கிறது. அயான் ஹிர்ஷி அலி, அஸ்ரா நோர்மானி, மாஜிட் நவாஸ் போன்ற நவீன மறுசீரமைப்பாளர்களை, வெறுமனே தூக்கி மூலையில் எறிவதை விடுத்து, அவர்களோடு கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதென்பது, காலத்தின் கட்டாயமாகிறது.

மறுபுறத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவோ அல்லது வேறெந்த இஸ்லாமிய ஆயுதக் குழுக்களோ மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும், உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் பொறுப்பானவர்கள் போன்றவாறான விம்பமொன்று உருவாக்கப்பட முயலப்படுகிறது.

பிரபலமான ஆய்வு நிறுவனமான பி.யூ.டபிள்யூ கருத்துக்கணிப்பு நிறுவனம், மிக அண்மையில் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், உலகிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்க்கிறார்கள் என வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 11 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், ஏறத்தாழ 6 சதவீதம் பேர் மாத்திரமே, அந்தக் குழுவுக்கான நேரடியான ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அந்த 6 சதவீதம் பேர், ஏறத்தாழ 60 மில்லியன் மக்களாக இருப்பதோடு, அவ்வமைப்புக்கு ஆதரவா, இல்லையா என்பது தொடர்பில் முடிவில்லை எனத் தெரிவித்தோரையும் சேர்க்கும் போது, ஏறத்தாழ 200 மில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களாக வருகின்றனர் என்ற போதிலும், அவ்வமைப்பைத் திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்ற முஸ்லிம்கள் பற்றிய கவனத்தைச் செலுத்துதல் அவசியம். அதேபோல், ஆதரிப்பதாகத் தெரிவித்த 60 மில்லியன் முஸ்லிம்களில், மிகச் சிறிய சதவீதத்தினரே, அந்த அமைப்பில் இணைந்து கொள்ளவோ அல்லது நேரடியான ஆதரவை வெளிப்படுத்தவோ வாய்ப்புகளுண்டு. எனவே, ஏனையோரையும் இணைத்துக் கொண்டு, இது தொடர்பான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

தங்களுடைய மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் பயங்கர, கீழ்த்தரமான, மோசமான நடவடிக்கைகள் பற்றி, அவதானமாகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு, முஸ்லிம்களுக்கு இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் பொறுப்பு என எழுப்பப்படுகின்ற வாதம், அப்பட்டமான இனவாதமும் அறியாமையும் ஆகும்.

இது, ஒவ்வொரு முஸ்லிமையும் அந்த அமைப்போடு சம்பந்தப்பட்டவர்களென விளிப்பது போன்றதாகும்.

இஸ்லாமென்பது ஒரு கொள்கை அல்லது செயற்பாடு. முஸ்லிம்களென்பவர்கள், மக்கள் குழாம். உலகிலுள்ள ஏனைய கொள்கைகளான இந்து, கிறிஸ்தவம், பௌத்தம், சமயசார்பின்மை, நாத்திகம், கம்யூனிசம், முதலாளித்துவம், பழைமைவாதம், லிபரல் போன்றே, இஸ்லாமும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படலாம். ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட வகையான கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக, அவற்றைப் பின்பற்றுபவர்கள் எல்லோரையும், இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்த முற்படுவது, தவறானது. ஏனெனில், எல்லாக் கொள்கைகளிலும் தவறுகள் இருக்கலாம், ஆனால், அவற்றைப் பின்பற்றுவதற்காக மக்கள் அனைவரையும் விமர்சிப்பது, பொதுமைப்படுத்துதலாகும்.

இஸ்லாமியப் பயங்கரவாதம் என அழைக்கப்படுகின்ற இந்த அமைப்புகளின் நடவடிக்கைகள், குறிப்பாக பரிஸ், பெய்ரூட் தாக்குதல்கள், மாலி ஹொட்டலில் பணயக் கைதிகள் விவகாரம் போன்றவை காரணமாக எழுந்திருக்கும் கோப அலையை, முஸ்லிம்களுக்கெதிராகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் பொது பல சேனாவாக இருக்கலாம், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான போட்டியாளர்களான டொனால்ட் ட்ரம்ப், பென் கார்சன் போன்றவர்களாக இருக்கலாம், சாதாரண சமூக வலைத்தள பயனர்களில் ஒரு பகுதியினராக இருக்கலாம், அவர்களெல்லொருமே, ஒவ்வொரு முஸ்லிமையும் 'பயங்கரவாதியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டவன்' என்ற ரீதியில் அணுகுவது, மிக ஆபத்தானது. அண்மைக்கால வரலாற்றில், இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து இவ்வாறான பயங்கரவாதிகள் அதிகமாக உருவாகியிருப்பது உண்மையென்ற போதிலும், ஏனைய மதங்களில் காணப்படும் பயங்கரவாதத் தன்மைகளை மூடிமறைக்க முடியாது. அதுபோல, பயங்கரவாதிகள், இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள், எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டவர் என்ற ரீதியில் அணுகுவது, ஒவ்வொரு ஆண் மகனும், வன்புணர்வாளனாக மாறுவதற்கான சாத்தியத்தைக் கொண்டவன் என்ற ரீதியில் அணுகுவதாகும். இரண்டுமே, மிக மிகத் தவறான பொதுமைப்படுத்தல்களாக அமையும்.

அத்தோடு, இலங்கையைச் சேர்ந்த 17 பேர், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந்ததாக, அக்குழுவின் தாபிக் சஞ்சிகை தெரிவித்துள்ள நிலையில், பொது பல சேனா அமைப்பும், தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றை அரசாங்கம் மறைக்கிறது என, பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது. அவ்வாறு, தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டனவா என்பது ஒருபுறமிருக்க, அவற்றைக் கொண்டு பொது பல சேனா செய்ய முயல்கின்ற அரசியல், கேவலமானது. வெறுப்பான நடவடிக்கைகளால் செய்ய முடியாதவற்றை, தற்போது பரிஸ் தாக்குதலின் பின்னணியில் எழுந்துள்ள எதிர்ப்பலையைப் பயன்படுத்திச் செய்யப் பார்க்கிறது.

இலங்கையைச் சேர்ந்த 17 பேர் இணைந்தமை உண்மையெனில், அதைக் கண்டுபிடிப்பதற்குத் தவறியமை தொடர்பில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர், தங்களைத் தாங்களே கேள்வியெழுப்புவதோடு, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அவசியமானது. ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் ஆபத்தைப் புறக்கணித்துவிட முடியாது. ஆனால், யுத்த காலங்களில், கொழும்பிலிருந்த ஒவ்வொரு தமிழனுமே, தற்கொலைக் குண்டுதாரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டவன் என்ற ரீதியில் அணுகப்பட்ட வரலாற்றை, இங்குள்ளவர்கள் இலகுவாக மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த வரலாறு, முஸ்லிம்கள் மீது திருப்பப்படக்கூடாது, அவர்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான எதிர்ப்போ, விழிப்புணர்வோ காரணமாக அமையக்கூடாது என்பதில், சட்ட அமைப்புகள் மாத்திரமன்றி, ஒவ்வொரு குடிமகனுமே கவனமாக இருக்க வேண்டியதென்பது, மிக அவசியமானது. இன்னுமொரு இனப்பிரச்சினையையோ அல்லது ஓடுக்குமுறையையோ, அல்லது அதனால் ஏற்படும் இன முறுகல்களையோ தாங்குவதற்கு, இந்த நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ, எந்தவிதத்திலும் சக்தி கிடையாது என்பதே உண்மை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .