2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு

Thipaan   / 2016 மே 21 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானோர், மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களால் பெரும் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகள் பற்றியும் அரசியல் சார்ந்த அபிலாஷைகளின் நிலைப்பாடு குறித்தும் பேச வேண்டியிருக்கின்றது. முஸ்லிம்கள் பற்றியே இக்கட்டுரை அதிக கவனம் செலுத்துகின்றது என்றாலும், இதிலுள்ள பல விடயங்கள் தமிழர்களுக்கும் பொதுவானவையாகும். 'வழிபடுதலால்' அவர்கள் வேறுபட்டாலும் வாழ்வியலில் இவ்விரு சமூகங்களினதும் பொதுவிதியாக இவ்விடயங்கள் காணப்படுகின்றன.

இலங்கையின் சரித்திரக் குறிப்புக்களின் படி, சுதந்திரத்துக்கு முன்னரும் அதற்கு பின்வந்த சில காலங்களிலும் முஸ்லிம்களின் அரசியல் ஆளுகை என்பது தென்னிலங்கையை மையமாகக் கொண்டதாகவே இருந்தது. பொதுவாகவே, ஓர் ஆட்புல எல்லையின் ஆளுகை என்பது, தலைநகரை குவிமையமாகக் கொண்டதாக இருப்பது தவிர்க்க முடியாதது. அக்காலத்திலும் இனவாதிகள் இருந்தார்கள்தான். ஆனால், அந்த இனவாதம் இன்றிருப்பது போன்று அரசியல்மயப்படவில்லை. மக்களுக்குள் வியாபித்திருக்கவும் இல்லை. இனவாதத்தை தூண்டிவிட்டு, அந்தத் தீயிலேயே கருகிப் போன சில அரசியல்வாதிகளதும் பௌத்த செயற்பாட்டாளர்களதும் வீட்டுத் தோட்டங்களில் பெருந்தேசியவாதக் கொள்கைகள் ஆளுயர வளர்ந்திருந்தன. என்றாலும் அது வெளியில் கிளை விரித்திருக்கவில்லை என்றே கூறவேண்டும். அதேபோல், பிரதேசவாதம், பிராந்தியவாதம் அன்று இருக்கவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் பிரதேச ரீதியான கண்ணோட்டத்துடன் நோக்குவதற்கான எந்த முகாந்திரமும் மக்களுக்கு இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.

விடுதலைப் போராட்டமே, சிறுபான்மை மக்கள் மீதான கவனக் குவிப்பை ஊக்குவித்தது எனலாம். தமிழ்க் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள், வட- கிழக்கில் வியாபிக்கத் தொடங்கிய சில வருடங்களுக்குள்ளேயே, முஸ்லிம்களின் அரசியலும் கிடுகிடுவென வளர்ச்சியடைந்தது. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என தேசிய கட்சிகளில் இணைந்து அநேகர் அரசியல் செய்தனர். பின்னர் தனித்த அரசியல் அடையாளத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி உருவானது. அதில் ஏற்பட்ட உடைவுகள் மேலும் சில கட்சிகளையும் உருவாக்கியது. தனித்த அடையாளத்துடனான 'காங்கிரஸ்கள்' உருவாகி விட்ட பிறகு, தென்னிலங்கையை மையமாக வைத்துச் சுழன்று கொண்டிருந்த முஸ்லிம்களின் அரசியலில் அரைவாசிப் பகுதி, வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக ஒரு கட்டமைப்பு மாற்றத்துக்கு உள்ளானது.

அதனைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கில் இருந்த முஸ்லிம்கள் வேறு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்தனர். விடுதலைப் போராட்டமும் பெருந்தேசிய கட்சிகளின் மேலோட்டமான கவனிப்பும், தமக்கே உரித்தான அரசியலை ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற உணர்வை,

இப்பிராந்திய முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியது. இது மிகவும் யதார்த்தமானதும் கூட. தாம் செறிவாக வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் தனித்துவக் குரலாக கட்சிகளை வளர்ப்பதற்கு ஏதுவான புறநிலைகள் இருக்கின்ற போது, சுதந்திரக் கட்சியிலும் ஐ.தே.க.விலும் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம், கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இருக்கவும் இல்லை. இப்போதும் வடக்கு, கிழக்கில் உள்ள ஒரு தொகுதி முஸ்லிம்கள் பெரும்பான்மை கட்சிகளின் ஆதரவாளர்களாக இருக்கின்ற போதும், பெரும்பாலானோர் தனித்துவ கட்சிகளின் ஆதரவாளர்களாக மாறிப் போயுள்ளனர். எவ்வாறிருப்பினும், எம்.எச்.எம்.அஷ்ர‡பின் மரணத்துக்குப் பின்னர், இந்தக் காங்கிரஸ்களால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

மேற்சொன்ன கட்டமைப்பு மாற்றம், வடக்கு, கிழக்குக்கு வெளியே ஏற்படவில்லை. முஸ்லிம் கட்சிகள் பல உருவாகிவிட்டாலும், வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள், பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களிப்பதையே இப்போது வரைக்கும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸினாலோ ஏனைய கட்சிகளினாலோ, இப்பிராந்திய முஸ்லிம்களில் ஒரு சிலரையே தம்பக்கம் கவர்ந்திழுக்க முடிந்துள்ளது. மேலும் சிலர் முஸ்லிம் கட்சிகளுக்கு ஆத்மார்ந்த ஆதரவை தெரிவிக்கின்ற போதும், தேர்தல் என்று வந்து விட்டால், அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது சுதந்திரக் கட்சிக்கோதான் வாக்களிக்கின்றனர். இதற்கான காரணங்களும் பட்டவர்த்தனமானது.

கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகள், கண்டி, நுவரெலியா, குருணாகல், மாத்தளை, அநுராதபுரம், பொலனறுவை, காலி, மாத்தறை, பேருவளை, சிலாபம், இரத்தினபுரி, பண்டாரவளை, பதுளை, கேகாலை போன்ற பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னும் பல பகுதிகளில், முஸ்லிம்கள், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். அதேபோன்று, இரண்டு சிங்கள ஊர்களுக்கு இடையில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களும் உள்ளன. இப்பிரதேசங்களில் அநேகமானவற்றில், கிழக்கைப் போன்று முஸ்லிம் கட்சிகள் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை கொண்டிருப்பதில்லை. எனவே, அங்குள்ள முஸ்லிம் மக்கள் யதார்த்த பூர்வமாக சிந்தித்து பெரும்பான்மை கட்சிகளுக்கு காலகாலமாக வாக்களித்து வருகின்றனர்.

இவ்வாறான பல பிரதேசங்களில், ஐக்கிய தேசியக் கட்சியை அல்லது சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முஸ்லிம்களாக இருக்கின்றனர். இன்னும் சில பிரதேசங்கள் உள்ளன, அங்கு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற போதும் அவர்களிடையே ஒரு பலம்மிக்க முஸ்லிம் அரசியல் பிரதிநிதி இருப்பதில்லை. எனவே, அந்த மக்கள் அங்கிருக்கும் தமது அபிமானத்தை வென்ற சிங்கள, தமிழ் அரசியல்வாதிக்கே வாக்களிக்கின்றனர். இதுதான் நடைமுறை யதார்த்தம் என்பதை விட, புத்திசாலித்தனமானது என்று கூட கூறமுடியும். ஏனென்றால், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினை வேறு, வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள் வேறு. வடக்கு, கிழக்கில் நடந்து கொண்டிருப்பது, உரிமையை மையப்படுத்திய அரசியல். அதற்கு வெளியே இருப்பது, நாளாந்த சமூக வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அரசியல் என்று சொல்ல முடியும். வடக்கையும் கிழக்கையும் மையமாக வைத்து, ஒரு தனி முஸ்லிம் மாகாணம் என்று முஸ்லிம் கட்சியின் அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். தமிழர்களைப் போல, தமக்குமோர் ஆளுகைப் பிரதேசம் வேண்டுமென்று இன்னுமொரு தரப்பு கூறுகின்றது. இந்த கதைகளுக்குப் பின்னால் போவதற்குரிய எந்த அவசியமும் வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு கிடையாது. இதற்கு தார்மிக ஆதரவை அவர்கள் வழங்கலாம் என்றாலும், கொழும்பில் இருக்கின்ற ஒரு முஸ்லிமோ அல்லது காலியில் இருக்கின்ற சில முஸ்லிம்களோ இதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முடியாது. அது, பக்கத்தில் உள்ள சிங்களவர்களுடனான உறவில் ஒரு கீறலை உண்டு பண்ணக் கூடும். நெடுங்காலத்தில், அதுவோர் இன முறுகலுக்கும் இட்டுச் செல்லும் அபாயம் இருக்கின்றது.

ஆனால், வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள மக்களுக்கும், அரசியலால் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள், சிக்கல்கள் இருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற மக்களுக்கு மட்டுமே அதிக பிரச்சினைகள் இருக்கின்றன, மலையக மற்றும் தென்பகுதி மக்களுக்கு அவ்வளவாக பிரச்சினை என்று கூறி விட முடியாது. கிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகள் பெரிய அளவில் இல்லை. ஆனால், தென்னிலங்ககையில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இருப்பது அவ்வாறான நாளாந்த பிரச்சினைகளே ஆகும். பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சிறுதொகையாக வாழ்கின்ற முஸ்லிம்கள் தனி அலகு கோர முடியாது. தனி மாகாணம் குறித்து சிந்திக்கவே இயலாது. அவ்வாறு எப்போது சிந்தனை எழுகின்றதோ, அன்றைய தினமே இனவாதத்தின் கோர முகத்தை எதிர் கொள்ளத் தம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

பல சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள், அங்குள்ள சகோதர இனத்தவருடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர். அவர்களிடையே மொழியால் கூட வேறுபாட்டை காண முடியாது. மதத்தால் அன்றி வேறு எந்த அடிப்படையிலும் பிரித்தறியப்படாத சமூகமாகவே இருக்கின்றனர். உண்மையில், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களும் தமிழர்களும் இதை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியுள்ளது. அங்கு வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் மிகவும் சிறியவை என்றாலும் சிக்கல் நிறைந்தவையாக காணப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், மத வழிபாட்டுக்கான தடங்கல்கள், எல்லைப் பிரச்சினைகள், இனரீதியான புறக்கணிப்புக்கள், அரசியல் பிரதிநிதி ஒருவர் இல்லாமை, குடும்பம் பெருகும் போது ஏற்படுகின்ற நெருக்குவாரங்கள், சிங்கள அரசியல்வாதிகளின் மாற்றாந்தாய் மனப்பான்மைகள், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பராமுகம் போன்றவையே பெரும்பாலும் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளாக அடையாளம் காணப்படுகின்றன.

ஆனால், இப்பிரச்சினைகளின் பெறுமானத்தை, வடக்கு, கிழக்கில் அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகளோ, அன்றேல் வேறு யாருமே குறைத்து மதிப்பீடு செய்து விட முடியாது. வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்கள், யுத்தத்தாலும் கலவரங்களாலும் பாதிக்கப்பட்;டார்கள் என்பது உண்மை என்பதற்காக, தென்னிலங்கை முஸ்லிம்கள் சுகபோகமாக வாழ்கின்றார்கள் என்று கூறவும் முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன என்பதை மறுதலிக்கவும் இயலாது. அப்படியென்றால், வடக்கு கிழககுக்கு வெளியில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள், அபிலாஷைகளை நிவர்த்தி செய்வது யாருடைய பொறுப்பு என்ற வினா எழுகின்றது?

இது விடயத்தில், எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொறுப்பிருக்கின்றது. இங்குள்ள மக்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாடிக்கை கிடையாது என்கின்ற காரணத்தினால், ரவூப் ஹக்கீமோ, ரிஷாட் பதியுதீனோ, அதாவுல்லாவோ, ஹிஸ்புல்லாவோ, அமீர்அலியோ, பைசல் காசீமோ மற்றும் முஸ்லிம் கட்சிகளால் பதவியைப் பெற்றுள்ள மற்றைய அரசியல்வாதிகளோ, அம்மக்களைக் கண்டும் காணாதது போல விட்டுவிட முடியாது. அதேபோன்று, இன்னும் முஸ்லிம் கட்சிகள் என்ற முகாமுக்குள் வராமல், பெரும்பான்மைக் கட்சிகளுக்குள் இணைந்திருக்கின்ற பௌஸி, பைசர் முஸ்தபா, ஹலீம், கபீர் ஹாசீம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி எனத் தொடங்கும் நீளமான பட்டியலில் உள்ளடங்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

பெரும்பான்மைக் கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள், வெளியில் சொல்லிக் கொள்ளாமலேயே பல சேவைகளைச் செய்திருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளும் தமது கட்சியும் மனம் கோணிவிடும் என்பதற்காக சில பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கி இருப்பதாகத் தெரிகின்;றது. ஒரு பள்ளிவாசல் உடைப்புப் போன்ற பெரிய பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது வீதிக்கு வரும் இவர்களை, மக்களின் அன்றாட பிரச்சினைகளின் போது காணக்கிடைப்பதில்லை. இந் நிலைப்பாடு மாற வேண்டும்.

வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, முஸ்லிம் கட்சி அரசியல்வாதிகள், அம்மக்களைப் புறக்கணிக்க முடியாது என்பது போலவே, பெரும்பான்மைக் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றோம் என்பதற்காக, அக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களின் விடயத்தில் அசட்டையாக இருக்க முடியாது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .