2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட்டார எல்லை மீள் நிர்ணயம் முழுமையான தீர்வாகுமா?

Thipaan   / 2016 மார்ச் 04 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களினுள் உள்ளடங்கும் வட்டாரங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யும் பணிகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, ஜூன் மாதத்தில் தேர்தலை நடாத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு திட்டமிட்டிருந்த போதும், 'அது நோன்பு மாதம்' என சுட்டிக் காட்டப்பட்டு, ஜனாதிபதிக்கு அமைச்சர் ஹலீமினால் அனுப்பப்பட்ட கடிதத்தை பரிசீலித்த ஜனாதிபதி, 'ரமழான் நோன்பு மாதத்தைத் தவிர்த்து, அதன் பின்னர் தேர்தலை நடாத்துமாறு' பணிப்புரை விடுத்திருக்கின்றார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பெற்று ஒரு வருடத்தின் பின்னர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, புதிய கலப்பு தேர்தல் முறைமையின் கீழேயே நடாத்தப்படவுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் எதிர்க்கட்சி ஆசனத்தில் கூட அமர முடியாமல் போனது. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழரசுக் கட்சியே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக தெரிவாகியது. இது, சிங்கள இனவாத குட்டையில் ஊறிய அரசியல்வாதிகளுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது. இந்த கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று கருதினர். 1988இல் விகிதாசார தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டமைக்கும் இதற்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கின்றது. 

விகிதாசார தேர்தல் முறைமையானது சிறுபான்மை கட்சி ஒன்று எதிர்க்கட்சியாக அமர்வதற்கு இருந்த சிறியதொரு நிகழ்தகவையும் இல்லாமல் செய்தது. என்றாலும், சிறுபான்மை சமூகங்களின்  நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் புதிய முறையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டன என்றே சொல்ல வேண்டும். 1988 தொடக்கம் 2015 இல் இடம்பெற்ற எல்லா நாடாளுமன்ற தேர்தல்களிலும், கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேசிய அளவில் தமிழ், முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை ஒரு மிதமான அளவில் இருந்து வந்ததை அவதானிக்க முடியும். அதன் காரணத்தினாலேயே விகிதாசார தேர்தல் முறைமை, 'சிறுபான்மை மக்களின் காவலன்' என்று வர்ணிக்கப்படுகின்றது.

இந்த முறைமையை மாற்றியமைத்து, மீண்டும் தொகுதிவாரியான தேர்தல் முறைமையை அமுலுக்கு கொண்டு வர கடந்த அரசாங்கமும் முயற்சி செய்தது. தனியே தொகுதிவாரியான தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படுமிடத்து, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒப்பீட்டளவில் குறைவாக வாழும் பிரதேசங்களிலான அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை அது பாதிக்கும் என்று சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த கருத்தை பரிசீலித்த தற்போதைய நல்லாட்சி அரசாங்கம், கலப்பு முறையிலமைந்த தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அறுதியும் உறுதியுமாக தீர்மானித்து விட்டது. இப்புதிய தேர்தல் முறைமையில் தொகுதிவாரியான தேர்தல் முறைமையின் பண்புகள் கூடிய இடத்தை பிடிப்பதுடன், விகிதாசார முறைமையின் சில வரப்பிரசாதங்களையும் இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்புதிய முறையில் தேர்தலை நடாத்துவதில் இருக்கின்ற ஒரேயொரு தாமதம், எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதாகும். இப்போது இருப்பது, இலங்கை சுதந்திரமடைந்த போதோ அன்றேல், 1980களிலோ இருந்த வட்டார ஃ உள்ளூராட்சி சபை எல்லைகள் அல்ல. ஒவ்வொரு உள்ளூராட்சி ஆளுகைப் பிரதேசத்திலும் ஏகப்பட்ட மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சில பிரதேசங்களில் வேறு சமூகத்தவரின் இனப் பரம்பல் அதிகரித்துள்ளது, வேறு சில பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு போதுமான நிலப்பரப்பு இல்லை.

குறிப்பாக பல உள்ளூராட்சி மன்ற எல்லைகள் ஒன்றுடன் ஒன்று இடைவெட்டாக காணப்படுகின்றன. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் காணிகள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் இருப்பதாக வரையறை செய்யப்பட்டிருக்கின்றது. 'கூகுள் வரைபடத்தை' வைத்துக் கொண்டு அரச காணிகள் தீர்மானிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதனால் சிறுபான்மையினர் காணிகளை இழக்க நேரிட்டதற்கு மேலதிகமாக, பல்வேறு எல்லை முரண்பாடுகளும் இன்றுவரை தீர்க்கப்படாதிருக்கின்றன.

தற்போதிருக்கின்ற தேர்தல் முறைமையில் காணப்படும் தவறுகளை திருத்தி எல்லோராலும்  ஏற்றுக் கொள்ளப்படத்தக்க ஒரு கலப்பு தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டுமென்றால் வட்டார எல்லைகள்,  உள்ளூராட்சி  மன்ற எல்லைகள் மாத்திரமன்றி தொகுதிகளின் எல்லைகளும் மீள வரையறை செய்யப்பட வேண்டும்.

ஆனால், பல வருடங்கள் எடுக்கும் என்பதால் தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்யும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. இவ்வாறிருக்க, எல்லை மீள் நிர்ணயம் பற்றி பொது மக்களிடம் மட்டுமன்றி பிராந்திய அரசியல்வாதிகளிடமும் தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது.

தொகுதி எல்லை நிர்ணயத்தை தவிர்த்து நோக்கினாலும், மேலும் இரண்டு வகையான நிர்ணயிப்புக்கள் காணப்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றங்களுக்குள் உள்வாரியான எல்லை மீள் நிர்ணயம். அதாவது, குறிப்பிட்ட ஓர் உள்ளூராட்சி சபையின் ஆளுகைப் பிரதேசத்துக்குள் வரும் வட்டாரங்களின் (றுயசனள) எல்லைகளை மீள தீர்மானித்தலாகும்.

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை வரையறுத்தல். அதாவது, பல வட்டாரங்களை உள்ளடக்கிய, ஓர் உள்ளூராட்சி சபைக்கும், அருகிலுள்ள இன்னுமொரு உள்ளூராட்சி சபைக்கும் இடையிலான எல்லைக் கோட்டை நிர்ணயிக்கும் செயற்பாடு எனலாம்.

முழுமையான, வெற்றிகரமான தேர்தலொன்று கலப்பு முறைமை அடிப்படையில் இடம்பெற வேண்டுமாயின் இவ்விரு மீள் நிர்ணயங்களும் தவிர்க்க முடியாதவை. ஆனால், உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது என்பது நீண்டகாலம் எடுக்கக்கூடிய சிக்கலான பணியாகும். இப்பணிகள் மேற்கொள்ளப்படும் வேளையில்; இரு இனங்கள் தமக்கிடையிலும் ஒரே இனம் தமக்குள்ளும் முரண்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

அத்துடன் இவ்வருடம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், வட்டார மீள் நிர்ணயமே  அதிக செல்வாக்கை செலுத்தும் என்பதும்; எல்லை மீள் நிர்ணய பணிகளை வட்டாரத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதும் யாரும் அறியாத விடயமல்ல.

அந்த அடிப்படையில், 1928ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் (262ஆம் அத்தியாயம்) 3ஆம் பிரிவின் உள்ளூராட்சி எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் ஓகஸ்;ட் 21ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரசுரிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாட்டின் கீழ், மேற்படி எல்லை நிர்ணயம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.

முதற்கட்டமாக இக்குழுவானது வட்டார எல்லைகளை நிர்ணயிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அதன் முன்னோடியாக மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள 2015 நவம்பர் 1ஆம் திகதி முதல் 21 வரை கால அவகாசம் வழங்கப்பட்டு, பின்னர் 30ஆம் திகதி வரையும் அது நீடிக்கப்பட்டது. முன்னதாக, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் வரையறுக்கப்பட்ட, ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்குள்ளும் வரும் வட்டாரங்களின் எல்லைகளை குறித்துகாட்டும் வரைபடங்கள்  அமைச்சின் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்திருந்தது.

இதிலுள்ள நுட்பங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள், மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை. தமிழ் கட்சிகள் காத்திரமான கோரிக்கைகளை முன்வைத்தன. முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஓரிரு முஸ்லிம் கட்சிகளும் விரல்விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினர்.

ஆனால், தாம் 'எல்லாம் தெரிந்தவர்கள்' என்று கூறிக் கொள்ளும் உள்ளூராட்சி அரசியலுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட பிராந்திய மற்றும் உள்ளூர் முஸ்லிம் அரசியல்வாதிகள், திக்குத்தெரியா காட்டில் இறக்கிவிட்ட ஒரு கபோதியைப் போல நடந்து கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்கம், இதை மக்கள் மயப்படுத்தியிருந்தாலும், தமது குறைநிறைகளை ஆணைக்குழுக்கள் முன்னிலையில் போய் முன்வைக்கக் கூடிய மனநிலைக்கு இன்னும் முஸ்லிம்கள் வரவில்லை என்பதே பொதுவான அவதானிப்பாகும். எவ்வாறிருப்பினும் கணிசமான தமிழ் மக்களும் சில முஸ்லிம்களும் கருத்தறியும் குழுவுக்கு தம்முடைய கருத்துக்களை வழங்கியுள்ளனர். இதன்படி சுமார் ஆயிரம் இடங்களில் அல்லது வட்டாரங்களில் மீள்நிர்ணய சிக்கல்கள் இருப்பதை குழு அடையாளம் கண்டுள்ளது.

வட்டார எல்லை மீள் நிர்ணயிப்பு செயன்முறையில் ஜனாதிபதியோ பிரதமரோ எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன், எந்தவொரு சமூகம் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கோரியுள்ளதாகவும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமையில் தமது இனத்துவ பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துமாறு சிறுபான்மையினங்கள் கோரியதைக் கருத்திற் கொண்ட அரசாங்கம், சிறுபான்மையின பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக உறுதிப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றை உட்சேர்த்துள்ளது. அத்துடன் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போது மேற்கொள்ளப்படுவது வட்டார எல்லைகளை மீள வரையறுக்கும் பணியாகும். அரசாங்கம் புதிதாக பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானித்திருக்கின்ற ஓரிரு பிரதேசங்களில் மாத்திரமே உள்ளூராட்சி எல்லைகளும் வரையறுக்கப்படும் சாத்தியமிருக்கின்றது.

ஆனபோதும், வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்துவிட்டால், தற்போது நாட்டில் பரவலாக காணப்படுகின்ற எல்லாவிதமான எல்லைசார்; பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வாக அமையுமா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மையில் ஒவ்வொரு ஊருக்குள்ளும் அதாவது, உள்ளூராட்சி மன்ற எல்லைக்குள்ளும் இருக்கின்ற வட்டாரங்களின் எல்லைகள் பற்றி பெரிய முரண்பாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால், உள்ளூராட்சி எல்லைகள் தொடர்பாகவே குறிப்பிடத்தக்க சிக்கல்களும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. சுதந்திரம் அடைந்தபோது இருந்த இனரீதியான பரம்பலுக்கு ஏற்பவே அப்போது எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

ஆனால், இப்போது காணப்படுவது அன்றிருந்த இனப்பரம்பல் அல்ல. கிழக்கில் முஸ்லிம்களின் காணிகளுக்குள்  அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 34 ஆயிரம் ஏக்கர் காணிகள் பற்றிய முரண்பாடுகள் கிடப்பில் கிடக்கின்றன. இதே நிலைமை தமிழர்களுக்கும் உள்ளது.

இந்நிலைமையை, கிழக்கில் பொத்துவில் தொடங்கி திருமலை மாவட்டம் வரை மட்டுமன்றி வடக்கிலும் அவதானிக்க முடிகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் உள்ளூராட்சி மன்ற எல்லைகள் பற்றிய பல முரண்பாடுகள் உள்ளன.

கடந்த ஆட்சிக்காலத்தில் இதனை சீர்செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இப்பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அப்போதைய அரசாங்கம் எல்லை நிர்ணய செயற்பாட்டை முன்னெடுத்த போது 'சரியானது' எனக் கூறப்பட்ட எல்லைகளை, இப்போது 'பிழையான எல்லைகள்' என்று கூறுகின்ற அற்பத்தனமான அரசியலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

வட்டார எல்லைகள் மட்டுமன்றி, உள்ளூராட்சி மன்ற எல்லைகளும் யாருக்கும் பாதகமில்லாமல் மீள வரையறுக்கப்பட வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் தொகுதிகளும் மீள வரையறை செய்யப்படுதல் அவசியம். அதனால்; கிடைக்கும் அனுகூலம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை இனங்கள் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வது மாத்திரமல்ல. வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் நிலவும் காணிப்பிரச்சினை, எல்லை முரண்பாடுகள் மற்றும் அத்தோடு சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கும் அதன்வழியாக நிரந்தர தீர்வு கிடைக்கலாம். 

எனவே, அரசாங்கம் அடுத்த கட்டமாக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை மீள நிர்ணயிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். தொகுதிகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், எல்லை நிர்ணங்களில் கூடிய கவனம் செலுத்துவதுடன், நியாயமாக நடந்து கொள்ளவும் வேண்டும். வழக்கம்போல குறுகிய அரசியல் நோக்கங்களுக்கான கோஷமாக இவற்றை பயன்படுத்த கூடாது.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .