2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஸ்ரீமாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது

Thipaan   / 2016 மார்ச் 07 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 30)

'1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்'

'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் தோல்வியைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் என்ன செய்வது என்ற நிலையறியாது நிற்கும் சூழல் காணப்பட்டது. 'கனவான்' அரசியல்வாதி என்று பரவலாக அறியப்பட்ட டட்லி சேனநாயக்கவே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்ட பின், இனி எந்த சிங்களத் தலைமையைத்தான் தமிழர்கள் நம்புவது என்ற நிர்க்கதி நிலையைத் தமிழ்த் தலைமைகள் எதிர்கொண்டன.

1970ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மே 27ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என முடிவானது. அன்று, பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 5,505,028பேர் இருந்தனர். 151 ஆசனங்களுக்காக 441 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலைப் பொறுத்தவரை, ஸ்ரீமாவோ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சம சமாஜக் கட்சியும் 'கூட்டணியாகக்' களமிறங்கின. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான இடதுசாரிக் கட்சிகளின் முன்னைய 'தேர்தல் கூட்டானது' பெருமளவுக்கு போட்டியின்மை ஒப்பந்தங்களாகவே இருந்தன, அதாவது ஒரு தொகுதியில் ஒன்றை எதிர்த்து மற்றொன்று போட்டியிடாது என்ற ஒப்பந்தம், ஆனால், இம்முறை அதனையுந்தாண்டி, இக்கட்சிகள் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்திருந்தன.

'ஐக்கிய முன்னணி' என்றறியப்பட்ட பதாகையின் கீழ், இக்கூட்டணி அமைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 108 வேட்பாளர்களையும், லங்கா சம சமாஜக் கட்சி 23 வேட்பாளர்களையும், கம்யூனிஸ்ட் கட்சி 9 வேட்பாளர்களையும் களமிறக்கின. மொத்தமாக ஐக்கிய முன்னணி சார்பில் 140 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி 130 வேட்பாளர்களையும், மஹஜன எக்ஸத் பெரமுண 4 வேட்பாளர்களையும் களமிறக்கினர்.

ஆர்.ஜி.சேனநாயக்க, சிங்ஹல மஹஜன பக்ஷய (சிங்கள மக்கள் கட்சி) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் சார்பில் 51 வேட்பாளர்களைக் களமிறக்கினார். இவ்வமைப்பானது அவர் 1960களின் மத்தியில் ஆரம்பித்த சிங்கள பேரினவாத அமைப்பான 'அபி சிங்ஹலே' (நாம் சிங்களவர்) அமைப்பின் தொடர்ச்சியாக அமைந்தது. தனது அரசியல் காலம் முழுவதும் சிங்கள பேரினவாத, சிங்கள தேசியவாத அரசியலை முன்னெடுத்தவர் ஆர்.ஜி.சேனநாயக்க.

தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 வேட்பாளர்களையும், சமஷ்டிக் கட்சி (இலங்கை தமிழரசுக் கட்சி) 19 வேட்பாளர்களையும் களமிறக்கியது. தமிழரசுக் கட்சியிலிருந்து தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி சட்டமூலத்தை எதிர்த்தமைக்காக விலக்கப்பட்ட வி.நவரட்ணம் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தார்.

சுதந்திரமும் தன்னாட்சியுமுடைய தமிழரசு ஒன்றை இலங்கையில் ஸ்தாபித்தல் என்ற நோக்கத்துடன் அவ்வமைப்பை அவர் 1969இல் ஆரம்பித்திருந்தார். தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில் ஊர்காவற்றுறை தொகுதியில் வி.நவரட்ணம் போட்டியிட்டார்.

'தேர்தல் விஞ்ஞாபனங்கள்'

ஐக்கிய முன்னணியின் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜக் கட்சியின் கூட்டணியின்) தேர்தல் விஞ்ஞாபனம் பல குறிப்பிடத்தக்க விடயங்களைக் கொண்டமைந்தது. இலங்கையில் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை எழுதுவதற்கான முன்மொழிவுகளைச் செய்தது. 1948 முதல் பிரித்தானிய முடியின் கீழான டொமினியன் நாடாக இருந்த இலங்கையை, குடியரசாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இருந்து வந்தது. இதனைச் செய்வதற்கான முயற்சி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் அவரது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களினால் அது வெற்றியளிக்கவில்லை.

ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு குறிப்பிட்டது: 'இலங்கையை சோசலிச ஜனநாயகம் என்ற நோக்கை அடையப்பெறுவதற்கான இறைமையும் சுதந்திரமுள்ள குடியரசாகப் பிரகடனம் செய்யவும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் ஏதுவகை செய்யும் புதிய அரசியலமைப்பொன்றை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏககாலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கும், ஏற்பதற்கும், அமுல்படுத்துவதற்கும் என அரசியலமைப்பு நிர்ணய சபையாக செயற்படுவதற்கான மக்களாணையைக் கோருகிறோம்'.

அத்துடன் பின்வரும் விடயங்களும் ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்பட்டன: 1956ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தை (தனிச் சிங்களச் சட்டத்தை) அமுல்படுத்துதல்; உத்தியோகபூர்வ மொழியினை நீதிமன்றத்துக்கும் அமுல்படுத்துதல், பெரும்பான்மை மக்களின் மதமான பௌத்த மதத்துக்கு அதற்குரிய இடத்தினை வழங்குதல்;, 1964இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல்;, அத்தோடு வணிக, வர்த்தக மற்றும் பொருளாதாரத்துறையில் அரசின் பங்கை விரிவாக்கி, தனியாரின் செயற்பாடுகளை நசுக்கத்தக்கதொரு சோசலிச பொருளாதார முறையினைக் கொண்டுவரும் முன்மொழிவையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

ஐக்கிய முன்னணிக்கு முன்னாள் பிரதம நீதியரசரான ஹேம பஸ்நாயக்கவின் ஆதரவு இம்முறை இருந்தது. சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க ஆளுமையாக இருந்த ஹேம பஸ்நாயக்க 1965 தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்திருந்தார். எந்த ஸ்ரீமாவோவின் ஆட்சியை வீழ்த்தை அவர், 1965இல் ஆதரவளித்தாரோ, இன்று அதே ஸ்ரீமாவோ ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆதரவளிக்கிறார். முன்னணி பத்திரிகைகளின் ஆதரவும் இம்முறை ஸ்ரீமாவோவுக்கு சாதகமாக இருந்தது.

ஐக்கிய முன்னணி தனது பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுத்தது. 'அரசாங்கம் அள்ளி 'இலவசமாக' வழங்கும்' என்ற வகையிலான 'சோசலிச' வகையறாப் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் உடனடிப் பிரபல்யம் பெற்றது. ஸ்ரீமாவின் பிரசாரக் கூட்டங்களில் 'அபே அம்மா மக எனவா, ஹால் சேரு தெகக் தெனவா' (எங்கள் அம்மா வந்துகொண்டிருக்கிறார், இரண்டு 'சேரு' (அளவீடு) அரிசி தரப்போகிறார்) என்ற கோசம் எழுந்தது. மேடையில் பேசிய ஸ்ரீமாவோவும் 'நாம் ஆட்சிக்கு வந்ததும், உங்களுக்கு இரண்டு 'சேரு' (அளவீடு) அரசி தரப்படும், அதை சந்திரனில் இருந்தென்றாலும் கொண்டுவருவோம்' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். அந்தப் பேச்சுக்கு கரவொலி விண்ணைப்பிளந்தது. அரசியல் அறிவற்ற, பொருளாதாரம் இயங்கும் முறைபற்றிய தெளிவற்ற மக்களை எவ்வாறு ஏமாற்றி வாக்குகளைப் பெறமுடியுமோ, அதற்கான சகல சூத்திரங்களையும் ஐக்கிய முன்னணி கையாண்டது.

இலசவங்கள் வழங்குவதை ஏற்கும் மக்கள், அந்த இலவசங்கள் எங்கிருந்து வருகின்றன என்று சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்திக்கும் மக்களைக் கூட 'சந்திரனிலிருந்தாவது கொண்டு வருவோம்' என்ற சொல்லாட்சிப் பேச்சுக்களால் (rhetoric) மயக்கிவிடுகிறார்கள். உண்மையில் 1965 முதல் 1970 வரை டட்லி சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தை விவசாயத்துறையின் மறுமலர்ச்சிக்கு பிரதமர் டட்லி சேனநாயக்க செய்த பணிகள் ஏராளம். விவசாயத்துறை அபிவிருத்தியை தனது ஆட்சிக்காலம் முழுவதும் ஒரு வெறித்தனமான ஆர்வத்துடன் டட்லி சேனநாயக்க முன்னெடுத்ததாக ப்ரட்மன் வீரக்கோன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

அதன் முத்தாய்ப்பாக அமைந்த டட்லியின் கனவுத் திட்டம்தான் 'மஹாவலி அபிவிருத்தித் திட்டம்'. 1969ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட இந்த நீண்டகாலத்திட்டத்துக்கான அடிக்கல்லானது, 1970 பெப்ரவரி 28ஆம் திகதி பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் நாட்டப்பட்டது. ஆனால், டட்லியின் இத்தனை அபிவிருத்தியும். நீண்டகாலத் தொலைநோக்குத் திட்டங்களும். ஸ்ரீமாவோ அவரது 'தோழர்களும்' வழங்குவதாகச் சொன்ன 'சோசலிச சொர்க்கத்தின்' முன்னால் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனது பிரசாரங்கள் மூலம் இன்னும் பலவழிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 'செக்' வைத்தார். டட்லி சேனநாயக்கவினால் செய்யப்பட்ட முட்டாள்தனமான காரியங்களில் ஒன்று, ஞாயிறு விடுமுறையை இல்லாதொழித்தமை. ஸ்ரீமாவோ கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, தாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகப் பிரகடனப்படுத்தப்படும் எனக் கூறினார்.

மறுபுறத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை 1970 ஏப்ரல் 4 அன்று வெளியிட்டது. தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமானத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: 'தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக கீழே தள்ளப்பட்டு அதன்மூலம் அவர்களது தனித்துவமும், அடையாளமும் அழிக்கப்படும் நிலைக்கு இன்றைய அரசியலமைப்பே வழிவகுத்தது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்த்தரப்பில் இருந்தாலென்ன, ஆளுங்கட்சியோடு பங்காளிகளாக இருந்தாலென்ன நிலை இதுதான்.' 'தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவதிலிருந்து அவர்களைக் காக்கக்கூடியது அவர்களது விவகாரங்களை அவர்களே கவனிக்கத்தக்க சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு ஒன்றுதான் என்று இலங்கை தமிழ் பேசும் மக்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையின் கீழ் மட்டுமே இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையுடனும், அவர்களது பிறப்புரிமையான சுதந்திரத்துடனும், சிங்கள சகோதரர்களுடன் சமத்துவத்துடன் வாழ முடியும்.' 'ஒரு சமஷ்டி அரசியலமைப்புக்கு முன்னோட்டமாக நாம் பிராந்திய சுயாட்சியை வேண்டினோம். 'பண்டா-செல்வா... ஒப்பந்தத்தினூடாக நாங்கள் அடையப்பெற எண்ணியது அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் பிராந்திய தன்னாட்சி கொண்ட மாவட்ட சபைகளையே ஆகும், ஆயினும் சமஷ்டிக்கு குறைவான வேறு ஒரு தீர்வும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. எமக்கு எந்தத் துன்பம் ஏற்படினும் நாம் எமது விடுதலைக்கான போராட்டத்தை முற்கொண்டு செல்வோம், எமது மக்களையும் அந்த இலக்கை நோக்கி தலைமையேற்று நடத்திச் செல்வோம் என உறுதியளிக்கிறோம்.

' இவ்வாறாக தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது. தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்ந்தும் இதுபோன்ற 'சொல்லாட்சிகளை' (rhetoric) கொண்டமைவதை நாம் அவதானிக்கலாம் ஆனால் அவர்களது செயற்பாடுகள் அதற்கொப்ப இருந்தனவா என்பது பற்றிய பல விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக, தாம் மாவட்ட சபைகள் ஊடாக பிராந்திய தன்னாட்சி வேண்டியதாக தமிழரசுக் கட்சி குறிப்பிடுகிறது. ஆனால் தமிழரசுக் கட்சியின் சார்பில் அமைச்சரான முருகேசன் திருச்செல்வம் வரைந்த மாவட்ட சபைகள் சட்டவரைவில் கூட 'பிராந்திய தன்னாட்சி' என்பதை வழங்கத்தக்க அம்சங்கள் ஏதுமில்லை என்பதை நாம் அவதானிக்கலாம். மாறாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஓர் உள்ளூராட்சி அமைப்பே அந்த முன்மொழிவுகளின் காணலாம். இது எவ்வகையிலும் 'பிராந்திய தன்னாட்சி' என்பதற்குள் அடங்காது.

இதனை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்ற விமர்சனப் பார்வையிலும் பார்க்க முடியும், அல்லது தமிழரசுக் கட்சி முடிந்தவரையிலான ஒரு சமரசத்தை செய்து, ஒன்றுமில்லாது இருப்பதற்கு பதில், அந்த சமரசத்தினுடாக ஏதாவதொன்றைப் பெற்றுக்கொள்ளவேனும் முயற்சிக்கிறது என்ற பார்வையிலும் அணுக முடியும்.  தேர்தல் முடிவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்தது. ஐக்கிய முன்னணிக்கோ மாபெரும் வெற்றியைப் பரிசளித்தது. இலங்கை தனது அரசியல் வரலாற்றில் இன்னொரு அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்தது. தமிழ் மக்களுக்குத்தான் பெரும் அதிர்ச்சிகள் காத்திருந்தன.

(அடுத்தவாரம் தொடரும்...)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .