2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஹொங்கொங் முறுகல் நிலையும் சர்வதேச அரசியலும்

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

வரலாற்று ரீதியாக ஹொங் கொங் - சீனா இடையிலான முறுகல் நிலை 1972ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்ததெனலாம். 1972ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் ஆதிக்கம் குறிப்பாக பாதுகாப்புச் சபை நிரந்தர உறுப்பினராக மாற்றப்பட்ட பின்னர், 1949ஆம் ஆண்டில் நீண்டகால உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நிறுவப்பட்ட சீன மக்கள் குடியரசு, ஐக்கிய நாடுகளின் சுயராஜ்யமற்ற பிராந்தியங்களின் பட்டியலிலிருந்து ஹொங் கொங்கை நீக்குமாறு கோரியிருந்தது. இதன் மூலம் ஹொங் கொங் சுதந்திரத்துக்கான உரிமையை இழந்து, 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தின் பின்னர் சீன-பிரித்தானியா கூட்டு பிரகடனம் மூலம் ஹொங் கொங்கின் இறையாண்மையை பிரித்தானியாவிலிருந்து சீனாவுக்கு மாற்றுவதற்கான விதிமுறைகளை வகுத்து அதன் மூலம் 1997ஆம் ஆண்டில் குறித்த இறையாண்மை சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

 

குறித்த சீன பிரித்தானிய அரசாங்கங்களுக்கிடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளில், இறையாண்மை கையளிப்பின் பிறகு ஹொங் கொங்கின் தனித்துவமான பொருளாதார, அரசியல் மற்றும் சட்ட அமைப்புகளைப் பராமரிப்பதற்கான தொடர்ச்சியான உத்தரவாதங்களும், ஜனநாயக அரசாங்கத்தின் குறிக்கோளுடன் ஹொங் கொங்கின் அரசியல் அமைப்பை மேலும் மேம்படுத்துவதும் அடங்கும். இந்த உத்தரவாதங்கள் சீன-பிரித்தானியா கூட்டு பிரகடனத்தில் மிகவும் வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டு, ஹொங் கொங்கின் அரை அரசமைப்பு அடிப்படை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், ஹொங்கொங் சீனாவுக்கு திரும்புவது குறித்து பல ஹொங்கொங்காரர்கள் ஆர்வத்துடன் இருந்தனர் ஆயினும், பின் காலத்தில் அவ்வார்வம் படிப்படியாக குறைவடையத் தொடங்கியது.

 

மறுபுறம், ஹொங் கொங் குடியிருப்பாளர்களுக்கும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கும், குறிப்பாக மத்திய அரசாங்கத்துக்கும், 1997ஆம் ஆண்டு முதல், குறிப்பாக 2000 களின் பிற்பகுதியிலும், 2010 களின் முற்பகுதியிலும் பதற்ற நிலை தோன்றியது. தனியாள் வருகைத் திட்டம் மற்றும் குவாங்சோ-ஷென்ஜென்-ஹொங் கொங் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு  போன்ற சர்ச்சைக்குரிய கொள்கைகள் ஹொங் கொங் மக்களின் அதிருப்தியின் மய்யப் புள்ளிகளாக இருந்தன.

 

தொடர்ச்சியாக, 2003ஆம் ஆண்டில், முன்னாள் பிரித்தானிய காலனியில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அடிப்படை சட்டத் திருத்தத்துக்கு எதிராக குரல் கொடுத்தமை, சீன சார்பு பள்ளித் திட்டம் 2012ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டதிலிருந்து ஆரம்பமான கலவரம், 2014ஆம் ஆண்டில், ஆக்கிரமிப்பு மத்திய இயக்கத்தின் அனுசரணையுடன்  "குடை புரட்சி" ஆக வடிவெடுத்திருந்தது. இது ஹொங் கொங் மக்கள் ஜனநாயக உரிமையை தக்கவைப்பதற்கும், தமது பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்தப்பின்னணியின் அடிப்படையிலேயே இப்போது நடைபெறும் தொடர்ச்சியாக ஹொங் கொங் புரட்சி பார்க்கப்படவேண்டியதாகும்.

 

இவ்வாண்டு ஹொங் கொங் ஆர்ப்பாட்டங்கள், குற்றவாளிகள் ஒப்படைப்பு எதிர்ப்பு சட்ட திருத்த மூலம்  தொடர்பானது. இச்சட்டமூலத்தின் நோக்கம் ஹொங் கொங்கில் தைவான் மற்றும் ஏனைய சீன அடுப்புல எல்லைக்குள்  சீனாவுடன் ஒப்படைப்பு ஒப்பந்தங்கள் இல்லாத பிராந்தியங்களில் தங்கியுள்ள குற்றவாளிகளை  சீனாவின் பிரதான புவியியல் எல்லைக்குள் தடுத்து வைக்க அனுமதித்தாலும், அதன் மூலம் அவர்களுக்கு ஹொங் கொங் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்ட உரிமைகளை தடை செய்தலுமாகும். குறித்த இந்த சட்டமூலம் ஹாங்காங் மக்களை பொறுத்தவரை சீன நிலப்பரப்பு மற்றும் சட்ட அமைப்புக்கு ஹொங் கொங் மக்களின் உரிமை மற்றும் செயற்பாட்டு தன்மையை உட்பட செய்யும் ஒரு உத்தி என்பதுடன், அது குறித்த பிராந்தியத்தின் சுயாட்சி மற்றும் அதன் சிவில் சுதந்திரங்களை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது என்ற கோஷத்தின் மத்தியிலேயே கலவரமாக வெடித்திருந்தது.

 

குறித்த போராட்டம் உலக அரசியல் அரங்கில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பின்வருமாறு அவதானிக்கமுடியும்.

 

1. குறித்த போராட்டத்துக்கான வெளிப்படையான ஆதரவு ஐக்கிய அமெரிக்காவால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஹொங் கொங் கிளர்ச்சிக்கு முன்னும் பின்னும் சீனாவுக்கு எதிராக உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆர்வமும் உள்ளது. இதற்கு முதலாவது காரணம், சீனா தொடர்ச்சியாக சர்வதேச வர்த்தகத்தில் முதல் நிலையில் இருத்தல், மேலும் அது சர்வதேச வர்த்தக சட்டங்களை பின்பற்றாது செயற்படுதல்: குறிப்பாக, அறிவுசார் சொத்துக்களை முறைதவறி கையாளுதல். இதன் காரணமாகவே, சீன ஏற்றுமதிகள் ஐக்கிய அமெரிக்க வர்த்தகத்தில் தொடர்ச்சியாக பல தீர்வை மற்றும் வர்த்தக ஒத்துக்கீட்டை எதிர்கொள்கிறது.

 

2. குறித்த விவகாரங்களில் தாய்வானின் பங்கு: தாய்வான்,ஹொங் கொங் கிளர்ச்சியின் தனது சுதந்திரத்துக்கான ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நம்புகின்றது. அதன் அடிப்படையில் ஹொங் கொங் விவகாரங்களை தனது சுதந்திர நகர்வுகளுக்கான செயற்பாடுகளில் தாய்வான் துல்லியமாகப் பயன்படுத்துகின்றது.

 

3. ஜப்பானின் எதிர்பார்ப்பு: ஹொங் கொங்குக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தியதில் ஜப்பானுக்கு பெரும் பங்கு உண்டு. இதன் மூலம் ஜப்பான், சீனாவின் கிழக்கு நோக்கி அகலப்படுத்தும் தனது செல்வாக்கு பெருமளவில் குறையும் என நம்புகின்றது. இதன் அடிப்படையிலேயே ஜப்பான் தொடர்ச்சியாக தென்கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து தமக்கான ஒரு பிராந்திய கட்டமைப்பை - குறிப்பாக பொருளாதார மற்றும் இராணுவக் கட்டமைப்பை ஏற்படுத்தல் தொடர்பில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கின்றது. மறுமுனையில், ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பாதுகாப்பு கட்டமைப்பு விருத்தி தொடர்பாக அண்மைக்காலங்களில் நடாத்தும் பேச்சுவார்த்தைகளும் சீனாவின் நிலைப்பாட்டை குறுக்கும் செயற்பாடாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.

 

4. பட்டுப்பாதை நகர்வுக்கு எதிரான இந்தியாவின் கொள்கை: ஹொங் கொங் கலவரங்களை பொறுத்தவரை நேரடியாக அக்கலவரம் தொடர்பாக பேசாவிட்டாலும் கூட, இந்தியாவின் தொலைதூர இராஜதந்திர நகர்வு சீனாவைப் பலவீனப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகும். பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டையும், 21 ஆம் நூற்றாண்டு கடல்வழிப் பட்டுப் பாதையும் என்பது சீனா முன்வைத்துள்ள ஒரு மேம்பாட்டுச் செயல்நெறி ஆகும். இது முதன்மையாக ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்ற யூரேசிய நாடுகளுக்கிடையே இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதைக் குவிமையமாகக் கொண்டதாகும். இந்த உத்தியில் நிலவழி பட்டுச் சாலைப் பொருளாதாரப் பட்டை, கடல்வழி பட்டுப் பெரும்பாதை ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. சீனா உலக நடப்புகளில் தமது பங்களிப்பைக் கூடுதலாக்க முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவும், தாம் மிகை உற்பத்தி செய்யும் எஃகு போன்ற பொருட்களின் ஏற்றுமதி கருதியும் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதாகக் இந்நிலை கருதப்பட்டாலும், சீனா தனது வல்லரசாண்மையை யுரேஷிய பகுதியில் நிலைநிறுத்தவே முனைகின்றது என்பது இந்தியா உட்பட பல நாடுகளின் விருப்பமின்மை ஆகும். இந்நிலையில் குறித்த ஹொங் கொங் தலையிடியில் சீனா முனைப்பாக இருத்தல் குறித்த பட்டுப்பாதைக்கான செயல்பாட்டை தாமதப்படுத்தும் என இந்தியா நம்புகின்றது.

 

இவ்வாறாக சர்வதேச எதிர்பார்ப்பு, அரசியல், அரசியல் நகர்வுகளின் மத்தியிலேயே ஹொங் கொங் புரட்சி முன்னெப்போதும் இல்லாத அளவு ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது. இது சீனாவின் வெளிவிவாகர கொள்கைகளில் எவ்வாறு தாக்கம் செலுத்தும், சீனா அத்தாக்கத்தை சமாளிக்க எவ்வாறாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .