2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அடி மேல் அடி அடித்தால் அரசாங்கமும் நகரும்?

Super User   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கே.சஞ்சயன்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முப்பதாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் நடத்தி வந்த போர் கடந்த வருடம் மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. நீண்டகாலமாக இழுபறிப்பட்ட இந்தப் போரை குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஆனால், போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான நெருக்கடிகள் இப்போது வலுவடைய ஆரம்பித்துள்ளன.

இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை சர்வதேச மட்டத்தில் ஐ.நா.வின் துணையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் முகம் கொடுத்து வருகிறது.

சர்வதேச விசாரணைகள் எதையும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கம் கூறிவந்தது.

ஆனால் அதற்கிடையில் அரசாங்கத்தின் கையை மீறிச் செல்லும் வகையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர் குழுவொன்றை அமைக்க முடிவு செய்தார்.

அந்த நேரத்தில் முந்திக் கொண்டு படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவை அரசாங்கம் அமைத்தது.

2002 இல் போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது தொடக்கம் போர் முடிவுக்கு வந்தது வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைகள் ஒருபக்கம் நடந்து வந்தாலும் சர்வதேச விசாரணைகள் பற்றிய அழுத்தங்களும், கோரிக்கைகளும் ஓய்ந்தபாடில்லை.

உள்நாட்டிலேயே விசாரணை நடத்துகிறோம், அந்த முடிவை அறிவிப்போம் என்று கூறி அரசாங்கம் சமாளிக்க முற்பட்டாலும் அது பெரியளவில் வெற்றி பெற்றதாகக் கூற முடியவில்லை.

இந்த விடயத்தில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வலிமை வாய்ந்த மேற்குலக நாடுகள் இலங்கை அரசுக்கு வெளிப்படையாகவே நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இப்போதும்  கூட அமெரிக்காவின் 17 செனட் சபை உறுப்பினர்களும், 30 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுமாக 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்குக் கூட இந்தப் போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய நிலைப்பாடுகள் தான் காரணம்.

இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரித்தானியாவில் சில கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேரிட்டது.

அதுமட்டுமல்ல, இலங்கை அரசுக்கு நெருக்கமான  பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸையும் இங்கு வரவிடாமல் தடுத்து விட்டது டேவிட் கமெரூன் அரசாங்கம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரித்தானியாவில் ஏற்பட்டது போன்ற நிலை லியாம் பொக்ஸுக்கு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கான சூழலும் இங்கு இருக்கவில்லை.

இலங்கை அரசின் நெருக்கமான நண்பனான லியாம் பொக்ஸுக்கு இங்கு எந்த விதமான இடையூறுகளும் ஏற்படாமல் பாதுகாக்க அரசாங்கம் தயாராகவே இருந்தது.

ஆனால், அவரது பயணம் பிரித்தானியாவின் நிலைப்பாட்டைப் பாதித்து விடும் என்பதாலேயே தடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இது முக்கியமான விடயம்.

இலங்கை விவகாரத்தில், குறிப்பாக போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான விவகாரத்தில் பிரித்தானியா இறுக்கமான போக்கு ஒன்றைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

அதேபோல அமெரிக்கா வெளியிடுகின்ற கருத்துகளும் இலங்கை அரசுக்குத் திருப்திதரக் கூடியவையாக இருக்கவில்லை.

அமெரிக்காவும் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையையும் நல்லிணக்க ஆணைக்குழுவினது நியாயமான செயற்பாடுகளையும் எதிர்பார்க்கிறது.

இந்தக் கட்டத்தில் தான் ஐ.நா. நிபுணர் குழுவை இலங்கை வருவதற்கு அனுமதிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குத் தெரிவித்ததாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கை அரசு ஐ.நா நிபுணர்குழுவை  இலங்கையில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர்களுக்கு ஒருபோதும் வீசா வழங்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாகக் கூறி வந்தது.

ஐ.நா நிபுணர் குழு விடயத்தில் அரசாங்கம் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கும் என்று கருதப்பட்டு வந்த நிலையில் பான் கீ மூனின் அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நீண்ட பேச்சுகளுக்குப் பின்னரே மஹிந்த ராஜபக்ஷ இதற்கு இணங்கியதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

ஐ.நா நிபுணர்குழு எப்போது இலங்கை வரும் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. ஆனால் அடுத்த மாதம் அவர்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் ஒரு சில வாரங்களுக்குள் நிபுணர் குழுவின் வருகையை எதிர்பார்க்கலாம்.

இந்தநிலையில் அமைச்சர் விமல் வீரவன்ஸ, ஐ.நா நிபுணர் குழுவின் வருகைக்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னைய நிலைப்பாட்டை மாற்றக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே ஐ.நா. நிபுணர் குழுவை அமைத்த போது அதைக் கலைக்க வேண்டும், இல்லையேல் உயிரை மாய்ப்பேன் என்று கொழும்பிலுள்ள ஐ.நா தூதரகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தவர் அவர்.

அந்தப் போராட்டம் இலங்கை அரசுக்குப் பலத்த நெருக்கடிகளைக் கொடுத்த நிலையில் தான் கைவிடப்பட்டது. மீண்டும் அதே பிரச்சனையை விமல் வீரவன்ஸ தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

அதேவேளை ஐ.நா விவகாரத்தில் அரசாங்கம் சற்று இறங்கிப் போகும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. இதுவரை நிபுணர் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறிவந்த அரசாங்கம் இப்போது அவர்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது. அது முக்கியமான விடயம்.

சர்வதேச ரீதியில் தனிமைப்பட்டு விடக் கூடாது என்ற காரணத்தினால் இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அல்லது பிரித்தானியா, அமெரிக்கா என்று போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைச் சமாளிக்க இந்த உத்தியை அரசாங்கம் வகுத்திருக்கலாம்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் முன்னைய நிலையில் இருந்து தனது நிலையைத் தளர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது என்பதை மட்டும் இது உறுதியாக்கியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மட்டுமே ஐ.நா நிபுணர்குழு அனுமதிக்கப்படலாமே தவிர வேறெவரையும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

எனினும் இது இலங்கைக்கு நெருக்கடிகள் அதிகமாகவுள்ள காலமாகவே தெரிகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் அதிகளவு நெருக்கடிகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

சீனா, ரஷ்யா போன்ற வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளையும், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளையும் தனது கைக்குள் போட்டு வைத்துக் கொண்டாலும் மேற்குலகின் அழுத்தங்களைப் புறந்தள்ள முடியாத நிலையிலேயே இலங்கை அரசு இருக்கிறது. இதன் காரணமாகவே ஐ.நா நிபுணர்குழு விடயத்தில் கொஞ்சம் இறங்கி வந்துள்ளது போலத் தெரிகிறது.

இறுதிப்போரின் போது இருதரப்பும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்போதைய நிலையில் புலிகள் தரப்பை குற்றவாளிகளாக்குவதன் மூலம் யாரையும் தண்டிக்க முடியாது.

ஆனால், இலங்கை அரசின் நிலை அப்படியில்லை. எனவே, தான் அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறது.

ஐ.நா. நிபுணர் குழுவின் கொழும்பு வருகையாயினும் சரி, சர்வதேச விசாரணைகளாயினும் சரி, இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதாகவே அமையலாம்.

அதைவிட இப்போதைய அழுத்தங்களைச் சமாளிப்பது முக்கியமானது. இதனாலேயே நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது அரசாங்கம்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், ஏன் அரசாங்கமும் நகரும் என்பதை  ஐ.நா நிபுணர்குழு விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.


You May Also Like

  Comments - 0

  • Saleem Wednesday, 22 December 2010 09:48 AM

    இப்போ கல்லு அம்மிகளை விட்டு பிளாஸ்டிக் அம்மிகளைப் பாவிப்பதால் நகருவதைப்போல் தோன்றினாலும் உண்மையில் ஒரு நகர்வும் இடம்பெறவில்லை என்பதை விரைவில் காணத்தான் போகிறோம்.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 22 December 2010 08:57 PM

    நமதுபொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகவேண்டும் என்பதும் பிரிட்டனில் தமிழ் வாக்குகளை நம்பி இருக்கும் அரசியல்வாதிகள் தூபம் தவிர உருப்படியாக இதயசுத்தியோடு அவர்கள் செயல்படவில்லை. இங்கே பொதுமக்கள்அ நியாயமாக கொல்லப்படும் நேரத்தில் பார்த்துக்கொண்டிருந்தார்களா, சேடல்லைட்டில்!
    புலிப்படையும்தான் கொன்றது என்கிறார்கள். அப்படியானால் விசாரணை அவர்கள் எல்லாம் கொல்லப்படப் பார்த்துக்கொண்டிருந்து விட்டா?
    யாருக்கு காது குத்துகிறார்கள்?
    பொன்சேகா குற்றமற்றவர், கேபி கருணா படைத்தலைவர்கள் குற்றவாளிகள் இலங்கைஅரசியலில் தலையீடு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X