2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புலிகள் தொடுத்துள்ள 'பெரும் போர்'

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.சஞ்சயன்)

திர்வரும் மார்ச் மாதம் நடைபெறப் போகின்ற உள்ளூராட்சித் தேர்தல் இப்போது கவனிப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்தத் தேர்தல் நடக்கப் போகிறது. 'மினி' பொதுத்தேர்தல் என்று சொல்லும் அளவுக்கு இது கவனிப்புக்குரியதாக உள்ளது.

பொதுத்தேர்தல் நடந்து இன்னமும் ஒரு வருடம் கூடக் கழியாதுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துவிடப் போகிறதா என்று எண்ணுகின்ற பலரும் உள்ளனர்.

கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விடவும் கொஞ்சம் குறைவான ஆசனங்களையே ஆளும்கட்சி வென்றது. பின்னர் ஆட்களை இழுத்துப் பிடித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்தநிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் பெரியளவிலான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

ஆனால் பொதுத்தேர்தல்இ ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் ஆகியவற்றை விடவும் இதற்கு வேறொரு பரிமாணம் உள்ளது.இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளூரில் மதிப்பு மிக்கவராக இருக்க வேண்டும் அல்லது அறிமுகமானவராகவேனும் இருக்க வேண்டும்.

அத்தகைய வேட்பாளர்களின் தெரிவே இந்தத் தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு இடத்தில் யார் அதிகளவு குடும்ப உறவுகளை, சுற்றத்தாரை, உறவினரை, நண்பர்களைக் கொண்டிருக்கிறாரோ அவருக்கு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக சமூகத்தில் அடுத்தவருடன் முரண்படாத பண்புள்ளவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது சுலபம். இதற்கடுத்த நிலையில் தான் கட்சி ரீதியான செல்வாக்கின் தாக்கம் இருக்கும்.

எனவே இந்தத் தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தலின் முடிவைப் போல அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. அதைவிட கடந்த ஒரு வருடத்துக்குள் நாட்டில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இந்த மாற்றங்கள் ஆளும்கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளனவேயன்றி சாதகமானவையாக இல்லை என்பது வெளிப்படை. குறிப்பாக விலைவாசி உயர்வு இதில் முக்கியமானது.

வெங்காயத்தின் விலை சில இடங்களில் 320 ரூபா வரை கூடப் போனது. தேங்காயின் விலை 100 ரூபா வரை விற்றது. மிளகாய் இப்போதும் 700 ரூபா வரை விலை போகிறது. இப்படியொரு நிலை இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை.

யாழ்ப்பாணத்தில் முன்னர் வெங்காயம் 250 ரூபா வரை விற்றதும்இ உருளைக்கிழக்கு 700 ரூபா வரை போனதும், இஞ்சி 2,500 ரூபாவுக்கு விற்றதும், தேங்காய் ஒன்று 120 ரூபாவுக்கு விற்பனையானதும், அரிசி விலை 150 வரை இருந்ததும் பெரிய விவகாரமே இல்லை.

அது போர்க்காலம்- விநியோகங்கள் தடைப்பட்டிருந்த நேரங்களில் இத்தகைய விலை உயர்வுகளை அங்குள்ள மக்கள் சந்திக்கவும்- சகித்துக் கொள்ளவும் நேரிட்டது. அது போலவே வன்னியிலுள்ள மக்களுக்கும்.


ஏனைய பகுதிகளிலுள்ள மக்களுக்கு இப்போது தான் அது எந்தளவுக்கு பாரதூரமானதென்று புரிந்து கொள்ளக் கூடியதொன்றாக உள்ளது.
போர் இல்லாத அமைதியான சூழலில்- நாடு முழுவதுமே விலைவாசி உயர்வினால் திண்டாடுகின்றது.

விலை அதிகரிப்புஇ தட்டுப்பாட்டினால் தேங்காயை இந்தியாவில் இருந்து தருவிக்க நேரிட்டது. வெங்காயம் பாகிஸ்தானில் இருந்து வந்தது. ஆனாலும் இந்தப் பிரச்சினை தீரவில்லை. அதற்குள்ளாகவே வந்து சேர்ந்தது இன்னொரு பிரச்சினை.

இரண்டு வாரங்களுக்கு மேலாகக் கொட்டித் தீர்த்த மழை நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்து விட்டது.
பல இலட்சம் மக்களை இடம்பெயர வைத்த ஒரு தேசியப் பேரழிவு அது. அத்தோடு போகவில்லை- இந்த வருட பெரும்போக அறுவடையில் சுமார் 20 வீதம் அழிந்து போய்விட்டது.

பல இலட்சக்கணக்கான மக்கள் தொழில்களை இழந்தும் இடம்பெயர்ந்தும், விலைவாசி உயர்வினால் பொருட்களை வாங்க முடியாமலும் திண்டாடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தான் இந்த மினி தேர்தல் நடக்கப் போகிறது.

இதற்கு முன்னர் தேர்தல்கள் நடைபெற்ற காலங்களில் வடக்கு,கிழக்குப் பகுதி மக்கள் தான் இடம்பெயர்வு,பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது வடக்கு,கிழக்கையும் தாண்டிய அழிவுகளும், இழப்புகளும் ஏற்பட்டுள்ள சூழலில் தேர்தல் நடக்கப் போகிறது.

இந்த நிலையானது மக்கள் முன் ஆதரவு கோரிச் செல்வது அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமானதொரு பிரச்சினையாக இருக்கப் போகிறது. வாக்குக் கேட்கப் போனால் விலைகளை குறையுங்கள்,நிவாரணம் தாருங்கள், நட்டஈடு தாருங்கள் என்று கேட்பார்கள். இதையெல்லாம் செய்வோம் என்று அரசாங்கத்தால் வாக்குறுதிகளைக் கொடுக்க முடியுமே தவிர நிறைவேற்ற முடியாது. இந்தநிலையில் அரசாங்கம் இந்தத் தேர்தலை சந்திப்பது ஒன்றும் சுலபமான காரியமாக இருக்கப் போவதில்லை.

2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அரசாங்கத்துக்குப் பெரிதும் கைகொடுத்தது புலிகளுக்கு எதிரான போர் மட்டும் தான்.
போரில் வெற்றி பெறுகிறோம்- வெற்றி பெற்று விட்டோம் என்று பிரசாரம் செய்து செய்தே அது தேர்தல்களில் வெற்றி பெற்றது.

யாருமே செய்யாத சாதனையை நிகழ்த்தி விட்டதாக அரசாங்கம் கூறியது- அதை பெரும்பாலான மக்களும் ஏற்றுக் கொண்டனர். அதாவது புலிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட வெற்றியை முதலீடாகப் பயன்படுத்திப் பெறப்பட்ட அரசியல் வெற்றியே அது. ஆனால் அந்த வெற்றியை வைத்துக் கொண்டு இந்தமுறை தேர்தலில் வெற்றியைப் பெற்று விட முடியாது.

பழைய வெற்றிகளை சொல்லிச் சொல்லி எத்தனை காலத்துக்குத் தான் அரசியல் நடத்த முடியும்.

இப்போது பெரும்பாலான மக்கள் புலிகளுக்கு எதிரான போரில் பெறப்பட்ட வெற்றியை பெரிதாக மதிக்கும் நிலையில் இல்லை. அவர்களுக்கு இப்போது விலைவாசி உயர்வுஇ சம்பளப் பற்றாக்குறை என்று ஏகப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் கழுத்தை இறுக்குகின்றன. இவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளையே மக்கள் தேடுகின்றனர்.

அதற்கு யார் வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள் என்று ஏங்குகின்றனர். இது தான் உண்மை நிலவரம்.

இந்தக் கட்டத்தில் அரசாங்கத்துக்கு ஒரு பலமான பிரசார ஆயுதம் தேவைப்படுகிறது. அது என்னவாக இருக்கும் என்பதை இப்போது ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அனுராதபுரத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துறைசார் வல்லுனர்கள் அமைப்பின் கூட்டத்தில் நிகழ்த்திய உரை ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகியிருந்தன.

"புலிகள் மேற்குலகத்துடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைக்க முனைகின்றனர். இலங்கை மீது பாரிய பொருளாதாரப் போர் தொடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களைக் கொண்டு முறியடிக்க முடியாத போர் இது. இலங்கையின் சுற்றுலாத் தொழிலை முடக்குவதே இதன் பிரதான இலக்கு.

போர்க்குற்றங்களைச் சுமத்தி நாட்டின் அரசியல் தலைவர்களையும் இராணுவத் தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்" என்றெல்லாம் அவர் உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

ஒரு பக்கத்தில் புலிகள் முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் அவரே கூறுகிறார். இன்னொரு பக்கத்தில் அவர்கள் பலமான பொருளாதாரப் போரைத் தொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது தெற்கில் உள்ள மக்களை உசுப்பி விடுவதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற முயற்சியே என இகருதப்படுகிறது.

போர்க்குற்றச்சாட்டுகளுக்காக அரசாங்கத்தை தண்டிக்க சர்வதேசம் முனைவதாக ஒரு அனுதாபத்தைத் தேடுவதற்கு முயற்சிகள் நடக்கலாம்.
அதைவிட இதன் மூலம் ஒரு தேசிய எழுச்சியை உருவாக்கலாம் என்று அரசாங்கம் கணக்குப் போடலாம்.

இதனால் உள்ளூராட்சித் தேர்தலில் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தும் மேற்குலகை ஆளும்கட்சி அரசியல்வாதிகள் நார் நாராகக் கிழித்துப் போடப் போகின்றனர்.

அதுமட்டுமன்றி இந்த விவகாரம் தான் பிரசார காலத்தில் முக்கியமானதாக மாறவும் போகிறது.

இதன் மூலம் விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பிரச்சினைகளை எல்லாம் ஓரம் கட்டி விட அரசாங்கம்  முனையலாம். அதைவிட சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரப் போர் தொடங்கப்பட்டிருப்பதால் தான் உள்நாட்டில் இந்த நிலை ஏற்பட்டது என்று கூடக் கூறலாம்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியாகவுள்ள சூழலில், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடக்கவுள்ள சூழலில், அரசாங்கத் தரப்புக்கு எதிரான போர்க்குற்ற, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அதற்கு அரசியல் ரீதியாக பெரிதும் கைகொடுக்கக் கூடிய பிரசாரமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியை வைத்து எப்படி அரசியல் வெற்றிகளைக் குவித்ததோ, அதுபோலவே இந்த விவகாரங்களையும் அரசியல் வெற்றியாக்கும் வித்தை ஒன்றும் அரசாங்கத்துக்குத் தெரியாததல்லவே.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .