2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எகிப்தின் நிலை இங்கேயும் வருமா?

Super User   / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-கே.சஞ்சயன்

பதினெட்டு நாட்களாகத் தொடர்ந்த மக்கள் போராட்டங்களின் விளைவாக- மூன்று தசாப்தமாக அதிகாரத்தில் இருந்த எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது.

அதற்கு முன்னர் துனீசியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த ஜனாதிபதிக்கும் அதே கதி தான் நடந்தது.

துனீசியாவில் பற்றத் தொடங்கிய நெருப்பு இப்போது ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

இங்கு நீண்டகாலமாக ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக மெல்ல மெல்ல புரட்சிகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

அடுத்த வரிசையில் அல்ஜீரியா, யேமன் ஆகிய நாடுகளில் இப்போது போராட்டங்கள் தொடங்கி விட்டன. லிபியா போன்ற பல அரபு நாடுகளில் இதேநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

1990களின் தொடக்கத்தில் இதே போன்றதொரு நிலை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பரவியது நினைவிருக்கலாம். அந்தப் புரட்சி சோவியத் ஒன்றியத்தைத் துண்டு துண்டாக்கியதுடன் அதன் அணியில் இருந்த பல நாடுகளிலும் கம்யூனிச ஆட்சி முறைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டது.

இப்போது அதுபோன்றதொரு எழுச்சி உலகில் பரவத் தொடங்கியுள்ளது. இதேநிலை இலங்கையிலும் உருவாகலாம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கத் தொடங்கி விட்டன.

எகிப்து போன்ற போராட்டத்துக்கு இங்குள்ள மக்கள் தயாராக இருந்தால்- தாம் அதற்குத் தலைமையேற்கத் தயார் என்று கூறியுள்ளார் ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க.

அதேவேளை , கவனமாக ஆட்சி செய்யுங்கள்- இல்லையேல் எகிப்தில் ஏற்பட்ட நிலை தான் இங்கும் உருவாகும் என்று எச்சரித்துள்ளார் ஐதேக பிரதித்தலைவர் கரு ஜெயசூரிய.

ஊடகங்களில் இப்போது எகிப்து நிலைமைகளை இலங்கையுடன் ஒப்பிட்டு அதிகளவில் செய்திகள் வெளிவருவதை அவதானிக்க முடிகிறது. இது அரசாங்கத்துக்கு ஒரு வகையில் நெருக்கடியாகவே மாறி விட்டது. போரை வெற்றி கொள்வதில் காட்டிய அக்கறையை அரசாங்கம் பொருளாதாரத்தை சீர்படுத்துவதில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அது முகம் கொடுத்து நிற்கிறது.

போருக்குப் பிந்திய இரண்டு தேர்தல்களிலும் அரசாங்கம் பெருவெற்றி பெற்ற போதிலும்- அதற்குப் பிந்திய காலங்களில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத் தவறி விட்டது. இந்தக் குற்றச்சாட்டு பரவலாகவே எழுந்துள்ளது.

அரசாங்கம் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக 18ஆ வது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதே பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு அரசியல்தீர்வு ஒன்றைக் காண முனையவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவில்லை. இந்தநிலையில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அரசாங்கத்துக்கு மிக மோசமான நெருக்கடிகளைக் கொடுக்க வாய்ப்புள்ளது.

இரண்டு கட்டமாக வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்களும் அதன் எதிர்காலப் பாதிப்புகளும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்கு அப்பால்- வாழ்வியல் ரீதியான நெருக்கடிகள் தான் அரசாங்க்துக்கு வருங்காலத்தில் அதிகமான அழுத்தங்களைக் கொடுக்கும்.

வெள்ளப் பாதிப்பை ஈடுசெய்வது ஒரு புறத்தில் முக்கியமான தேவையாக உள்ளது. அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அனைத்துலக ஆதரவும் அவசியம்.ஆனால் அதற்கு சர்வதேச சமூகம் அவ்வளவாக கைகொடுக்கும் நிலையில் இல்லை .

முதற்கட்டமாக வெள்ளம் பாதித்த போது அவசர நிவாரண உதவிக்காக 51 மில்லியன் டொலர் தேவை என்று ஐ.நா வேண்டுகோள் விடுத்தது. அந்த உதவிக் கோரிக்கை விடுக்கப்பட்டு ஒரு மாதமாகியுள்ள போதும் அதில் 20 வீதம் கூடக் கையில் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் அந்த உதவிக் கோரிக்கையைப் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது ஐ.நா.

இலங்கையில் ஐ.நாவின் உதவிக் கோரிக்கைக்கே இந்தளவு தான் ஆதரவு கிடைத்துள்ளதென்றால் அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாதுள்ளது.


முதற்கட்ட வெள்ளத்தின் போது பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் உதவிப் பொருட்களை அனுப்பின. ஆனால் இரண்டாவது கட்டமாக வெள்ளம் ஏற்பட்ட போது அமெரிக்காக மட்டுமே கூடாரங்களை அனுப்பி வைத்தது.

இலங்கைக்கான உதவி என்ற வகையில் வெளிநாடுகள் இனிமேல் எதையும் செய்யும் நிலையில் இல்லை என்றளவுக்கு வந்து விட்டன போலும்.

வெள்ளப் பாதிப்பை ஈடுசெய்வதற்கு வழியற்ற நிலையில் நாட்டின் அறுவடையில் பெரும் பகுதி அழிந்து விட்டது.
இதனால் அடுத்த சில மாதங்களில் பாரிய உணவுப் பஞ்சத்துக்கு நாடு முகம் கொடுக்க நேரிடலாம்.

அரிசி கையிருப்பில் உள்ளது- தட்டுப்பாடு வராது- இறக்குமதி செய்ய வேண்டியதில்லை- என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
ஆனால் இன்னொரு பக்கத்தில் அரிசி பதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதே இந்த நிலை என்றால் அழிந்து போன நெல்லை நம்பியிருக்கும் இரண்டாவது காலாண்டில் நிலைமை எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்வதே கடினமான விடயமாக உள்ளது.

அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்குத் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்பதை உணர்ந்து ஆரம்பத்திலேயே அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் உசுப்பலில் அதிர்ந்து போன அரசாங்கம் இப்போது தான் கொஞ்சம் முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் அதற்கு உதவுவதற்கு உலக நாடுகள் பெருமளவில் கைகொடுக்கப் போவதில்லை.ஏனென்றால் இயற்கையின் சீற்றம் பொதுவாகப் பல நாடுகளிலும் அறுவடைப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகளாவிய உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிப்பதற்குப் போதிய முன்னேற்பாடுகள் இல்லை. இது தவிர அடுத்த போகத்துக்கு விதைப்பதற்குக் கூட விதைநெல் கிடையாது அழிந்து போய் விட்டது.

இந்த நெருக்கடியை வெற்றிகரமாகச் சமாளித்தால் தான்  அடுத்த போகத்திலாவது தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கும்.அதுகூட கிடைப்பதை உறுதிப்படுத்தாது போனால் அரசாங்கத்துக்குப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

அதிகார பலத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் நிலை நிறுத்துவதில் வெற்றி கண்ட அரசாங்கத்துக்கு, இப்போது பொருளாதார நெருக்கடி வடிவத்தில் தோன்றியிருக்கிறது பெரியதொரு சிக்கல்.

இந்தச் சிக்கல் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இது மக்களின் வயிற்றுடன் சம்பந்தப்பட்டது.

இதை வெற்றிகரமாகச் சமாளிக்காது போனால் அரசாங்கம் ஆட்டம் காணும் நிலை கூட வரலாம். அதை மனதில் வைத்துக் கொண்டே ஜேவிபி, ஐதேக போன்ற எதிர்க்கட்சிகள் துனீசியாஇ எகிப்துடன் ஒப்பிட்டு எச்சரிக்கின்றன. ஊடகங்களும் அதற்கு முக்கியம் கொடுக்கின்றன.

எகிப்திலும் துனீசியாவிலும் மக்கள் புரட்சி ஏற்படுவதற்கு பொருளாதார ரீதியான காரணங்களே அதிகம். பொருளாதார ரீதியாக அரசாங்கம் ஆட்டம் காணும் நிலை ஒன்று உருவானால் அரசுக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாவதைத் தவிர்க்க முடியாது.

பல அரசியல் நெருக்கடிகளைச் சமாளிப்பதில் வெற்றி கண்ட போதுமும் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அரசுக்குச் சுலபமான காரியமாக இருக்காது.

அதைச் சமாளிக்க உரிய திட்டங்களை அவசரமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறினால்- எகிப்து, துனீசியாவிலிருந்து உலகம் கற்ற பாடங்களுக்கு அர்த்தமில்லாது போய்விடும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .