2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மனுஷப் பழம்! (மலேசியா வாசுதேவன் குறித்து - சில ஞாபகக் குறிப்புகள்)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

•    மப்றூக்

குணத்தில் மலேசியா வாசுதேவன் ஒரு குழந்தை! அவரை நான் சந்தித்த இரண்டு தடவைகளும் அவர் அப்படித்தான் பழகினார். இரண்டாவது தடவை 10 நாட்கள் அவரோடு தொடர்ச்சியாக ஓர் இசைப் பயணத்துக்காக இணைந்திருந்தேன்! அவர் - ஒரு மனுஷப் பழம்!

சூரியன் வானொலியில் நான் அறிவிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே மலேசியா வாசுதேவனை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தன. இரண்டு தடவையும் அவரை சூரியனுக்காக நேர்கண்டுமிருந்தேன்.

சின்ன வயதில் மலேசியா வாசுதேவன் வில்லனாக நடித்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம், தொலைக்காட்சிப் பெட்டிக்குள் சென்று அவரை உதைக்க வேண்டும் எனத் தோன்றுவதுண்டு. மனுஷன் அப்படி – கொடுமைக்காரனாகவெல்லாம் நடித்திருக்கின்றார். ஆனால், நிஜத்தில் அந்தப் பாத்திரங்களுக்கு அவர் - நேரெதிரானவர்! 

முதல் தடவை மலேசியா வாசுதேவனைச் சந்தித்த நிகழ்வு – பெரிதாக மனதில் பதியவில்லை. அது – நெருக்கமற்ற ஒரு குறுங்காலச் சந்திப்பாக இருந்தது. இரண்டாவது முறைதான் அவருடன் பத்து நாட்கள் வசிக்கக் கிடைத்தது. தந்தையின் வயதையொத்தவராக இருந்தபோதும், ஓர் இளவயது நண்பனைப்போல் அவர் பழகிய விதம் வியப்பாக இருந்தது!

சூரியன் எப்.எம். வானொலி - 2001ஆம் ஆண்டு 'பாபாபூம்பா' எனும் பெயரில் இலங்கை முழுவதும் 10 இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. அந்த நிகழ்ச்சிகளின் பிரதான பாடகராக மலேசியா வாசுதேவன் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். ஏனையோர் நம்நாட்டுப் பாடகர்கள். அவர்களில் அண்ணன் ஏ.ஈ.மனோகரனும் இருந்தார்.

நாம் தலையில் வைத்து இன்றும் - கொண்டாடும் பல அற்புதமான பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியிருக்கின்றார். அதுபோல், அவரின் மிகக் கண்ராவியான பாடல்களும் உள்ளன.

மலேசியா வாசுதேவன் ஒரு பாடகரேயில்லை என்பார் எழுத்தாளர் சாருநிவேதிதா! ஆனால், வாசுதேவனின் சில பாடல்களைக் கேட்கும்போது உயிர் உருகும்! அத்தனை அருமையாகப் பாடியிருப்பார்.

'பாபாபூம்பா' இசை நிகழ்ச்சியில் அறிவிப்புச் செய்வதற்காக சூரியனின் அறிவிப்பாளர்களான நானும், சங்கீதாவும், இன்னுமொருவரும் சென்றிருந்தோம். நாங்கள் பயணித்த வாகனத்தில்தான் மலேசியா வாசுதேவனும் வந்தார். அதனால் எங்கள் பயணம் இரட்டிப்பாய் களைகட்டியது!

தர்மயுத்தம் திரைப்படத்தில் 'மலேசியா' பாடிய 'ஆகாயகங்கை..' பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. அந்தப் பாடலை – மலேசியா வாசுதேவன் மேடையில் நேரடியாகப் பாடியபோது ஒரு கணம் மெய்சிலிர்த்துப் போனேன். வானொலிகளிலும், இசைத்தட்டிலும் கேட்ட பாடலின் அதே தரத்தில் - அந்த வயதிலும் பாடி அசத்தினார்!

ஆத்மீகத்தில் நிறைய ஈடுபாடு கொண்டவராக அந்தப் பத்து நாட்களிலும் அவரை அடையாளம் காண முடிந்தது. மதுவிடமிருந்து விலகியிருந்தார். ஒவ்வொரு நாளும் வீட்டாருடன் தொடர்புகளைப் பேணிக்கொண்டேயிருந்தார். மலேசியா வாசுதேவனிடம் நான் மிகவும் ரசித்த மற்றொரு விடயம் அவரின் நகைச்சுவையுணர்வும், அடுத்தவரை நோகடிக்காத நையாண்டித்தனமான பேச்சுக்களும்!

தென்னிந்திய சினிமாத்துறையினரில் பெருவாரியானோர் தங்கள் 'இமேஜ்'யினைப் பேணிக் கொள்வதற்காக தேவையற்ற விதங்களிலெல்லாம் பம்மாத்துக் காட்டிக் கொள்வது குறித்து நாம் அறிவோம். திரைப்படமொன்றில் இருபது பேருடன் சேர்ந்து குழு நடனம் போட்ட ஒருவரை  நிகழ்ச்சியொன்றுக்காக அழைத்துப் பாருங்கள்ளூ அவர் போடும் கூத்திலும், காட்டும் பம்மாத்திலும் உங்களுக்கு வாழ்வே வெறுத்து விடும். ஆனால், வாசுதேவன் அடுத்தவரிடம் காட்டிய பணிவும், அன்பும் அவரிடம் இனம்புரியாததொரு பிடிப்பினை நமக்கு ஏற்படுத்தியிருந்தது.

அந்த இசைப் பயணத்தின் இறுதி நாளன்று - மலேசியா வாசுதேவன் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் - அவரோடு இணைந்திருந்த சிலரை தனித்தனியாக அழைத்துப் பேசினார். என்னை அழைப்பதாக நண்பரொருவர் கூறியதும் - சென்றேன். கண்டதும் கட்டியணைத்து அழுதே விட்டார். 'உங்களையெல்லாம் ஏனய்யா சந்தித்தேன்' என்றார். நொறுங்கிப் போனேன்!

அதனால்தான் மலேசியா வாசுதேவனை ஒரு குழந்தை என்கிறேன். அதனால்தான் அவரை 'மனுஷப் பழம்' என்கிறேன்! ஒரு பத்து நாள் நட்பின் பிரிவுக்கு அழுத அந்த மனிதனை வேறு என்ன என்பது?!

போகும்போது – தொலைபேசி இலக்கங்களையெல்லாம் கொடுத்து விட்டுத்தான் போனார். ஆனாலும், அப்போதிருந்த பரபரப்பான வாழ்நிலையில் அவருடன் தொடர்புகளைப் பேணிக் கொள்ள முடியவில்லை!

இப்போது நினைக்கையில், அந்த தொலைபேசி இலக்கங்களை நான் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தக் குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கும் போதும் - வாசுதேவன் எனது கணினி இயந்திரத்தின் நினைவுச் சில்லிலிருந்து பாடிக் கொண்டிருக்கின்றார்!

உற்றுக் கவனித்த போது, அது பாடலாகக் கேட்கவில்லை... பத்து வருடங்களுக்கு முன்னர் என்தோள் மீது கைபோட்டுக் கோண்டு அவர் பேசிய வார்த்தைகள் ராகங்களோடு என் காது வழியே வழிந்து கொண்டிருந்தன...!!


You May Also Like

  Comments - 0

  • kodimuthu Monday, 18 June 2012 01:30 PM

    நண்பரே நாம் அனைவரும் நல்ல மனிதர்களை உயிருடன் இருக்கும்போது கண்டு கொள்வதில்லை. மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்களுக்கு அடிமை என்றே சொல்ல வேண்டும். தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட மரியாதைக்குரியவர்களில் ஒருவர் திரு.மலேசியா வாசுதேவன் அவர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .