2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குதிரை மரம்! (தேர்தல் கால - முணுமுணுப்புகளும் முசுப்பாத்திகளும்)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

•    மப்றூக்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல், தேர்தல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே நாட்டிலுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் 301 சபைகளுக்கே தேர்தல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அவற்றில் தற்போது 60 இற்கு மேற்பட்ட சபைகளுக்கான தேர்தல் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்கில் பார்த்தால் இது - கழுதைக்கும் கட்டெறும்புக்கும் இடைப்பட்டதொரு நிலையாகும்!
தேர்தல் நடக்கவிருக்கும் பகுதிகளில் முஸ்லிம்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ள பிரதேசம் அம்பாறை மாவட்டமாகும். அதிலும், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் என்ன நடக்கிறது என்பதை – அரசியல் வட்டாரங்கள் கழுகுக் கண்களுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றன. காரணம், இவை - மு.காங்கிரஸின் நேரடி அரசியல் பகையாளியான அமைச்சர் அதாவுல்லாவும், அவரின் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையும் நேரடியாகக் களமிறங்கி வேலை செய்யும் - அவர்களுடைய சொந்த ஊர்களாகும்!

அக்கரைப்பற்றைப் பொறுத்தவரை அங்கு மு.காங்கிரஸுக்கு ஏறுமுகமாகும். கடந்த காலங்களில் அமைச்சர் அதாவுல்லாவின் குதிரைக் கட்சி மற்றும் அவர் ஆதரிக்கும் வெற்றிலைக் கட்சி ஆகியவை தவிர, மாற்றுக் கட்சி அரசியல் பற்றிப் பேச முடியாததோர் நிலைவரம் அக்கரைப்பற்றில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் மு.கா.வின் கொடி – காணுமிடமெல்லாம் பறக்கிறது. அந்தக் கட்சியின் சின்னச் சின்ன கூட்டங்களுக்கே மக்கள் திரளாகக் கூடுகின்றார்கள்.

வாக்குமூலம்

அக்கரைப்பற்றில் - மாற்றுக் கட்சியினர் அரசியல் செய்ய முடியாதவாறு அவர்களை வன்முறை மூலம் அடக்கியவர்கள் அதாவுல்லா அணியினர் என்பது எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டாகும். இதை நிரூபிக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் - அவர்களே இதனை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது, அமைச்சர் அதாவுல்லாவின் கட்சி முக்கியஸ்தரும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போது அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் அதாவுல்லாவின் குதிரைக் கட்சியில் போட்டியிடுபவருமான தவம் என்பவர் - அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது, 'மாற்றுக் கட்சிகளை அக்கரைப்பற்றில் இயங்க முடியாதவாறு தடுத்தவர்கள் தாங்களே என்றும், அந்த செயற்பாட்டுக்கு - தானே தலைமை தாங்கியதாகவும்' கூறியுள்ளார். (அந்த ஒலிப்பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது...).

தவம் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்ளூ 'இந்த மண்ணில் ஒருவர் இறங்கி சரத்பொன்சேகாவின் போஸ்டரை ஒட்ட முடியாமல், இந்த மண்ணில் ஒரு எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்காமல் ஒரு தேர்தல் இடம்பெற்றிருக்குமாக இருந்தால் அது அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்தான். அந்த நடவடிக்கைக்கு இந்தத் தவம் தலைமை கொடுத்திருந்தேன்' என்று அவர் கூறினார்.

இதில் கேவலம் என்னவென்றால், தான் செய்த மேற்படி ஜனநாயக விரோத செயலை, ஒரு சாதனைபோல கூறி – அதற்காக தனக்கு வாக்களிக்குமாறு அவர் மக்களைக் கோரியமைதான்! (முன்னாள் தவிசாளர் தவத்தினுடைய மேற்படி உரையின் முழுமையான ஒலிப்பதிவும் நம்மிடமுள்ளது)

பதினாறடி பாயும் மகன்!

இதேவேளை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் அதாவுல்லாவின் குதிரைக் கட்சி வேட்பாளர்களுக்கிடையிலே குத்து வெட்டுக்கள் உச்ச நிலையை அடைந்துவிட்டன. அக்கரைப்பற்றில் அதாஉல்லா கலந்து கொண்ட பொதுக் கூட்டமொன்றில் வைத்து அவருடைய கட்சி அபேட்சகர் ஒருவர் - அங்கு வருகை தந்திராத சக அபேட்சகர் ஒருவரைத் திட்டித் தீர்த்திருந்தார். அமைச்சரும் அதை 'சும்மா' பார்த்துக் கொண்டிருந்தார். இது அமைச்சரின் கட்சிக்காரர்களிடையிலேயே கடும் மனக்கசப்பை உருவாக்கி இருக்கிறது.

அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் அமைச்சரின் மகனுடைய சுவரொட்டிகளைக் கொண்டு சென்ற ஒரு கும்பல், அவற்றை குதிரைக் கட்சியில் போட்டியிடும் சக வேட்பாளர் ஒருவரின் அலுவலகச் சுவர் முழுக்க சண்டித்தனத்தில் ஒட்டியிருக்கிறது. அதைத் தட்டிக் கேட்க முயன்ற அங்கிருந்த ஆதரவாளர்களை – அமைச்சரின் மகனாருடைய கும்பல் அச்சுறுத்தியதாக – அங்கிருந்தவர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

தன்னுடைய மகனை மேயராக்க வேண்டும் என்கிற முடிவோடு அமைச்சர் அதாவுல்லா களத்தில் இறங்கியிருக்கின்றார் என்று பலரும் பேசிக் கொள்கின்றனர். இதனால், அவரின் கட்சியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறுகின்றார் அங்குள்ள நமது நண்பரொருவர். இதேவேளை, கட்சியின் தலைவர் ஒருவர் பொதுவாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல் இப்படி மகனுக்கு சார்பெடுத்து நடந்து கொள்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அந்தக் கட்சியைச் சேர்ந்த நபரொருவர்.

அமைச்சர் அதாவுல்லாவின் மேற்படி நடவடிக்கையால் - அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் அதாவுல்லாக் கட்சி வேட்பாளரும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தவம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேயர் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் முன்னாள் தவிசாளர் தவத்தினை ஓரங்கட்டிவிட்டு – தன்னுடைய மகனை அதாவுல்லா மேயராக்கப் போகிறார் என்பது – அக்கரைப்பற்றில் பரவலாகப் பேசப்படும் கதையாகும்!

இதனால் மிகவும் ஆத்திரப்பட்டுப் போயுள்ள தவம் - அவர் கலந்து கொண்ட பகிரங்கக் கூட்டத்தில் கவனிக்கத்தக்கதொரு சவாலொன்றினையும் விடுத்துள்ளார். அதாவதுளூ 'என்னை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு அல்லது மனரீதியாக என்னை உடைப்பதற்கு இதுவரை ஒருவன் பிறக்கவில்லை. இதற்குப் பிறகுதான் பிறக்க வேண்டும்' என்பது அவரின் சவாலாகும்!
அப்படியென்றால், 'இதுவரை ஒருவர் பிறக்கவில்லை' என்பதில் அமைச்சர் அதாவுல்லாவும் அடங்குவார்தானே என்று என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாது!

வியப்புக்கள்!

அட்டாளைச்சேனையில் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் மு.காங்கிரஸின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பகிரங்கக் கூட்டமொன்று சில தினங்களுக்கு முன்னர் அந்த ஊரைச் சேர்ந்த மு.கா. மாகாணசபை உறுப்பினரின் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வருகை தந்திருந்தார்.
ஆனாலும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பகுதிகளில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்கள் அந்தக் கூட்ட மேடையில் இருக்கவில்லை. அவர்களைப் புறக்கணித்துவிட்டு குறித்த அறிமுகக் கூட்டத்தை மாகாணசபை உறுப்பினர் நடத்தியிருக்கக் கூடாது என்பது – அப்பிரதேசத்தின் மு.கா. முக்கியஸ்தர்களுடைய கருத்தாகும்.
குறித்த மாகாணசபை உறுப்பினர் மாவட்ட ரீதியில் அரசியல் செய்தவர் - செய்ய வேண்டியவர். அவர் இவ்வாறு தன்னுடைய ஊர் எனும் சட்டிக்குள் குதிரையோட்டாமல், இனியாவது பரந்து சிந்திக்க வேண்டும் என்கிறார் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மு.கா. வேட்பாளரொருவர்.

இனியாவது குறித்த மாகாணசபை உறுப்பினர் பரந்து சிந்திக்க வேண்டும், அவ்வாறு சிந்திப்பவர்களிடம் ஆலோசனைகளைப் பெறவேண்டும் என்பது மு.கா. ஆதரவாளர்கள் சார்பான வேண்டுகோளாகும்!

இது இவ்வாறிருக்க, மேற்சொன்ன அறிமுகக் கூட்டத்துக்கு ஒவ்வொரு வேட்பாளரும் தமது ஆதரவாளர்களோடு வந்து மேடையேறினார்கள். அதில், குறித்த ஒரு வேட்பாளர் மேடைக்கு வந்தபோது, அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மிரண்டு போயினர். அத்தனை பெரிய ஆதரவாளர் அலையோடு வந்திருந்தார் அவர்!

சில வேட்பாளர்களோ – தனியாக வந்து, தனியாக இருந்து விட்டு, தனியாக இறங்கிப் போனார்கள். மக்கள் ஆதரவற்ற இவர்கள் ஏன் - வீணாகத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று நிறைய யோசித்தும் நமக்குப் புரியவேயில்லை!

இந்த மேடையில் இறுதியாகப் பேசிய வேட்பாளரின் உரையானது மிகவும் நாகரிகமாகவும், பலரைக் கவரும் விதமாகவும் அமைந்தது. உண்மையாகச் சொன்னால், இவரிடமிருந்து இத்தனை வடிவான பேச்சைப் பலர் எதிர்பார்க்கவேயில்லை! குண்டுமணிகள் - நாம் எதிர்பாராத இடங்களில்தான் பலவேளைகளில் அகப்படுகின்றன.

உருண்டை உலகம்!

இது இவ்வாறிருக்க, நமது நண்பரொருவர் அண்மையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமொன்றைக் கூறினார். அது உங்களுக்காகவும்!
குறித்த நமது நண்பர் - மு.காங்கிரஸின் தீவிர தொண்டர். அரசாங்க உத்தியோகத்தர். கட்சிக்காக சிறை சென்றும் வந்தவர்!

அண்மையில் ஒரு பகல்பொழுது நண்பரின் வீட்டுக் கதவு தட்டப்பட்டிருக்கிறது. வந்து பார்த்தபோது வெளியில் வேட்பாளரொருவர் நின்றிருக்கின்றார். குறித்த வேட்பாளர் அமைச்சர் அதாவுல்லாக் கட்சியைச் சேர்ந்தவர். அந்தப் பிரதேசத்தில் அதாவுல்லாக் கட்சியினர் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

வெளியில் நின்றிருந்த வேட்பாளர் நமது நண்பரிடம் - தான் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தனக்கு வாக்களிக்குமாறும் கேட்டதோடு – தனது தகைமைகள், வீரப்பிரதாபங்களையெல்லாம் அவிழ்த்து விட்டிருக்கின்றார்.

நமது நண்பருக்கோ வேட்பாளரின் முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்ததாம். காரணம், சில காலங்களுக்கு முன்னர் - அமைச்சர் அதாவுல்லா கலந்து கொண்ட பகிரங்கக் கூட்டமொன்றில் குறித்த வேட்பாளர் (அப்போது அவர் வேட்பாளரில்லை – கல்வித்துறையில் இருந்தார்) உரையாற்றும் போது, 'மு.காங்கிரஸுக்கு வாக்களிப்பவர்கள் அனைவரும் அடி முட்டாள்கள்' என்று கூறியிருந்தார். அந்த மேடையிலிருந்த அமைச்சர் அதாவுல்லா உள்ளிட்ட பலர், அவ்வாறு கூற வேண்டாம் என சாடைமாடையாகக் கூறியும் - குறித்த வேட்பாளர் அந்த வாக்கியத்தை பல முறை அந்த மேடையில் உச்சரித்தார்!

'இப்படி அடுத்தவனின் மனதை நோகடிக்கும் படி பேசிவிட்டு, அதே மு.காங்கிரஸ்காரனிடம் இவர் வாக்குக் கேட்டு வருவது எந்தவகையில் நியாயம்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர் எங்களிடம் வாக்குக் கேட்டு வருவார். நேற்று எங்களை முட்டாள் என்றவர், இன்று எங்களின் காலடிக்கு வந்துவிட்டார் பார்த்தாயா?' என்று – நம்மிடம் பேசும் போதே கோபத்தில் பொரிந்தார் நமது நண்பர்!   

இதற்குத்தான், 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் - சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்று – ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே சொல்லி வைத்துப் போயிருக்கிறார் நமது தாடிக்கார வள்ளுவர் புலவர்!   

திருக்குறளில் சொல்லப்பட்டதை விடவும் அதிகமாகவே அரசியல்வாதிகள் நாகாக்க வேண்டும்!                                                      

பதிலடி!

வாக்காளர்களை தமது கட்சிக்கு மாற்றியெடுக்கும் காரியம் ஒரு புறம் நடக்க, மாற்றுக் கட்சி வேட்பாளர்களையே மடக்கிப் பிடித்து – தமது அணிக்குள் கொண்டு வரும் கோதாவிலும் குதித்திருக்கிறது அரசியல் அணிகள்!

உதாரணமாக, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான மு.கா. வேட்பாளர்கள் இருவரை, அதாவுல்லா அணியினர் தமது பக்கமாக மாற்றியெடுத்திருந்தனர். இதற்கு பதிலடியாக – அமைச்சர் அதாஉல்லாக் கட்சியின் பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினருமான ஒருவரை தமது பக்கம் மாற்றியெடுத்தார்கள் மு.கா.காரர்கள்!

அதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் அதாவுல்லாவின் வேட்பாளரொருவரையும் மு.கா. கட்சியினர் தமது பக்கம் எடுத்துள்ளனர். குடைசாய்ந்த வேட்பாளரின் பெயர் எம்.ஐ.எம்.முபீஸ். இவரும் 35 வயதுக்குள்ளான 'பெடி'தான்! ஆனாலும், இந்த வேட்பாளரை மாற்றியெடுத்ததன் மூலமாக அதாவுல்லாவுக்குப் பதிலடி கொடுத்திருக்கின்றார் ஹக்கீம்!

இதில் ஒரு பகிடி என்னவென்றால், இவ்வாறு அணிமாறுவோரில் அதிகமானோரின் சட்டிக்குள் எதுவுமேயிருப்பதில்லை. அதாகப்பட்டது, இவர்களிடம் 'மக்களின் வாக்குகள்' என்று எதுவும் இருப்பதில்லை. இவ்வாறானவர்கள் அணி தாவுவதால், இவர்களுடன் சேர்ந்து – மக்களும் மாறுவதில்லை!

இது கட்சிக்காரர்களுக்கிடையிலான கௌரவச் சண்டை – அவ்வளவுதான்!!


You May Also Like

  Comments - 0

  • rasmi mohamed addalaichenai Monday, 07 March 2011 02:06 AM

    இடிஸ் ஓகே மப்ரூக்

    Reply : 0       0

    Azhar Tuesday, 08 March 2011 01:41 AM

    மு கா மேடையில் இறுதியாக பேசிய அந்த நாகரிகமான , கவர்ச்சியான அபேட்சகர் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா? சூப்பர் கண்ணோட்டம் ..தொடர்க.. வாழ்க..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .