2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

புதுப்பொலிவுபெறும் நகுலேஸ்வரம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்துக்களின் பண்டைய இருப்பு, சிறப்பு, பெருமை, வளம், ஆளுமை என்பவற்றை உறுதிப்படுத்தக்கூடிய சான்றுகள் பலவுள்ளன. அந்தவகையில் இலங்கையின் இந்து சமயத்தின் தொன்மைக்கு கட்டியம் கூறி நிற்கும் திருத்தலங்களில் வரலாற்றுப் புகழ் கொண்டவை பஞ்சேஸ்வரங்கள். கடல் கடந்து பெருமைபெற்ற இந்த பஞ்சேஸ்வரங்கள், நாட்டின் எல்லைகளை அடையாளப்படுத்தி வருவதுடன் வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் இருந்து காவல் காத்தும் வருகின்றன.

வடக்கே நகுலேஸ்வரமும், கிழக்கே திருக்கோணேஸ்வரமும், தெற்கே தொண்டீஸ்வரமும், மேற்கே முன்னேஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வரமும் என அவை நாட்டை காவல் காத்து வருகின்றன.

இற்றைக்கு 2,550 ஆண்டுகளுக்கு முன் புத்தசமயம் கருக்கட்டாத காலத்திலேயே இலங்கையில் பிரசித்திபெற்ற இந்த ஐந்து சிவாலயங்கள், பலதரப்பட்ட ஆட்சிக்காலங்களின் போதும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இன்றும் உயிர்பெற்று நிற்கின்றன என்றால் அது இந்து மதத்தின் தொன்மையை எந்தளவுக்கு பறைசாற்றி நிற்கின்றன என்பது மறுப்பதற்கில்லை.

இவ்வாறான பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் இன்று புத்துயிர்ப்பெற்று வரும் சிவாலயமாகவும் உலகிலுள்ள காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது நகுலேஸ்வரம். வடக்கே யாழ்ப்பாணம், கீரிமலையில் அமைந்துள்ள இவ்வாலயம் மாபெரும் வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் வட இந்தியாவிலுள்ள வாரணாசி என்ற காசி திருத்தலத்தைப் போன்று பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும்  விளங்குகின்றது.

ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இத்திருத்தலம் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் பெயர்பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் திருப்பெயர் கொண்டுள்ளனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.

முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இந்நிலத்தின் கீழேயுள்ள கற்பாறைகளிலே சிப்பிகளும், நத்தைகளும், பதிந்து கல்லாய்க் கிடத்தலாலும், வட கரையிலே கடலினுள் நெடுந்தூரம் கற்பாறைகள் காணப்படுதலாலும், ஆராய்ச்சியாளர் முடிவைச் சரியானதெனத் துணிந்து சொல்லலாம்.

இவ்வாறு கீரிமலையென்று கூறப்படும் மேட்டு நிலத்தில் சுவறும் மழைநீர், நன்னீரருவியாகிப் பள்ளமாகிய கடற்கரையிற் பலவிடங்களில் சுரந்தோடுகின்றது. இவ்வருவி நீரே கீரிமலைத் தீர்த்தச் சிறப்புக்குரியதாகும்.

1621ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர்  இடித்தழித்த சிவாலயங்களுள் நகுலேஸ்வரமும் ஒன்று. அழிந்த இக்கோவிலை உருவாக்குவதற்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் முயற்சி எடுத்துள்ளார். 1878ஆம் ஆண்டுக் காலத்தில் அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, இன்று நித்திய, நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகாசிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.

இதனையடுத்து, இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்தவும் இந்துமதத்தின் நிலையை நன்கு தெளிவுபடுத்தவும் வாய்ப்பாக இத்திருத்தலத்தின் அழிவுகள் காணப்படுகின்றன.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்க்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கேதாரகௌரி விரதத்தின் போது கோயிலின் மீது குண்டுகள் வீசப்பட்ட நிலையில் மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறாக, பல அழிவுகளையும் போராட்டங்களையும் சந்தித்த நகுலேஸ்வரப் பெருமான் குடிகொண்டுள்ள இத்திருத்தலம் தற்போது புனர்நிர்மாணம் பெற்று வருகின்றது. எதிர்வரும் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் அதன் புனர்நிர்மாணப் பணிகள் துரிதமாக்கப்பட்டு வருகின்றன.

மிகவும் பழமைவாய்ந்த வரலாறு கண்ட பிரசித்தி பெற்ற திருத்தலமான இது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த விஜயன் எனும் அரசனால் புதுப்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. அத்துடன் இராமர், இராவணன், அர்ச்சுனன், முசுகுந்தன், நளன் ஆகியோர் தொழப்பெற்ற திருத்தலமாகவும் வரலாறு குறிப்பிடுகின்றது.

இதேவேளை, சிவபெருமானால் சபிக்கப்பட்டு கீரிமுகமடைந்த யமதக்னி முனிவர், இப்புனித தீர்த்தத்தில் நீராடி நகுலேஸ்வரப் பெருமானை வணங்கி சாப விமோசனத்தைப் பெற்றதாகவும் இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடசொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயத்தை நகுலேஸ்வரம் என்றும் சுவாமியை நகுலேஸ்வரர் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் பெயர் பெற்றுள்ளர்.

கடந்த 9ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழ தேசத்து இளவரசியான மாருதபுரவீகவல்லி, குஷ்டநோயால் பீடிக்கப்பட்டு குதிரை முகம் கொண்டதால் அது நீக்கப்பெற இத்தீர்த்தத்தில் நீராடி பெருமானை வணங்கியதால் விமோசனம் பெற்றதையடுத்து கோயிலை பெருப்பித்துக் கட்டியதாகவும் வரலாறுகளில்  குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறாக, நகுலேஸ்வரப் பெருமானதும் கீரிமலைத் தீர்த்தத்தினதும் பெருமை சொல்லும் வரலாற்றுக் கதைகள் பெருமளவில் உள்ள நிலையில், அந்த வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பன இவ்வாலயத்தின் சிறப்பைக் கூறும் நூல்களாகவும் விளங்குகின்றன. 

அத்துடன், வடமொழியிலுள்ள கூதசம்ஹிதை, மகாபாரதம், மத்ஸ்யபுராணம், தட்சண கைலாசமான்மியம் முதலான நூல்களிலும் நகுலேஸ்வரத் திருத்தலத்தின் வரலாறு கூறப்பட்டுள்ளது. இது கடல் கடந்து பெருமை பெற்ற திருத்தலம் நகுலேஸ்வரம் என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டாகும்.

இதேவேளை, சிங்கள, பௌத்த துறவிகளால் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிவாலயங்கள் இலங்கையில் மட்டுமல்ல உலகினதும் ஆதி வழிபாட்டுத் தலங்கள் அவையென அறுதியிட்டு உறுதிபடக் கூறும் பெருமை பெற்றுள்ளன.

நகுலேஸ்வரப் பெருமான் கோயில் கொண்ட திருத்தலம் உலக இந்துக்களின் யாத்திரைத் தலமாகப் பிரசித்தியடைய வேண்டும். உலக இந்துக்கள் மனங்களிலே இடம்பெறவேண்டும். அதன் மூலம் நம்மவர் பெருமை உலகெலாம் பரவ வேண்டும்.

Pix By :- Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0

  • Sangeetha Thursday, 23 August 2012 06:27 AM

    மிகவும் அருமை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .