2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உள்ளாட்சி தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு?

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவி்த்து விட்டது. வேட்பு மனு வாபஸ் பெறும் திகதியான ஒக்டோபர் மூன்றாம் திகதி அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வெற்றி கண்டன. அதே பாணியில் உள்ளாட்சி தேர்தலிலும் தேவைப்படும் ஆசனங்களைகளை பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது இந்த இரு கட்சிகளின் திட்டம். ஆனால் அதற்கான வழிமுறைகளை இரு கட்சி தலைமையுமே தனித்தனியாகவே கையாண்டன. பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி தோல்விகண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வுடன் இனி பேசி அர்த்தமில்லை என்று கருதி கூட்டணியை விட்டு வெளியேறியது. ஆனால் அப்போது கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவசரப்படாமல் இருந்தது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போய் விட்டால், தங்களுக்கு அ.தி.மு.க. வேண்டிய இடங்களை கொடுப்பதில் பிரச்சினை இருக்காது என்றே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நினைத்தார்.

இந்நிலையில் வெளியேறிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) - தே.மு.தி.க.வுடன் கூட்டணி காண விரும்பியது. அப்படி முன்னேற்பாடுகளில் இறங்கும் போது அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட மற்ற முன்னணி தலைவர்களுடனும் தனியாக அவசர ஆலோசனையில் இறங்கினர். அக்கூட்டத்தில் 'இரு கட்சிகளும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேசுவது' என்பது கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட்டணி பேசிய போதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. இது சி.பி.எம். தலைவர்களுக்கு மட்டுமின்றி விஜயகாந்திற்கும் சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மையை குறைத்தது. 'சி.பி.ஐ. - அ.தி.மு.க. கூட்டணியுடன் தொடர வேண்டும் என்ற விருப்பத்தை மனதில் வைத்துக் கொண்டு தன்னிடம் கூட்டணி வைக்க தயார் என்பது போல் ஒப்புக்குப் பேசுகிறது' என்று நினைத்தார் விஜயகாந்த். இந்த கோபம் சி.பி.எம்.மிற்கே கூட வந்தது. இந்நிலையில்தான் அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்த பிறகு தே.மு.தி.க.விடம் தொகுதி பங்கீடு கேட்டு வந்தார் சி.பி.ஐ. மாநில செயலாளர் தா.பாண்டியன். இதற்கு முன்பே சென்னை மாங்கொல்லையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களுக்கான பிரசார கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், 'சி.பி.ஐ. கூட்டணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறது. எங்கள் கட்சி தொண்டர்களும் போட்டியிட போகிறோம் என்று கருதி செலவு செய்து விட்டார்கள்' என்ற ரீதியில் பேசி, சி.பி.ஐ.க்கு 'ரெட் சிக்னலை' போட்டார் என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக தமிழகத்தில் தி.மு.க.வும் சரி, அ.தி.மு.க.வும் சரி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தனித்தனியே பிரித்துதான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். 2001 சட்டமன்ற தேர்தல் கூட்டணியின் போதே கூட இந்த இரு கட்சிகளும் கூடி ஒன்றாகவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அறிவித்தும், சி.பி.எம். மட்டும் முன்கூட்டியே தனியாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி கண்டு விட்டது. இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே உருவாகாத ஒற்றுமையை தங்கள் நலனுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. அதே பாணியை இப்போது விஜயகாந்தும் கையாண்டுள்ளார். முதலில் வந்த சி.பி.எம்.முடன் கூட்டணி பேசி தொகுதி பங்கீட்டை முடித்து விட்டார். தே.மு.தி.க.- சி.பி.எம்.கூட்டணி உருவாகி விட்டது. ஏனென்றால் தமிழகத்தில் மொத்தம் உள்ள பத்து மாநகராட்சிகளில் கோவை, மதுரை, திருப்பூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் சி.பி.எம். கூட்டணியால் தே.மு.தி.க.விற்கு லாபம் உண்டு. அதே போல் கன்யாகுமரி மாவட்டத்தில் சி.பி.எம்.- தே.மு.தி.க. கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு உண்டு என்று விஜயகாந்த் எண்ணுகிறார். அதே நேரத்தில் சி.பி.ஐ.யால் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே ஓரளவு பயன் கிடைக்கும். ஆனால் அதற்காக கொடுக்க வேண்டிய உள்ளாட்சி சீட்டுகள் அதிகமாக இருக்கும் என்பது விஜயகாந்தின் எண்ணம். அது மட்டுமின்றி தா.பாண்டியன் தலைமையில் சி.பி.ஐ. மாநிலக்குழு இயங்கும் வரை அவர் அ.தி.மு.க.விற்கே விசுவாசமாக இருப்பார் என்ற எண்ணமும் விஜயகாந்திற்கு உண்டு. இதையெல்லாம் மனதில் வைத்தே சி.பி.ஐ.யை கண்டுகொள்ளாமல் சி.பி.எம்.மை மட்டும் அணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். உதாரணமாக 2006 உள்ளாட்சி தேர்தலில் சி.பி.ஐ.மற்றும் சி.பி.எம். இரு கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றன. ஆனால் சி.பி.எம். 346 உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்றது. சி.பி.ஐ.யோ 202 உள்ளாட்சி பதவிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஜெயிக்கும் கூட்டணியில் இருந்தாலும் கூட சி.பி.ஐ.யை விட சி.பி.எம். பலம் அதிகம் என்பது கடந்த கால தேர்தல் வரலாறு.

உள்ளாட்சி தேர்தலில் சி.பி.ஐ. தனித்து போட்டியிடுவது அக்கட்சிக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தும். ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் வந்தால் சி.பி.ஐ.க்கு குறைவாகவும், சி.பி.எம்.மிற்கு சற்று அதிகமாகவுமே தொகுதிகளை திராவிட கட்சிகள் ஒதுக்கும். நாடாளுமன்றத்தில் மட்டுமே இரு கட்சிகளும் தலா இரு எம்.பி. தொகுதிகளை ஒதுக்குவார்கள். ஆனால் இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் தனியாக போட்டியிடும் சி.பி.ஐ. பெரும் வாக்கு வங்கி சேதாரத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். அது மட்டுமின்றி வாக்கு வங்கி பெரிய அளவில் இல்லாத கட்சி என்பதையும், தமிழகத்தை பொறுத்தமட்டில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதலிடத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும். இது அக்கட்சிக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி. சீட்டுகள் பெறுவதில் இடியப்பச் சிக்கலை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி 1998இல் 'உங்களுக்கு ஒரேயொரு எம்.பி. தொகுதி தருகிறோம்' என்று முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சி.பி.ஐ.க்கு தி.மு.க. சொன்னது போன்ற நிலைமை அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்படும். இது ஒருபுறமிருக்க, தனித்து போட்டியிட வேண்டிய சூழ்நிலைக்கு கட்சியை தள்ளியது ஏன் என்ற தோழர்களின் கோபம் சி.பி.ஐ. மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கு எதிராகவே திரும்பும். அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தொடர்ந்து தா.பாண்டியன் பணியாற்றுவதற்கு அக்கட்சி தோழர்களிடத்தில் மிகப்பெரிய எதிர்ப்பை எதிர்காலத்தில் உருவாக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X