2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் அடுத்து என்ன?

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கே. சஞ்சயன்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடந்த 20ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது.

15 மாதங்களுக்கு முன்னர்- கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாட்சியங்களைப் பதிவு செய்யத் தொடங்கிய இந்த ஆணைக்குழு, 400 பக்கங்களிலான அறிக்கையை கடந்த ஒருவாரத்துக்கு முன்னதாகவே தயாரித்து முடித்திருந்தது.

இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது பற்றிய செய்திகளை உலகின் மிகமுக்கியமான ஊடகங்கள் செய்திகளாக்கிய விதம் சர்வதேச அளவில் இந்த அறிக்கை பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சநிலையில் இருக்கின்றது என்பதற்கான எடுத்துக் காட்டாக உள்ளது.

ஏற்கனவே இந்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய எதிர்பார்ப்புகள் குறித்து அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளால் கருத்துகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அந்த எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் வகையில் அறிக்கை அமையுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.

இந்த அறிக்கையை அடுத் மாதமே பகிரங்கப்படுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாலைதீவில் வைத்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது இது பகிரங்க ஆவணம் அல்ல என்று தெளிவாக குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- ஆனாலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும் அதன்மூலம் அது பகிரங்க ஆவணமாகி விடும் என்றும் கூறியிருந்தார்.

அதைவிட அறிக்கை முழுமையாக வெளியிடப்படுமா என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது. உணர்வுபூர்வமான தகவல்கள் வெளியாவதைத் தவிர்ப்பதற்கே இவ்வாறு அறிக்கையின் ஒருபகுதி வெளியிடப்படுவதை தடுக்கலாம் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

ஆனால் இந்த அறிக்கை முழுமையாகவும் விரைவாகவும் வெளியிடப்படுவதையே சர்வதேச சமூகம் விரும்புகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்வதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என்று பல நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன.

ஏற்கனவே இந்த அறிக்கை நம்பகமானதாகவும் சர்வதேச தரம் வாய்ந்தாகவும் இருக்கவேண்டும் என்று அமெரிக்கா அடிக்கடி வலியுறுத்தி வருகிறது.

கடைசியாக கடந்தவாரம் காலியில் நடந்த கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர் கூட, திரும்பத் திரும்ப பொறுப்புக் கூறப்பட வேண்டிய விவகாரம் குறித்தே வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக வெளியிடாமல் ஒருபகுதியை மறைத்து வைக்க முடிவு செய்தால், அது சர்வதேச அளவில் நெருக்கடிகளைக் கொடுக்கும் ஒன்றாகலாம்.

ஏனென்றால் மேற்கு நாடுகளால் வெளிப்படைத்தன்மை குறித்தும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாமல், பொறுப்புக்கூறும் நடவடிக்கை சாத்தியமில்லை என்பது மேற்குலகின் கருத்து.

இந்தநிலையில் அறிக்கையை முழுமையாகப் பகிரங்கப்படுத்த அரசாங்கம் தவறுமேயானால், அது வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை- பொறுப்புக்கூறுவதற்கு தயாராக இல்லை என்ற விமர்சனங்கள் மேற்கில் இருந்து எழும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையே 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கையின் உள்ளடக்கம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளிவராத போதும், போரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, சாட்சியங்களின் அடிப்படையில் முதற்தகவல் ஆதாரங்கள் இருப்பதால் அதுபற்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு சர்வதேச ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

அதேவேளை சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ போலியானது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. இவையெல்லாம் அதிகாரபூர்வமாக வெளிவராத விடயங்கள். சரியாகவும் இருக்கலாம் -தவறாகவும் அமையலாம்.

இந்த அறிக்கையின் இரகசியங்களைப் பாதுகாக்க அரசாங்கம் முடிவெடுக்குமேயானால், அது பல்வேறு வதந்திகள், புரளிகள் உலாவுவதற்கு வசதியாகி விடும். அது பல புதிய பிரச்சினைகளுக்கும் வழிவிடும்.

உணர்வுபூர்வமான விடயங்கள் என்று கூறி, சிலவற்றை மறைக்கப் பார்த்தால், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை விடவா உணர்வுபூர்வமான விடயம் ஒன்று இருக்கப் போகிறது என்ற கேள்வியும் வரும்.

ஆணைக்குழுவின் அறிக்கையில் படையினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமானால் அவர்களை தண்டிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றும், யாரையும் பாதுகாக்கப் போவதில்லை என்றும், அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் உறுதியாகக் கூறியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இந்த நிலையில் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அல்லது குற்றம்சாட்டப்படும் எவரையும் மறைக்கவோ பாதுகாக்கவோ வேண்டிய தேவை அவருக்கோ அரசாங்கத்துக்கோ இருப்பதற்கு நியாயம் இல்லை.

எனவே, அரசாங்கம் இந்த அறிக்கையை பகுதியாக வெளியிட எடுக்கின்ற முடிவு சர்ச்சைகள் மேலும் வலுப்பெற வைக்கவே காரணமாகி விடும். ஏனென்றால் இந்த அறிக்கை மீதான அழுத்தங்கள் இன்னமும் முடிந்து விடவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நம்பகமானதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் சர்வதேச சமூகம், இதன் பரிந்துரைகளின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி அமையப் போகிறது என்றும் உன்னிப்பாக அவதானிக்கிறது.

இந்தக் கட்டத்தில் ஒருபகுதி அறிக்கையை மறைக்க முற்படும்போது, குற்றங்களை மறைத்து அதில் தொடர்புடையோரைப் பாதுகாக்க அரசாங்கம் முனைகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

அறிக்கையைப் பகிரங்கப்படுத்தி அதன் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் விருப்பமும் அழுத்தமுமாக இருக்கிறது.

ஆனால், அரசாங்கம் இத்தகைய அழுத்தங்களையெல்லாம் இப்போது கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

குறிப்பாக அரசாங்கத்துக்கு இப்போது வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்தாலும், எதிர்வரும் மார்ச் மாதம் வரை எந்த நெருக்கடியும் இல்லை.

மார்ச் மாதம் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கப் போகிறது. அதுவரை அரசாங்கம் எதைப் பற்றியும் கண்டுகொள்வதற்கோ கவலைப்படுவதற்கோ வாய்ப்பில்லை.

அரசாங்கம் இந்த 400 பக்க அறிக்கையைப் படித்து, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலஅவகாசம் கோரலாம்.

ஆனால், போரினால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் வடுக்களும் மிகவும் ஆழமானவை. அவற்றை மிகச்சாதாரணமாக மருந்திட்டு போக்கிவிட முடியாது.

குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படுவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் ஒரே நாளில் நடக்கக் கூடிய காரியமில்லை. அதற்கான நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்தால் தான் விரைவாக அந்த இலக்கை அடைய முடியும். ஆனால் அரசாங்கமோ நத்தை வேகத்தில் தான் நகர்வதாக கருதப்படுகிறது.

இத்தகைய போக்கு சர்வதேச சமூகத்தினரால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

அறிக்கையை பகிரங்கப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதன் ஒருபகுதியை வெளியிடாமல் மறைப்பதோ அல்லது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதோ விமர்சனங்களை உருவாக்கலாம்.

ஏற்கனவே அமெரிக்கா ஒன்றுக்குப் பத்துமுறை கூறி விட்டது- நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்படாது போனால் சர்வதேச விசாரணைகளை நோக்கி இலங்கை இழுத்துச் செல்லப்படும் என்று.

அத்தகைய நிலை உருவாவதைத் தவிர்க்கவே இலங்கை விரும்புகிறது. ஏற்கனவே ஐ.நா. பொதுச்செயலர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையை “தருஸ்மன் குழுவின் அறிக்கை“ என்று கூறி நிராகரித்தது அரசாங்கம்.

இந்த அறிக்கையையும் அதேபோன்று புறக்கணித்து விடவோ உதாசீனப்படுத்தி விடவோ முடியாது. ஏனென்றால் இது அரசாங்கமே நியமித்த ஆணைக்குழு. இதன் பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாது போனால் அது சர்வதேச அளவில் நெருக்கடிகளை ஏற்படுத்தும். அத்தகைய நெருக்கடிகள் உருவாவதை அரசாங்கமும் விரும்பாது- சர்வதேச சமூகமும் விரும்பவில்லை.

எல்லாமே சுமுகமாக நடந்தேற வேண்டுமானால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இழுத்தடிக்கப்படாமல் வெளியிடப்பட வேண்டும், அதுவும் முழுமையாக. அடுத்து அதன் பின்னான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவையெல்லாம் இப்போது ஜனாதிபதியின் கையில்தான் உள்ளன. அரசாங்கத்தை நெருக்கடியை நோக்கித் தள்ளிச் செல்வதா அல்லது அதிலிருந்து தப்பிக் கொள்வதா என்பதை தீர்மானிக்கும் சக்தி இப்போது அவரது கையில் தான் இருக்கிறது.


You May Also Like

  Comments - 0

  • neethan Wednesday, 23 November 2011 01:03 PM

    அறிக்கையின் உணர்வுபூர்வமான விடயங்களை வெளிப்படுத்தாமை என்றால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து, சொத்து,பந்தங்களை இழந்துள்ள சிறுபான்மையினர் நிலை உணர்வுபூர்வமற்றதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .