2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி

Super User   / 2011 நவம்பர் 30 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

•    றிப்தி அலி

- மூன்றாவது தொடர் -

நபர் 01: Excuse me Sir

நபர் 02: Yes

நபர் 01: Can u speak English?

நபர் 02: Yeah, sure

நபர் 01: How can I go to Laleh International Hotel?

நபர் 02: Come with me என்று அழைத்துக்கொண்டு சென்ற இரண்டாம் நபர், "டெக்சி" என்று அழைக்கப்படும் வாடகை கார் ஒன்றின் சாரதியோடு பேசினார். பின்னர் ஒரு தொகை பணத்தை "டெக்சி" சாரதிக்கு வழங்கி விட்டு முதலாவது நபரை வாகனத்தில் ஏறும் படி வேண்டினார்.

இதன்போது, லாலே இன்டர்னெஷனல் ஹோட்டேலுக்கு வழி கேட்ட நபர், குறித்த பயணத்துக்காக டெக்சிக்கு – தான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனக் கேட்டார்.

அதற்கு முதல் இரண்டாவது நபர்: "நான் ஈரானியன். இது தான் எங்களின் உபசரிப்பு முறையாகும். வெளிநாட்டு பிரஜைகளை இவ்வாறுதான் நாங்கள் வரவேற்போம்" என தெரிவித்து – முதலாவது நபரை வழியனுப்பி வைத்தார்.

ஈரானில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொண்ட இந்திய சஹ்ரா ஊடக நிறுவனத்தின் ஊடகவியலளாரான முஹம்மட் அர்ஷட்க்கு ஏற்பட்ட ருசிகரமான அனுபவம் தான் இதுவாகும்.

கண்காட்சியில் கலந்துகொண்ட சக ஊடகவியலாளர்களுடன் இந்திய நண்பர் தனக்கு நேர்ந்த இந்த அனுவத்தை பகிர்ந்து கொண்ட அனுபவத்தை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை. ஈரானியரின் உபசரிப்பு முறைமை மெச்சத்தக்கது!

மேலேயுள்ள உரையாடலில் வரும் லாலே இன்டர்னெஷனல் என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டேலில் தான் நாம் தங்கினோம்.

ஈரானியர்களின் உதவி மனப்பான்மை குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. ஈரான் சென்ற போது, இலங்கையிலுள்ள நண்பர் ஒருவர் ஈரானியத் திரைப்பட இறுவட்டுக்கள் சிலவற்றை தனக்காக வாங்கி வரும்படி கூறினார். அதைக் கொள்வனவு செய்வதற்காக அலைந்தேன்.

கடைசியில், ஈரானியர் ஒருவரிடம் - குறித்த திரைப்பட இறுவட்டுக்களை எங்கு வாங்கலாம் என விசாரித்தேன். சரளமாக ஆங்கிலம் பேச தெரியாத அவர் - என்னை - இறுவட்டுக் கடைக்கே அழைத்துச் சென்றார். குறித்த இறுவட்டுக்களை வாங்கும் வரை நின்று உதவி புரிந்தார். மறக்க முடியாத ஈரானிய அனுவங்களில் இதுவும் ஒன்று.

ஈரானியர்களின் நல்ல மனதை வெளிப்படுத்தும் இப்படியான பல அனுபவங்களை கண்காட்சியில் கலந்து கொண்ட பல ஊடகவியலாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நவீன சமூக ஊடகங்கள்:

பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் மற்றும் பிளக்பெரி ஆகிய நவீன ஊடக சேவைகள் ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆயினும் - ஜிமெயில், யாகூ, ஹொட்மெயில் போன்ற இணைய சேவைகள் ஈரானில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக், டிவிட்டர் போன்ற நவீன சமூக வலைத்தளங்கள் மூலம் அரபு நாட்டு அரசாங்கங்களுக்கெதிராக புரட்சிக் கோசங்களும், சிந்தனைகளும் முன்வைக்கப்பட்டமை போன்று, ஈரானிலும் நடைபெறக் கூடும் என்பதனால், மேற்படி நவீன சமூக வலைத்தளங்களை ஈரானிய அரசு  தடை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலை காரணமாக, ஈரானில் நான் தங்கியிருந்த காலப் பகுதியில் - பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஈரான் அனுபவங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்களிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியவேயில்லை.

எவ்வாறிருப்பினும், ஈரானிய இளசுகள் தடைசெய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களை 'குறுக்கு' வழிமுறைகளினூடாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான குறுக்கு வழி  - நமது நாட்டிலும் உள்ளது தான். அதாவது இலங்கை அரசாங்காத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் நெட் மற்றும் லங்கா ஈ நியூஸ் போன்ற இணையத்தளங்கள், சில மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் ஊடாக இலங்கையில் பார்க்கப்படுகிறதல்லவா... இப்படி தான் - பேஸ்புக், டிவிட்டர் போன்றவை ஈரானிலும்.

ஆனால், தடைசெய்யப்பட்ட வலைத்தளங்களை ஈரானில் பயன்படுத்துவது பாரிய குற்றமாகும். ஆனாலும், குறுக்கு வழியினூடாக வீடுகளில் இவை பயன்படுத்தப்பட்டே வருகின்றன.

ஈரானிய தூதுவராலயத்தின் கலாசார பிரிவு:

ஈரான் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, என்னை - கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவே என்னை தெரிவு செய்திருந்தது.

அதற்காக, ஈரானிய தூதுவராலயத்தின் கலாசார பிரிவுக்கான கொன்ஸியூலர் மெஹ்தி எம். ருக்னி மற்றும் ஊடக மற்றும் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நௌஷாட் முகைதீன் ஆகியோருக்கு எனது நன்றியினை இந்த இடத்தில் பதிவு செய்வது எனக்கு மனத் திருப்தியளிக்கின்றது.

முன்னர் மந்த கதியில் செயற்பட்ட கலாசார நிலையம், தற்போது புதுப்பொலிவுடன் இயங்கி வருகின்றது. தற்போது இந்நிலையத்தில் பல பாரசீக மொழி கற்கை, ஈரானிய திரைப்பட ஒளிபரப்பு போன்ற பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தமையை எனது நண்பர் ஒருவரிடம் சந்தோஷங்களுடன் தெரிவித்தேன். ' ஈரானிய ஷியா கொள்கையை இலங்கையில் பரப்புவதற்காகவா அங்கு செல்கிறாய்?'  என்று கேட்டார் அவர்.

ஷியா கொள்கையை இலங்கையில் பரப்பும் செயற்பாட்டில் ஈரானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனும் குற்றச்சாட்டொன்று இலங்கை முஸ்லிம்களிடத்தில் உள்ளது. 

இதனை அடிப்படையாக வைத்தே எனது நண்பர் மேற்சொன்ன கேள்வியை என்னிடம் கேட்டார்.  அவருக்குரிய பதிலை நான் வழங்கினேன்.

ஷியா கொள்கை:

ஷியா என்றால் என்ன? அந்தக் கொள்கையின் வரலாறு மற்றும் பின்னணிகள் எவை? என்கிற கேள்விகள் உங்களில் எவருக்கேனும் எழக்கூடும்.

ஷியா என்பது ஓர் அரபுச் சொல்லாகும். கூட்டம் என்று இதை தமிழில் அர்த்தப்படுத்த முடியும். இக்கொள்கையை பின்பற்றுவோர் ஷியாக்கள் என அழைக்கப்படுவர். இக்கொள்கையை பின்பற்றுபவர்களில் அதிகமானோர் ஈரானில் தான் உள்ளனர்.

"சுன்னி" முஸ்லிம்களில் பல பிரிவுகளாக உள்ளதை போன்று, ஷியாக்களிலும் பல பிரிவுகள் உள்ளன. ஷியா மற்றும் சுன்னி கொள்கைகளைப் பின்பற்றுபவர்களிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அவற்றில் சில:

1.    கிலாபத் கோட்பாடு:  முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர், ஆட்சி பீடத்துக்கு அவரின் பரம்பரையை சேர்ந்தவர்களான அலி (ரழி) அவர்களும், அவரின் பின்னர் - அவருடைய பிள்ளைகளான ஹசன் மற்றும் ஹுசைன் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் வேண்டும் என்கின்றனர் ஷியாக்கள்.

ஆனால், ஆபூபக்கர் (ரழி), உமர் (ரழி), மற்றும் உஸ்மான் (ரழி) ஆயோர் மேற்படி அலி (ரழி)க்கும் அவரின் பரம்பரைக்கும் சொந்தமான ஆட்சி உரித்தினைக் கைப்பற்றிக் கொண்டனர் என்பது ஷியாக்களின் வாதமாகும்.

2.    இமாமத் கோட்பாடு:  முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் 12 இமாம்கள் உலகை ஆட்சி செய்வார்கள் என்றும், அவர்களில் முதலாமவராக அலி (ரழி) அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நியமித்துள்ளார் எனவும், இதனையடுத்து வரவுள்ள 11 இமாம்களையும் அலி (ரழி) அவர்கள் நியமித்து விட்டு மரணித்துள்ளார் எனவும் ஷியாக்கள் வலுவாக நம்புகின்றனர்.

3.    இஸ்மத் கோட்பாடு:  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த பாவமும் செய்யாதவர்கள். முஹம்மது நபி-  அல்லாஹ்வினால் பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் என்பது சுன்னிகளின் நம்பிக்கையாகும்.

ஆனால், மேற்குறித்த விடயத்தை ஷியாக்கள் இவ்வாறு நம்புகின்றனர். அதாவது, முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் போன்று - குறித்த 12 இமாம்களும் எந்த பாவமும் செய்யாதவர்கள். இந்த இமாம்களும் - அல்லாஹ்வினால் பாவமனிப்பு வழங்கப்பட்டவர்கள்.

4.    தக்கிய கோட்பாடு:  சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளல் என்பது இந்தக் கோட்பாட்டின் அடிப்படையாகும். அதாவது ஷியா கொள்கையை பின்பற்றுவதை ஏனையோரிடம் வெளிப்படுத்தாமல் மறைத்தலாகும்.

கலீபா உஸ்மான் (ரழி) அவர்களின் கொலையையடுத்தே இஸ்லாத்தில் ஷியா மற்றும் சுன்னி என்ற கொள்கை வேறுபாடுகள் பாரியளவில் ஏற்பட தொடங்கியது. உலக முஸ்லிம்களில் 15 சதவீதத்தினர் ஷியாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முஸ்லிம்கள் சுன்னி கொள்கையை பின்பற்றுபவர்களாவர். இலங்கையிலும் ஷியா கொள்கையை பின்பற்றுபவர்கள் இருக்கின்றார்கள்.

தொழுகை முறை:

இஸ்லாத்தின் இரண்டாவது கடமை தொழுகை என்றும், ஒரு நாளில் ஐந்து தடவைகள் தொழுகையில் ஈடுபட வேண்டும் என்றுமே நாம் அறிந்து வைத்துள்ளோம். ஐந்து வேளைத் தொழுகைக்காகவும் ஐந்து தடவைகள் பள்ளிவாசல்களில் அதான் ஒலிக்கும்.

ஆனால், ஈரானில் ஐந்து நேர தொழுகைகளுக்காகவும் மூன்று தடவைகளே அதான் சொல்லப்படும். ஸுபஹ், லுஹர் மற்றும் மஃரிப் ஆகிய தொழுகைகளுக்கு மாத்திரமே குறித்த அதான்கள் சொல்லப்படும்.

அதாவது, லுஹர் தொழுகைக்கான அதானைத் தொடர்ந்து - லுஹர் தொழுகை நடைபெறும். அத் தொழுகை நிறைவடைந்த மறு கணமே - அஸர் தொழுகை ஆரம்பமாகும்.

இதேபோன்றுதான் மஃரிப் தொழுகையும். மஃரிப்புக்கான அதான் சொல்லப்பட்டதை தொடர்ந்து அதற்குரிய தொழுகை நடைபெறும். மஃரிப் தொழுகை நிறைவடைந்த கையோடு, இஷா தொழுகை ஆரம்பமாகிவிடும்.

ஷியாக்கள் மட்டுமே இந்த வகையான தொழுகையினை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். இதே போன்று இரண்டு நேரத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதை சுன்னிகள் கஸ்று மற்றும் ஜம்உ என்று அழைப்பர்.

சுன்னி கொள்கை பின்பற்றுபவர்கள் கஸ்று மற்றும் ஜம்உ என்றழைக்கப்படும் தொழுகை முறைமையை நீண்ட தூர பிரயாணத்தின் போது மாத்திரமே மேற்கொள்வார்கள்.

இதேவேளை, ஈரானில் வெள்ளிக்கிழமைகளில் தொழப்படும் ஜும்ஆ தொழுகையானது - ஒவ்வொரு பிரதேசத்திலும் ஓர் இடத்தில் மாத்திரமே இடம்பெறும்.

அதாவது, தெஹ்ரான் நகரில் ஓர் இடத்தில் மாத்திரமே ஜும்ஆ தொழுகை நடைபெறும். துரதிர்ஷ்டவசமாக, ஈரானில் தங்கியிருந்தபோது ஜும்ஆ தொழுவதற்குரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. அதனால், இந்தக் கட்டுரையில் ஈரானியர்களின் ஜும்ஆ தொழுகை தொடர்பில் விபரமாக எழுத முடியவில்லை.

தெஹ்ரான் நகரில் ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றுவதற்காக பெரியதொரு கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்தக் கட்டிடத்துக்கு இமாம் குமெனி முஸல்லா என்று பெயர். இதன் ஒரு பகுதியிலேயே நாங்கள் கலந்துகொண்ட 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சி இடம்பெற்றது.

ஷியாக்கள் தொழுகையின் போது தக்பீர் கட்டமாட்டார்கள். ஒவ்வொரு நேர தொழுகையின் இரண்டாவது ரக்கயத்திலும் குனூத்துக்காக கையை ஏந்துவார்கள். ஆனால், சுன்னிகள் மத்தியில் குனூத் தொடர்பில் சர்சைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொழுகையில் சுஜுதின் போது, நெற்றிப் பகுதி மண்ணில் பட வேண்டும் என்பதற்காக, மண்ணால் தயாரிக்கப்பட்ட சதுர வடிவ திண்மக் கட்டியொன்றினை முன்னால் வைத்துக் கொண்டுதான் ஷியாக்கள் தொழுகையில் ஈடுபடுவார்கள். சுஜுதின் போது குறித்த திண்ம கட்டியில் நெற்றியை வைப்பார்கள்.

ஷியா மற்றும் சுன்னி கொள்கைகளிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும் ஈரான் பள்ளிவாசல்களில் சுன்னி முறைப்படிதான் நான் தொழுகையில் ஈடுபட்டேன். இருந்தபோதும், இதை ஈரானியர்கள் எவரும் எதிர்க்கவுமில்லை, என்னைத் தடுக்கவுமில்லை.

ஆனால் சுன்னிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிவாசலொன்றில் ஷியா கொள்கையினைப் பின்பற்றும் ஒருவர் அவரின் முறைப்படி தொழுதிருந்தால், அங்கு அவருக்கெதிராக பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கும், பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கும்.

குறிப்பாக, எமது நாட்டில் சுன்னி கொள்கையினைப் பின்பற்றுவோரிடையே, அஹ்லு சுன்னது வல் ஜமாத், தப்லீக் ஜமாத், தௌகீத் ஜமாஅத், ஜமாஆதே இஸ்லாம் என பல பிரிவுகள் காணப்படுகின்றன.

இவர்களில் சில பிரிவினர் தமக்கென்று தனித்தனி பள்ளிவாசல்களை அமைத்துள்ளதோடு, அந்தப் பள்ளிவாசல்களில் குறித்த கொள்ளைகயை மாத்திரமே நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.

சில பள்ளிவாசல்களில் - "முன் வரிசையில் நின்று தொழுபவர்கள் கட்டாயம் தொப்பி அணிய வேண்டும்" என்ற அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனை மீறும் நபர் மீது நிச்சயமாக தாக்குதல் மேற்கொள்ளப்படும். செய்தால் நன்மை, செய்யாவிட்டால் பாவமில்லை என்கிற சுன்னத்தான ஒரு கடமை தான் தொப்பியணிதல்.

அதை அணியாமல் தொழும் நபர் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கும் போது, ஈரானிலுள்ள ஷியாக்களின் பள்ளிவாசல்களில் சுன்னி முறைப்படி நான் தொழுதபோதும் - அவர்கள் ஏன் என்னை தாக்குவதற்கு முயற்சிக்கவில்லை என்பதற்கான காரணத்தை இன்னும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!

கடந்த மாதம் (ஒக்டோபர்) ஈரானில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த எனது ஈரான் தொடர்பான அனுபவத்தினை அடுத்தவாரமும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இக்கட்டுரை தொடர்பான உங்கள் விமர்சனங்களை rifthy.ali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

தொடர்புடைய செய்திகள்:

பிச்சைக்காரரில்லா ஈரான்! (தொடர் - 6)

பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கும் ஈரான் (தொடர் - 5)

வட்டியை விரும்பும் ஈரானியர்கள் (தொடர் - 4)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 2)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 1)


You May Also Like

  Comments - 0

  • Nufail Friday, 02 December 2011 04:11 AM

    உண்மைதான் தம்பி . அவர் சொல்ல வந்தது அவரது அனுபவத்தைதான், கொள்கையையல்ல.

    Reply : 0       0

    alab Thursday, 08 December 2011 01:02 AM

    நன்றி மிக்க நன்றி உங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு. தெளிவில்லாதவர்கள் எதை சொன்னாலும் அவர்களின் வாதத்திலேதான் பிடிவாதமாய் நிற்பார்கள். மீன் சாப்பிட போனால் முள்ளு வரக்கூடாது என்கின்ற கதை . உங்கள் தகவலில் தேவையற்ற விடயம் வந்திருக்கிறது என்பது. எப்போது ஈரான் பற்றி பேசினால் ஷீஆ என்ற சிவப்பு கண்ணாடிதான் இவர்களுக்கு முன்னுக்கு வரும். நடுநிலையாக வாசித்து அறிவியலை சிந்தித்து அதில் தெளிவான முடிவு எடுக்கும் சக்தி இவர்களுக்கு இல்லை. அல்லாஹ் போதுமானவன். அவனே அறிவுடையவன்.

    Reply : 0       0

    risvi muslim Thursday, 08 December 2011 12:13 AM

    இலங்கையில் உள்ள சுன்னத்துவல் ஜமாதுகாரங்களும் ஷியாக்களின் கொள்கையை தான் அதிகம் பின்பற்றுகிறார்கள்.

    Reply : 0       0

    A.G.ARZATH Monday, 05 December 2011 09:20 PM

    ஷியா சம்பந்தமாக சில அடிப்படை விடயங்களை தந்தமைக்கு நன்றி.

    Reply : 0       0

    jwsn Sunday, 04 December 2011 07:30 AM

    katturaiyalera neenkal kurippittethu maha unmai.enkuthan markkd pilewo kodi katti parakkurthu Parunkal.sari inku markkeppriwohalaippartrre qranil solleppattirukkuratha nanparhala? vimarsan saiyum neenkal qranai partri thariyuma? athenai partri mulu vilakkamum unkalil yarukkavathu mulumaiyaha thariyuma? nanparhala enku aluthappaduvathu pirayanak katturai, mathep pirachchinai eillai.

    Reply : 0       0

    தம்பி Friday, 02 December 2011 10:48 PM

    ஹிராஸ் அவர்களே... ஷியா - சுன்னி கொள்கைகளுக்கிடையிலான வேறுபாடு குறித்து கட்டுரையாளருக்குத் தெரியாது என்கிறீர்கள். அப்படியென்றால், சரியான விளக்கத்தைக் கூறுங்கள் பிளீஸ்!

    கட்டுரையாளர் எந்த இடத்தில் தவறான விளக்கம் தந்துள்ளார் என்று நீங்ள் கூறியே ஆக வேண்டும்.

    Reply : 0       0

    தம்பி Friday, 02 December 2011 10:45 PM

    ஹிராஸ் அவர்களே... தக்பீர் கட்டித் தொழுதாலே அவர் ஷியா அல்ல என்று தெரிந்து விடுமே. இதற்கு மேல், றிப்தி ஏன் - நான் சுன்னி முஸ்லிம் என்று கூக்குரலிட வேண்டும்?

    ஒருவர் தனது அனுபவத்தை எழுதும் போது, அதை எப்படி நீங்கள் பொய் எனச் சொல்ல முடியும்.

    Reply : 0       0

    Rifanarizath Friday, 02 December 2011 10:13 PM

    இது ஒரு பயணக் குறிப்பே தவிர இஸ்லாமிய விஞ்ஞாபானம் அல்ல. மேலும் கட்டுரையாளர் ஒரு உலமாவும் அல்ல. எனவே ஒரு பயனக்கட்டுரையாக மட்டும் இதை வாசியுங்கள். நன்றி நண்பரே ஈரான் தொடர்பான பயனுள்ள விளக்கங்களை தந்தமைக்காக.

    Reply : 0       0

    Mohammed Hiraz Friday, 02 December 2011 09:28 PM

    முஹம்மத் நாங்க எங்க நுளைந்தாலும் தெரிந்து விட்டுத்தான் நுளைவோம். இலங்கையில் ஷீஆ என்ற அடையாளாத்துடன் முன்னய காலத்தில் மஸ்ஜித் ஒன்றை நடத்துவதில் உள்ள நெருக்கடி நிலையை பயன்படுத்தி பாய் பள்ளி என்ற போர்வையில் ஷீஆ பள்ளிகள் இயங்குகின்றன. நீங்கள் பாய் பள்ளி என்று சொல்லும் பள்ளி நடைமுறையில் போரா பள்ளி என்றுதான் அழைக்கப்படும்.

    போராக்கள் ஷீயாக்களில் ஒரு பிரிவினரே. பாய்க்கும் போராக்கும் மேமன் சமூகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் தான் வக்காலத்து வாங்க வருகிறீர்கள்.

    ஷீயாக்கள் இந்திய முஸ்லிம்களில் முப்பது வீதமும், பாகிஸ்தான் முஸ்லிம்களில் முப்பதைந்து வீதமும், சிரியா, பஹ்ரைன், லெபனான், இராக், இரான், சைப்ரஸ், ரஸ்யா ஆகிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையினராகவும் மேலும் உலகமெங்கும் பறந்தும் ஏறத்தாழ ஐம்பது கோடி மக்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்குள் பல நாட்டுகளில் வாழ்வதால் பல கொள்கை வேறுபாடுகளும் தங்களை அடையாளப்படுத்தும் பெயர்களில் வேறுபாடுகளும் உண்டு. அதில் ஒரு வடிவம்தான் இந்த போராக்களும் ஆகும்.

    Reply : 0       0

    mohammed Friday, 02 December 2011 09:10 PM

    தம்பி முஹம்மட் ஹிராஸ், நீங்கள் போயிருப்பது பஹாய்ப் பள்ளி, அது ஷீஆப் பள்ளி அல்ல. முதலில் எங்கே நுழைகின்றீர்கள் என்பதை தெரிந்து கொண்டு உள்ளே செல்லுங்கள்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Friday, 02 December 2011 04:01 PM

    ரிப்தி பச்சை பொய் சொல்லாதிங்க. ஷீஆ பள்ளி இலங்கையிலும் உண்டு. பழய குடிவரவு குடிஅகல்வு துறை காரியாலயம் முன்னால் உள்ள அந்த பள்ளிக்கி ஒருதரம் பம்பலபிட்டிக்கி போனா போய் தொழுதுபாருங்க. தொழுது முடித்த மறுகனம் பள்ளிகுள் பன்றி நுளைந்ததை சுத்த படுதுவதுபோல் கழுவி சோப்விட்டு துடைத்து சுத்தபடுத்துவார்கள்!!! மத்திய கிழக்கில் கத்தார், ஒமான், இராக், குவைத், பஹ்ரைன், சிரியா போன்ற நாடுகளில் நான் வாழ்நாளில் கூடிய காலத்தை கழித்த அனுபவத்தில் இந்த நாடுகளில் உள்ள எந்த்த ஷீஆ பள்ளிக்குமே ஸுன்னிகள் நுளையவும் முடியாது. ஸுன்னிகள் கூடி இரண்டாம் ஜமாஃஅத் ஆக. பகிரங்கமாக தான் ஷுனி என அடையாளபடுத்தி தொழுகை நடத்தவும் முடியாது. நீங்கள் இரானில் தொழுத இடத்தில் உள்ளோருக்கு நீங்கள் நான் ஸுன்னி என்று பிரச்சார படுத்தி அறிவிப்பு செய்து விட்டா தொழுதீர்கள், அவர்களின் பதில் அல்லது எதிர்ப்பு எப்படி இருக்கிறது என்ற அனுபவத்தை பெற??

    Reply : 0       0

    Mohammed Hiraz Friday, 02 December 2011 03:48 PM

    தம்பி!!! கட்டுரையாளருக்கு அடிப்படை இஸ்லாம் தெரியாது. அவர் ஒரு இஸ்லாம் தெறிந்து படித்து உணர்ந்துவாழும் மேதை அல்ல எனில்இ ஏன் தெறியாத ஷீஆ ஸுன்னி வேறுபாட்டை பற்றி இந்த கட்டுரையில் சொல்ல வேணும்??? பயன அனுபவம் கண்டதையும் அனுபவித்ததையும் தான் எழுத வேண்டும். தெறியாத கோட்பாடுகளை தெரிந்தமாதிரி காட்டி கொண்டு ஏதேதோ உளர கூடாது!!!!!

    Reply : 0       0

    ishfaq Friday, 02 December 2011 01:30 PM

    பயணக் கட்டுரையில் தேவை இல்லாமல் இலங்கையின் நிலையை ஏன் விமர்சிக்கிறீர்கள்.

    Reply : 0       0

    hussain Thursday, 01 December 2011 04:16 AM

    என்ன சகோதரர் ஷியா கொள்கையை இலங்கையில் பரப்ப தயாராகிராரா?

    Reply : 0       0

    தம்பி Friday, 02 December 2011 12:53 AM

    பாலியல் தொழிலாளர்களைப் பற்றி நான் எழுதுகிறேன். அதற்காக என்னையும் அந்த வகைக்குள் சேர்த்துப் பேசுவது எத்துணை முட்டாள்தனமோ... அது போல்தான் இருக்கின்றன இங்குள்ள சிலரின் கருத்துக்கள்.

    கட்டுரையாளர் - ஈரானில் கண்டவை, கேட்டவை, அறிந்து கொண்டவைகளை எழுதியுள்ளார்.

    கட்டுரையாளர் ஓர் இஸ்லாமிய மேதையல்ல! அவர் எழுதியிருப்பது இஸ்லாமியக் கட்டுரையுமல்ல!!

    இந்தக் கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் - நாம் ஒவ்வொருவரும் அணிந்திருக்கும் கலர் கண்ணாடிகளை முதலில் கழற்றி வைக்க வேண்டும்!

    Reply : 0       0

    kiyas Thursday, 01 December 2011 09:56 PM

    சியா முஸ்லிமுக்கும் சுன்னி முஸ்லிமுக்கும் என்ன வித்தியாசம் என தெரியாமல் இருந்தேன். இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன்.

    Reply : 0       0

    pasha Thursday, 01 December 2011 08:34 PM

    இவர் பயண அனுபங்களை பகிர்ந்துகொள்வதை விட தேவயற்ற வியாக்கியானங்களை வழங்கி சமூகத்தை பிளவு படுத்துகிறார்.

    Reply : 0       0

    hameed Thursday, 01 December 2011 06:18 PM

    சாச்சா தப்லிக் , தம்பி தவ்ஹீத் , பெரியப்பா சுன்னது , மர்ரே சாச்ச ... ஜமாஅதே இஸ்லாமி ... தம்பி அலி சியா ... பணம் வந்தால் சரி.

    Reply : 0       0

    Hunais Thursday, 01 December 2011 04:50 PM

    கட்டுரை ஓ.கே. வெரி குட். "இலங்கையில் எல்லா கொள்கைகளும் இருக்கின்றன. ஷீஆ கொள்கை மட்டும் இருப்பதில் என்ன தவறு .தௌஹீத் ஜமாஅத் இலங்கை முஸ்லிம்களை துண்டாடியுள்ள நிலையில் ஷீஆ கொள்கையாவது அவர்களை ஒற்றுமை படுத்த பயன்படட்டுமே"

    Reply : 0       0

    RISWAN Thursday, 01 December 2011 04:48 PM

    இஸ்லாமிய வரலாற்றில் பிரிவுகள் உண்டாவதட்கு யார் காரணம் ? இதில் எந்த கொள்கையை இறைவன் நிராகரிப்பான்? எமது சமுதாயத்தில் இன்று பிளவுகள் எட்டப்பட்டுள்ளன. அதட்கு எதிராக நாம் என்ன செய்தோம் ?

    Reply : 0       0

    shifani Thursday, 01 December 2011 04:25 PM

    இதுதானா உங்கட அனுபவ கட்டுரை !!!!!!

    Reply : 0       0

    azamsain Thursday, 01 December 2011 03:31 PM

    சஹோதரர் ரிப்தியின் பயண கட்டுரை சிறப்பாக இருந்தது. சுன்னி, சியா விளக்கத்தையும், எமது நாட்டில் சுன்னிகளுக்குள் உள்ள புரிந்துணர்வு அற்ற தன்மையையும் இந்த தளத்தில் தவிர்த்து இருக்கலாம்.

    Reply : 0       0

    easternmbrother Thursday, 01 December 2011 03:26 PM

    மிஸ்டர் ஹுசைன்...... சும்மா குற்றம் சாட்டாது அறிக்கை விடாது கருத்துக்கள் பதியவும்........

    Reply : 0       0

    rumsy Thursday, 01 December 2011 01:56 PM

    குப்பைக் கட்டாக உங்களது கட்டுரை மாறி உள்ளது வேதனை தருகின்றது.

    Reply : 0       0

    Zawmy Shifran Thursday, 01 December 2011 08:06 AM

    பல அறிய விடயங்களை இப்பகுது மூலம் தொகுத்து வழங்கும் ரிப்தி அலி அவர்களுக்கு முதலாவது நன்றிகள். ஆனால் சுன்னி கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் அஹ்லு சுன்னா வால் ஜமாஅத் அவர்கள். மற்றும் நீங்கள் குறிப்பிட்ட தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத்இ ஜமாத்தே இஸ்லாமி போன்றவை இஸ்லாமிய சமூக நலன் நோக்கி உழைக்கும் இயக்கங்களே தவிர அவை அஹ்லு சுன்னா வால் ஜமாத்தின் பிரிவுகள் இல்லை.

    Reply : 0       0

    riyas Thursday, 01 December 2011 07:22 AM

    உங்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை அறிவு கிடையாது என்பதை இந்த கட்டுரையை வாசித்ததன் மூலம் அறிந்து கொண்டோம். ஷீயாக்களை உருவாக்கியவர் ஒரு எஹுதி என்பதை அறிந்த கொள்ளுங்கள். வழிதவறிய கூட்டத்தில் இருந்து உங்களை அல்லாஹ் பாதுகாப்பானாக

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .