2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பரிதியின் மரணம்: இன்னும் ஏன் இந்த கொலை வெறி?

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக, இலங்கை தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் ஒரு முடிந்த முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, பிரான்சு நாட்டு தலைநகர் பரிஸில் அரங்கேறிய 'பரிதி'-யின்; கொலை, அவர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அரங்கேறியது துர்பாக்கியமே. புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல், என்ன தான் இனப்போரில் காணாது போனாலும், விடுதலை புலிகள் இயக்கத்தின் மாறுபட்ட குழுக்களை சார்ந்தவர்களின் தான்தோன்றி தனமும் 'கொலை வெறி' மட்டும் இன்னமும் அடங்கவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

பரிதி மற்றும் ரீகன் என்ற பெயர்களில் நடமாடி வந்த மதீந்திரனின் புனை பெயர் மகாத்யமே அவனது கடந்த காலத்தை நினைவு கூறும். சர்வதேச சமூகத்திற்கோ, அது விடுதலை புலிகள் இயக்கத்தின் நடைமுறை வழித்தடம் இன்னமும் மாறிவிடவில்லை என்பதை நினைவு கூறும். அதிலும் குறிப்பாக, தென் ஆசிய பெயர்களை கடித்துக் குதறி துப்பும் மேலைநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிய புனை பெயர்கள் இலகுவாக அமைந்திருக்கலாம். ஆனால், அந்த நாடுகளின் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு அதுவே ஒரு எச்சரிக்கை மணியான அமைந்துவிடும். அந்த விதத்தில் மதீந்திரனின் புனை பெயர்களே, தற்போது அந்த அதிகாரிகளை விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்த தங்களது பழைய ஏடுகளை தூசி தட்ட தூண்டியிருக்கும்.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில், அதன் பாதிப்பு, புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல. அவர்களில் பலரும் இன்னமும் நம்பி இருக்கும் 'இனப் பிரச்சினை'-க்கான தீர்வில் சர்வதேசத்தின் பங்களிப்பும் காணாமல் போய்விடும். இதற்கான விலையை, இலங்கையில் தங்கிவிட்ட தமிழ் சமுதாயமும் கொடுக்க வேண்டிவரும். 'பழைய குருடி, கதவை திறடி' என்ற கதையாக, சர்வதேசமும், இனப்பிரச்சினையை, விடுதலை புலிகள் இயக்கத்திற்கு எதிரான தீவிரவாதத்திற்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவே மீண்டும் பார்க்கத் தொடங்கி விடும். பரிதியின் படுகொலை இதற்கு ஒர் அச்சாரமே.

இனப்போர் முடிந்த காலகட்டத்தில் இருந்து, விடுதலை புலிகள் இயக்கம், இலங்கையை போலவே, தங்களது நாடுகளிலும் இல்லாமலே போய்விட்டது என்றே சர்வதேச சமூகம் கருதி வருகிறது. தங்கள் நாடுகளில் வாழும் விடுதலை புலிகள் இயக்கத்தவரில் யாரும் போரில் இறந்து விடவில்லை என்றாலும், சில மாத காலங்களுக்குப் பிறகு அவர்களுக்கும் இயக்க சிந்தனைகள் வெகுவாக குறைந்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.

அந்த வகையில் இனப்பிரச்சினை குறித்து தங்கள் நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அரசியல் ரீதியாக, சமாதானப் பாதையில் தங்களது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு அவர்கள் யாரும் எதிரியல்ல. ஆனால், அதுவே தனி நாடு கோரிக்கை என்றோ, அதற்கு தீவிரவாத முறைகளே ஒரே வழி என்றோ புலம் பெயர் தமிழர்களில் சிலர் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதாக அந்தந்த நாடுகள் கருதினால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் தமிழ் சமுதாயத்திற்கு பலன் அளிக்காது. மாறாக, பிரச்சினையாகவே முடியும்.

பரிதியின் மரணம் குறித்த பத்திரிகை செய்திகள் கூறும் சில கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை மேலும் சிந்திக்க வைக்கும். பரிதி ஒரு பிரான்ஸ் நாட்டு பிரஜை என்ற விதத்தில், அவரது கொலையாளிகளின் பின்புலம் குறித்து அந்த நாட்டு காவல் துறையினர் கவலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பரிதியோ மற்றவர்களோ, பிரான்ஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கமான முறையில் 'வரி' வசூலித்து வந்திருந்தால், அதில் கட்டயாயப்படுத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கும் தலைவலி திருகுவலியாக மாறிவிடும்.

வழக்கமாக காரில் பயணம் செய்யும் பரிதி, சம்பவம் நடந்த சமயத்தில், தனது கார் பழுதானதால், பேரூந்தில் பயணிக்க நிற்கும் போதே கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, அவரது பழக்கவழக்கங்களை கொலையாளிகள் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள் என்று நம்பவும் இடம் இருக்கிறது. அது மட்டுமல்ல. அந்த கார் பழுதானது என்பது இயற்கையில் நடந்தேறியதா, அல்லது அதுவும் கொலையாளிகளின் கைவரிசையா, என்பதும் பரிஸ் நகர காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

முதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட பரிதி இறந்து விடாமல், சாலையில் விழுந்து துடித்திருக்கிறார். அதனை பார்த்த கொலையாளிகள், தங்களது மோட்டர் சைக்கிளில் சில அடிகளாவது திரும்பி வந்து, அவரை மீண்டும் சுட்டு, அவரது மரணத்தை உறுதி செய்திருக்கிறார்கள். இது ஏதோ, ஆத்திரத்தில் நடந்த அவசரக் கொலை அல்ல. திட்டமிடப்பட்டு நிகழ்ந்தேறிய படுகொலை. ஏன் இந்த கொலை வெறி என்பதற்கான பதிலும் பரிஸ் பொலிஸாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

இதற்கிடையில், பரிதியின் மரணத்திற்கு இலங்கை அரசின் இரகசிய குழுக்களே காரணம் என்ற விதத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அரசு இதனை மறுத்துள்ளது. அதை விட முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. இனப்போர் முடிந்த பின்னர், பரிதியின் மீது இது முதல் தாக்குதல் அல்ல. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கடைசியில் அதே பரிஸ் நகரில் பரிதி தாக்கப்பட்டுள்ளார்.

இன்று பரிதியை கொலை செய்தது இலங்கை அரசின் கும்பல் என்றால், கடந்த வருட தாக்குதலை மேற்கொண்டதும் அதே கும்பலா? என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு பதில் கிடைக்காத பட்சத்தில், இது புலம்பெயர் விடுதலை புலிகள் இயக்கத்தினருக்குள்ளே என்றுமே தீராத சகோதர யுத்தத்தின் புதிய வெளிப்பாடே என்று கருத வேண்டும். அவ்வாறான பட்சத்தில், பழிவாங்கும் கொலைகள் தொடர்ந்து நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று புலம்பெயர் தமிழர்கள் நம்பலாம். அந்த தாக்குதல்கள் பாரிஸ் நகரத்துடனோ, அல்லது பிரான்ஸ் நாட்டுடன் நின்று விடுமா, அல்லது பிற நாடுகளுக்கும் பரவுமா என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம்.

இது இவ்வாறானால், விடுதலை புலிகள் இயக்கம் குறித்த சர்வதேச சமூகத்தின் நியாயமான கவலைகளும் கடல் கடந்து பல்வேறு நாடுகளையும் வியாபித்து விடும். அந்த தருணத்தில், 'நாங்கள் அப்போதே சொன்னோம், கேட்டீர்களா?' என்று இலங்கை அரசு, சர்வதேச சமூகத்திடம் கெக்கலிக்கும். அப்போது, கடந்த காலங்களைப் போலவே, இப்போதும் விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரால் இலங்கை அரசு இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு புதுப்புது அர்த்தங்கள் கற்பிக்கும் வேளையில், அது சர்வதேச சமூகத்திற்கும் பழகிப் போன விடயமாகவே தெரியும். இதற்கும் அப்பால் சென்று விடுதலை புலிகளின் தீவிரவாதத்திற்கும் அவர்களுடைய ஆளுமை தொடங்கிய காலகட்டத்திற்கு முந்தைய ஆயுத புரட்சிக்கும் இடையே 'ஆறு வித்தியாசங்கள் காண்க' என்ற புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாராரின் முயற்சி, தொடக்கம் இல்லாமலே முடிந்து விடும்.

You May Also Like

  Comments - 0

  • அஞ்சி Wednesday, 14 November 2012 03:41 AM

    நல்ல கதை நீங்கள் சிறுகதை எழுதலாமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .