2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய அதிகாரிகள் என்னுடைய கருத்துக்களை மதித்தனர்: கே.பி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}



(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக குமரன் பத்மநாதனிடம் (கே.பி) மேற்கொண்ட செவ்வியின்  தமிழாக்கம் இது)

'இந்திய அதிகாரிகள் என்னிடம் இருமுறை விசாரணைகளை நடத்தினர். முதல்முறை இந்திய புலனாய்வு நிறுவன (சீ.பீ.ஐ) அதிகாரிகளும் இரண்டாவது முறை சீ.பீ.ஐ.யை சேராத வேறு பலரும் (அவர்கள் றோ  மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளாகவும் இருக்கலாம்) இருந்தனர். அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடலாக மட்டுமே இருந்தது.

நாம் பல்வேறு விடயங்கள் பற்றி பேசினோம். இதன்போது நான் எனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினேன். அவர்கள் எனது நேர்மையான அபிப்பிராயங்களால் ஆச்சரியமடைந்தனர். அவர்கள் அவற்றை மதித்தனர். எனது கருத்துக்களையும் தகவல்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டது போலவே தெரிந்தது' என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்தார்.

இந்தியா, திரும்பவும் என்னோடு பேச அல்லது என்னை விசாரிக்க விரும்பினால் நான் அதற்கு தயாராகவே உள்ளேன். ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு விரும்பினால் மட்டும் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவுக்கு பின் அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செல்வராசா பத்மநாதன் அல்லது கே.பி பற்றிய செய்திகள் அடிக்கடி அடிபடுகின்றன.

இவர் கொழும்பிலிருந்து பாதுகாப்பு தடுப்பின் கீழ் கிளிநொச்சிக்கு மாற்றப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து கே.பி பற்றி பெரும் ஆர்வம் உருவாக்கப்பட்டது. கே.பி.யின் தற்போதைய வதிவிடம் கிளிநொச்சி நகருக்கு தெற்கே, திருவையாறு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவரது வீடு இருக்கும் வளவு 6 ஏக்கர் வரையில் விஸ்தீரணமுடையது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன் இங்குதான் வாழ்ந்தார். அவர் தனது மரணத்தையும் இந்த வளவில்தான் தழுவிக்கொண்டார்.

கொழும்பிலிருந்த கே.பி. கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து உண்டான பரபரப்புக்கு அப்பால் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் இவர் வகித்ததாக கூறப்படும் பாத்திரம் காரணமாகவும் இவர் செய்திகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்.

இந்தியாவின் மத்திய புலானாய்வுப் பணியகம் (சீ.பீ.ஐ) இவரை விசாரித்ததாக செய்திகள் வந்ததிலிருந்து கே.பி. பற்றிய செய்திகள் இலங்கை ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெற்றன. இந்த செய்தி அறிக்கைகளில் அநேகமானவை கே.பி 'கடும் விசாரணைக்கு' உட்படுத்தப்பட்டதாக கூறின.

இந்தியா தொடர்பாக இவரது நிலைமை பற்றி பல செய்திகள் வெளியாகியுள்ளன. கே.பியின் தற்போதைய நிலை மற்றும் வகிபாகம் பற்றியும் பல செய்திகள் வந்துள்ளன. வருங்காலத்தில் முக்கிய அரசியல் பிரமுகராக வரும் வகையில் இவர் வளர்த்தெடுக்கப்படுவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
 
வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பு செயற்பாடுகளை நசுக்க இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இவர் ரகசியமாக உதவுவதாக கூறப்படுகின்றது.

தீபாவளி


இவ்வாறு பல்வேறு முரண் கருத்துகள் பரவலாக காணப்படும் நிலையில், கே.பி. கிளிநொச்சியிலிருந்து தனது வேலையை தொடர்கின்றார். தீபாவளி தினத்தில் பல முக்கிய விடயங்கள் இந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளன. எப்போதும் போலவே முன்னாள் புலித்தலைவர் உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் உரையாடினார்.

இந்த உரையாடலின் முழு விபரம் வருமாறு,

கேள்வி: தீபாவளி வாழ்த்துக்கள். கடந்த மூன்று தீபாவளிகளின்போது நீங்கள் கொழும்பில், தடுப்பில் இருந்தீர்கள். இந்த தீபாவளி வித்தியாசமானது. இம்முறை தீபாவளியை நீங்கள் எவ்வாறு கொண்டாடினீர்கள்?

பதில்: தீபாவளி வாழ்த்துக்கு நன்றி. இந்த தீபாவளியின்போது ஒப்பீட்டளவில் நான் சுதந்திரமாக உள்ளேன். மிக நீண்ட காலத்தின்பின் இந்த தீபாவளி எனக்கு பெரும் மகிழ்ச்சி தந்தது. பழைய நினைவுகளை நான் மீட்டுக்கொண்டேன். இதைவிட முக்கியமான விடயம், நெர்டோ நிறுவனம் நடத்துகின்ற சிறுவர் இல்லங்கள் இரண்டில் நான் முழு நாளையும் கழித்ததால் நான் மிக மிக சந்தோஷமாக இருந்தேன் என்பது தான்.

கேள்வி: இதை கேட்க எனக்கு சந்தோஷமாக இருக்கின்றது. அன்றைய நாள் எவ்வாறு இருந்தது?

பதில்: அது ஓர் அதிசயமான நாள். அதே சமயம் நான் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகினேன். எனது குடும்பம் தாய்லாந்தில் இருக்க, நான் தட்டத்தனியாக இங்கு உள்ளேன். இந்த பிள்ளைகளும் குடும்ப நேசமின்றி உள்ளனர். எனவே பெரியதொரு குடும்பமாகி எம்மை சந்தோசப்படுத்திக்கொண்டோம். அவர்கள் எனது சொந்த பிள்ளைகள் போலத்தான். அவர்கள் என்னை “அப்பா” என அழைக்கின்றார்கள்.

எல்லாப் பிள்ளைகளுக்கும் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்தேன். நாம் குளித்த பின் புதிய ஆடைகளை அணிந்து கொண்டோம். நான் 'அன்பு இல்லத்து' ஆண் பிள்ளைகளுடன் மதிய போசனம் எடுத்தேன். நாம் ஆட்டிறைச்சி கறியோடு சாப்பிட்டோம். பிள்ளைகள் வெடி கொளுத்த ஆசைப்பட்டனர். நாம் அதற்கு ஒழுங்கு செய்தோம். பின்னர் பாரதி இல்லத்து பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்டு தேநீர் அருந்தினேன்.

அவர்கள் சங்கீத, நடன மற்றும் நாடக நிகழ்வுகள் மேடையேற்றினர். பின்னர் நான் கோழி இறைச்சி கறியோடு இரவு சாப்பாட்டை நேரத்தோடு முடித்துக்கொண்டு கிளிநொச்சிக்கு திரும்பினேன். எனக்கும் பிள்ளைகளுக்கும் இது மறக்க முடியாத தீபாவளி.

கேள்வி: இந்த பிள்ளைகளுக்கு தீபாவளியன்று பூரிப்பையும் மகிழ்ச்சியையும் உங்களால் கொடுக்க முடிந்ததையிட்டு அறிந்தது சந்தோஷமாக உள்ளது. அதே சமயம் உங்களுக்கும் ஒருவித நிறைவும் திருப்தியும் கிடைத்துள்ளது. வாசகர்கள் நெர்டோவின் வகிபங்கு பற்றியும் நீங்கள் செய்யும் வேலை பற்றியும் அறிய ஆவலாக இருப்பார்கள். ஆனால் அதற்கு முன் உங்களைப் பற்றிய தற்போதைய பிரச்சினைகள் ஒன்றில் கவனம் செலுத்த விரும்புகின்றேன். ராஜீவ் காந்தி கொலை, இந்தியா இன்டர்போல் மூலம் உங்களை கைது செய்ய யோசிப்பது பற்றியது. அதைப்பற்றி இப்போது நீங்கள் பேச விரும்புகிறீர்களா?

பதில்: அதற்கென்ன. எனக்கு ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் விரும்பியதை கேட்கலாம்.

அரசியல் கொலை


கேள்வி: நல்லது, நன்றி நான் நேராகவே கேட்கின்றேன். ராஜீவ் காந்தி கொலையில் உங்களின்  பாத்திரம் என்னவாக இருந்தது? அதில் நீங்கள் தொடர்புற்று இருந்தீர்களா?

பதில்: இல்லை, திட்டவட்டமாக சொல்கின்றேன் இல்லை. ராஜீவ் கொலையில் நான் எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை.

கேள்வி: இதை விபரமாக கூற முடியுமா?

பதில்: அந்த காலத்தில் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் வேலைப் பகிர்வு இருந்தது. ஒரு பிரிவில் இருப்பவர் இன்னொரு பிரிவின் வேலையில் தொடர்புபட மாட்டார். தமிழ் நாட்டு செயற்பாடுகள் வேறு ஆட்களின் பொறுப்பில் இருந்தன. எனக்கு அதில் எந்தவொரு பாத்திரமும் இல்லை. பிரபாகரன் இதை அனுமதிக்கவும் மாட்டார். தலைவரின் கட்டளை அல்லது அனுமதியின்றி எவரும் அப்படி செய்திருக்க முடியாது.

கேள்வி: உங்கள் கடமைகள் வேறாக இருந்திருக்கலாம். ஆனால் பிரபாகரன் உங்களுக்கு அறிவுறுத்தியிருந்தால் நீங்கள் ஈடுபட்டிருப்பீர்கள்தானே. அவர் உங்களுக்கு அறிவுறுத்தினாரா?

பதில்: இல்லை. பிரபாகரன் எனக்கு அந்தமாதிரி கட்டளையிடவில்லை. ஏனைய பல தலைவர்களை போன்று எனக்கும் இது பற்றி எதுவும் தெரியாது. லண்டனிலிருந்த கிட்டுவுக்கு கூட இதுபற்றி எதுவும் தெரியாது. பிரபாகரன், இந்தியாவுடனும் ராஜீவ் காந்தியுடனும் நல்லுறவை கட்டியெழுப்பும்படி கிட்டுவிடம் கூறியிருந்தார். இதனால் கவிஞர் காசி ஆனந்தன், பொருளியலாளர் அர்ஜுன சிற்றம்பலம் ஆகியோர் இந்தியாவுக்கு சென்று ராஜீவ் காந்தியை சந்திப்பதற்கான ஒழுங்குகளை கிட்டு மேற்கொண்டிருந்தார்.

இது ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்க, பிரபாகரனும் பொட்டு அம்மானும் இந்த கொலையை திட்டமிட்டு செயற்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். பிரபாகரன் ரகசியமாக வேலையை கொண்டு செல்வதில் கைதேர்ந்தவர். இதுபோன்ற ஒரு விடயத்தில் பிரபாகரன் நிச்சயமாக பலரை சம்பந்தப்படுத்தியிருக்க மாட்டார். எனக்கு எதுவும் கூறப்படவில்லை.

கேள்வி: நீங்கள் அப்போது ஆயுதக் கொள்வனவுக்கு பொறுப்பாக இருந்தீர்கள். உங்கள் 'வெளிநாட்டு கொள்வனவு' பிரிவு “கே.பி திணைக்களம்” என அறியப்பட்டிருந்தது. உங்களுடைய திணைக்களத்தின் முக்கியத்துவத்தின் காரணமாக உங்களை ஆலோசனை வழங்கும் மட்டத்திலாவது வைத்திருந்திருக்கலாம் அல்லவா?

பதில்: இதுபோன்ற ஒரு நடவடிக்கைக்கு எனதோ அல்லது எனது திணைக்களத்தினதோ பங்களிப்பு தேவையாக இருக்காது. கொலை செய்வது பொட்டு அம்மான் தலைமையிலான புலனாய்வு பிரிவின் கீழ் இருந்தது. அத்துடன் ஆயுதம் விநியோகிக்கும் பொறுப்பு இயக்கத்துக்கு மிக முக்கியமானதாக இருந்து.  இதுபோன்ற விடயங்களில் எம்மை ஈடுபடுத்தி எனக்கோ எனது திணைக்களத்துக்கோ பிரச்சினை ஏற்படுத்த பிரபாகரன் விரும்பியிருக்கவும் மாட்டார்.

கேள்வி: படுகொலை நடந்த வேளையில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

பதில்: அந்த சமயத்தில் நான் இந்தியாவுக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இடையில் மாறி மாறிப் பறந்துகொண்டிருந்தேன். ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் கொள்வனவு செய்து அனுப்பி வைக்கும் வழி வகைகளை கண்டுபிடிப்பதே எனது பொறுப்பாக இருந்தது. இந்தியாவில் இருந்த வேளையிலும் நான் பெரும்பாலும் மும்பாயில்தான் இருந்தேன். இந்த நிகழ்வுக்கு சில நாட்களின் முன் நான் இந்தியாவிலிருந்து மலேஷியா போய்விட்டேன்.

கேள்வி:  இதுபோல ஒரு முக்கிய நிகழ்வு நடக்கப்போவது பற்றி தெரிந்து அல்லது சந்தேகப்பட்டு நீங்கள் இந்தியாவைவிட்டு ஓடினீர்களா?

பதில்:
இல்லை. இல்லவே இல்லை. எனது பயணம் பல வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கும் இந்த படுகொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.


இன்டர்போல்


கேள்வி: அப்படியானால் இந்தியா உங்களை ஏன் தேடப்படும் ஆட்கள் பட்டியலில் சேர்த்துள்ளது? பயங்கரவாதம், ஆயுதங்கள் வெடி பொருட்கள் பயன்படுத்திய குற்றச் செயல்கள் என்பன குற்றச்சாட்டுக்களாக உள்ளன. இவை ராஜீவ் படுகொலை சம்பந்தப்பட்டவை இல்லையா?

பதில்: இதற்கான விடை ஆம் எனவும் அமையலாம். இல்லை எனவும் கூறலாம். இது ராஜீவ் கொலையுடன் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் ' ஆம்' எனலாம். இந்த படுகொலையில் நான் எவ்விதத்திலும் ஈடுபடவில்லை என்பதால் 'இல்லை' எனலாம்.

கேள்வி: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இதை கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: இந்தியா மத்திய புலனாய்வு நிறுவத்துக்கு (சீ.பீ.ஐ) எனக்கு இந்த கொலையில் பங்கில்லை என்பது தெரியும். இதனால்தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை. ராஜீவை கொலை செய்ய சதி செய்தவன் என்ற குற்றச்சாட்டுக்கூட என்மீது சுமத்தப்படவில்லை.

கேள்வி: அப்படியானால் இந்தியா ஏன் உங்கள் மீது இன்டர்போல் அறிவித்தல் வெளியிட்டுள்ளது? இந்த அறிவித்தல் ராஜீவ் கொலை சம்பந்தப்பட்டது என நீங்கள் கூறினீர்கள்... சரியா?

பதில்: ஆம். ராஜீவ் கொலையை புலனாய்வு செய்த இந்திய புலனாய்வு நிறுவகம் (சீ.பீ.ஐ), ஒரு கட்டத்தில் சில விடயங்களை தெளிவு படுத்துவதற்காக என்னுடன் பேச விரும்பியது. இந்த கொலை தொடர்பான சிறைச்சாலை ஆணையகத்தின் விசாரணையின் போதும் இது சுட்டிக்காட்டப்பட்டது. நான் இந்தியாவுக்கு வெளியே நாட்டுக்கு நாடு பயணித்துக்கொண்டிருந்ததால் அவர்களால் நான் இருக்குமிடத்தை அறிய முடியவில்லை. இதனால்தான் இன்டர்போல் அறிவித்தலை விடுத்தனர். அவர்கள் என்னை விசாரிக்க விரும்பினர்.

கேள்வி: இந்தியா உங்களை விசாரிக்க விரும்பியது பற்றி  ராஜீவ் கொலை தொடர்பாக சில இந்திய அதிகாரிகள் உங்களை விசாரித்ததாக அண்மையில் சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்தி உண்மையானதா?

பதில்: ஆம். அது நடந்தது உண்மை. ஆனால் இந்திய ஊடகங்கள் கூறியது போல அது அண்மையில் நடக்கவில்லை. அத்துடன் அது ஒரு தடவை அல்ல. இரண்டு தடவை நடந்தது.

கேள்வி: அப்படியானால் அது எப்போது நடந்தது? எப்போது அவர்கள் உங்களை விசாரித்தனர்?

பதில்: அது 2010இன் பிற்பகுதியில் ஒரு முறையும் 2011இன் முற்பகுதியில் மறுபடியும் நடந்தது. எனக்கு மாதங்கள் ஞாபகத்திற்கு வரவில்லை.

கேள்வி: இது எப்படி நடந்தது? ஏன் நடந்தது?

பதில்: ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சில விடயங்களையிட்டு என்னை விசாரிக்க விரும்புவதாக இலங்கை அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். மரியாதை நிமிர்த்தம் இலங்கை அதற்கு சம்மதம் தெரிவித்தது. இந்த விடயத்தில் நான் முழு நிரபராதி என்பதாலும் என்னிடம் ஒளிப்பதற்கு எதுவும் இல்லாததாலும் நான் மனதார சம்மதித்தேன்.

சந்திப்புக்கள்


கேள்வி: விசாரணைகள் எங்கே நடந்தன? இலங்கை அதிகாரிகளும் தொடர்புபட்டனரா?

பதில்: இந்த விசாரணைகளை இந்திய அதிகாரிகள் கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் நடத்தினர். இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு முறையும் அவதானிப்பாளராக பங்கெடுத்தனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் கூட்டத்தில் நடந்தவற்றை குறிப்பெடுத்துக்கொண்டனர்.

கேள்வி: இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் காணப்பட்ட வித்தியாசங்கள் எவை?

பதில்: முதலில் 2010இல் இந்திய புலனாய்வு அதிகாரிகள் அணியொன்று என்னோடு பேசியது. அது ஒரு கடும் விசாரணையாக இல்லாமல் ஒரு நேர்முகம் போல அமைந்தது. பின்னர் இன்னுமொரு இந்திய அதிகாரிகள் அணி 2011இல் என்னை சந்தித்தது. இது ஒரு கலந்துரையாடல் போல அமைந்தது. முதலாவது கூட்டம் குறிப்பாக ராஜீவ் கொலை பற்றியதாக இருந்தது. இரண்டாவது கூட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான அரசியல் நிலைமைகள் பற்றிய ஒரு பொதுவான கருத்தாடலாக அமைந்தது.

கேள்வி: முதலாவது கூட்டத்தில் இந்திய புலனாய்வு நிறுவகம் உங்களிடம் என்ன கேட்டது?

பதில்: எனக்கு ராஜீவ் கொலை பற்றி முன்னரே தெரியுமா எனக் கேட்டனர். நான் எனக்கு தெரியாது என்ற உண்மையை கூறினேன். அந்த கொலை நடந்தபோது நான் இந்தியாவில் இருக்கவில்லை என கூறினேன்.

இந்த கொலை நடவடிக்கைக்கு நான் நிதி வழங்கினேனா என அவர்கள் கேட்டபோது நான் இல்லை என்றேன். இப்படியான செயற்பாடுகள் வழமையாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்க புலனாய்வு பிரிவால் திட்டமிடப்படும் எனவும் அதற்கென இரகசிய நிதி இருந்ததெனவும் என்மீது தங்கியிருக்கவில்லை எனவும் கூறினேன். பின்னர் அவர்கள் என்னிடம் குண்டு பொருத்திய இடுப்புப் பட்டி பற்றியும் சிவராசாவின் துவக்கு...

கேள்வி: இந்த வினாக்கள் குறிப்பாக என்னவாக இருந்தன?

பதில்: அது அந்த குண்டு பொருத்திய இடுப்புப்பட்டி பற்றியது. வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட இடுப்புப் பட்டி அணிந்திருந்த பெண்தான் தன்னைப் பலியாக்கி ராஜீவ் காந்தியை கொன்றவர். நான் அந்த பட்டியை அல்லது வெடி பொருட்களை வழங்கினேனா என அவர்கள் கேட்டனர். நான் இல்லை என்றேன். எனது அறிவுக்கு எட்டிய வகையில் இந்த பட்டி வெளிநாட்டில் வாங்கப்படவில்லை எனவும் அதை எல்.ரி.ரி.ஈயினரே உள்நாட்டில் தயாரித்தது எனவும் கூறினேன். அவர்கள் இதை ஏற்றுக்கொண்டது போல தெரிந்தது.

சிவராசன்


கேள்வி: அதென்ன சிவராசாவின் துவக்கு? ஒரு கண் தெரியாத அவர் தானா இந்த கொலையின் சூத்திரதாரியாக இருந்தது? பின்னர், பெங்களூரில் தற்கொலை செய்துகொண்டாரே அவரா?


பதில்: ஆம், இந்தியர்கள் ஒற்றைக் கண் சிவராசன் என அழைக்கும் ஆள் தான் அவர். அவரிடம் 9 மில்லி மீற்றர் ரக பிஸ்டல் ஒன்று இருந்திருக்கிறது. இதை நான்தான் சிவராசனுக்கு கொடுத்தேனா என இந்திய புலனாய்வு நிர்வாகம் அறிய விரும்பியது. நான் அதை கொடுக்கவில்லை என்பது வெளிப்படையானது. நான் கொடுக்கவில்லை என அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டது போல தெரிந்தது.

கேள்வி: இரண்டாவது கூட்டம் பற்றி... அதில் என்ன நடந்தது?

பதில்: முன்னர் கூறியது போல அந்த கூட்டம் ஒரு கலந்துரையாடலாகவே இந்தது. முதலாவது கூட்டத்தில் புலனாய்வு அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். ஆனால் இதில் இந்திய புலனாய்வு நிறுவகத்தை சேராத வேறு பலரும் இருந்தனர்.

கேள்வி: றோ? வெளிவிவகார அமைச்சு?

பதில்: இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. எவ்வாறாயினும் அது ஒரு கலந்துரையாடலாக மட்டுமே இருந்தது. நாம் பல்வேறு விடயங்கள் பற்றி பேசினோம். புனர்வாழ்வு பெறும் புலி உறுப்பினர்களின் எதிர்காலம், புலம்பெயர்ந்தோர் நிறுவனங்கள், ஆயுத போராட்டத்தின் விளைவுகள், தமிழ் மக்களின் எதிர்காலம் என பல விடயங்களை பேசினோம். நான் எனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினேன். அவர்கள் எனது நேர்மையான அபிப்பிராயங்களால் ஆச்சரியமடைந்தனர். ஆனால் அவர்கள் அதை மதித்தனர்.

கேள்வி: இந்திய அதிகாரிகளுடன் 3ஆவது கூட்டமொன்று நடைபெறும் சாத்தியம் உண்டா?

பதில்:
எனக்கு தெரியவில்லை. ஆனால் இலங்கை அப்படியொரு கூட்டத்தை இந்திய அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்தால் நான் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன். இலங்கை அரசாங்கம் நான் அவர்களை சந்திக்க வேண்டும் என கூறியதால் தான் நான் இந்திய அதிகாரிகளை சந்தித்தேன். இல்லாதுவிடின் நான் இதற்கு சம்மதித்திருக்க மாட்டேன். இந்தியா திரும்பவும் என்னோடு பேச அல்லது என்னை விசாரிக்க விரும்பினால் நான் அதற்கு தயாரக உள்ளேன். ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு விரும்பினால் மட்டும் தான்.

கேள்வி: நீங்கள் எனக்கு கூறியதிலிருந்து இந்தியா, உங்களுடனான கூட்டங்கள் பற்றி திருப்தி  அடைந்திருக்கின்றது என நான் உணர்கின்றேன். ஆனால் உங்கள் மீதான இன்டர்போல் அறிவித்தல் இன்னும் தொடர்ந்து இருக்கின்றதே. ஏன்?

பதில்: எனக்கு தெரியாது. அவர்கள் ஏதோ ஒரு காரணத்தை கொண்டிருக்கலாம். இதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இதற்கு என்னிடம் பதிலில்லை.

தர்மலிங்கம்


கேள்வி: இந்தியாவின் இன்டர்போல் அறிவித்தலில் உங்களின் குடும்பப் பெயர் தர்மலிங்கம் எனவும் முதல் பெயர்கள் சண்முகம் மற்றும் குமரன் என உள்ளன. உங்கள் பெயர் செல்வராசா பத்மநாதன் அல்லவா?


பதில்: எனது தந்தையின் பெயர் செல்வராசா. அவர் எனக்கு வைத்த பெயர் பத்மநாதன். நான் செல்வராசா பத்மநாதன். 

கேள்வி: அப்படியானால் இன்டர்போல் அறிவித்தல் உங்களை சண்முகம் குமரன் தர்மலிங்கம் என குறிப்பிடுகின்றதே?

பதில்:  எனக்கு தெரியாது. நீங்கள் இந்தியா அல்லது இன்டர்போலிடம்தான் விசாரிக்க வேண்டும். அக்காலத்தில் நான் பொய் பெயர்களுடனான சில கடவுச்சீட்டுகளை வைத்திருந்தேன். இந்த பெயர் கொண்ட ஒரு கடவுச்சீட்டு அவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.

கேள்வி: இந்தியா உங்கள் மீது பிழையான பெயரில் இன்டர்போல் அறிவித்தலை விடுத்திருந்தால் அது இந்தியா மற்றும் இன்டர்போல் மீதான மோசமான பிரதிபலிப்பைக் காட்டும் அல்லவா?

பதில்:  உண்மையிலேயே எனக்கு தெரியாது. நீங்கள் இன்டர்போல் அல்லது இந்தியாவிடம் தான் கேட்க வேண்டும். (பலத்த சிரிப்பு)

கேள்வி: இலங்கையும் உங்கள் மீது ஓர் இன்டர்போல் அறிவித்தலை விடுத்திருந்தது. இப்போது என்ன நிலைமை?

பதில்:  நான் மலேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டேன். நான் இப்போது பாதுகாப்பு தடுப்பின் கீழ் இலங்கையில் உள்ளேன். இதை இன்டர்போல் அறியும் என்பது நிச்சயம். உங்களுக்கு சரியாக தெரிய வேண்டுமானால் நீங்கள் இன்டர்போல் அல்லது கொழும்பு அதிகாரிகளைத்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தளவில் இது எனக்கு பிரச்சினையல்ல. ஏனென்றால் இப்போது யாரும் என்னைத் தேடவில்லை. நான் எனது சொந்த நாடான இலங்கையில் உள்ளேன். இதுவே இப்போதைய யதார்த்தம். அது எனக்கு போதும்.

கேள்வி: உங்களை பலர் குமரன் பத்மநாதன் என குறிப்பிடுகின்றனர். கே.பி என்ற முதலெழுத்து இதிலிருந்து வந்ததாக கூறப்படுகின்றதே? வேறு சிலர் கே.பி என்பது கண்ணாடிப் பத்மநாதன் என்பதை குறிப்பதாக கூறுகின்றனர். இதில் எது சரி?

பதில்: கே.பி என்பது குமரன் பத்மநாதன் என்று பலர் நினைப்பது உண்மைதான். ஆனால், அது சரியல்ல. உண்மையில், நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்தபோது பத்மநாதன் என்ற பெயரோடு நான்கைந்து பேர் இருந்தனர். எனவே, சக மாணவர்கள் எம்மை வித்தியாசப்படுத்த பட்டப்பெயர்களை பயன்படுத்தினார்கள். நான் கண்ணாடி போட்டிருந்ததனால் நான் கண்ணாடி பத்மநாதன் எனவும் கண்ணாடி பத்தர் எனவும் அழைக்கப்பட்டேன்.

கண்ணாடிப் பத்தர்


கேள்வி: தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் கண்ணாடிப் பத்தர் என ஒருவர் இருந்தார். அது நீங்கள் அல்லவே?


பதில்:
இல்லை. அவர் வேறு ஒருவர். நீங்கள் குறிப்பிடும் நபர், தமிழீழ ஆயுதப் போராட்ட இயக்கத்தினுள் நடந்த கொலைகளில் முதல் பலியானவர். எழுபதுகளில் அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பியவர்களில் அவரும் ஒருவர். ஆனால், சகபாடிகள் சந்தேகம்கொண்டு அவரை கொன்றுவிட்டனர் என்பது துன்பகரமானது.

கேள்வி: ஆகவே கே.பி என்பது கண்ணாடி பத்மநாதன் என்பதன் குறுக்கம் என்று கூறுகின்றீர்களா?

பதில்: ஆம், பிரபாகரன் தான் என்னை கே.பி என சுருக்கமாக அழைத்தார். அந்தப் பெயர் நிலைத்துவிட்டது.

கேள்வி: பிரபாகரன் உங்களை கழுதை என கூப்பிட்டார் என நினைக்கின்றேன். ஏனெனில், கழுதை முதுகில் பொருட்களைச் சுமப்பது போல நீங்களும் பொருட்களைக் கொண்டு சென்றீர்கள்?

பதில்: ஆம், அவர் நேரில் கூறமாட்டார். நான் இல்லாதபோதுதான் அப்படி கூறுவார். அதுவும், சிரேஷ்ட அங்கத்தவர்களிடம் மட்டும்தான் அப்படி கூறுவார்.

கேள்வி: எப்படியாயினும் கழுதை என அன்போடுதான் கூறினார். அது நோகடிக்கும் விதத்தில் இருக்கவில்லையே?

பதில்:  ஆம், அவர் அன்பாகவே அப்படி கூறினார்.

பேட்டி கண்டவர்: டி.பி.எஸ்.ஜெயராஜ்
தமிழ்மொழியாக்கம்: கிருஷ்ணராஜா
படங்கள்: மனோஜ் ரத்நாயக்க, சமந்த பெரேரா


You May Also Like

  Comments - 0

  • Mohan Tuesday, 20 November 2012 12:58 AM

    இந்திய அதிகாரிகள் என்னுடைய கருத்துக்களை மதித்தனர்.என்றால் அப்போ நீங்கள் குற்றம் அற்றவரா? நல்லவரா? கெட்டவரா?

    Reply : 0       0

    குமார் Tuesday, 20 November 2012 07:05 AM

    மலேசியாவில் கைது செய்யப்பட்டீர்களா? நல்ல வேடிக்கை!

    Reply : 0       0

    THAMIL ANPAN Monday, 26 November 2012 06:47 AM

    பிரபாகரன் கே.பி என்கிற செல்வராசா பத்மநாதனை கழுதை என்றுதான் அழைத்தார். பிரபாகரன் சரியாகதான் அழைத்தார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .