2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் எந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதால், மற்ற கட்சிகள் தி.மு.க.வுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழகத்தில் தயாராக இல்லை. அதை உணர்ந்துள்ள தி.மு.க. தலைமை சமீபத்தில் அதற்கான முயற்சியில் இறங்கியது. அது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையையொட்டி சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ அமைப்பின் கருஞ்சட்டைப் போராட்டத்தில் எதிரொலித்தது.

கருஞ்சட்டைப் போராட்டத்தில் பங்கேற்று பேசிய கருணாநிதி, "இங்குள்ள (தமிழகத்தில்) இனப்பகைவர்கள் நம்முடைய தமிழ் பெயர்களை எல்லாம் "ஸ்ரீ"யைப் புகுத்தி, வட மொழியை புகுத்தி மாற்றினார்களோ அதைப்போல ராஜபக்ஷ இலங்கையிலே தமிழ் பெயர்களை அழித்து விட்டு, சிங்களப் பெயர்களை இன்றைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்" என்று சுட்டிக்காட்டி விட்டு, "இங்கே நாம் போராடுவதைப் போல, இந்தியாவிலே வேறு சில பகுதிகளிலும் ராஜபக்ஷவை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களையெல்லாம் நான் வாழ்த்துகிறேன். அவர்களுக்கு எல்லாம் என் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். அதே நேரத்திலே அவர்கள் இதை (டெசோ ஆர்பாட்டத்தை) வாழ்த்துகின்ற பெருங்குணத்தை - பெருந்தன்மையைப் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யாரை பிரார்த்திப்பது? அவர்களைத்தான் பிரார்த்திக்க வேண்டும். அதற்காக வேறு யாரை நான் பிரார்த்திக்க முடியும். எல்லோரும் ஒன்றாக இருந்து போராடினால் வெற்றி நிச்சயம்" என்று தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு டெசோ ஆர்பாட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் நிற்கவில்லை கருணாநிதி. அவர் மேலும் பேசும் போது, "இதே கொள்கையை (ஒற்றுமையான போராட்டம்) இலங்கையிலே- தமிழ் ஈழத்திலே பின்பற்றியிருந்தால், இன்றைக்கு நாம் ராஜபக்ஷவை எதிர்த்துக் கூட்டம் போட வேண்டிய அவசியமே இருந்திருக்காது" என்று பட்டவர்த்தனமாக அறிவித்தார்.

இந்த பேச்சிற்கு பின்னணி இல்லாமல் இல்லை. இதற்கு முன்பு தன் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, "காங்கிரஸில் இருந்து கொண்டு ராஜபக்ஷவை எதிர்க்க வேண்டாம். அந்த கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகி இலங்கை தமிழருக்காக போராடும் என்றால் நான் அந்தக் கட்சியை விமர்சிக்க மாட்டேன்" என்று வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். "காங்கிரஸை விட்டு விலகி வாருங்கள்" என்ற வைகோவின் வேண்டுகோளுக்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் "நாம் அனைவரும் ஒன்றாக இருந்து போராடுவோம்" என்று அழைப்பு விடுத்தார் கருணாநிதி. இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிராக தமிழகத்தில் ஆளுங்கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தவிர அனைத்து கட்சிகளுமே போராட்டம் நடத்தின. ஏன் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தவில்லை என்றாலும், அக்கட்சியின் சார்பில் தமிழகத்திலிருந்து சென்று மத்திய கப்பல்துறை அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசன், "ராஜபக்ஷவின் வருகைக்கு தடை விதிக்க வேண்டும்" என்றே பேட்டியளித்தார். அதே தினத்தில் தி.மு.க. சென்னையில் போராட்டம் நடத்த, வைகோ டெல்லியில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை முற்றுகையிடச் செல்லும் வழியில் வழி மறித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டார். அதே நேரத்தில் ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் மாசிலாமணி ஆகியோர் தலைமையில் ஏழுமலையான் தரிசனத்திற்கு வந்த இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து திருப்பதியில் போராட்டம் நடத்தினர். கீழ் திருப்பதியில் மட்டுமல்ல- பொலிஸ் கண்காணிப்புகளையும் மீறி மேல் திருப்பதிக்குள்ளும் ம.தி.மு.க.வினர் ஊடுருவிச் சென்றார்கள். "இந்தியாவின் வேறு பகுதிகளில் போராடுவோருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியது, டெல்லி, திருப்பதி போன்ற பகுதிகளில் போராடிய ம.தி.மு.க.வினருக்காகவே என்றால் மிகையாகாது.

வைகோவை தி.மு.க. பாராட்டியதில் வேறு ஒரு யுக்தியும் இருக்கிறது. தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. என்னதான் போராட்டம் நடத்தினாலும், டெசோ அமைப்பு உருவாக்கி அதன் மூலம் போராட்டம் நடத்தினாலும், இங்குள்ள கட்சிகள் அதை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. அதற்கு முக்கியக்காரணம் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. இருப்பதுதான். அந்த கட்சியுடன் இருக்கும்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் ஓரணியில் சேருவது இயலாத காரியம் என்பது மற்ற கட்சிகளுக்குத் தெரியும். ஏனென்றால் இந்த "ஓரணி" என்பது வெறும் இலங்கை பிரச்சினையுடன் முடிந்து விடுவதில்லை. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அணி அமைவதற்கும் உதவ வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அனைத்து கட்சிகளுமே காங்கிரஸுடன் இருக்கும் தி.மு.க. அணியில் இடம்பெற முடியாது. ஆகவேதான் இப்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க.வுடன் இணைந்து போராடிவிட்டு பிறகு தேர்தல் கூட்டணிக்காக எந்தக் கட்சியுடன் இணைவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்தே, "காங்கிரஸை விட்டு வெளியே வாருங்கள். அப்போது உங்களை விமர்சிக்க மாட்டேன்" என்றார் வைகோ. அவருடைய அந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில்தான் "முதலில் நீங்கள் எல்லாம் என்னுடன் சேர்ந்து இலங்கை தமிழர் பிரச்சினையில் போராட வாருங்கள்" என்று டெசோ ஆர்பாட்டத்தின்போது அழைப்பு விடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. "என்னுடன் நீங்கள் வந்தால், பிறகு நான் காங்கிரஸிலிருந்து வெளியே வருவதைப் பற்றி பரிசீலிக்கிறேன்" என்ற "தூது" விடும் படலமும் இதிலே மறைந்து கிடக்கின்றது.

இதற்கு பொஸிட்டிவ் "ரெஸ்பான்ஸ்" இருந்தால் வருகின்ற மார்ச் 7ஆம் திகதி டெல்லியில் நடைபெறவிருக்கும் "டெசோ கருத்தரங்கத்தில்" அதற்கான அடுத்த கட்ட முயற்சிகள் தொடங்கலாம். மார்ச் மாதம் 27ஆம் திகதி வாக்கில் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய ஆங்கிலப் புத்தக வெளியீடு டெல்லியில் நடைபெறுவதாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்காக பல்வேறு அகில இந்திய தலைவர்களையும் அழைக்கிறார் வைகோ. அதுபோன்ற சூழ்நிலையில் அதற்கு முன்பு நடைபெறுகிறது "டெசோ கருத்தரங்கம்". அந்த கருத்தரங்கத்தில் "சேனல்-4" "ஆம்னெஸ்ட் இன்டர்நேஷனல்" "மனித உரிமைகள் கண்காணிப்பு" ஆகியவற்றின் அமைப்புகள் பங்கேற்கின்றன என்று டெசோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக அனைத்திந்திய தலைவர்கள் அக்கூட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக போராடும் அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முயற்சியில், இங்குள்ள பழ. நெடுமாறன், வைகோ, நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்களையும் கூட அழைக்கலாமா என்ற தீவிர ஆலோசனையில் டெசோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பக்கம் மற்ற கட்சிகளை "ஓரணியில் வாருங்கள்" என்று அழைத்துக் கொண்டு இன்னொரு பக்கம், ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வை சாடுகிறது தி.மு.க. டெசோ ஆர்பாட்டத்திற்கு பிறகு விடுத்த அறிக்கையொன்றில், "இலங்கை பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது" என்று விமர்சித்துள்ளார் கருணாநிதி. அவருடைய அறிக்கையில், "பிரபாகரனை கைதுசெய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்", "தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழையவிடக்கூடாது", "போரில் அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம்", "இலங்கையில் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்தியாவிடம் இல்லை" என்றெல்லாம் கூறியவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா" என்று கண்டனம் செய்திருக்கிறார். அதற்கு முக்கியக்காரணம் இப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் போராட்டத்தை விமர்சிக்கும் கட்சிகளான ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எல்லாமே அ.தி.மு.க.வின் இலங்கை தமிழர் போராட்டங்களை ஆதரிப்பதே! சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட கவர்னர் உரையில் "இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைகோவும் வரவேற்றார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸும் வரவேற்றார். ஏன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்று கருத்துக்கூறியிருந்தது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வே இலங்கை தமிழர் பிரச்சினையில் இவ்வளவு தீவிரமாக கருத்து கூறி வருவதால், அதற்காக போராடும் மற்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. முன்பு 2001 முதல் 2006 வரை இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் வைகோ, பழ. நெடுமாறன் ஆகியோர் "பொடா" வில் சிறைப்பிடிக்கப்பட்டது போன்ற தொல்லைகள் இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் அ.தி.மு.க. பக்கம் நெருங்கி நிற்கும் இலங்கை தமிழர்களுக்காக போராடும் மற்ற கட்சிகளை தன் பக்கம் இழுக்க "ஒற்றுமையாக நின்று போராடுவோம்" என்று அழைக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

இதற்கு தமிழகத்தில் பலன் இருக்கிறதோ இல்லையோ டெல்லி அளவில் தி.மு.க.விற்கு பலன் கிட்டியிருக்கிறது. ராகுல் காந்தி ஜனவரி மாதம் 20ஆம் திகதி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரானார். அதற்கு வாழ்த்து தெரிவித்தார் கருணாநிதி. அநேகமாக காங்கிரஸுடன் மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சிகளில் வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்தது தி.மு.க. மட்டுமே. ஆனால் இந்த வாழ்த்திற்கு நன்றிக் கடிதம் கூட அனுப்பாமல் அமைதி காத்தார் ராகுல் காந்தி. ஆனால் கருணாநிதியின் "அனைவரும் ஓரணியில் வாருங்கள். போராடுவோம்" என்ற அறிவிப்பிற்கு பிறகு, பெப்ரவரி 9ஆம் திகதி ராகுல் காந்தியிடம் இருந்து கருணாநிதிக்கு நன்றிக் கடிதம் வந்திருக்கிறது. குறிப்பாக டெசோ ஆர்பாட்டத்தில் அப்படி பேசியதற்குப் பிறகு இந்த கடிதம் வந்திருக்கிறது. அது மட்டுமின்றி, பெப்ரவரி 10ஆம் திகதி சென்னை வந்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, "எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே ஒரு முறை தமிழர்களின் உணர்வுகளுடன் ஒன்றி ஜெனிவாவில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா. இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்தம். அதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொள்ள ராஜபக்சே இப்போது மறுக்கிறார். அதனால்தான் இந்தியா நடுநிலைமை வகிக்கிறது. ஐக்கிய நாடு சபை செய்துள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு செயல்படுத்த தவறினால், ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை குழு இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் எந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும்" என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சியான தி.மு.க., தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி உள்பட மற்ற கட்சிகள் எல்லாம் இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸை "கார்னர்" பண்ணுகின்றன. அதை அவர்களின் கையிலிருந்து விடுவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆகவே, இந்திய நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் புதிய பரிணாம வளர்ச்சி தென்படுகிறது. முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. பக்கமாக நின்று இப்பிரச்சினையில் மற்ற கட்சிகள் எல்லாம் போராடி வருகின்றன. அதே நேரத்தில் தமிழக அரசியல் சூழ்நிலைகளை புறந்தள்ளி வைத்து விட்டு, ஜெனிவாவில் புதிதாக வரும் அமெரிக்கத் தீர்மானத்தின் மீது இலங்கைக்கு ஆதரவாக முடிவு எடுக்க இந்த முறை இந்தியா தயாராக இல்லை என்பதையே மத்திய அமைச்சர் நாராயணசாமியின் பேட்டி எதிரொலிக்கிறது. அந்த வகையில், "இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்" என்று தமிழக கவர்னர் உரையில் வற்புறுத்திய முதல்வர் ஜெயலலிதாவிற்கும், "அனைவரும் ஓரணியில் நின்று போராடுவோம்" என்று அழைப்பு விடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் இது ஒரு வெற்றியே!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .