2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தயாசிறி, கருணா, கே.பி., விமல்: கட்சித் தாவலின் நாகரிகம்

Kanagaraj   / 2013 ஜூலை 27 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

பல ஆண்டுகளாக சரிவுக்கு மேல் சரிவுகளை எதிர்நோக்கி வந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திற்குத் தாவியதை அடுத்து மற்றொரு அடி விழுந்துள்ளது. ஜயசேகர ஐ.தே.க.வின் முன்னணி பிரசாரகாரர்களில் ஒருவர் என்பதால் அவரது கட்சித் தாவல் ஐ.தே.க.வை வெகுவாக பாதிக்கும என்பதில் சந்தேகமே இல்லை.

பொதுவாக ஐ.தே.க.வின் சரிவு இரண்டு விதத்தில் நாட்டை பாதிக்கின்றது. எந்தவொரு நாட்டிலும் பலமானதோர் எதிர்க் கட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த நிலைமையாகும். 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 13அவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்வதற்கான முயற்சிகள் போன்றவை பலமான எதிர்க் கட்சியொன்று நாட்டில் இல்லாமையின் நேரடி விளைவாகும்.

மறுபுறத்தில் ஐ.தே.க. ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட குறைந்த இனவாதத்தைக் கொண்ட கட்சியாகவே இப்போதைக்கு இருக்கிறது. வரலாற்றில் ஒருகாலத்தில்,அதாவது 2000ஆவது ஆண்டுக்கு முன்னர் இரண்டு கட்சிகளும் ஏட்டிக்கு போட்டியாக இனவாதத்தை தூண்டி வந்த போதிலும் அண்மைக் காலங்களில் ஐ.தே.க.விடம் குறைந்த இனவாதமே காணக் கூடியதாக இருந்தது.

தேர்தல் நடைபெறவிருக்கம் மூன்று மாகாணங்களில் வட மாகாண சபைத் தேர்தல் மட்டுமே அரசியல் துறையிலும் ஊடகங்களிலும் இது வரை பேசப்பட்டு வந்தது. ஜயசேகரவின் கட்சித் தாவல் காரணமாக அவர் போட்டியிடுவதாகக் கூறப்படும் வடமேல் மாகாண சபைத் தேர்தலும் இப்போது பேசப்படும் நிலைக்கு வந்துள்ளது.

ஒருவருக்கு அரசியல் காரணங்களினாலோ அல்லது தனிப்பட்ட காரணங்களினாலொ ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதற்கு உரிமை இருக்கிறது. ஜயசேகரவுக்கம் அந்த உரிமை இருக்கிறது. அதேபோல் கருணா எனறழைக்கப்பட்ட அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் கே.பி என்றழைக்கப்பட்ட செல்வராசா பத்மநாதனுக்கும் அந்த உரிமை இருக்கிறது. இதனால் எந்தக் கட்சி பயன் பெறப் பேகிறது என்பது நடுநிலையாக நோக்கும் ஒருவருக்குப் பிரச்சினையல்ல.

ஆனால் அவ்வாறான கட்சித் தாவல்கள் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தை பாதிப்பதாயின் அதுவும் கட்சித் தாவியவர்கள் முன்னர் கூறிய அனைத்தையும் மாற்றிக் கூறி மக்களை வழிநடத்த வருவதுமே பாரதூரமான விடயங்களாகும்.
ஜயசேகரவை பொறுத்தவறை அவர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டே கட்சி மாறவில்லை.

அவ்வாறு செய்திருந்தால் அவர் கடந்த பொதுத் தேர்தலின் போது தமக்கு வாக்களித்த ஐ.தே.க. வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படலாம். அனால் அவர் எம்.பி. பதவியை ராஜினாமாச் செய்வதாக அறிவித்துவிட்டே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் சேர்ந்து கொண்டார்.

இருந்த போதிலும் இது வரை அவர் மக்களுக்கு கூறி வந்தவற்றை இனி மாற்றிக் கூறப் போகிறார். இது வரை காலமும் அவர் மாகாண சபை முறையை ரத்துச் செய்யக் கூடாது என்றும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வந்து மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கக் கூடாது என்றும் கூறி வந்தார். இப்போது அவர் ஆளும் கூட்டணியில் சேர்ந்து இருப்பதால் இனி அவரும் மாகாண சபை முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அல்லது மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று கூறுவார் என்றே யூகிக்க வேண்டியுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை வரை கூறிய அவர் இனி அம் முறை நீடிக்க வேண்டும் என்று மட்டுமல்லாது இரண்டு முறைக்கு மேல் ஒருவர் நிறைவேற்ற ஜனாதிபதியாக பதவி வகிப்பதும் சரியே என வாதாடப் போகிறார்.

இந்திய தலையீட்டுக்கு அரசாங்கத்தின் தவறான கொள்கைக்கெல்லாம் காரணம் என்று கூறிய அவர் இனி இலங்கை விடயத்தில் தலையிடுவதாகக் கூறி இந்தியாவை சாடப் போகிறார். அதற்காக இந்தியாவை தூண்டுவதாக இலங்கையில் தமிழ் கட்சிகளையும் திட்டப் போகிறார்.

வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமாக இருக்கிறதென்ற ஐ.தே.க.வின் வாதத்தை ஏற்று இது வரை வாதாடிய அவர் இனி அங்கு அவ்வாறான பிரச்சினையே இல்லை என கூறப் போகிறார்.

ஒருவர்; ஒரு சித்தாந்தத்தை அல்லது ஒரு கொள்கையை அல்லது ஒரு கட்சியை பின்பற்றிக் கொண்டு இருக்கும் போது அக் கொள்கை அல்லது அச் சித்தாந்தம் அல்லது கட்சி பிழையானது என பின்னர தமது அறிவின் பிரகாரம் உணரலாம். அப்போது அதனை கைவிடுவது நியாயமே. ஆனால் அரசியலில் அனேகமாக நடப்பது அதுவல்ல. தமது சொந்த நலன், பாதுகாப்பு, சொத்தாசை போன்றவற்றினாலேயே பலர் தாம் இருந்த அரசியல் இயக்கங்களை கைவிடுகின்றனர்.

ஜயசேகர ஐ.தே.க.வில் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அதில் இருந்து விலகினார். அவர் அக் கட்சியின் எந்தவொரு கொள்கையும் பிழையென இது வரை கூறவில்லை. ஆனால் தமக்கு ஐ.தே.க.வில் உரிய அங்கீகாரம் கிடைக்காததற்காக அதிலிருந்து விலகிய அவர் இனி அக் கட்சியின் கொள்கைகளை விமர்சிக்கப் போகிறார். இது என்ன நாகரிகம்?

கருணா புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோபத்திற்குள்ளாகிய போது உயிர் பாதுகாப்புக்காகவே புலிகள் அமைப்பிலிருந்து விலகினார். அவர் புலிகளின் கொள்கைகளோ அல்லது நடவடிக்கைகளோ அல்லது தலைமையோ பிழையாக இயங்குவதாக கூறி அவ்வியக்கத்திலிருந்து விலகவில்லை. அவர் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி புலிகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்திலும் பிரபாகரனை சூரிய தேவன் என்றே குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அவர் இப்போது தனித் தமிழ் நாட்டுக் கொள்கையை நிராகரிக்கிறார். இயக்கத்தில் இருந்த காலத்தில் அக் கொள்கையை நிராகரித்த எத்தனை பேரை அவர் தண்டித்து இருப்பார்? இங்கு தான் ஒழுக்கப் பிச்சினை எழுகிறது. அன்று தனித் தமிழ் நாட்டை எதிர்த்தவர்களை தண்டித்தவர் வெறுமனே உயிர் பாதுகாப்புக்காக கட்சி மாறி தனித் தமிழ் நாட்டை எதிர்த்து பிரசாரம் செய்வதற்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?

கே.பி. பிரபாகரனின் மரணத்தை அடுத்து புலிகளின் தலைமை பதவியை ஏற்றிருந்த நிலையிலேயே மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார் அப்போது அவர் புலிகளின் எந்தவொரு கொள்கையையும் நடவடிக்கையையும் மாற்ற வேண்டும் என்ற நிலையில் இருக்கவில்லை. கைது தான் அவரது கொள்கையை மாற்றியது. இது உயிர் பாதுகாப்புக்காக மேற்கொண்ட கொள்கை மாற்றம் என்று கூற முடியாதா?

அவ்வாறு ஒருவர் கொள்கையை மாற்றிக் கொண்டாலும் பிரச்சினை இல்லை. அது அவரது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் அதனை மக்களுக்கு போதிப்பதில் தான் பிரச்சினை எழுகிறது.

ஈ.பி.ஆர.எல்.எப். டெலோ மற்றம் புளோட் போன்ற அமைப்புக்கள் இந்திய நிலைப்பாட்டின் காரணமாக தமிழ் ஈழம் சாத்தியமில்லை என்று உணர்ந்தே அக் கொள்கையை கைவிட்டன. அது கூட்டாக மேற்கொண்ட அரசியல் தீர்மானமாகும். அதற்கும் தனிப்பட்ட நலன்களுக்காக கொள்கைகளை மாற்றிக் கொள்வதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.

2008ஆம் ஆண்டு தம்மை விலக்க மக்கள் விடுதலை முன்னணி முடிவு செய்ததை அறிந்த விமல் வீரவன்ச 'எனது கட்சி ஏன் என்னை சுட்டுத் தள்ளியது' என்றே நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கேட்டார். அதாவது அவர் அப்போதும் மக்கள் விடுதலை முன்னிணியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தார் என்றே அர்த்தமாகிறது. அவ்வாறாயின் அக் கட்சியில் இருந்து வெளியேறிய உடன் அவர் சோஷலிஸத்தை ஏன் கைவிட வேண்டும்?

இது சித்தாந்த ரீதியாக சிந்தித்து சோஷலிஸக் கொள்கை பிழையென உணர்ந்ததன் விளைவல்ல. சோஷலிஸக் கொள்கை பிழையென்றோ அல்லது தற்போதைய உலக சூழலில் அது சாத்தியமில்லை என்றோ உணர்ந்து ஒருவர் அக்கட்சிலிருந்து விலகுவதைப் போல் இது நாகரிகமான செயலல்ல. 

ஆனால் தமது கட்சியின் அல்லது இயக்கத்தின் வெற்றிக்காக எதைச் செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையான கொள்கையொன்றை சகல கட்சிகளும் பின்பற்றும் நிலையில் கட்சித் தாவல்களில் இருக்கும் இந்த அநாகரிகத் தன்மையை எவரும் பொருட்படுத்துவதில்லை.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X