2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலாவது மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலும் முதலாவது வட மாகாண சபைத் தேர்தலும்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும் போது 1994ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையலான பொதுஜன ஐக்கிய முன்னணி மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக சமர்ப்பித்த வேட்பாளர் பட்டியல் நினைவுக்கு வருகிறது.

அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் பட்டியல் மிகப் பலமான வேட்பாளர்களைக் கொண்டிருந்தது. சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் சம்லி குணவர்தன, ஏ.எச்.எம். பௌசி, பேர்னார்ட் சொய்ஸா, வஜிர பெல்பிட்ட போன்ற ஜாம்பவான்கள் அந்தப் பட்டியலில் இருந்தனர்.

இன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேல் மாகாண சபைத் தேர்தல் வெற்றி 17 ஆண்டுகள் நீடித்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பெருமளவில் உதவியது. சந்திரிகாவை ஒரு அரசியல் 'ஸ்டார்'ஆக மாற்றியதும் அந்த தேர்தலேயாகும்.

தமிழ் தேசிய கூட்டமைபப்பு பலமான குழுவொன்றை போட்டியில் நிறுத்திய போதிலும் எதிர்வரும் வட மாகாண சபைக்கான தேர்தலின்; முடிவுகளைப் பற்றி எதிர்வு கூற எம்மால் முடியாது. ஆனால், கூட்டமைப்பு இதில் வெற்றி பெறுமாயின் அது அரசாங்கத்தின் ஆணி வேரை அசைத்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே, கூட்டமைப்புடனான தேர்தல் போட்டியை புலிகளுடனான போருக்கு நிகராக நினைத்து ஆளும் கட்சி தமக்குத் தெரிந்த அத்தனை திருகுதாளங்களையும் வித்தையையும் பாவித்து பெற்றிபெற முற்படும் என்பது நிச்சயம்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வட மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் புலிகள் அமைப்பின் முன்னாள்; ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை ஏமாற்றிவிட்டது என்றே தோன்றுகிறது. முன்னாள் புலிப் போராளிகளின் ஆபத்தான வாழ்க்கை முறையை கருத்திற் கொள்ளும் போது தயா மாஸ்டர் தாமாகவே தேர்தலில் போட்டியிட முன்வந்து இருக்க மாட்டார் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது. ஆளும் கட்சியினரே அவரை தூண்டியிருக்க வேண்டும்.

அவர் கடந்த மாதம் வரை கடமையாற்றிய டான் டீ.வீயிலிருந்து இராஜினாமாச் செய்து விட்டே தேர்தலில் போட்டியிட முன்வந்தார் என செய்திகள் கூறின. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து போட்டியிடுவதற்கான உத்தரவாதம் இல்லாமல் அவர் தமது தொழிலை கைவிட்டிருப்பாரா? தாம் போட்டியிடுவதாக ஊடகங்களிடம் கூறியிருப்பாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு தலைவரும் மறுக்கவும் இல்லை.

எனவே, அவருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தையும் வழங்கி அக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதன் பின்னர் திடீரென அவரை கைவிடுவதானது அவ்வளவு நாகரிகமானதாக தெரியவில்லை. இதேபோல் புலிகளின் அரசியல்துறை தலைவராகவிருந்த சு.ப. தமிழ்செல்வனின் மாமனாரும் முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட இருந்தார் எனவும் அவருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் மற்றொரு செய்தி கூறின.

பிரபாகரனை அடுத்து புலிகள் அமைப்பின் தலைவராக செயற்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் மற்றும் புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராகவிருந்த தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஆகியோரும் இத் தேர்தலில் நிறுத்தப்படுவார்கள் என்று அதற்கு முன்னர வதந்திகள் பரவியிருந்தன. ஆனால் அவர்களும் வேட்பாளர் பட்டியலில் இல்லை.

பொதுவாக புலிகளைக் காட்டி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெறும் நோக்கத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது போலும். தம்மோடு இணைந்தவுடன் முன்னாள் புலிகள் மக்கள் ஆதரவை இழந்துவிடுகிறார்கள் என்று அரசாங்கம் நினைத்தது போலும்.
தேர்தல் ஆணையாளர் வட, மத்திய, மற்றும் வட மேல் ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான குரல்கள் படிப்படியாக மங்கிப் போயுள்ளன. இன்றைய நிலையில் இந்த எதிர்ப்பு வட மாகாணத்தில் தமக்கு பாதகமாக அமையும் என நினைத்து ஆளும் கட்சியினர் இந்தக் குரலை அடக்கிக் கொண்டார்களா? அல்லது இந்திய அழுத்தத்தின் முன் தமது எதிர்ப்பு பயனற்றது என்று நினைத்து மௌனமாகிவிட்டார்களா? என்பது சில காலத்திற்குப் பின்னர் தான் தெளிவாகும்.

இம் மூன்று மாகாண சபைகளில் எந்தவொரு சபைக்கும் ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஏனைய இரண்டு மாகாணங்களில் அரசாங்கத்திற்கு அதற்காக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்த போதிலும் வட மாகாணத்தில் அவ்வாறானவர்கள் இப்போதைக்கு தெளிவாக தெரிவதற்கு இல்லை. சிலவேளைகளில் தேர்தலின் பின்னர் பட்டியலுக்கு வெளியில் இருந்து ஒருவரை இறக்குமதி செய்து அவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் நினைக்கிறதாகவும் இருக்கலாம். மாகாண சபை சட்டத்தின் படி அவ்வாறு செய்யலாம். 1988ஆம் ஆண்டு வரதராஜப் பெருமாள் அவ்வாறு தான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவிக்கு வந்தார். 

இத் தேர்தல்களில் ஏனைய இரண்டு மாகாண சபைகளிலும் தமக்கு இலகுவாகவே வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் நடந்து கொண்டாலும் வடக்கில் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறித்துவிட்டே வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அதனால் தான் அரசாங்கத்தின் தலைவர்கள் சில நாட்களுக்கு முன்னர் வரை வலியுறுத்தி வந்தனர். அந்த கோரிக்கை வடக்கில் தேர்தலின் போது தம்மை பாதிக்கும் என்பதை அறிந்து இப்போது அவர்கள் அதைப் பற்றிய பேச்சுக்களை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

வடக்கில் இந்த நம்பிக்கை இல்லாததால் ஆளும் கட்சி வெற்றி பெறுவதற்காக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டாலும் ஆச்சியப்படுவதற்கில்லை. அதற்காக அரசாங்கத்திற்கு இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளின் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் கிடைக்கலாம். எதைச் சொன்னாலும் செய்யும் அரச அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அவ்வாறு செய்து சர்வதேச நெருக்குதலினாலோ அல்லது உட்கட்சி பகையினாலோ மாட்டிக் கொண்டால் மாட்டிக் கொள்வது அதிகாரிகளேயல்லாமல் அரசியல் தலைவர்களல்ல. திருகோணமலை மாணவர்கள் கொலை தொடர்பில் விசேட அதிரடிப்படை வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடகர்களான ரூகாந்த மற்றும் சந்திரலேகா ஆகியோர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதற்கு உதாரணமாகும்.

இந்த விடயத்தில் அரசாங்கம் கவனமாக நடந்து கொள்ளாவிட்டால் அது இனப்பிரச்சினையின் எதிர்க்காலத்தையும் சர்வதேச ரீதியான நெருக்குதல்களையும் மேலும் மோசமாக்கும் என்பது நிச்சயம். இதற்கு 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்கள் சிறந்த உதாரணமாகும்.

பிரிவினையை கோரும் ஒரு சமூகத்தை சமாளிப்பதற்காகவென உருவாக்கப்பட்ட பொறிமுறையாகவே அன்று மாவட்ட அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்பட்டன. அச் சபைகளில் ஒன்றான யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபையின் அதிகாரத்தை அவ்வாறு பிரிவினையை கோரும் சமூகத்திற்கு வழங்காது பலாத்காரமாக கைப்பற்றிக் கொள்ள அன்றைய ஐக்கிய தேசிய கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சி விபரீதத்திலேயே முடிவடைந்தது. அதன் வடுவாகவே யாழ்ப்பாண பொது நூலகம் இப்போதும் தென் பகுதியில் இருந்து செல்வோருக்கு காட்சிப் பொருளாகியிருக்கிறது.

அன்றும் வடக்கில் தமக்கு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தே ஆளும் கட்சி அவ்வாறு மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது. அதனை இன்றைய அரசியல்வாதிகள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .