2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடக்கு - கிழக்கு இணைப்பு: நடைமுறைச் சாத்தியமா?

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

வடக்கு மாகாணசபைக்கு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதை அடுத்து, வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பான விவகாரம் அரசியல் அரங்கில், மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வடக்கு - கிழக்கு இணைந்த சுயாட்சி நிர்வாக அமைப்பு ஒன்றையே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைத்திருந்தது.
 
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இந்த தீர்வுத் திட்டத்தை, இலங்கை அரசாங்கம் எப்போதோ நிராகரித்து விட்டது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றியதும், வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனி ஈழத்தை அமைக்கப் போகிறார்கள் என்று சிங்களத் தேசியவாத சக்திகள் குரல் எழுப்பத் தொடங்கி விட்டன.
 
வடக்கும், கிழக்கும் இணைந்த தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தினாலும், வடக்கு-கிழக்கு இணைப்புக்கான எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படாத போதிலும், சிங்களத் தேசியவாத சக்திகள் இதனை ஒரு பெரிய அச்சுறுத்தலாக வெளிப்படுத்தத் தொடங்கி விட்டனர்.
 
வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது, முக்கியமாக கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தில் தான் தங்கியுள்ளது. மூன்று இன மக்களும் கிட்டத்தட்ட சமஅளவில் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில், வடக்குடன் இணைந்து கொள்வதற்கான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் இலகுவான காரியமல்ல.
 
ஏனென்றால், கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் ஒருபோதும் இதற்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை. இதனால், வடக்கு-கிழக்கு இணைப்பில், முக்கியமான பங்கை வகிக்கப் போகிறவர்கள் முஸ்லிம் மக்களாகவே இருக்கப் போகின்றனர்.
 
கிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இன்னும் முழுமையான நல்லுறவு ஏற்பட்டு விட்டதாக கருத முடியாது. அங்கு பல இடங்களில் இந்த இரு இனங்களுக்கு இடையிலும் இனரீதியான சச்சரவுகள் நீடிக்கின்ற நிலையில், வடக்குடன் இணைந்து கொள்வதற்கு முஸ்லிம்கள் அவ்வளவு இலகுவாக சம்மதிக்கமாட்டார்கள்.
 
வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால், முஸ்லிம்களுக்கென தனியான நிர்வாக அலகு – அதாவது தென்கிழக்கு மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை, அஷ்ரப் காலத்திலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியது.
 
இப்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களுக்கு தனி அலகு கோரிக்கை எதையும் முன்வைப்பதில்லை. அதற்கான எந்த அரசியல் பேரத்திலும் ஈடுபடவும் இல்லை.
 
வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கான முயற்சிகள் என்பது, இன்னமும் பூச்சிய நிலையில் இருக்கிறது என்பது தான் உண்மை.
 
வடக்கு - கிழக்கை இணைப்பதற்கு தமிழர் தரப்பு புரம் பேசத்தக்களவுக்கு பலமான நிலையில் இருந்திருந்தால் – அல்லது 1987ஆம் ஆண்டு நிலைப்பாட்டில் இந்தியா இருந்திருந்தால், அரசியல் ரீதியாக இத்தகைய இணைப்பு முயற்சிகளை முன்னெடுத்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
 
ஆனால், தமிழர் தரப்பு இப்போது பேரம் பேசும் பலமான நிலையில் இல்லாததால், இந்தியாவும் வடக்கு - கிழக்கு இணைப்பு விவகாரத்தில் அக்கறை காட்டாததால், இப்போதைக்கு வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது தமிழர்களின் ஒரு கனவாக மட்டுமே இருக்க முடியும்.
 
கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைய விரும்பினால், வடக்கு மாகாணமும் அதற்கு இணங்கினால், வடக்கு - கிழக்கு இணைப்பை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
 
ஆனால், அப்படி வடக்கு - கிழக்கை இணைக்க முடியாது என்றும், அரசியலமைப்புக்கு முரணாக எதையும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
 
எனினும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் அதை தடுக்க முடியாது என்று மீண்டும் பதில் கொடுத்துள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
 
இந்த வாதப் பிரதிவாதங்கள் அதிகார, அரசியல் மட்டங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் எந்த செயலாக்க முயற்சிகளும் நடக்கவில்லை.
 
அதேவேளை, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறை தவறு என்பதால் தான், அவற்றைப் பிரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதே தவிர, வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது என்று கூறவில்லை.
 
ஆனால், அத்தகைய இணைப்புகளை சாத்தியமற்றதாக்கும் நோக்கில், அரசியலமைப்பில் இரண்டு திருத்தங்களைச் செய்வதற்கு அண்மையில் அரசாங்கம் எடுத்திருந்த இரண்டு நடவடிக்கைகள், இந்தியாவின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 
இந்தச் சூழலில், வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் அரசியல் ரீதியான, சட்டரீதியான நடைமுறைகள் எதையும் உடனடியாக முன்னெடுக்கும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
 
ஆனால், கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் இதற்கு சாதகமான தீர்ப்பை அளிக்க முன்வந்தால் மட்டுமே, இந்த இணைப்பு சாத்தியமாகும்.
 
இரண்டு மாகாணசபைகளும் இணைந்து கொள்வதற்கு இணங்கினாலும், அரசியல் ரீதியாக அந்த முயற்சியை, சட்ட வலுவுள்ளதாக்குவதற்கு, கருத்துக்கணிப்பு அவசியம் தேவைப்படும்.
 
இதனை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக கருதி, தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கருத்துக்கணிப்புக்கு உத்தரவிடுவார்.
 
ஆனால், இப்போதைய நிலையில் அத்தகைய கருத்துக்கணிப்பில் கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் அதற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கான அரசியல் சூழலில் அங்கு கிடையவே கிடையாது. நம்பகத்தன்மையை விட, நம்பிக்கையீனம் தான் அதிகமாக உள்ளது.
 
ஆனால், வடக்கும் கிழக்கும் இணைந்தால், கூடுதலான அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தினால் தான், முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதற்குச் சாதகமான நிலைக்குத் திரும்பும்.
 
இப்போதைக்கு அரசாங்கத்துடன் அண்டி நடந்து கொள்வதே அனுகூலம் அடைவதற்கான ஒரே வழியாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் கருதுகின்றன. அதனால் தான், கிழக்கு மாகாணசபையில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட நினைக்கின்றன.
 
இத்தகைய சூழலில், வடக்கு மாகாணசபையின் செயற்பாட்டில் தான் கிழக்கிலுள்ள முஸ்லிம் தலைமைகளை வடக்கு -கிழக்கு இணைப்புக்கு சார்பான நிலைக்குத் கொண்டு வரமுடியும்.
 
அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளதால், கிழக்கு மாகாணசபையின் முக்கியத்துவம் குறைந்து, அந்த நிர்வாக அமைப்பு பெரியதாக செயல்முறையற்றதாக மாறியுள்ளது.
 
ஆனால், வடக்கு மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றினாலும், அதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதேவேளை, சர்வதேச அளவிலும் வடக்கு மாகாணசபைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
 
இந்த தளத்தைக் கட்டியெழுப்பி, வலுவானதாக்குவதன் மூலம், கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களும், அரசியல் தலைமைகளும், வடக்குடன் இணைவதால் கூடுதல், நன்மைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்க முடியும்.
 
அதுமட்டுமன்றி வடக்கிலுள்ள முஸ்லிம்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, அவர்களையும் பங்காளர்களாக்குவதன் மூலமே கிழக்கில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது ஒரே இரவில் நிகழ்ந்து விடக்கூட அதிசயமாக இருக்க முடியாது.
 
அதுவும், இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற நீண்டகால இலக்காகவே இருக்கும்.
 
இந்திய - இலங்கை உடன்பாட்டின் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களை, சிங்களத் தேசியவாதிகள் நன்கு திட்டமிட்டே பிரித்தனர். அப்படியிருக்கும் போது, அவற்றை மீள் இணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
 
இந்த நீண்ட இலக்கை அடைவதற்கு வடக்கு மாகாணசபையே கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும். அந்த செயல்முறையை நோக்கி வடக்கு மாகாணசபையை நகர்த்துவதே இப்போது தமிழ்கட்சிகளினது முக்கியமான தேவைப்பாடாக இருக்கும்.

You May Also Like

  Comments - 0

  • siyam Tuesday, 22 October 2013 03:08 PM

    கட்டாயம் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும்.

    Reply : 0       0

    vanakkam Friday, 01 November 2013 09:06 AM

    அதற்கு முன் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை முடிவடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X