2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்கத்தின் தோல்வி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம். ஐயூப்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கிய 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியொன்று தேர்தலொன்றின் போது சரிவை கண்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெளிவாகவே சரிந்துள்ளது.

2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் ஐ.ம.சு.மு போட்டியிட்ட எந்தவொரு இடத்திலும் வாக்குகள், ஆசனங்கள் மற்றும் விகிதாசாரம் ஆகிய மூன்று அம்சங்களிலும் அக் கட்சி சரிவை கண்டதில்லை. சில வேளைகளில் சில மாவட்டங்களில் முன்னைய தேர்தலோடு ஒப்பிடும் போது வாக்கு எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் ஆசனங்கள் அல்லது விகிதாசாரம் ஆகியவற்றில் அக் கட்சி முன்னேற்றத்தையே காட்டி வந்துள்ளது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களோடு 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல்களை ஒப்பிடும் போது இம்முறை சகல மாவட்டங்களிலும் அக் கட்சி வாக்கு எண்ணிக்கை, ஆசன எண்ணிக்கை மற்றும் வாக்கு வீதம் ஆகிய மூன்றையும் குறைத்துக் கொண்டுள்ளது. தென் மாகாண சபையைப் பொறுத்தவரை ஐ.ம.சு.மு 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 67.88 வீத வாக்குகளை பெற்றது. இம் முறை 58.06 வீத வாக்குகளையே அது பெற்றுள்ளது. சிறுபான்மை மக்களின் தாக்கமே இல்லாத தென் மாகாணத்தில் ஐ.ம.சு.முவுக்கு 12.82 வீத வாக்குகள் குறைந்துள்ளது. இது சிறியதோர் தொகையல்ல.

அம் மாகாணத்திலிருந்து ஆளும் கூட்டணி இம் முறை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 6,99,408 ஆகும். 2009 ஆம் ஆண்டு அக் கட்சி தென் மாகாணத்தில் 8,04,071 வாக்குகளை பெற்றது. அதாவது அக் கட்சிக்கு அங்கு 1.04.663 வாக்குகள் குறைந்துள்ளன.

தென் மாகாண சபையில் ஐ.ம.சு.மு.வுக்கு கடந்த முறை 38 ஆசனங்கள் கிடைத்தது. இம்முறை அது 33 ஆக குறைந்துள்ளது. அரசாங்கத்தின் தலைவர்கள் அதிகார பரவலாக்கலை எதிர்ப்பதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய மறுப்பதும் தென் பகுதி வாக்காளர்கள் அரசை எதிர்ப்பார்கள் என்ற பயத்தினாலேயே. ஆனால் அவ்வாறு செய்தும் அரசாங்கம் இம் முறை தென் பகுதி மக்களை வென்றெடுப்பதில் பின்னோக்கியே சென்றுள்ளது.

மேல் மாகாண சபைக்கான 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 15,06,115 வாக்குகளை பெற்ற ஆளும் கட்சி இம் முறை 13,63.675 வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது அங்கு ஐ.ம.சு.மு.வுக்கு 1,42,440 வாக்குகள் குறைந்துள்ளது. அங்கு அக் கட்சிக்கு கடந்த முறை 68 ஆசனங்கள் இருந்தது. இம் முறை 56 ஆசனங்களே கிடைத்துள்ளன. கடந்த முறை 64.73 வீத வாக்குகள் கிடைத்தன. இம் முறை அது 53. 35 வீதமாக குறைந்துள்ளது.

எனவே வாக்குகள் குறைந்தாலும் எமக்கு கூடுதலான ஆசனங்கள் கிடைத்தன என்றோ அல்லது கூடுதலான விகிதாசாரத்தில் வாக்குகளை பெற்றுள்ளோம் என்றோ ஆளும் கட்சி கூற முடியாது. எனவே தான் இது தெளிவான சரிவாக கருத வேண்டியுள்ளது. பலமான எதிர்க் கட்சியொன்று இல்லாத நிலையிலும் மற்றொரு கட்சி விரைவில் ஆட்சிக்கு வரும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையிலும் தான் மக்கள் ஆளும் கட்சியிலிருந்து விலக ஆரம்பித்துள்ளனர்.

எனவே இது எதிர்க் கட்சிகளின் ஈர்ப்பு அல்ல. மாறாக அரசாங்கத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடாகவே கருத வேண்டியுள்ளது. பலமான எதிர்க்கட்சியொன்று இருக்கும் நிலையில் இத் தேர்தல் நடைபெற்று இருந்தால் ஆளும் கட்சி இம் மாகாண சபைகளை பறிகொடுத்திருக்கவும் கூடும்.

அரசாங்கத்திடமிருந்து விலகிய மக்கள் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியிடம் சென்றதாக கூறவும் முடியாது. ஏனெனில் தென் மாகாணத்தில் மட்டுமே ஐ.தே.க.வின் வாக்குகள் அதிகரித்துள்ளன. அங்கு கடந்த முறை 2,97,184 வாக்குகளை பெற்ற ஐ.தே.க. இம்முறை 3,10,431 வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் அங்கு ஐ.தே.க.வின் வாக்கு வீதமும் ஆசனங்களின் எண்ணிக்கையும் மாறவில்லை.

அதேவேளை மேல் மாகாணத்தில் ஐ.தே.க.வினதும் வாக்குகளும் வாக்கு வீதமும் ஆசனங்களும் குறைந்துள்ளன. அதாவது அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்த மக்கள் ஐ.தே.க.விடமும் செல்லாது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியின் பக்கமும் மக்கள் விடுதலை முன்னணியின் பக்கமுமே சாய்ந்துள்ளனர்.

கடந்த முறையோடு ஒப்பிடும் போது மக்கள் விடுதலை முன்னணி மேல் மாகாணத்தில் தமது வாக்கு வங்கியை ஏறத்தாழ மும்மடங்காக அதிகரித்துக் கொண்டுள்ளது. கடந்த முறை 56,384 வாக்குகளை பெற்ற அக் கட்சி இம் முறை 1,56,208 வாக்குகளை பெற்றள்ளது. தென் மாகாணத்திலும் அக் கட்சி தமது வாக்கு வங்கியை 50 சத வீதத்தால் அதிகரிதாதுக் கொண்டுள்ளது.

மொத்தத்தில் இரு மாகாணங்களிலும் ஆளும் கட்சியின் பலம் 17 ஆசனங்களால் குறைந்துள்ளது. ஐ.தே.க.வின் பலம் இரண்டு ஆசனங்களால் குறைந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பலம் 6 ஆசனங்களில் இருந்து 11 ஆசனங்களாக அதிகரித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தென் மாகாண வாக்குகள் சற்று குறைந்துள்ள போதிலும் மேல் மாகாணத்தில் அக் கட்சி தமது வாக்கு வங்கியையும் ஆசன எண்ணிக்கையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆளும் கட்சி இத் தேர்தலில் சரிவை கண்ட போதிலும் எதிர்க் கட்சிகள் அதனால் மகிழ்ச்சியடைய முடியாது. ஏனெனில் அடுத்து பதவிக்கு வரக் கூடிய அளவுக்கு பலமான ஐ.தே.க.விடம் மக்கள் சென்றடையவில்லை. அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியிடமும் ஜனநாயகக் கட்சியிடமுமே சென்றுள்ளனர். அக் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு முன்னேற நீண்ட காலம் எடுக்கும். எனவே ஆளும் கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்தும் சரிந்தாலும் அடுத்த பொதுத் தேர்லிலும் அல்லது ஜனாதிபதி தேர்தலிலும் ஆட்சி மாறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இந்த நிலைமை எதிர்க் கட்சிகளுக்கு ஒரு பலமான செய்தியை வழங்குகிறது. அதாவது எதிர்க் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்பதே. ஆனால் மக்கள் விடுலை முன்னணியும் ஜனநாயகக் கட்சியும் அதனை விரும்புமா என்பது சந்தேகமே.

மக்கள் தம்மை வெறுக்க அரம்பித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள ஆளும் கட்சி இந்த நிலையில் தமது எதிர்கால தோல்வியை தடுக்க இரண்டு உத்திகளை கையாளலாம். ஒன்றில் அரசாங்கம் எதிர்க் கட்சிகளிடையே விரிசலை அதிகரிக்கலாம். அல்லது ஐ.தே.க.வை மேலும் பலவீனப்படுத்தலாம். ஏனெனில் அப்போது அரசாங்கத்தை கைவிடும் மக்கள் ஐ.தே.க.விடம் செல்ல மாட்டார்கள். ஏனைய இரண்டு கட்சிகளிடம் சென்றாலும் அது இப்போதைக்கு ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆளும் கட்சி தோல்வி காண ஆரம்பித்துள்ளது மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமல்ல. அரசாங்கத்தின் முக்கிய தார்மிக கடமையான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதிலும் அது தொடர்ந்து தோல்வி கண்டு வருவதை இத் தேர்தல்கள் சுட்டிக் காட்டுகின்றன. மக்கள் ஆளும் கட்சியை சேர்ந்த எந்தவொரு சிறுபான்மை வேட்பாளரையும் தெரிவு செய்யவில்லை. பெரும்பான்மை மக்கள் வழமையாக சிறுபான்மை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதாவது சிறுபான்மை மக்கள் இம் முறை அவ்வளவாக ஆளும் கட்சிக்கு வாக்களிளத்தில்லை.
ஆளும் கட்சியின் செய்மதியாக போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை அரசாங்கத்திற்காக பெற்றுக் கொடுத்தாலும் அதுவும் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கே வாக்களித்துள்ளார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறதேயல்லாமல் அந்த வாக்காளர்கள் அரசாங்கத்தை ஆதரித்துத் தான் வாக்களிளத்தர்களா என்பது சந்தேகமே.

தமிழர்கள் செறிவாக வாழும் கொழும்பு மேற்கு மற்றும் கொழும்பு வடக்கு ஆகிய தொகுதிகளில் ஐ.தே.க. முதலிடத்திற்கும் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி இரண்டாவது இடத்திற்கும் ஆளும் ஐ.ம.சு.மு. மூன்றாவது இடத்திற்கும் வந்தமை தமிழ் மக்கள் ஆளும் கட்சியை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அண்மையில் நாட்டில் பரவிய முஸ்லிம் விரோத பிரசாரங்களும் அதற்கான சில பிரபலங்களின் ஆதரவுமே முஸ்லிம்களின் வாக்குத் திசையை நிர்ணயித்தது. அது தான் ஆளும் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் தெரிவாகாதமைக்குக் காரணமாக கருத முடியும். ஆளும் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் தெரிவாகாதமையினால் ஆளும்; கட்சி தமது போனஸ் ஆசனங்களில் ஒன்றை தோல்வியடைந்த வேட்பாளரான நவுஸர் பௌசிக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆளும் கட்சி இரண்டு இடங்களில் மட்டும் முஸ்லிம் வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிகிறது. கொலன்னாவ மற்றும் பேருவளை அவ்விரு இடங்களாகும். கொலன்னாவையில் முஸ்லிம்கள் ஓரளவு வாக்குகளை ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு அளித்திருக்கலாம். ஏனெனில் அவரது தந்தையான காலஞ்சென்ற பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலன்னாவ தொகுதியில் பல பிரச்சினைகளின் போது முஸ்லிம்களுக்கு உதவியவர். எனவே முதன் முறையாக போட்டியிட்ட ஹிருணிக்கா கொழும்பு மாவட்டத்தில் முதலிடத்திற்கு வர முடிந்தது. 

அதேபோல் அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்னவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேருவளை அமைப்பாளராக இருக்கிறார.; அவர் கடந்த கால முஸ்லிம் விரோத பிரசாரங்களின் போது முஸ்லிம்களுக்காக பரிந்து பேசியவர். விஜய குமாரதுங்கவுடன் அரசியலில் ஈடுபட்ட அவர் எப்போதும் இனவாதத்தை எதிர்த்து வந்தவர். எனவே அங்கும் முஸ்லிம்கள் அவருக்காக ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அரசியல்வாதிகள் இனவாதிகளாக செயற்படாவிட்டால் மக்கள் இனவாதிகளாக செயற்படுவதில்லை என்பதற்கு கொலன்னாவையும் பேருவளையும் சிறந்த சான்றுகளாகும்.

கடந்த வருடம் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலிலும் ஆளும் கட்சி சிறுபான்மை மக்களின் ஆதரவை பெறத் தவறியது. அப்போது கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க. வேட்பாளர்களில் முதலாம் இடத்திற்கு அஸாத் சாலி தெரிவாவதற்குக் காரணம் அவர் முஸ்லிம்களின் முழு ஆதரவையும் பெற்றமையே. ஏனெனில் பொது பல சேனா போன்ற மதத் தீவிரவாத குழுக்களை எதிர்ப்பதில் அவர் முன்னணியில் இருந்தார்.
அதேபோல் கொழும்பில் அந்த தீவிரவாத குழுக்களை கடுமையாக எதிர்த்த ஐ.தே.க. வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானும் இம் முறை ஐ.தே.க. சார்பில் மூன்றாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளார். இந்த மதவாதிகளுக்கு எதிரான முஸ்லிம் வாக்குகளின் ஒரு பகுதி முஸ்லிம் என்ற காரணத்தினால் கொழும்பில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எம். மரிக்காருக்கும் கிடைத்திருக்கலாம். எனவே, தான் அவர் ஐ.தே.க. பட்டியலில் முதலாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளார். மகாராஜா நிறுவனம் வழங்கிய மா பெரும் பிரசார அனுசரணை தான் அவரது பலமாக இருந்தது.

மு.கா. கடந்த முறை மேல் மாகாணத்தில் பெற்ற 49,000 வாக்குகளை இம் முறையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அக் கட்சி ஆளும் கட்சியில் இன்னமும் இருப்பதால் இம் முறை அதன் வாக்கு வங்கி குறையும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அக் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் விரோத சக்திகளையும் அவற்றுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகளுக்கும் எதிராக குரல் எழுப்பிதால் அக் கட்சி தமது நிலையை பாதுகாத்துக் கொண்டது.

மு.கா. அரசாங்கத்திலிருந்து விலகி போட்டியிட்டு இருந்தால் நிச்சயமாக அதன் வாக்கு வங்கி பெருகியிருக்கும் என்றே ஊகிக்க முடிகிறது. ஆனால் இதற்க முன்னர் ஒரு கட்டுரையில் நாம் கூறியதைப் போல் மு.கா.வுக்கு அரசாங்கத்திலிருந்து விலக முடியாத காரணங்கள் இருக்கின்றன.
இருந்த போதிலும் இப்போது மு.கா. பெரும் தார்மிக நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. அக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளில் பெரும் பகுதி அரசாங்கத்திற்கு எதிரான அக் கட்சியின் பிரசாரத்தினால் கிடைத்த வாக்குகளே. அவ் வாக்காளர்கள் அரசாங்கத்தை எதிர்க்காவிட்டாலும் ஆதரிப்பவர்கள் அல்ல என்றே ஊகிக்க வேண்டியுள்ளது. அந்த வாக்குகளை பெற்று தெரிவான மு.கா. மாகாண சபை உறுப்பினர்கள் இப்போது மேல் மாகாண சபையிலும் தென் மாகாண சபையிலும் ஆளும் கட்சியை ஆதரிக்கப் போhகிறார்களா? அவ்வாறாயின் அது அவர்களுடைய மனச்சாட்சியையே உறுத்தாதா?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X