2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதித் தேர்தல் சிறுபான்மையினருக்கு சாதகமாக அமையுமா?

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சில பத்திரிகைகள் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டு இருந்தன. 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை எதிர்ப்பார்க்காதிருங்கள் என்று அண்மையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அவ்வாறாயின் இப்போது ஏன் இந்த அவசரம்?

கடைசியாக 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதமே ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி ஆறு வருடங்கள் பதவியில் இருக்க முடியும் எனவே முறைப்படி 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அவ்வாறாயின் அரசாங்கம் அடுத்த வருடம் அதாவது 2015ஆம் ஆண்டு ஏன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப் போகிறது?

தாம் பதவி ஆசை கொண்டவர் அல்ல என்று காட்டவோ அல்லது ஆறு வருடங்கள் தேவையில்லை, ஐந்து வருடங்கள் தமக்குப் போதுமானது என்று நினைத்தோ இத்தோடு அரசியலில் இருந்து விலகுவதற்காகவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப் போகிறார் என்று ஊகிக்க முடியாது. ஏனெனில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவியில் இருக்க முடியாது என்று இருந்த சட்டத்தை தாம் பதவியில் இருக்கும் போதே 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஒருவர் எத்தனை முறையும் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்று மாற்றியவர் விரைவில் பதவி துறக்கப் போகிறார் என்று ஏற்க முடியாது.

அடுத்த வருடம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்ற இந்த செய்தி உத்தியோகபூர்வமானதல்ல என்றாலும் அது உண்மையாக இருக்கலாம். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த மாதம் நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை அடுத்து அரசாங்கம் இவ்வாறானதோர் முடிவை எடுத்திருந்தால் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் அல்ல. ஏனெனில் 2004ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுத்திர முன்னணி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தது முதல் அக் கூட்டணி சந்தித்த மிக மோசமான தேர்தல் அந்த இரண்டு மாகாண சபைத் தேர்தல்கள் என்றே கூற வேண்டும்.

அவ் விரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் ஐ.ம.சு.மு வெற்றி பெற்றமை உண்மை தான். ஆனால் அது அக் கூட்டணியின் தலைவர்கள் எதிர்ப்பார்த்த வெற்றியல்ல. மக்களை கவர்வதற்காக எப்போதும் போல் எதிர்க்கட்சிகள் தேர்தல் மேடைகளில் வீராப்பு பேசினாலும் அவற்றின் தலைவர்களும் இம் முறையும் ஆளும் கட்சி இதற்கு முன்னைய தேர்தல்களின் போது பெற்றதைப் போலவே வாக்குகளைப் பெறும் என்றே நினைத்தனர். ஆனால் ஐ.ம.சு.மு.வின் வெற்றி எதிர்ப்பாராத விதமாக அக்கூட்டணியின் சரிவை தெளிவாக எடுத்துக் காட்டியது.

இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில் நாம் சுட்டிக் காட்டியதைப் போல் இம் முறை தென் மற்றும் மேல் ஆகிய இரு மாகாணங்களிலும் ஐ.ம.சு.மு பெற்ற வாக்குகள், வாக்கு வீதம், ஆசனங்கள் ஆகியன 2009ஆம் ஆண்டு இதே மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தல்களின் போது பெற்ற வாக்குகள,வாக்கு வீதம் மற்றும் ஆசன எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்க்கிலும் குறைவாகவே இருந்தன.

வீதிகளும், கட்டிடங்களும் மட்டும் அபிவிருத்தியாவதில்லை என்று தேர்தலின் போது மக்கள் கூறினர் என்று அமைச்சர் நிமல் சிறிபால சில்வா இந்த மாகாண சபைத் தேர்தல்களை அடுத்து கூறினார். இது தேர்தலில் தாம் கண்ட சரிவை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதற்கு சமமாகும். (ஆனால் இதை கூறியதற்காக அவர் அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் வாங்கி கட்டிக் கொண்டார் என்பது வேறு விடயம்.)

இது எதிர்க் கட்சிகளின் ஈர்ப்பின் விளைவு என்று கூறுவதை விட ஆளும் கட்சி மீதான வெறிப்பின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். ஏனெனில் பெருமளவிலான மக்கள் இம் முறை வாக்களிக்கவில்லை. அதேவேளை அரசாங்கத்திடமிருந்து விலகிய மக்கள் அடுத்து பதவிக்கு வந்தால் வரக் கூடிய ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கவும் இல்லை. ஐ.தே.க.வின் வாக்குகளும் குறைந்துள்ளன. அரசாங்கத்திடம் இருந்து விலகிய மக்கள் மக்கள் விடுதலை முன்னணியிடமும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியிடமுமே சென்றுள்ளனர்.

எனவே மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் பெருமளவில் மக்கள் அரசாங்கத்திடமிருந்து விலகலாம் என்று ஆளும் கட்சியின் தலைவர்கள் அச்சப்படுகிறார்கள் போலும். அதனால் தான் அவர்கள் கூடிய விரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அடுத்த வருடம் ஜனவரி மாதமே மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதியாக சத்திய் பிரமானம் செய்து ஐந்தாண்டுகள் பூர்த்தியாகின்றன. அரசியலமைப்பின் மூன்றாவது திருத்தத்தின் படி ஒரு ஜனாதிபதி பதவியேற்று நான்காண்டுகள் பூர்த்தியானதன் பின்னரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும்.

எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராவதற்கு இடமளிக்காமல் விரைவாக அத் தேர்தலை நடத்தி ஆளும் கட்சியே மீண்டும் பதவிக்கு வருவதற்காக ஜனாதிபதிகள் இந்த சட்ட திருத்தத்தை பாவித்து இருக்கிறார்கள். ஜனாதிபதி ஜே.ஆர. ஜயவர்தன 1982ஆம் ஆண்டும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1999ஆம் ஆண்டும் .இந்த சட்டத் திருத்தத்தை பாவித்தனர்.

ஜனாதிபதி ஜயவர்தனவே இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தவராவர். அவர் 1980ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தார். 1882ஆம் ஆண்டளவில் தமது அரசாங்கத்தின் ஜனரஞ்சகத்தன்மை வேகமாக வீழ்ச்சியுறுவதை அவர் கண்டார். எனவே சிறிமா பண்டாரநாயக்க போட்டியிட முடியாத காலகட்டத்திலேயே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் இலகுவில் தாமே மீண்டும் பதவிக்கு வர முடியும் என அவர் நினைத்தார்.

ஆனால் அவரே முன்வந்து இயற்றி நிறைவேற்றப்பட்ட 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஆறு ஆண்டுகளில் தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். சர்வாதிகாரியைப் போல் நடந்து கொள்ளும் எந்தவொரு ஆட்சியாளரும் தாம் சட்டப்படி நடந்து கொள்வதாக உலகுக்குக காட்டிக் கொள்ளவே விரும்புவார். அதற்காக தமக்கு வேண்டியவாறு சட்டங்களை மாற்றுவார்.

அதனை தான் அன்று ஜே.ஆரும் செய்தார். ஜனாதிபதி ஒருவர் பதவிக்கு வந்து நான்காண்டுகளில் வேண்டும் என்றால் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடிய வகையில் அவர் அரசியலமைப்பின் மூன்றாவது திருத்தத்தை கொண்டு வந்தார். அதன் பின்னர் 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மீண்டும் தாமே ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார்.

சந்திரிகா குமாரதுங்கவும் அவ்வாறே தான் செய்தார். 1994ஆம் ஆண்டு 62 சத வீத வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த போதிலும் தமது பிரபல்யம் சரிந்து வருவதை அவர் 1999ஆம் ஆண்டளவில் உணர்ந்தார். ஜே.ஆரின் அரசியலமைப்பை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அவர் அதே அரசியலமைப்பை பாவித்து 1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மீண்டும் பதவிக்கு வந்தார்.

தற்போதைய அரசாங்கமும் தமது எதிர்க்காலத்தைப் பற்றி அஞ்சத் தொடங்கியிருக்கிறது. இம் முறை ஆளும் கூட்டணி தென் மாகாணத்திலிருந்தும் மேல் மாகாணத்திலிருந்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வீதம் இழந்துள்ளது. இந்த நிலைமை சிலவேளை ஏனைய மாகாணங்களிலும் ஏற்பட்டு இருக்கலாம. குறிப்பாக சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைமை மேலும் மோசமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த காலங்களில் அரசாங்கம் சிறுபான்மை மக்கள் விரும்பாதவற்றையே செய்தது. அல்லது ஊக்குவித்தது. 13அவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பூரணமாக அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் ஆனால் அரசாங்கம் மாகாண சபைகளுக்கு மேலும் அதிகரங்களை வழங்கவதற்குப் பதிலாக மாகாண சபைகளிடம் ஏற்கனவே உள்ள அதிகாரங்களையும் பறிக்கவும் மாகாண சபை முறையையே ரத்துச் செய்யவும் முயற்சி செய்தது. இந்திய அரசாங்கத்தின் நெருக்குதல்களினாலேயே அரசாங்கம் மாகாண சபை முறையை விட்டு வைத்துள்ளது.

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்து நான்காண்டுகள் செல்லும் வரை அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தவில்லை. இறுதியில் இந்திய அரசாங்கம் தலையிட்டு அமெரிக்கா ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த பிரேரணையில் இந்த விடயத்தை உள்ளடக்கி பெரும் நெரக்குதலை கொடுத்த பின்னரே அரசாங்கம் கடந்த வருடம் செப்டமபர் மாதம் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தியது.

அதற்குப் பின்னரும் அரசாங்கம் மாகாண சபையோடு மோதும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. மாகாண சபையின் பிரதம செயலாளரையும் ஆளுநரையும் மாற்ற வேண்டும் என மாகாண முதலமைச்சர் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் அவரோடு ஒத்துழைத்து கடமையாற்றக் கூடிய அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம நடவடிக்கை எடுக்கவில்லை.

மறுபுறத்தில் முஸ்லிம்களுகு எதிராக பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் செயற்பட்டு வருவதை அரசாங்கம் கண்டும் காணாததைப் போல் நடந்து கொள்கிறது. சில பலம் வாய்ந்தவர்கள் அவ் அமைப்புக்களுக்கு உதவியும் பிரிந்து வருகிறார்கள். எனவே அரசாங்கம் முஸ்லிம் மக்களினதம் அதரவை இழந்து வருகிறது.

அதாவது 9 மாகாணங்களிலும் குறைந்த பட்சம் ஏழு, எட்டு லட்சம் வாக்குகளையாவது ஆளும் கட்சி இழந்து இருக்கலாம். இந்த ஏழு, எட்டு லட்சம் வாக்குகளும் ஐ.தே.க.வின் வாக்குகளோடு சேர்ந்தால் ஐ.தே.க. சுமார் 15 லட்சங்களால் ஐ.ம.சு.மு.வை எட்டிப் பிடித்திருக்கும். ஐ.ம.சு.மு.வை பொறுத்தவரை இது பயங்கரமானதோர் நிலைமையாகும். இப்போதக்கு ஆளும் கட்சிக்கு இருக்கும் ஆறுதல் என்னவென்றால் ஆளும் கட்சியிடமிருந்து விலகும் வாக்காளர்கள் ஐ.தே.க.விடம் செல்லாது ம.வி.மு.விடமும் ஜனநாயகக் கட்சியிடமும் செல்வதே.

ஆனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளர் ஒருவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நிறுத்தி தமிழ் முஸ்லிம் கட்சிகளினது ஒத்துழைப்பையும் பெற்று ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க் கட்சிகளிலுள்ள பல தலைவர்களும் வண. மாதுளுவாவே சோபித்த தேரர் போன்ற சில முக்கிய சமூகத் தலைவர்களும் கூறுகிறார்கள். அவ்வாறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் நிலைமை ஏற்பட்டால் அது ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்பது திண்ணம். எனவே அவ்வாறானதோர் ஐக்கியம் எதிர்க் கட்சிகளிடையே ஏற்படும் முன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஆளும் கட்சி நினைப்பது நியாயமே.

சிறுபான்மை மக்களில் பெரும்பாலானவர்கள் இதனை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள், குறிப்பாக தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை விரும்பவில்லை என்பது கடந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிகிறது. இந்த அரசாங்கம் தொடரக்கூடிய வகையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ நடத்துவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் சிறுபான்மை மக்கள் மேலும் ஆளும் கட்சியில் இருந்து விலகலாம் அதன் மூலம் சிறுபான்மை வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலின் போது நிர்ணயகரமான சக்தியாகவம் மாறலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேராமல் அவர்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாது. எதிர்க் கட்சிகள் ஒன்று சேரும் நிலையில் இல்லை மக்கள் விடுதலை முன்னணியும் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் அவ்வாறான கூட்டணிகளை விரும்பவில்லை என்று ஏற்கனவே கூறியிருக்ன்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .