2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பா.ஜ.க.வும். காங்கிரஸும் கை கோர்க்குமா?

A.P.Mathan   / 2014 ஜூன் 30 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் முதல் முப்பது நாட்கள் ஆட்சி முடிந்து அடுத்த கட்டத்தில் காலெடித்து வைத்துள்ளது. இதுவரை வந்த இந்தியப் பிரதமர்களில் பலர் அதிக அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை அமைத்தாலும், பிரதமர் நரேந்திரமோடி தன்னுடன் 45 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இல்லை. ஆனால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை மதிக்கும் பொருட்டு, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலி தலம், பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனா போன்ற முக்கியக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து அரவணைத்துச் செல்லுகிறார் பிரதமர் மோடி.
 
பிரதமராகப் பதவியேற்றதும் தனக்கு பிரின்ஸிபால் செகரட்டரியாக நிர்பேந்த்ரா மிஸ்ராவை நியமிக்க விரும்பினார். அவர் ட்ராய் தலைவராக இருப்பவர்கள் அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசு பதவிகளை ஏற்கக்கூடாது என்று ட்ராய் சட்டம் தடுத்தது. அதனால் அந்த சட்டத்திற்கு ஓர் அவசரச்சட்டம் கொண்டு வந்து அத்தடையை நீக்கி, நிர்பேந்த்ரா மிஸ்ராவை தனது முதன்மைச் செயலாளராக நியமித்துக் கொண்டார் நரேந்திர மோடி. பிரதமர் தனது செயலாளரை அவசரச்சட்டம் மூலம் நியமித்தது இதுதான் முதல் தடவை. அதன் பிறகு அமைச்சர்களுக்கு நேர்முக உதவியாளர்கள் நியமிக்கும் விஷயத்தில் மோடி சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதாவது “உங்கள் உறவினர்கள் யாரையும் நேர்முக உதவியாளர்களாக வைத்துக் கொள்ளாதீர்கள்” என்பதுதான் அந்த உத்தரவு. அதைத் தொடர்ந்து அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவரைத்தான் நேர்முக உதவியாளராக நியமிக்க வேண்டிய கட்டாயம் அமைச்சர்களுக்கு உருவானது. இதுவும் இந்திய அமைச்சர்கள் வரலாற்றில் மோடி உருவாக்கிய புதிய சகாப்தம்.
 
மோடி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டமே சக அமைச்சர் கோபிநாத் முண்டேயின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை உருவானாலும், அமைச்சரவை தன் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தெளிவாக பிரகடனப்படுத்தினார் மோடி. அதற்கு சரியான உதாரணம் அனைத்து துறை செயலாளர்களையும் அழைத்து அமைச்சர்கள் இன்றி ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். “செயலாளர்கள் நான் சொல்வதைத்தான் கேட்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும் அது எனது கவனத்திற்கு வந்து விடும்” என்று “அமைச்சர்கள் ஜாக்கிரதை” என்று மோடி விடுத்த செய்தி இது. இது மட்டுமின்றி, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட தேவையற்ற அமைச்சரவைக் குழுக்களை எல்லாம் கலைத்தார். அதை விட முக்கியமாக நாட்டிற்கு ஐந்தாண்டு திட்டங்களை வகுக்கும் திட்டக்கமிஷன் தேவையா என்ற கேள்வியை எழுப்பி விவாதத்திற்கு விட்டிருக்கிறார். “மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள். அதனால் நல்லதோ கெட்டதோ அது என் தலை மீதுதான் விழும். ஆகவே அரசாங்கத்தின் செயல்பாடுகள் என்தலைமையில் நான் சொன்ன திசையிலேயே நடக்கும்” என்பதை தன் கட்சியான பா.ஜ.க.விற்கு மட்டுமின்றி, அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தன் முப்பது நாள் செயல்பாட்டில் தெளிவான செய்தியை அறிவித்து விட்டார் மோடி.
 
அரசு நிர்வாக முறையில் டெல்லியில் உள்ள மத்திய செயலகத்தில் குறித்த நேரத்திற்கு அனைத்து ஊழியர்கள் மட்டுமின்றி, அமைச்சர்களும் வர வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக தானே முன்கூட்டியே அலுவலகத்தில் வந்து அமர்ந்து விடுகிறார் மோடி. காலை எட்டரை மணி முதலே மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கி விடுகின்றன. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னேற்றம். வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் எண்ணற்ற தேவையில்லாத சட்டங்களை நீக்குவோம் என்றும் அறிவித்து விட்டார். ஒவ்வொரு துறையும் எந்தெந்த சட்டங்களை நீக்கலாம் என்று பரிந்துரை செய்யும்படியும் கூறியிருக்கிறார். அதையெல்லாம் விட “கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஒருவரின் பல்வேறு சான்றிதழ்களுக்கு நோட்டரி சர்டிபிகேட் வாங்க வேண்டியதில்லை” என்று அறிவித்து இருக்கிறார். “என் சான்றிதழ் சரியானது” என்று சம்பந்தப்பட்டவரே சர்டிபிகேட் கொடுக்கட்டும் என்ற “செல்ப் வெரிபிகேஷன்” முறையைக் கொண்டு வர பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார்.
 
நிர்வாக முறையில் செய்யப்பட்டுள்ள இந்த விஷயங்கள் புதியவை. அரசு நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வலிமை மிக்கவை. அதே நேரத்தில் அண்டை நாடுகளுடனான உறவில் புதிய ஆளுமையை ஏற்படுத்தும் விதத்தில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விஷயத்தில் கூட முன்பெல்லாம் “கைதானவர்கள் விடுதலை ஆவதற்கு நாள் பிடிக்கும். ஆனால் இப்போது கைதானவர்கள் உடனுக்குடன் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று தமிழக மீன் துறை அதிகாரிகள் மத்தியிலேயே பேச்சு எழுந்திருக்கிறது. மோடி அரசால் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற தோற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது இந்த முப்பது நாள் ஆட்சி.
 
ஊழல் ஒழிப்பு என்பது மோடி முன் வைத்த முதல் குரல். பாராளுமன்றக் கூட்டத்தில் பேசிய மோடி, “எம்.பி.க்களின் மீதுள்ள ஊழல் வழக்குகளை ஒரு வருடத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். ஊழல் அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இது என்றாலும், அதில் நீதிமன்றங்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதால் எந்த அளவிற்கு சாத்தியப்படப் போகிறது என்பது தெரியவில்லை. “கருப்புப் பணத்தை”க் கொண்டு வர சிறப்பு விசாரணைக்குழு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஷா  தலைமையில் நியமிக்கப்பட்டது. இப்படியொரு அனைத்து துறைகளும் அடங்கிய. விசாரணைக்குழு அமைக்கப்பட்டது என்றாலும், சுவிட்ஸர்லாந்தில் இருந்து கூட எந்தத் தகவலும் உடனடியாக கிடைக்காது என்று வரும் தகவல்கள் சற்று ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருக்கிறது. “கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவோம்” என்ற மோடியின் முழக்கத்திற்கு இது சற்று சவாலான பணிதான்.
 
“நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம்” என்பது பா.ஜ.க.வின் இன்னொரு முழக்கம். அதற்காகவே நிதியமைச்சர் பொறுப்பு அருண்ஜேட்லியிடம் கொடுக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அவரை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்ரமண்யம்சுவாமி கோரிக்கை வைத்துள்ளார். “தான் நினைத்ததைச் சாதிக்காமல் விடமாட்டார்” என்ற பெயர் பெற்றவர் டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி, அதனால் கவர்னர் ரகுராம் ராஜன் தொடர்ந்து நீடிப்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் ரிசர்வ் பாங்கின் கவர்னரை அழைத்து பேசி விட்டார்கள். ஆனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதுதான் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்  பட்டியல் வெளியே வரும். பொருளாதார விஷயங்களில் மோடியின் அரசு ஏற்படுத்தும் சாதனை மட்டுமே அது வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அர்தத்தைக் கொடுக்கும். பலமான எதிர்கட்சியோ, தொல்லை கொடுக்கும் கூட்டணிக் கட்சிகளோ இல்லாத நிலையில், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய மிகப்பெரிய சவாலுக்கு இனி வரும் பட்ஜெட்டில்தான் அறிவிப்புகள் வெளிவரும். அதற்கும் முன்பே ரயில் கட்டணத்தை 14 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியது மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய இமேஜ் சிக்கலை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் இது போன்ற விலை உயர்வை, கட்டண உயர்வை கடுமையாக குறை கூறியதுதான் பா.ஜ.க. ஏன் பிரதமர் மோடியே கூட இதைக் குறை கூறியிருக்கிறார்.
 
அடுத்து “அரசியல் சட்ட அமைப்புகளுக்கு உரிய மரியாதை, கௌரவம் கொடுக்கப்படும்” என்பது பா.ஜ.க.வின் தேர்தல் முழக்கம். குறிப்பாக அந்த அமைப்புகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்பது பா.ஜ.க.வின் கருத்து. அதுவேதான் மோடியின் எண்ணமும் கூட. ஆனால் மோடி தலைமையிலான அரசு அமைந்தவுடன் இரு விஷயங்களில் அந்த முழக்கத்திற்கு வலு சேர்க்கும் நிகழ்வுகள் நடைபெறவில்லை. முதல் விஷயம் மாநில கவர்னர்கள் மாற்றம் தொடர்புடையது. மாநில கவர்னர்களின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்றாலும், குடியரசுத் தலைவரின் விருப்பம் (Pleasure of the President) இருக்கும் வரைதான் பதவியில் நீடிப்பார்கள் என்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டளை.  2004-ம் வருடம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றவுடன் அதற்கு முன்பு இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நியமித்த நான்கு கவர்னர்களை நீக்கியது. அதை எதிர்த்து அப்போது பா.ஜ.க.வின் எம்.பி. பி.பி.சிங்கால்  பொது நல வழக்குத் தொடர்ந்தார். அதில், “கவர்னர்களை இப்படி மாற்றக் கூடாது. ஐந்தாண்டு பதவிக்காலத்திற்குள் நீக்குவதாக இருந்தால், அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்த பதிலைப் பெற்று அதன் பிறகுதான் நீக்கம் குறித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று வாதிட்டார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “கவர்னர்கள் குடியரசுத் தலைவரின் விருப்ப காலத்தில் பதவியிலிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் ஐந்து வருட காலம் முடிவதற்குள் குடியரசுத் தலைவர் தனது விருப்பத்தை விலக்கிக் கொள்ளலாம். (Withdrawing the Pleasure). அப்படி பதவிக் காலத்திற்கு முன்பு கவர்னரை நீக்க, விளக்கம் கேட்டு நோட்டீஸ் (Show cause notice) அனுப்பவும் தேவையில்லை. ஆனால் நீக்கத்திற்கான காரணங்களை கோப்பில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கவர்னர்கள் யாராவது நீதிமன்றத்தை நாடினால் அதுபற்றி பரிசீலிக்கும் உரிமை (limited judicial review) உச்சநீதிமன்றத்திற்கு உண்டு” என்று தீர்ப்பளித்தது. அது மட்டுமின்றி, “ஒரு ஆட்சி மாறியவுடன் அந்தப் புதிய ஆட்சியின் கொள்கைகளோடு கவர்னர் ஒத்துப் போக மாட்டார் என்று காரணம் கூறி கவர்னர்களை நீக்கக் கூடாது” என்றும் தடை விதித்தது. இந்த வழக்கை போட்டது பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர். கவர்னர்களை கண்டபடி மாற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தது பி.ஜே.பி. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்கனவே காங்கிரஸ் நியமித்த கவர்னர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டு, பல கவர்னர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள். இது பா.ஜ.க.விற்கு முப்பது நாளில் ஏற்பட்ட ஒரு சறுக்கல்.
 
அதே மாதிரி உச்சநீதிமன்றத்தின் காலேஜியம் (தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழு) நான்கு பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. காங்கிரஸ் அரசு இருந்த போதே இந்த பரிந்துரயைச் செய்தார் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா. அவர்களில் சீனியர் வழக்கறிஞரும்,  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அடிஷனல் சொலிஸிட்டர் ஜெனரலாகவும் இருந்த கோபால் சுப்ரமண்யத்தின் பெயரை மட்டும் தனியாக பிரித்து வைத்து விட்டு, மீதியுள்ள மூன்று பேரை மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. குஜராத் “சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு” போன்றவற்றில் “அமிக்கஸ் க்யூரியாக” செயல்பட்டவர் இந்த கோபால் சுப்ரமண்யம் என்பதே அதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், சி.பி. ஐ. மற்றும் ஐ.பி. போன்ற அமைப்புகள் கொடுத்த அறிக்கையின் காரணமாக அவர் தொடர்பான பரிந்துரை தவிர்க்கப்பட்டது என்று வெளிவந்துள்ள செய்திகளும், அதைத் தொடர்ந்து கோபால் சுப்ரமண்யம் நீண்டதொரு கடிதத்தை தலைமை நீதிபதி ஆர்.எம்,லோதாவிற்கு எழுதி, “நான் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக விரும்ப வில்லை. ஆகவே நான் ஏற்கனவே அப்படி விருப்பம் தெரிவித்து கொடுத்த ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறியது எல்லாம் மோடியின் முப்பது நாள் அரசாங்கத்திற்கு மேலுமொரு இமேஜ் ப்ராப்ளமாக அமைந்திருக்கிறது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடாசலைய்யா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் போன்றோரே இதைக் கண்டிக்கும் சூழ்நிலை இந்த முப்பது நாள் ஆட்சியில் உருவாகாமல் தவிர்த்திருக்கலாம் என்பது பா.ஜ.க.விற்குள் ஒரு சாராரின் கருத்தாக இருக்கிறது.
 
இந்நிலையில் நாடாளுமன்றம் வருகின்ற ஜூலை மாதத்தில் முதல் வாரத்தில் கூடுகிறது. இந்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதற்கு முன்பு ஜூன் 30-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா வந்த பிரதமர் நரேந்திரமோடி பி.எஸ்.எல்.வி-சி 23 ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட்டார். அதற்கு முன்பு பா.ஜ.க. எம்.பி.க்களில் முதல் முறையாக வெற்றி பெற்ற வந்தவர்களை அழைத்து ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஹரியானாவில் கருத்தரங்கம் நடத்தியிருக்கிறார். “நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் மட்டுமல்ல. வெளியேயும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும், அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 30 நாள் ஆட்சி முடிந்ததும் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, “மற்ற பிரதமர்களுக்குக் கொடுக்கப்பட்ட தேனிலவு காலம் தனக்கு வழங்கப்படவில்லை. ஆனாலும் மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் முழுக் கவனம் செலுத்துவேன்.” என்று தெளிவுபடக் கூறியிருக்கிறார்.
 
இதெல்லாம் ஒரு புறமிருந்தாலும், காங்கிரஸுக்கு எதிர்கட்சி அந்தஸ்து வழங்கப் போகிறாரா மோடி என்பதில்தான் அனைவரின் கவனமும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களில் பத்து சதவீத எம்.பி.க்களை காங்கிரஸ் பெறவில்லை. அப்படி 10 சதவீத எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சிக்குத்தான் எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பது நாடாளுமன்ற விதி என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. “நாட்டின் வளர்ச்சியில் அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் பங்கு இருக்கிறது” என்று கூறியிருக்கும் மோடி, “நான் எண்ணிக்கையில் அடிப்படையில் அரசை நடத்த விரும்பவில்லை” என்பதை பிரகடனப்படுத்தியுள்ளார். அதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இருக்கும் மோடிக்கு ராஜ்ய சபையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மெஜாரிட்டி இல்லை என்பதுதான் காரணம். இந்த மெஜாரிட்டி கிடைக்க காங்கிரசுடன் கருத்தொற்றுமை உருவாக்குதுதான் பிரதமர் மோடிக்கு சிறந்த வழி என்ற எண்ணம் நிலவுகிறது. அந்த நோக்கில் அவர் செயல்பட்டால் “பாராளுமன்றம் என்பது ஆளுங்கட்சியும். எதிர்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டிய இடம். ஆகவே காங்கிரஸுக்கு உரிய அந்தஸ்துடன் கூடிய எதிர்கட்சி வாய்ப்பை கொடுக்கிறேன்” என்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளலாம். அப்படி நடந்து கொண்டால், காங்கிரஸுக்கும். பா.ஜ.க.வுக்கும் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அது இந்திய திருநாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், முக்கிய மசோதாக்கள் போன்றவற்றில் பிரதமர் மோடி அரசாங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். அப்படியில்லாமல், காங்கிரஸுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டால், மீண்டும் நாடாளுமன்றத்திலும், ராஜ்ய சபையிலும் காங்கிரஸுக்கும், பா.ஜ.க.விற்கும் முட்டல் மோதல் அரசியல் ஆரம்பிக்கும். அது இந்தியாவிற்கு சிறப்புச் சேர்க்கும் விதத்தில் அமையாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .