2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உதவிக்கு வரும் புலிச்சவடால்

Thipaan   / 2014 ஒக்டோபர் 21 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

புலிகளின் மீள் வருகை பற்றிய அறிவிப்பை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அண்மைய நாட்களில் பலமாக முன்வைக்கிறதோ?, என்று சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமக்கென இராஜ்ஜியத்தை கட்டமைத்து ஆளுகை செலுத்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியுடன், இலங்கை அரச படைகளினால் தோற்கடிக்கப்பட்டு முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற வெற்றிச் செய்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்போது நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்தச் செய்தி, சிங்களப் பெரும்பான்மை மக்களின் வெற்றிக் கோஷங்களை பெரும் விழாக்களாக மாற்றியது. அந்த வெற்றிக் கோஷங்களும் வெற்றி விழாக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர் சுமார் 4 ஆண்டுகளை நாடும், நாட்டு மக்களும் கடந்து வந்துவிட்டார்கள். அதற்குள் பல தேர்தல்களையும் சர்வதேச அரசியல் மாற்றங்களையும் இலங்கை மீதான அழுத்தங்களையும் விசாரணைகளையும் பார்த்தாகி விட்டது. இந்த நிலையில் தான், மறக்கப்பட்ட புலிகளை நினைவுக்கு கொண்டு வந்து அருவமற்ற நிலையில் உலாவ விடுவதற்கான தேவை பல தரப்பினருக்கும் ஏற்பட்டது. அதில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் என்ற தரப்பு இல்லை.

ஒட்டு மொத்தமாக அமிழ்த்தப்பட்டிருந்த தனி ஈழம் மற்றும் புலிகள் எனும் நாமங்கள், தமது அதிகாரங்களை தக்க வைப்பதற்கான ஆதாரங்களாக ஆதிக்க சக்திகளால்  மெல்ல மெல்ல மேற்பரப்புக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன. அது, நீர்க்குமிழிகள் போன்றவைதான். ஆனால், அதிகமான நீர்க்குமிழிகளை பெரும் அஸ்திரம் போல முன்னிறுத்துகிறார்கள்.

அப்படியொரு நீர்க்குமிழிதான் அண்மையில் லக்ஸம்பேர்க்கில் வெளிப்பட்டது. அது, சடுதியாக உடையக் கூடியதுதான். ஆனால், அதனை அப்படியே காப்பாற்றி இலங்கைக்குள் எடுத்து வந்து சிங்கள மக்களை முட்டாள்களாக்க முனைகிறார்கள்.

அல்லது ஊடகங்களினூடு புலிப் பூச்சாண்டி பற்றிய சவடால்களை கட்டமைக்கிறார்கள். அதை, அரசாங்கமும் அதன் சார்ப்புத் தளங்களுமே  அதிகமாக மேற்கொள்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடந்த வாரம் இரத்து செய்து தீர்ப்பளித்தது. குறித்த தீர்ப்பு இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவித கவனத்தையும் அதீதமாகப் பெற்றிருக்கவில்லை.

அதையொரு செய்தி என்கிற அளவிலேயே அவர்கள் கடந்து விட்டார்கள்.  ஆனால், ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தன.

இன்னொரு பக்கம் இந்த விடயத்தை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தன்னுடைய தேர்தல் வெற்றிகளுக்கான சூத்திரமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது.

குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்போடு சம்பந்தப்படுத்துகிறது. அதுவும், அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னணியில் ரணிலினதும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினதும் கூட்டுச்சதி இருப்பதாக முன்னிறுத்துகிறது.

கடந்த சில நாட்களாக ரணில் விக்ரமசிங்க மீது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மீதான இரத்துக்கும் இலங்கையிலிருந்து மீன் இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைக்க தீர்மானித்ததற்கும் ரணில் விக்ரமசிங்கவே காரணம் என்கிற அளவுக்கு அந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை அரசியலில் வசைபாடல்களும் தூற்றுதல்களும் அடாவடிகளும் இயல்பானவை. அவற்றின் உண்மையான அர்த்தம் உணர்ந்து கொள்ளப்படுவதில்லை. அவற்றை அதிகார அரசியலின் அடிப்படைக் குணவியல்பு போலவே கருதுகிறார்கள். அதுதான், ரணில் மீதான குற்றச்சாட்டுக்களில் வெளிப்பட்டிருக்கிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என்ற நிலை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அவரை புலியாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்படுவது இயல்பானது.

ரணிலை, புலியாக்கி சிங்கள மக்களிடம் முன்னிறுத்தினால், வாக்குகளை தாம் அள்ளிக் கொள்ளலாம் என்பது வெளிப்படை எண்ணம். இந்தக் குற்றச்சாட்டுக்களின் பின்னாலுள்ள உண்மைத் தன்மைகள் குறித்து சிங்கள மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் தான். எனினும், சிங்கள மக்கள் இவ்வாறான வடிவமைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நம்பி வாக்குகளை அளித்த வரலாறுகளும் உண்டு. அதை நிராகரிக்கவும் முடியாது.

மறுபுறத்தில், தமிழ் மக்களிடம் புலிகள் பற்றி முன்வைப்புக்களை யாரும் முன்வைக்கவில்லை. அதை யார் செய்தாலும் அது வெற்றியும் அளிக்காது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையில் இல்லாத நிலையில், தடை நீக்கம் என்பது பலன்கள் எதனையும் செய்துவிடாது என்பதை தமிழ் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக, இறுதி மோதல்களின் பின், தமிழ் மக்கள் அதீத உணர்ச்சியூட்டும் அரசியலின் பக்கம் செல்வதில்லை. வேறு வழியின்றி தமது போராட்டத்தின் கூறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்வைக்கின்றார்கள். இலங்கை பெரும்பான்மை அரசாங்கத்தை மறுதலிக்கின்றார்கள். மற்றப்படி, யதார்த்த நிலை தொடர்பிலான தெளிவோடு இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இதே நிலைதான் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையானோரிடமும் உண்டு. ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மூர்க்கத் தனத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம், அவர்கள் வாழும் சூழலில் இருப்பதால் அதனைச் செய்கின்றார்கள்.

குறிப்பிட்ட தொகையினருக்கு இலங்கையில் மீண்டும் போர் மேகங்கள் சூழவேண்டும் என்கிற கனவு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது, ரொம்பவும் சொற்பத் தொகையானது.

இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை பெரும் அச்சுறுத்தலாக அல்லது போராட்டத்தை தோற்றுவிக்கும் வலுவுள்ளவர்களாக கருதும் அளவுக்கு அது இப்போது சக்தி வாய்ந்தது அல்ல.

ஏனெனில், அவர்களின் கொடைகளும் அதற்கான அர்ப்பணிப்பும் கூட பயனின்றி போய்விட்டது. ஐரோப்பிய, அமெரிக்க, தென்கிழக்காசிய வங்கிகளில் அவர்களின் பெரும் கொடைகள் இருக்கின்றன.

அவற்றை எதிர்காலத்தில் யாராவது தனிநபர்கள் அல்லது சில குழுக்கள் பயன்படுத்தும் சூழல் உருவாகலாம். அது, தமிழ் மக்களுக்கும் முன்னர் கண்ட தனி ஈழத்துக்கான கனவுக்கு வலுச் சேர்த்துவிடாது.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை இலங்கையிலுள்ள தமிழ் மக்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக பிரித்துவிட வேண்டும் என்கிற நிகழ்ச்சி நிரல்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றதோ என்றும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனெனில், வட பகுதிகளுக்கு வெளிநாட்டவர்கள் செல்ல வேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி வேண்டும் என்று கட்டுப்பாடுகளை அரசாங்கம் மீண்டும் கொண்டுவந்திருக்கிறது.

வட பகுதிகளுக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் எனும் பதத்தில், 90 சதவீதமான அளவு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினரையே குறிக்கும். இதனைக் கருத்திற்; கொள்ளும் போது, மனதளவில் பெரும் அசௌகரியத்தை, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடம் அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் என்று கருத முடியும்.

மோதல்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதார முன்னேற்றங்கள் தொடர்பில் எதிர்பார்த்திருக்கும் மக்களையும் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் பாதிக்கும். ஏனெனில், உறவினர்கள், உதவியாளர்களின் கொடைகளையும் உதவிகளையும் மிகுந்த அளவில் கட்டுக்குள் கொண்டு வரும்.
மோதல்களுக்குள் இருந்து மீண்டுவரும் சமூகங்கள் பரஸ்பரம் நம்பிக்கை கொள்ள வேண்டிய தருணம் இது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடுகள் பதற்றமான சூழ்நிலைகளையே தொடர்ந்தும் ஏற்படுத்தும். இதனால், நாட்டில் மீண்டும் மீண்டும் அழிவுகளும், அசௌகரியங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களுமே அதிகம்.

இன நல்லிணக்கம் பற்றி தொடர்ந்து போதித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு இது நல்லதல்ல.  அதுபோக, கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து இவற்றை உணரத் தவறுதல் பெரும் மடைமையாகும். அரசாங்கம் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

யாழ்தேவி அபிவிருத்திச் செய்தியை அறிவித்துக் கொண்டு வடக்கு வருவதால், மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் நம்பினால் அது ரொம்பவும் அப்பாவித்தனமானது.

ஏனெனில், யாழ்தேவி யாழ்ப்பாணம் வந்து கொண்டிருக்கும் தருணத்தில் தான், புதிய கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதித்திருக்கிறது.

அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் தேர்தல்களை இலக்கு வைத்து கட்டமைக்கும் பல விடயங்கள் மக்களையே ரொம்பவும் பாதித்திருக்கின்றன.

அதுதான், மீண்டும் இங்கே தலை தூக்குகின்றது. மதவாத அரசியல் பெரிதாக எடுபடாத தருணத்திலேயே, மீண்டும் இனவாத அரசியல் முன்மொழியப்படுகின்றது. அதுதான், புலியும் ஈழமும் அரசியல் பேச்சாகி கிடக்கின்றது.

தமிழ் மக்கள் பெரும் வலிகளைப் பெற்றுக் கொண்டு உலக யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு விட்ட நிலையில், சிங்கள மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. சிங்கள மக்கள் தேர்தல் கால புலிப் பூச்சாண்டிகளையும் இல்லாத ஈழப் பிரிவை கோஷங்களையும் கண்டு அஞ்சக் கூடாது. அது, வாக்குகளுக்;காக வரையப்படுகின்றன.

தமது அப்பாவித் தனங்களைக்  கழைத்து சிங்களப் பெரும்பான்மை மக்கள் விழித்துக் கொண்டால் நாடு முன்னோக்கி பயணிக்கும்.
இல்லையென்றால், அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் மாறி மாறி நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியொன்றும் இல்லை.

அது, இயல்பான சில பேச்சுக்களின் மூலமே இணக்கப்பாட்டுக்கு வரக் கூடியவைதான். ஆனால், எம் சார்பில் அரசியல்வாதிகளை பேசுவதற்கும் பிணக்குத் தீர்ப்பதற்கும் முன்னிறுத்தும் போதுதான் பிரச்சினையின் அளவை பெரியதாக்கி எம்மை வேட்டையாடி விடுகிறார்கள்.

எமது பிரச்சினைகளை சகோதர மனநிலையுடன் அணுக வேண்டிய அவசியம் இருக்கின்றது. அது, சமூகங்களுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு புரிந்துணர்வோடு வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X