2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கெஜ்ரிவாலுடன் மோதும் பா.ஜ.க.

Thipaan   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைநகர் டெல்லியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் யுத்த களமாக மாறியிருக்கிறது. 70 எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்யும் இந்த தேர்தல் வருகிற பெப்ரவரி 7ஆம் திகதியன்று வாக்குப் பதிவு. ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை 11,763 வாக்குச் சாவடிகளில் செலுத்த இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டையும் சரி, புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியலும் சரி நூற்றுக்கு நூறு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டெல்லித் தேர்தலில் 'கௌரவப் போர்' என்பதற்கு அடையாளமாக அந்தந்தக் கட்சித் தலைவர்கள் அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெப்ரவரி 7ஆம் திகதிவாக்குப் பதிவு என்பதால், அதற்கு முந்தைய இந்த நாட்கள் டெல்லி அதன் வழக்கமான குளிரையும் மிஞ்சி அரசியல் தலைவர்களுக்கு அனல் அடிக்கும் நகரமாக மாறியிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை டெல்லி தேர்தல் வராமல் இருந்தால் நல்லது என்றே நினைத்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த அக்கட்சிக்கு ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் சவாலாகத் தெரிந்தார். அதனால் முதலில் வேறு கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைத்து விடலாமா என்ற யோசனையில் சிறிது காலம் டெல்லி சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்திருந்தது.

அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலோ 'தேர்தலை சந்திக்க பா.ஜ.க. பயப்படுகிறது' என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்றார். இதில் சற்று தயங்கிய பா.ஜ.க. பொறுமை காத்தது.

இதற்கிடையில் உச்சநீதிமன்றம், அரசு அமைப்பதற்கான முயற்சியை டெல்லி லெப்டினென்ட் கவர்னர் எடுக்க வேண்டும் என்று உத்திரவிட, அதற்கான முயற்சி நடைபெற்ற போதும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க நினைத்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பெரிய அளவில் யாரும் பா.ஜ.க. பக்கம் திரும்பி வரவில்லை.

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை பிளவு படுத்தி, அதன் மூலம் ஆட்சி அமைத்தால் தங்கள் பெயர் கெட்டு விடும் என்று பா.ஜ.க.வினர் பதற்றப்பட்டார்கள். அந்த முயற்சியும் கைவிடப் பட்டதால் இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியானது.
தேர்தல் பிரச்சாரத்தில் முதலில் களத்திற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி 'சட்டத்தை மதிக்காதவர்கள் போக வேண்டிய இடம் வேறு' என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்தை கிண்டல் அடித்தார்.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலோ வீடு வீடாக செய்யும் பிரச்சாரம் பா.ஜ.க.வை திணறடித்துள்ளது. அவர் திடீரென்று 'நானும் பணியா. எனக்கு வியாபாரம் தெரியும்' என்று பிரசாரத்தில் இறங்கினார். இதில் பணியா என்றால் டெல்லியில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அதிக செல்வாக்கு உள்ள வாக்கு வங்கிக்குச் சொந்தக்காரர்கள்.

இந்த வாக்குகள் பா.ஜ.க.வின் அடிப்படை சொத்துப் போல் இருந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தப் பேச்சு பா.ஜ.க.வை மிரட்டி விட்டது. அதனால் மெதுவாக 'மோடிக்கும் கெஜ்ரிவாலுக்கும்' என்று இருந்த போட்டி விலகிக் கொண்டது.

 'தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் மோடியை முன்னிறுத்தக் கூடாது' என்று கருதிய பா.ஜ.க. உடனடியாக ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கிரன் பேடியை அவசர அவசரமாக கட்சியில் சேர்த்தது. அது மட்டுமின்றி, டெல்லி பா.ஜ.க.வின் எதிர்ப்பையும் மீறி அவரை முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவித்தது.

அன்று முதல் டெல்லி தேர்தல் களம் 'கிரன்பேடிக்கும் அரவிந்த்
கெஜ்ரிவாலுக்கும்' இடையில் ஆன போட்டியாக மாறியிருக்கிறது.

கிரன்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரே ஆகிய மூவரும் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது 'ஊழலுக்கு எதிரான போராட்டத்தை' பெரிய அளவில் டெல்லியில் நடத்தி தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தவர்கள்.

மாணவர்களை சாலைக்கு அழைத்து மறியல் நடத்தியவர்கள். சோனியா மற்றும் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் இல்லத்தைக் கூட மறிக்கச் சென்றவர்கள்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த 'நிருபையா' கற்பழிப்புச் சம்வத்தை வைத்து டெல்லியை போராட்டக் களமாக மாற்றி, அகில இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே இந்த கற்பழிப்புச் சம்பவத்தின் கொடூரத்தை உணரச் செய்தவர்கள்.

அதை போல் 'லோக்பால் அமைப்பு கொண்டு வர வேண்டும்' 'கறுப்புப் பணத்தைக் கொண்டு வர வேண்டும்' 'ஊழலை ஒழிக்க வேண்டும்' என்ற மூன்று முக்கிய கோஷங்களை முன் வைத்து டெல்லியைக் கலக்கினார்கள்.

அந்த மூவர் படையில் பிறகு பாபா ராம்தேவ் சேர்ந்தார். அவர் வேறு மாதிரியாக மறியல், போராட்டம் நடத்தி பொலிஸார் தடியடி பிரயோகம் செய்து கலைக்கும் அளவுக்கு பதற்றம் பற்றிக் கொண்ட நேரம் அது.

ஆக மொத்தம் ஊழல் எதிர்ப்பு அணியில் அப்போது டெல்லியைக் கலக்கியவர்கள் நால்வர். அவர்களில் இருவர்தான் இப்போது டெல்லிக்கு முதலமைச்சராக களத்தில் நிற்கிறார்கள்.

ஒருவர் கிரன்பேடி. இன்னொருவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கிரன்பேடி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க.விற்குள் பெரும் உள்குத்து வேலைகள் துவங்கி விட்டன. அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா எத்தனை கூட்டங்கள் போட்டு சமாதானம் செய்தாலும், டெல்லி பா.ஜ.க.வினர் சமாதானம் ஆகவில்லை.

'முதலமைச்சர் வேட்பாளரை திடீரென்று இறக்குமதி செய்வதா' என்று கேள்வி எழுப்பி, போர்க்கொடி தூக்கி நிற்கிறார்கள். அவர்கள், தங்கள் கசப்புகளை மறந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மறுத்து வருகிறார்கள். இதனால் வேறு வழியின்றி பா.ஜ.க. அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது தனி மனிதனாக களத்தில் நிற்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை சமாளிக்க, 200க்கும் மேற்பட்ட பா.ஜ.க. எம்.பி.க்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துகிறது. 250க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தப் போகிறது. நாட்டின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் தேர்தல் பிரசாரக் குழு அமைத்துள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒரு பக்கம் வைத்து விட்டு இன்னொரு பக்கம் டெல்லித் தேர்தலை பிரதானமாக முன்னிறுத்தி அவர் தலைமையில் வியூகங்கள் போடப்படுகின்றன.

எல்லாவற்றையும் விட 'அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தினமும் ஐந்து கேள்விகள்' என்று பா.ஜ.க.வின் ஒவ்வொரு தலைவராக பத்திரிகையாளர்களை சந்தித்துக் கேட்கிறார்கள்.

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்கும் போதுதான் எந்தக் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சியின் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடைத் தேர்தல் நடக்கும் தொகுதியில் முகாமிடுவார்கள்.

இப்போதைக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இப்படித்தான் பெப்ரவரி 13ஆம் திகதி நடக்கப் போகும் திருவரங்கம் சட்டமன்றத் தேர்தலுக்கு குவிந்திருக்கிறார்கள். அதே மாதிரி இடைத் தேர்தல் யுக்தியை டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது கட்டமாக பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார். அவரும் இந்த முறை 'ஆட்சி செய்யாமல் 49 ஓடியவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்' 'பெற்ரோல், டீசல் விலை குறைவிற்கு எனக்குள்ள அதிர்ஷ்டம் என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

அப்படி அதிர்ஷ்டம் உள்ளவருக்கு நீங்கள் வாக்களிப்பதுதானே சரியாக இருக்கும்' என்று தன்னை முன்னிறுத்தி இரண்டாவது ரவுண்டில் வாக்கு கேட்டு வருகிறார். அதே போல் 'டெல்லி மாநில அரசும், மத்தியில் உள்ள அரசும் ஒரே கட்சி அரசாக இருந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும்' என்று அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த இந்திரா காந்தி எடுத்து வைத்த பிரச்சாரத்தை மோடியும், பா.ஜ.க.வினரும் எடுத்து வைக்கிறார்கள்.

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலோ இதற்கெல்லாம் சளைக்கவில்லை. '5 கேள்விகள் என்ன, 50 கேள்விகள், 100 கேள்விகள் கூடச் சொல்லுங்கள் பதில் சொல்கிறேன்' என்று ஆணித்தரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா வந்த போது டெல்லி முழுக்க 15,000க்;கும் மேற்பட்ட கண்காணிப்புக் கமராக்கள் வைக்கப்பட்டன. 'ஒபாமாவுக்;கு வைத்தவர்கள் டெல்லி பெண்களின் பாதுகாப்புக்;கு வைத்திருக்கலாம் அல்லவா.

குறைந்த பட்சம் அந்த கமராக்களை அப்புறப்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா' என்று கேள்வி எழுப்பியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், 'பெண்களை நான்கு சுவருக்குள் அடைத்து வைத்து பாதுகாப்பு வழங்க நினைக்கிறது பா.ஜ.க. ஆனால், நானோ அவர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்து அவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த விரும்புகிறேன்' என்று பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறார். அது மட்டுமின்றி, 'டெல்லி மாநில அரசு வேறு கட்சியுடையதாகவும், மத்திய அரசு வேறு கட்சியுடையதாகவும் இருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சிக்கு நல்லது' என்று அரவிந்த் கெஜ்ரிவால் குரல் கொடுத்து வருகிறார்.

பா.ஜ.க. மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்துக்கு இடையில் ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியும் தேர்தல் வேலைகள் செய்வது போல் காட்டிக் கொள்கிறது. அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சி இரண்டையும் தாக்குகிறார்.

ஆனால் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தோ, 'தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கும்' என்று அறிக்கை விடுத்தார். அதை பா.ஜ.க. பயன்படுத்த முயற்சித்தாலும் பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருக்கும் அஜஸ் மாக்கன் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஆனாலும் டெல்லித் தேர்தல் போட்டி என்பது பா.ஜ.க.வுக்கும், ஆம் ஆத்மிக் கட்சிக்கும் இடையில்தான் நிலவுகிறது.
1967களில் எப்படி தமிழகத்தில் காங்கிரஸுக்கு மாற்றாக திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதோ அதே மாதிரி டெல்லி அரசியலில் காங்கிரஸுக்கு மாற்றாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக் கட்சி உருவாகி வருகிறது. காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கருதுபவர்கள் கூட இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாக்களிப்பார்கள் என்றே தெரிகிறது.

ஏனென்றால் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் பலம் உள்ள கட்சியாக இன்றைக்கு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தான் இருக்கிறது என்பது டெல்லி வாக்காளர்களுக்குப் புரிந்திருக்கிறது.

இதனால்தான் பா.ஜ.க. தன் வாக்கில் கூட சேதாரம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கிரன் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அக்னிப் பரீட்சையில் இறங்கியிருக்கிறது. 'யுடட ழரவ றயச' என்று சொல்வார்கள். அது போல் தன்னிடம் உள்ள தரைப்படை, விமானப்படை, கப்பற்படை போன்ற முப்படைகளையும் ஒரு போரில் வெற்றி பெற நினைப்பவர்கள் பயன்படுத்துவது போல், பா.ஜ.க. தன்னிடமுள்ள அனைத்துப் பலத்தையும் டெல்லியில் இறக்கியிருக்கிறது.

இந்த பலத்தின் விளைவாக அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடிக்கப்படுவாரா அல்லது அதையும் மீறி அவர் வெற்றி பெறுவாரா என்பதுதான் இப்போது டெல்லி மட்டுமல்ல, அகில இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளின் கவனமும் ஆக இருக்கிறது.

ஏனென்றால் டெல்லி தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திரமோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடிக்கும் சக்தி இருக்கிறதா என்பதை நிரூபிக்கும் தேர்தல் என்றே அனைவரும் கருதுகிறார்கள்.

அடுத்தடுத்து வெற்றிகளை பா.ஜ.க.வுக்கு குவித்துக் கொடுத்துள்ள மோடி டெல்லித் தேர்தலில் மட்டும் முதல்வர் வேட்பாளராக கிரன்பேடியை அறிவித்து, அருண் ஜேட்லியை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்து, 'அரவிந்த் கெஜ்ரிவால் எள கிரன் பேடி' என்று போட்டியை உருவாக்கியிருப்பதுதான் பிரதமர் நரேந்திரமோடி மீதான அந்த சந்தேகத்தை விதைத்துள்ளது.

டெல்லியின் 7வது முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் எட்டாவது முதல்வராக வருவாரா என்பதுதான் இப்போதைய பரபரப்பு! இந்திய வருவாய்த்துறை அதிகாரியாக தேர்வு பெற்று, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு 'ஊழல் எதிர்ப்பு போராட்டவாதியாக' மாறி, 49 நாள் தலைநகர் டெல்லியின் முதலமைச்சராகவும் இருந்து விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். இப்போது 'சிங்கிள் மேன் ஆர்மி' போல் நின்று பிரதமர் நரேந்திரமோடியின் பட்டாளத்தை எதிர்கொள்கிறார்.

வாக்குகள் எண்ணிக்கை நடக்கும் பெப்ரவரி 12ஆம் திகதி தலைநகர் டெல்லி, நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் செய்தி சொல்லும் தேதியாக அமையப் போகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X