2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பள உயர்வை வழங்கக்கூடிய நிலையில் தோட்டக்கம்பனிகள் இல்லை

George   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கூட்டு ஒப்பந்தத்தினால் மலையக பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் எந்தக் காலத்திலும் பாதிக்கப்படவில்லை. பெருந்தோட்டத்துறை பாரிய சவாலை அண்மைக்காலமாக எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் பாரிய சம்பள உயர்வை வழங்கக்கூடிய நிலையில் தோட்டக் கம்பனிகள் இல்லை. 1,000 ரூபாய் சம்பள உயர்வு சாத்தியப்படாத ஒன்று. அதனைப் பெருந்தோட்ட கம்பனிகள் வழங்குவதற்கு எப்போதும் தயாரில்லை.

தேசிய ரீதியில் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க நான் தயார். மலையக மக்களைப் போலவே வட., கிழக்கு மக்களை நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். 2003ஆம் ஆண்டு, முதல் முறையாக  நாடாளுமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினேன்' என பெருந்தோட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான கே.வேலாயுதம் தெரிவித்தார்.

தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போது அவர் இதனை கூறினார். நேர்காணலின் முழுவிவரம் வருமாறு...


கே: இலங்கையில் நல்லாட்சி ஏற்பட்ட பின்னர் மலையகத்தில் ஏற்பட்ட மற்றங்கள் என்ன?

கடந்த ஜனவரி 8ஆம் திகதி இலங்கை அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் புதிய அரசாங்கத்தில் மலையகத்துக்கு முக்கியமான மூன்று அமைச்சு பதவிகள் கிடைத்தன. கல்வி இராஜாங்க அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழிற்றுறை இராஜாங்க அமைச்சு, தோட்ட உட்கமைப்பு அமைச்சு. இந்த மூன்று அமைச்சின் ஊடாக 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பாரியளவு செயற்பாடுகளைச் செய்யமுடிந்தது.

மலையக மக்கள் இந்த நாட்டில் கொத்தடிமைகளாக வாழ்க்கையை ஆரம்பித்து பல்வேறு சிரமங்களுடன் தமக்கான முகவரியின்றி ஓரடியேனும் நிலமின்றி மண்ணுக்காக இன்றும் உழைக்கின்றனர். இந்த மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பசுமை பூமி வேலைத்திட்டத்தில் ஊடாக 7 பேர்ச் காணி வழங்கும் திட்டத்தை பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சர் என்ற ரீதியில் நான் அறிமுகப்படுத்தினேன்.

அதற்கான அமைச்சரவை அங்கிகாரம் முதல் முறையாக கிடைத்தது. ஏப்ரல் 4ஆம் திகதி பண்டாரவளையில் விழா எடுத்து பெருந்தோட்டத்துறை மக்கள் இனி காணிகளற்ற அநாதைகள் அல்ல என்பதை பறைசாற்றினோம்.

குறுகிய காலத்துக்குள் 12 இலட்சம் ரூபாய் செலவில் 300 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் மலையகத்தில் முக்கியமான 22 பாடசாலைகள் இனங்காணப்பட்டு அதில் உயர்தரத்தில் விஞ்ஞான பாடங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அதற்கான ஓரளவு வளங்கள் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சகல வசதிகளும் இந்தப் பாடசாலைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

நுற்றுக்கணக்கான மலையக இளைஞர்கள் இன்று கொழும்பில் கடைகளிலும் பல்வேறு இடங்களிலும் நவீன கூலிகளாக வாழ்கின்றனர். இவர்களுக்கு சரியான தொழிற்பயிற்சி வழங்கப்பட்டவில்லை. எதிர்காலத்தில் தோட்ட இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களைக் கௌரவமாக தொழில் செய்பவர்களாக மாற்றுவது எமது திட்டமாகும்.

கே: தனி வீட்டுத் திட்டத்தை சகல தொழிலாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க எவ்வளவு காலம் செல்லும்?

2 இலட்சத்து 40 ஆயிரம் வீடுகள் என்பது பாரிய சவால். அதற்கு நீண்ட காலம் செல்லலாம். அண்மையில் ஜெனிவாவில் உரையாற்றும்போது, பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்டு அநாதைகளாக கைவிடப்பட்டு செல்லப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு நாங்கள் காணி வழங்கியுள்ளோம். வீடுகளை அமைக்க உங்களது உதவி வேண்டும் என்று குறிப்பிட்டேன். 

கே:கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் மலையக மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதுடன் அரசியல்வாதிகளும் தோட்ட நிர்வாகங்களும் தொழிலாளர்களை சுரண்டுகின்றனர். கூட்டு ஒப்பந்தம் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? மாதாந்த சம்பளம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா?

தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆரம்ப காலத்தில் நாம் எந்தளவு சம்பளம் வாங்கினோம். 5 சத, 10 சத சம்பள உயர்வைப் பெற நாம் அன்றைய காலங்களில் நடத்திய போராட்டங்களை நீங்கள் அறிவீர்கள்.

இது இவ்வாறு இருக்க, 1983ஆம் ஆண்டுதான் முதன் முதலாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபாய்க்கணக்கான சம்பளம் வழங்கப்பட்டது. அதனை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தனித்து நின்று பெற்றுக்கொடுத்தது. அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகின்றேன். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு என தனித் தனியான சம்பளம் வழங்கப்பட்டதை மாற்றி, சம சம்பளம் என்ற நிலையை ஜே.ஆர்.ஜெயவர்தன காலத்தில் ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் பெற்றுக்கொடுத்தது.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களுடைய வாழ்க்கைத்தரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 15 வருடங்களுக்கு முன்புள்ள நிலை இன்று இல்லை. குடும்பத்தில் இரண்டு, மூன்று பேர் வேலை செய்கின்றமையால் கணிசமான சம்பளத்தைப் பெறுகின்றார்கள். ஏனைய துறைகளை விட பெருந்தோட்டத்துறை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். உலகில் எந்தவொரு நாட்டிலும் பெருந்தோட்ட மக்களுக்கு மாதச் சம்பளம் வழங்கியதாக வரலாறு இல்லை.

கே:கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்து, மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து அந்த வரலாற்றை நீங்கள் மாற்றி எழுதலாமே?

வரலாற்றை மாற்ற எமக்கும் ஆசைதான். இருந்தாலும், மாதசம்பள கொள்கைக்கு வருவதற்கு முன்னதாக, எங்களை பக்குவப்படுத்தி நடைமுறைகளுக்கு பழக்கப்படுத்திகொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம். மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கென விடுமுறை போன்ற சில விடயங்களை அணுகுவதற்கு முறைகள் உள்ளன. எனினும் நாம் இந்த அணுகுமுறைகளை இப்போதுகூட எதிலேயும் பின்பற்றுவதில்லை.

பெருந்தோட்டத்துறை பாரிய சவாலை அண்மைகாலமாக எதிர்நோக்கியுள்ளது. கடந்தகாலங்களில் அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட சில மத்திய கிழக்கு நாடுகளுக்கு எங்களது தேயிலையை எற்றுமதி செய்ய முடிவதில்லை. அதனால் இன்று தேயிலையின் விலை 380 ரூபாயாக இருக்கின்றது. இறப்பரின் விலை 120 ரூபாயாக உள்ளது.

இந்த நிலையில் பாரிய சம்பள உயர்வை வழங்கக்கூடிய நிலையில் தோட்டக் கம்பனிகள் இல்லை. இந்தக் கம்பனிகளுக்கு அரசாங்கம் மானியம் வழங்குவதும் இல்லை. இந்த நிலையில்தான் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய முக்கியமான மூன்று தொழிற்சங்கங்கள் கலந்துகொள்கின்றன. 

சம்பள கோரிக்கையை முன்வைக்கின்றபோது மூவரும் இணைந்து ஒரே கோரிக்கையை முன்வைப்பது வழக்கம். ஆனால், இம்முறை இ.தொ.கா தன்னிச்சையாக 1,000 ரூபாய் சம்பள கோரிக்கையை அறிவித்திருந்தார்கள். நாங்கள் அதனை எதிர்த்து அதற்கு புறம்பாக இன்னொன்றை முன்வைக்காது பேச்சுவார்த்தை ஆரம்பித்தோம்.

ஆனால், இந்த சம்பள உயர்வை எக்காலத்திலும் நெருங்க முடியாது என்று 22 கம்பனிகளும் கூறிவந்தன. அப்போது மாற்றுத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு கோரினோம்.  அதில் வாரத்துக்கு 3 நாட்கள் நிரந்தரமான வேலை,  அதற்கு 500 ரூபாய் சம்பளம், மேலதிகமாக பறிக்கின்ற கொழுந்துக்கு  40 ரூபாய் என கம்பனிகள் கூறின. அதனை நான் முழுமையாக எதிர்த்தேன். ஏனெனில் 620 ரூபாய் கிடைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அதனை மாற்றி 500 ரூபாய் சம்பளம் வாங்குவதற்கு நாங்கள் ஒன்றும் மூளை கோளாறு படைத்தவர்கள் கிடையாது.

கே:ஆனால், நீங்கள் கூறும் 620 ரூபாய் நாட்சம்பளம் 19 நாட்கள் வேலைக்குச் சென்றால் மாத்திரமே வழங்கப்படும். அப்படியென்றால் நாட்சம்பள கணக்கு தவறுதானே?

அதற்கு பல காரணங்கள் உள்ளன. எங்களுக்கு பல பொறுப்புக்கள் உள்ளன. தோட்டங்கள் வழங்கும் வேலை நாட்களில் அதிகமாக பெண்கள் மாத்திரமே செல்கின்றனர். ஆண்கள் செல்வது குறைவு. வரவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது. எனினும் கிட்டத்தட்ட 90 வீதமானவர்கள் முழுமையான சம்பளத்தை பெறுகின்றனர் இதற்கு என்னிடம் தகவல்கள் உள்ளன. குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மேலதிக கொடுப்பனவை பெறுவதில்லை என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

1,000 ரூபாயைவிட நாங்கள் குறைத்துக் கேட்டால் எங்களால்தான் 1,000 சம்பளத்தை பெற முடியாமல் போய்விட்டது என இ.தொ.கா சொல்லும். அத்துடன் கூட்டு தொழிற்சங்க பேரம் பேசுகின்ற பண்பாட்டை காத்துகொள்ள வேண்டும் என்பதற்காக நானும் ராமநாதன் போன்றவர்களும் இதற்கு ஒத்துக்கொண்டோம். இறுதி சந்திப்பிலுகூட நான் கலந்துகொள்ளவில்லை.

பின்னர் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிவிட்டார்கள். சம்பந்தப்பட்ட இரண்டு தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசவில்லை. பின்னர் மெதுபணி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது நான் பேசவேண்டிய நிலையேற்பட்டது.  சம்பளப் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை மெதுபணி போராட்டம் தேவையற்றது நாம் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்போம் என்றேன். ஆனால், அவர்கள் மெதுபணியில் மும்முரமானார்கள்.

தோட்ட நிர்வாகம் சம்பளம் வழங்க முடியாது என்று கூறியது. 100 நாட்கள் மெதுபணி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலார்கள் ரூ.6,200 அதிகமாக நட்டமடைந்துள்ளனர்.

10 நாட்கள் வேலை செய்யாததால் மாதாந்த சம்பளம் பாதிக்கப்படும் என்பதால் நான் தோட்ட கம்பனிகளிடத்தில் பேசி இந்த 10 நாட்களை அவர்களது வருடாந்த விடுமுறையில் கழிக்குமாறு கேரிக்கைவிடுத்தேன். அதற்கு அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். பிரதமருடன் கதைத்தபோது தேர்தல் முடிந்ததும் புதிய அரசாங்கம் தலையிட்டு தோட்டக் கம்பனிகளை நடத்த தேவையான நிதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் என்னிடம் கூறினார்.

1,000 ரூபாய் கிடைக்குமா என்று உறுதியாக கூற முடியாது. ஆனால், நியாயமான சம்பள உயர்வை புதிய அரசாங்கத்தில் நாம் பெற்றுக்கொடுப்போம்.

கே:இ.தொ.கா மாத்திரமே சம்பள பேச்சுவார்த்தையின்போது பேசுவதாகவும் ஏனைய தொழிற்சங்கங்கள் தேநீர் பருக மட்டுமே வாய்திறப்பதாகவும் கூறப்பட்டதே?

உண்மையில் யார் தேநீர் அருந்துவதற்கு மாத்திரம் வாய் திறந்தார்கள் என்பது அங்கு வந்திருந்தால் தெரிந்திருக்கும். பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்கங்களும் அழுத்தம் கொடுத்தன. எமது தொழிற்சங்கம் எப்போது தேநீர் குடிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லை. 

கே:ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்டகாலமாக இருக்கின்றீர்கள். தோட்டத் தொழிலாளர் மீதான ஐ.தேகவின் நிலைப்பாடு 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததுக்கும் இப்போது உள்ளதுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? 

ஐ.தே.கட்சியை முதலாளித்துவ கட்சி என்று ஆரம்பத்தில் கூறும் நிலை காணப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்தன, காமினி திஸாநாயக்க காலத்தில்தான் பெருந்தோட்ட துறைக்கான அங்கிகாரம் கிடைத்தது. 1972ஆம் ஆண்டில் நான், புத்திரசிகாமணி ஆகியோர் தொழிற்சங்கத்தில் இணைந்து சங்கத்தை வளர்க்கச் செயற்பட்டோம்.

ஜே.ஆர்.ஜெயவர்தன காலத்தில், சங்கம் பாரிய வளரச்;சியடைந்ததுடன் சர்வதேச ரீதியில் அங்கிகாரம் கிடைத்தது. இன்றைய ஆட்சியில் பெருந்தோட்ட மக்கள் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்களா இருக்கின்றனர். எந்தவொரு அரசியற்கட்சியும் மலையக மக்களைப் புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில்தான் மலையகத்துக்கு பூரணமான கல்வி சுதந்திரம் கிடைத்தது.

40 ஆண்டுகளுக்கு முன்னர் தோட்ட பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு தேசிய கல்வியில் உள்வாங்கப்பட்டன. ரணில் காலத்தில் ஆசிரிய கலாசாலை ஆரம்பிக்கப்பட்டு இளைஞர் அபிவிருத்தி என்பன முன்னெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் டி.எஸ். சேனாநாயக்கவால் பறிக்கப்பட்ட எமது பிரஜா உரிமை, ரணில் காலத்தில் முழுமையாக கிடைத்துள்ளது. ரணில் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கே:ஐ.தே.க ஆட்சியமைத்தால் மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவாக அழுத்தம் கொடுப்பீர்களா?
நிச்சயமாக முதல் கட்டமாக கொத்மலையில் 5 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழக கல்லூரி அமைக்கப்படவுள்ளது. படிப்படியாக தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

பொதுத் தேர்தலில் மலையக மக்களின் பங்கு எவ்வாறு இருக்கும் என்று நினைக்கீர்கள்?
மலையக மக்களின் வாக்குகள் மிக முக்கியமானது இம்முறையும் மலையக மக்களின் வாக்குகள் ஐ.தே.வின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கும்.

கே:மலையகத்தில் புதிதாக உருவான தமிழ் முற்போக்கு கூட்டணி பற்றி?

அதைப்பற்றி இப்போது கூற முடியாது. மூன்று கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இவர்கள் இணைந்து செயற்படுகின்றார்கள். இப்போது விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. எதிர்காலத்தில் இவற்றின் செயற்பாடு குறித்து கூறமுடியும்.

கே:முதலாம் திகதி பசறையில் நீங்கள் ஏற்பாடு செய்த ஐ.தே.க. பிரசார கூட்டத்துக்கு சிறுபான்மையின வேட்பாளர்கள் இருவருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டதாக கூறுப்படுகின்றதே?

இது முற்றுமுழுதாக கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு செய்தி. இந்தக் கூட்டத்துக்கு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. பிரதமர் - திகதி ஒதுக்கியிருந்தார். நாம் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். முதலமைச்சர் உட்பட எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. முதலமைச்சர் உட்பட அனைத்து அரசியலவாதிகளும் தாமகவே வந்திருந்தார்கள். வேட்பாளர்களின் வேலை மக்களுக்கு பின்னால் சென்று வாக்குச் சேகரிப்பது. அதைவிடுத்து வெற்றிலை பாக்கு வைத்து அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் வேட்பாளர்கள் அல்ல.

11 வேட்பாளர்கள் உட்பட அனைவருக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டது. அனைவருக்கும் உரையாற்ற சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. வடிவேல் சுரேஷ், அரவிந்தன் ஆகிய இருவரும் வரவில்லை. முன்னாள் பிரதேசசபை தலைவர் காதர் என்பவரிடம் வடிவேல் சுரேஷ் அலைபேசியில் தொடர்புகொண்டு நாங்கள் வந்தால் பேசக் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் வாருங்கள், யாரையும் வரவேண்டாம் என்று சொல்லவில்லை என்று கூறியுள்ளார். அவர்கள் வரைவில்லை. காலையில் வந்து இருவரும் தமது பதாதைகளை நான் வாங்கிவைத்திருந்த பைப்களில் கட்டினார்கள்.

முதல் நாள் பிரசார மேடை அமைத்த போதும் கூட அந்த பக்கமாக வடிவேல் சுரேஷ் காரில் வந்துசென்றார். அதனை திரும்பி கூட பார்க்கவில்லை. இது பொய்யான செய்தி.

தமிழ் பிரதிநிதித்துவம் வரவேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அவர்கள் என்னிடம் கேட்டிருந்தால் அவர்களுக்காக நான் பிரசாரம் செய்திருப்பேன். அண்மையில் இராதாகிருஷ்ணன், திகாம்பரத்துக்காக நான் பிரசாரம் செய்தேன். கடந்த முறை ரங்காவை தோட்டம் தோட்டமாக அழைத்துச் சென்று  வாக்களிக்க சொன்னேன். அவரது வெற்றியில் எமது பங்களிப்பும் உள்ளது.

கே:தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பேரம்பேசுவதற்கும் தேசிய பட்டியலில் இருந்து அழுத்தம் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஐ.தேகவில் உங்களுடைய பேரம் பேசும் சக்தி எவ்வாறு உள்ளது?

ஐக்கிய தேசியக் கட்சி வேறு, நான் வேறு இல்லை. அவர்களுடன் நான் ஒப்பந்தம் செய்ய முடியாது. எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி. எனக்கு அடையாளத்தை கொடுத்தது ஐ.தே.கவும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும். இந்நிலையில், சொந்த வீட்டில் யாரும் பேரம் பேசுவது கிடையாதே. கஷ்டமோ நஷ்டமோ வெற்றியோ தோல்வியோ ஐ.தேகவுடனேயே இருப்பேன் 47 வருடங்கள் இருந்துவிட்டேன்.

கே:மலையகத்தில் அரசியல் மாற்றத்தின் தேவை பற்றி?

மலையத்தில் நிச்சயமாக மாற்றம் தேவை. அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படித்தவர்கள், புத்திஜீவிகள் அரசியலில் நேரடியாக ஈடுபடும் நிலைய ஏற்படவேண்டும் இன்று சிறியளவில் இது இருந்தாலும் பாரியளவாக இது மாற்றமடைய வேண்டும்.


கே:தேசியப் பட்டியலில் வராமல் தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே?

இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டும், தேசியப் பட்டியல்  வேண்டாம் என பலமுறை கூறினேன்.  ஆனால், கட்சியின் மேலிடம், இத்தனைகாலம் கட்சிக்காக உழைத்துள்ளீர்கள், தேர்தலில் போட்டியிட வேண்டாம், உங்களை தேசியப் பட்டியலில் நாம் கொண்டு வருகின்றோம் என கூறியது. 

கே:எதிர்கால அரசாங்கத்தில்  எவ்வாறான அமைச்சு பதவிகள் கிடைத்தால் மலையக மக்களுக்கு சேவையாற்ற சிறப்பாக இருக்கும் என நினைக்கீன்றீர்கள்?

எந்த அமைச்சு என்பது முக்கியமில்லை, கிடைக்கும் அமைச்சு பதவியை வைத்து இயன்றவரை மக்களுக்கு சேவை செய்வேன். இப்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்கும் நிதி இல்லை அமைச்சரவை அந்தஸ்;தும் இல்லை இருந்தாலும் நினைத்த காரியத்தை  முடித்தேன். எனது முயற்சியை இனி யாரும் முறியடிக்க முடியாது.

கே:தமிழ்த்தேசியத்திலிருந்து மலையகம் விடுபட்டுள்ளதா? வடகிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளுடன் கைகோர்ப்பது பற்றி?

மலையக மக்களை பொறுத்த வரையிலே யாரோடும் குறுகிய வட்டத்தில் இருப்பதை விட பரந்த வட்டத்துக்குள் இருக்கவேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். நாங்கள் இலங்கையர்களாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இந்திய வம்சாவழித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என பார்க்கப்படாது இலங்கையர்கள் என்ற ரீதியில், ஓர் இலங்கையருக்கு என்ன உரிமை இருக்கின்றதோ அனைத்து உரிமைகள் எங்களுக்கும் இருக்க வேண்டும். அதுதான் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வட, கிழக்கில் உள்ள பிரச்சினை சற்றுவித்தியாசமானது நாங்கள் வாழும் சூழல் வேறுப்பட்டவை. வட, கிழக்கு மக்கள் கூட சமஷ்டி முறையின் ஊடாக அதிகபட்ச  அதிகார பரவலாக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். அரசாங்கம் ஒற்றையாட்சியின் கீழ் வட, கிழக்கு மக்களுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க தயார் என ஜனாதிபதி, பிரதமர் ரணில் எல்லோரும் பகிரங்கமாக கூறுகின்றனர்.

வட, கிழக்கு அரசியல் தலைவர்களும் தங்களது மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்தாக வேண்டும். அரசாங்கமும் இதுவரை புறக்கணிக்கப்பட்ட  வட, கிழக்கு மக்களின் உரிமைகளை வழங்கி தேசிய நீரோட்டத்தில் இணையச்செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். நீண்டகாலமாக அரசியல் அநாதைகளாக இருந்த மலையக மக்கள் இப்போது அரசியல் ஞானம் பெற்றவர்களாக மாறியுள்ளனர்.  அவர்களது தேவையான அபிவிருத்திகளையும் வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

கே:நாடாளுமன்றத்தில் வட, கிழக்கு மக்களுக்காக குரல்கொடுக்க நீங்கள் தயாரா?

நிச்சயமாக... இதுவரை நான் குரல்கொடுத்துள்ளேனே. மாகாணசபை  உறுப்பினராக இருந்தபோதே தமிழ், முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளுக்காக வேறுபாடு இன்றி குரல் கொடுத்துள்ளேன். எதிர்காலத்தில் நான் எந்தக் கட்சியில் இருந்தாலும் அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இதற்கான அழுத்தங்களை அரசாங்கத்தில் நான் வழங்குவேன். 2003ஆம் ஆண்டு முதல் முறையாக  நாடாளுமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். வட, கிழக்கு மக்களை நான் என்றுமே புறக்கணிக்க மாட்டேன்.

கே:பொதுத் தேர்தல் தொடர்பில் மக்களுக்குக் கூற விரும்புவது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தின் ஊடாக ஆட்சி நடத்தினார். யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின்; உரிமைகளை வழங்குவேன் என்று கூறி அதன் பின்னர் இருந்த உரிமைகளைப் பறித்து தமிழ் மக்களை அநாதைகளாக்கியவர்.
பெருந்தேட்ட மக்களின் வாழ்கையை மாற்றுகிறேன் எனக்கூறி அதனைச் செயற்படுத்தாத ஒருவர். இப்போது பதவி ஆசையில் இனவாதத்தைத் 

தூண்டி ஆட்சிப்பீடம் ஏற நினைக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் சிங்கள மக்களால் வெற்றிபெற்றேன், தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டேன் என வெறித்தனத்தைத் தனது ஊரிலே ஆற்றிய உரையில் வெளிப்படுத்தியவர். இப்போதும் அவரது உரைகளை ஆழமாகக் கேட்டால் அது இனவாதத்தைத் தூண்டுவதாக அமைவதைக் காணலாம். 

இந்த நாட்டுக்கு இனவாதம் இனித் தேவையில்லை. இனவாதத்தைக் கொண்டு அரசியல் நடத்த முடியாது. புத்திஜீவிகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்ற உலகம் போற்றும் திறமைவாய்ந்த தலைவர்கள் தேவை. இன, மத, மொழி பேதங்களைக் கடந்து தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் என பாராது அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X