2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பின் வெற்றி சொல்லும் செய்தி

Thipaan   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓரணியில் அணி திரள்வதன் மூலம் பலமான அரசியல் சக்தியாக  தம்மை முன்னிறுத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் மீண்டும் தமது உறுதிப்பாட்டினை பொதுத் தேர்தலினூடும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி அதனையே காட்டுகின்றது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் நிலைப்பாட்டினை பருமட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஏற்றி வைப்பதற்கும் அது காரணமாக அமைந்திருக்கின்றது.

வடக்கு- கிழக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். எனினும், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் கட்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விளங்கும் என்று சற்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, தமிழ்த் தேசிய வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் குறிப்பிட்டளவு பகிர்ந்து கொள்ளும் என்று கருதப்பட்டது. ஆனால், தன்னுடைய கட்டுப்பணத்தை திரும்பப் பெறுவதற்கே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் பிரயத்தனப் பட வேண்டியிருந்திருக்கின்றது.

ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கம் அகற்றிய காலம் தொட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தாம் ஒருங்கிணைவதற்கான புள்ளியாக தமிழ் மக்கள் கருதி வந்திருக்கின்றார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலுரிமைகளுக்கான போராட்டங்கள் மற்றும் இறுதி மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சரியான முன்நகர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. அப்படியான நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை பதிவு செய்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் விமர்சனங்களைத் தாண்டி, வெற்றிகளை அரசியல் தலைமைகளும், ஆயுதப் போராட்டத் தலைமைகளும் பெற்று வந்திருக்கின்றன. அது, மக்களின் பெரும் அபிமானம் மற்றும் இனமான உணர்வுகளின் போக்கில் நிகழ்ந்தப்பட்டு வந்திருக்கின்றது. தந்தை செல்வநாயகத்தை அரசியலின் பெரும் வீச்சாகவும் தலைவர் பிரபாகரனை ஆயுதப் போராட்டத்தின் முழு நம்பிக்கையாகவும் கொள்வதற்கும் அதுவே அடிப்படையாக இருந்தது. இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் ஒருங்கிணைவதும் அதன் போக்கிலானது. ஆனால், அது, செல்வநாயகம்- பிரபாகரன் ஆகியோரின் இடங்களை குறைநிரப்புவதற்கானதேயன்றி இறுதியானது அல்ல.

தமிழ்த் தேசிய அரசியலில், இரு கட்சி அரசியலின் அவசியம் தொடர்ந்தும் உணரப்பட்டு வருகின்ற நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருகை குறிப்பிட்டளவான நம்பிக்கையை சில தரப்பினருக்கு வழங்கியிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை என்பது மிதக்கும் நிலை எனும் அளவில் இருந்ததேயன்றி சாதாரண தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான திட்டங்களையோ- முனைப்புக்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்திருக்கின்றன.

பொதுத் தேர்தல் காலம் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் இரு பெரும் பிரிவுகளை ஏற்படுத்தியிருந்தது. தாயகத்திலுள்ள(புலம்) மக்கள் ஒரு கூறாகவும், புலம்பெயர் தமிழ் மக்கள் இன்னொரு கூறாகவும் இருந்து கொண்டு களமாற்றுகின்ற நிலையை அது தோற்றுவித்திருந்தது. அது, தேர்தல் கால பிரசாரங்கள்- பரபரப்புக்களைத் தோற்றுவதற்கு காரணமாக இருந்தன என்பன உண்மை. ஆனால், அது, பெரும் பலன்களை வழங்கவில்லை. மாறாக, இடைவெளியின் அளவினை (குறிப்பாக, இரண்டு தரப்புக்கும் இடையில் ஈகோ ரீதியினா இடைவெளியை) அதிகப்படுத்தியிருந்தது.

 இன்னொரு பக்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய அரசியல் வரலாற்றில் எதிர்கொள்ளும் இரண்டாவது தேர்தல் இது. 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 7,000 வாக்குகளை பெற்ற பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேறு எந்த தேர்தல்களையும் சந்திக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இரண்டு மாகாண சபைத் தேர்தல்கள் (கிழக்கு, வடக்கு), ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட தொடர்ந்து வந்த தேர்தல்களில் பங்கெடுக்காமல் புறக்கணித்திருந்தது.

இது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெரும் தோல்விக்கு காரணமாகியிருக்கின்றது. ஏனெனில், தமிழ் மக்கள் கடந்த காலத்தில் தேர்தல்களை தமது அரசியல் போராட்டத்தின் குறியீட்டு வடிவங்களாகவும் கையாண்டு வந்திருக்கின்றார்கள். அப்படியான நிலையில், தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாடுகளின் போக்கில் நகர்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது ஒருவிதமான வெறுப்பு அல்லது அதிருப்தி எழுவது இயல்பானது.

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 7,000 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இம்முறை 15,000 வாக்குகளைப் பெற்றமை முன்னேற்றகரமானது என்று சில தரப்பினர் கருதுவதற்கு இடமுண்டு.

ஆனால், 15,000 வாக்குகள் என்பது முன்னணி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட 45,000களோடு ஒப்பிடுகையில் 30,000 குறைவாகும். இதற்கு, மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்வதற்கான சாத்தியங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறவிட்டிருக்கின்றது என்பதோடு, தமது செயற்றிட்டங்கள் தொடர்பிலான தெளிவூட்டல்களை துணிச்சலாக- தெளிவாக செய்ய முடியாமல் போனதும் காரணமாகும்.

வழக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களை மாத்திரம் முதன்மை அரசியல் நிலைப்பாடு மாதிரி கருதி களமாற்றியதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அகற்ற அல்லது விலக்க வைக்க காரணமாகியிருக்கின்றது. அது, என்ன வகையான மனநிலை என்றால், 'என் வீட்டுப் பிள்ளையை நான் அடிப்பேன். அடுத்தவன் அடிக்க முடியாது' என்கிற வகையானது.

தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்டங்களின் ஆணிவேரும்- அத்திவாரமும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களே. அவர்களை பிரதானப்படுத்தியே போராட்டங்களும் முனைப்புக்களும் கட்டமைக்கப்பட வேண்டும். அது, தாயகத்திலுள்ள மக்களின் பெரும் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட வேண்டியது. அதுதான், போராட்டத்தினை தொடர்ச்சியாக தக்க வைக்கவும் உதவும்.

ஆனால், தமிழ்த் தேசிய அரசியலின் போக்கில் புலம்பெயர் சமூகம் சிலவேளை தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியாக தன்மை பிரதானப்படுத்த முனைகின்ற போது, தாயக- புலம்பெயர் தரப்புக்களுக்கிடையில் முரண்பாடுகள் பெருமளவில் வெளிப்படுகின்றது. அது, ஒத்திசைந்து இயங்க வேண்டிய தருணங்களை புறந்தள்ள வைத்து, ஒருதரப்பினை இன்னொரு தரப்பு ஒருவித ஈகோவோடு எதிர்கொள்ளும் சூழலை தோற்றுவித்திருக்கின்றது. அது, இந்தப் பொதுத் தேர்தலிலும் பிரதிபலித்தது.

தமிழ்த் தேசியத்துக்கான அர்ப்பணிப்புள்ள தரப்புக்கள் அனைத்தும் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, தாயகத்திலுள்ள மக்களே ஆதாரங்கள். அவர்களின் மனங்களை நெருக்கமாக படிப்பது முக்கியமானது. அவர்களை மீறிய அல்லது அவர்களை புறந்தள்ளிய அரசியல் நிலைப்பாடுகள் என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

அது, தாயகத்திலுள்ளவர்களுக்கும்- புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களுக்குமான இடைவெளியை இன்னும் இன்னும் அதிகரிக்கும். அது, என்றைக்குமே நல்லதல்ல. அது, யதார்த்த கள நிலைவரங்களை உணர்ந்து கொள்வதை தவிர்க்க வைக்கும். அது, பாரிய பாதிப்புக்களை வழங்கும்.

மாற்றம் பற்றிய கோசம் என்பது மக்களின் மனங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதனை, தலைவர்களும், அமைப்புக்களும் ஒருங்கிணைத்து பிரதிபலிக்க வேண்டும். ஆனால், இந்தப் பொதுத் தேர்தலில் மாற்றம் எனும் சொல்லாடல் தாயகத்திலுள்ள மக்களிடமிருந்து ஆரம்பிக்கவில்லை. மாறாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள், ஊடகங்களிலிருந்து எழுந்தவை. அவற்றை உள்வாங்கி பிரதிபலிப்பதற்கான அவசியத்தினை மக்கள் கொண்டிருக்கவில்லை. அது, மாற்றம் எனும் கோசத்தினை எந்தவித கரிசனையுமின்றி

தூக்கியேறிய வைத்திருக்கின்றது.

'ஆயுதப் போராட்டத்தின் மூலம் இறுதி இலங்கினை அடைய முடியாது என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், ஆயுதப் போராட்டத்துக்கான புலிகளின் அர்ப்பணிப்பை என்றைக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே தமிழ் மக்கள் ஆதரவளித்து வந்தார்கள். அதற்காக, அவர்களினால் பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது என்று அர்த்தமல்ல.

மாறாக, புலிகள் மீது கொண்டிருந்த கட்டுப்படுத்த முடியாத அபிமானத்தை இன்னொரு தரப்பு மீது கொள்வதற்கும் தமிழ் மக்கள் தயாராக இல்லை. அப்படியான நிலையில், தங்களை நேரடியாக புலிப் பிரதிநிதிகள் என்று முன்வைக்கும் தரப்புக்களை பிணத்தின் மீது அரசியல் செய்யும் தரப்பாகவே மக்கள் நோக்குவார்கள். அப்படியான நிலையும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யதார்த்த களம் உணர்ந்த அரசியல் முனைப்புக்கு பெரும் வெற்றியைக் கொடுக்கும். அதுதான், எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கும் காரணமாகும். அவர் வெற்றி பெறுவார்...' என்கிற விடயத்தை அரசியல் ஊடாடலொன்றின் போது தமிழ்த் தேசிய அரசியலில் தொடர்ச்சியாக இயங்கும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்தப் பொதுத் தேர்தலின் முடிவுகளைப் பார்க்கின்ற போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைபெறுகைக்கான நீட்சிக்கும் அதுதான் காரணமாக அமைந்திருக்கின்றது என்று கொள்ள வேண்டியிருக்கின்றது. முரண்பாடுகளின் போக்கில் பிரிந்து செல்லாமல் இணக்கமான புள்ளிகளை கவனத்திற் கொண்டு செயற்படுவது தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவசியமானது. அது, புலம்- புலம்பெயர் சமூக இடைவெளியை அகற்ற வேண்டும். அது, எதிர்கால வெற்றிகளுக்கு முக்கியமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .