2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.நா. அமைதி காக்கும் படைகள்: துர்தேவதை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

உங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்து நம்பியிருக்கிறவர்கள் உங்களைக் கைவிடுவது கொடுமையானது. அதைவிடக் கொடுமையானது அவர்கள் உங்களிற் பசியாறுவது. வேலியே பயிரை மேய்வது புதிதல்ல.

ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் நடத்தை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அகநிலை அறிக்கை கசிந்துள்ள நிலையில், அமைதி காப்பதன் பெயரில் இப் படைகள் உலகெங்கும் செய்யும் அநியாயங்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவை ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் தேவையும் நோக்கங்களும்; பற்றிய கேள்விகளை மீண்டுமொருமுறை எழுப்பியுள்ளன.

தற்போது உலகெங்கிலும் 16 நாடுகளில் 125,666 பேர் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊடகங்கட்குக் கசிந்த அறிக்கை, ஐ.நா. படைகள் உணவு, உடை, பணம், ஆபரணங்கள், வாசனைப் பொருட்கள், அலைபேசிகள் போன்றவற்றைக் கொடுத்துப் பெண்களையும் சிறுமியரையும் பாலியல் தேவைகட்குப் பயன்;படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கிறது.

ஹெயிட்டியில் 229 பெண்கள் தங்களது அன்றாட உணவுக்கும் மருத்துவத் தேவைகட்கும் பிரதியாக ஐ.நா. படைகளின்; பாலியல் தேவைகட்குப் பயன்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள்- அது குறித்துக் ஹெயிட்டியில் உள்ள ஐ.நா. அலுவலகத்திடம் முறையிட்டும், அலுவலகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு பாதிக்கப்பட்டவர்கட்கு எந்த உதவியும் வழங்கவில்லை.

தனது அனுபவத்தைப் பகிர்ந்த சிறுமியொருத்தி 'சிறுவர்கள் அமைதி காக்கும் படைவீரர்களின் முகாம்கட்கு வெளியே காத்திருப்பது வழமை. சில படைவீரர்கள் பாணும் வேறெதாவது உணவுப் பொருட்களும் தருவார்கள். அவ்வாறுதான் நானும் நின்றுகொண்டிருந்தேன். அமைதி காக்கும் படைவீரொருவர் என்னை அழைத்தார். எனக்கு உண்ண எதாவது தரப்போகிறார் என நினைத்தபடி உள்ளே சென்றேன். அவர் என்னை உள்ளே இழுத்து என் வாயைப் பொத்தி என்னை வன்புணர்வுக்கு உட்படுத்தினார்' என்று சொல்லியிருக்கிறாள். உணவுக்காகவும் மருந்துக்காகவும் தவம் கிடக்கும் மனிதர்களிற் பசியாற எவ்வளவு குரூர மனம் வேண்டும்.

ஐ.நா. அறிக்கையானது கொங்கோ, லைபீரியா, ஹெயிட்டி, தென் சூடான் ஆகிய நாடுகளிற் கடமையில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படைகளாலேயே அதிகளவான பாலியல்ரீதியான குற்றங்கள் இழைக்கப்பட்டதாகச் சொல்கிறது. ஐ.நா. அமைதி காக்கும் படைகள் அத்துமீறல்களில் ஈடுபடுவது பற்றிய செய்திகள் வெளியாவது இது முதல்முறையன்று. ஆனால், பாரிய குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் எதனையும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளவில்லை என்பதுதான் இதில் முக்கியமானது. அத்தோடு இவ் அறிக்கையானது அதன் தீவிரத்தையும் குரூரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

எல்லாவற்றிலும் மேலாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனிதஉரிமைகள் அவை, இவ் விடயத்தைக் கண்டுங் காணாமல் விட்டமையே கவனிப்புக்குரியது. உலகெங்கும் மனித உரிமைகளைக் கண்காணித்து மீறல்களைக் கண்டிக்கும் அமைப்புத் தனது உள்வீட்டு விவகாரத்தை மூடிமறைத்துள்ளது. இவ்வமைப்பிடந் தான் நாங்கள் நீதி வேண்டி நிற்கிறோம் என்கிற போது அந் நீதியின் தன்மையை அளவிடல் கடினமல்ல.

2013 டிசெம்பரில் மத்திய ஆபிரிக்கக் குடியரசின் ஜனாதிபதி, கிளர்ச்சியாளர்களால் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் துருப்புகள் அமைதி காத்தல் என்ற போர்வையில் அங்கு தலையிட்டன. 2013 டிசெம்பருக்கும் 2014 யூனுக்குமிடையில் 14 பிரெஞ்சுப் படையினரும் சாட், ஈக்குவெட்டோரியல் கினி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 படைவீரர்களும் உணவையும் பணத்தையும் காட்டிச் சிறுவர்களைப் பாலியல் தேவைகட்குப் பயன்படுத்தியமை அறிக்கையிடப்பட்டது.

சிறுவர்களை நேர்கண்ட ஐ.நா. சிறுவர் நிதியத்தினதும் (யுனிசெப்) மனித உரிமைகட்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினதும் அதிகாரிகள், சிறுவர்களை ஐ.நா. அமைதி காக்கும் படைகள் துஷ்பிரயோகம் செய்தமை பற்றியும் தொடர்பிலும் அவர்களது மனித உரிமை மீறல்கள் பற்றியும் அறிக்கையொன்றை மனித உரிமைகட்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்தனர். ஆனால், அதைப் பற்றி ஐ.நா. நடவடிக்கை எதையும் எடுக்காததால் உயர் நிலை ஐ.நா. அதிகாரியான அண்டேஸ் கொம்பாஸ் என்பவர் அதை ஊடகங்கட்கு வெளியிட்டார். அதற்காக ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் அவ்வதிகாரியைப் பதவிநீக்கியுள்ளார்.

அண்டேஸ் கொம்பாஸின் பதவிநீக்கம் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளால் விமர்சிக்கப்பட்ட போது, இவ்வறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் பொறுப்பான ஐ.நா. மனித உரிமைகட்கான துணை உயர்ஸ்தானிகர் 'நலமின்மை' என்ற காரணங்; காட்டிப் பதவிவிலகினார். இவ்வறிக்கை தொடர்பில் அவர் வெளியிட்ட அகநிலைக் கடிதமொன்று ஊடகங்கட்குக் கசிந்துள்ளது. இதில் 'நேரமின்மை மற்றும் நிதியின்மை ஆகிய காரணங்கட்காக இவ்வறிக்கை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது' என அவர் எழுதியது அம்பலத்துக்கு வந்தது. 

மனித உரிமைகள் விடயத்தில் ஐ.நா. எவ்வாறு நடக்;கிறது என்பதை இது தெளிவுறுத்துகிறது. ஐ.நா.வின் மனித உரிமைகள் அக்கறைகள் பற்றிய பல்வேறு கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. மனித உரிமைகளும் அமைதி காத்தலுமே ஐ.நாவின் அடிப்படையானதும் தலையாயதுமான பணிகளாகப் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் அமைதி காத்தலிலேயே மனித உரிமைகள் மீறப்படுவதை என்னவென்பது. 

ஐ.நாவும் அதன் அமைதி காக்கும் படைகளும் காக்கும் தேவதைகளாகக் காணப்படுகின்றன. ஆனால், அதன் வரலாறு இரத்தம் தோய்ந்தது. 1948ஆம் ஆண்டுமுதல் இயங்கிவரும் இவ் அமைதி காக்கும் படைகள் 'நீலத் தொப்பிக்காரர்கள்'என அழைக்கப்படுகிறார்கள். கடந்த ஆறு தசாப்தங்களில் பல்வேறு அநியாயங்கட்குச் சாட்சியாக இந்த நீலத் தொப்பிக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். ஐ.நா.வின் படி, அமைதி காக்கும் படைகள் 'ஒரு நாட்டில் நிலையான அமைதியை உருவாக்க' அனுப்பப்படுகின்றன. இதுவரை 61 அமைதி காக்கும் பணிகட்காக ஐ.நா. அமைதி காக்கும் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் அவை அமைதியைக் காத்தனவா என்ற வினா இன்னமும் பதிலின்றி இருக்கிறது. முதலாவது அமைதி காக்கும் பணி 1948ஆம் ஆண்டு அரபு - இஸ்ரேல் யுத்தத்தின் விளைவால் ஏற்;பட்டது. இன்றுவரை இப்பணி தொடர்கிறது. அதேவேளை, இஸ்ரேல் தனது அடாவடித்தனங்களை ஐ.நா. படைகளின் கண்காணிப்பின் கீழ் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. கேட்பாரில்லை. 

ஐ.நா. அமைதி காக்கும் படைகள் என்றவுடன் இயல்பாக நினைவுக்கு வருபவர் பற்றிஸ் லுமும்பா. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னணியில் ஆபிரிக்காவில் எழுந்த கொலனியாதிக்கத்திலிருந்து விடுதலை என்ற உணர்வின் குறியீடாகத் திகழ்பவரான லுமும்பா, கொங்கோவின் விடுதலைக்காக இடையறாது போராடி 1960இல் பெல்ஜியத்தின் ஆதிக்கத்திலிருந்து கொங்கோவை விடுவித்துச் சுதந்திர கொங்கோ குடியரசின் முதலாவது தலைவராகவும் விளங்கியவர். பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்று ஐந்து மாதங்களில் மேற்குலகின் சதிப் புரட்சியின் பின் கைதுசெய்யப்பட்டு 1961 ஜனவரி மாதம் 17ஆம் திகதி, அமெரிக்காவினதும் பெல்ஜியத்தினதும் ஆதரவுடன், ஐ.நா. அமைதி காக்கும் படைகளிடம் கைதியாக இருந்தபோதே லுமும்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேசிய ஜனநாயகப் புரட்சியை கொங்கோவில் அறிமுகம் செய்ய முயன்ற பற்ரிஸ் லுமும்பாவின் முடிவு உலகம் ஒரு ஜனநாயகமான மக்கள் எழுச்சிக்கு எத்தகைய பின்விளைவுகளை ஆற்றும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அத்தோடு ஐ.நா. அமைதி காக்கும் படைகள் எவ்வாறு நடக்கும் என்பதற்கான சான்றுமாகும் லுமும்பாவின் கொலை, அவர் கொங்கோவின் இயற்கை வளங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்ததோடு அமெரிக்காவினதும் பெல்ஜியத்தினதும் கைப்பொம்மையாக இருக்க மறுத்ததன் விளைவாகும்.

'மனிதத்துவத்துக்கு எதிராக நிகழும் குற்றங்கள் எங்கு நடந்தாலும் அதைக் கண்டித்து நீதிவழங்க முயலும்' என்று பெருமை பேசும் ஐ.நா.வுக்கு ஜனநாயகம் பற்றியோ, மனித உரிமை பற்றியோ பேச ஒரு தார்மீக உரிமையும் கிடையாது என்பதை மீள நீரூபித்த நிகழ்வு லுமும்பாவின் கொலை. அது மனித உரிமைகள் பற்றிய மேற்குலகின் மாயையை மட்டுமல்லாது ஆபிரிக்க விடுதலையின் பொய்யான தோற்றத்தையும் தோலுரித்துக் காட்டியது. ஐ.நா. அமைதி காக்கும் படைகள் பற்றியும் அது எவ்வாறான முகமூடியைச் சூடுகிறது என்பது பற்றியும் கைதியாக இருந்தபோது லுமும்பா எழுதிய வரிகள் இவை:

'மூன்றாமுலகு மீதான மேற்குலக ஆதிக்க வெறியை நீலத் தொப்பியால் எதுவும் செய்யமுடியாது. கொலனிகளை எவ்வாறாவது பேணுவதன் மூலமே நாகரிகத்தின் வரலாறு கட்டமைக்கப்படுகிறது என நினைப்பவர்கள் அதை நீலத் தொப்பியின் உதவியோடு அடைய நினைக்கிறார்கள்.'

இப் பின்புலத்தில் ஐ.நா. அமைதி காக்கும் படைகட்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு விடுபாட்டு உரிமையை நீக்கக் கோரி நீலக் கோவை இயக்கம்தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. ஐ.நா.வைப் பொறுத்தவரையில் ஐ.நா. அமைதி காக்கும் படையில் பணியாற்றும் படைவீரர்கட்குச் சிறப்பு விடுபாட்டுரிமை கிடையாது.

ஆனால், ஐ.நா. அமைதி காக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் அல்லாதோருக்கும் ஐ.நா. அலுவலர்கட்குமே சிறப்பு விடுபாட்டுரிமை உண்டு. ஆனால், நீலக்கோவை இயக்கம் அதிர்ச்சித் தகவல்களைத் தருகிறது. 2014ஆம் ஆண்டு தகவல்களின்படி ஐ.நா. அமைதி காக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களில் பாலியல் குற்றமிழைத்தவர்களை அவ்வியக்கம் வகைப்படுத்தியுள்ளது. அதன்படி,  31சதவீத இராணுவத்தினரும் 69சதவீதம் சிறப்பு விடுபாட்டுரிமையுள்ளவர்களும் குற்றமிழைத்துள்ளனர். அதில் 35 சதவீதம் பேர் ஐ.நா. அலுவலர்கள்.

அண்மைய நிகழ்வுகள் சில முக்கிய விடயங்களைக் கோடிட்டு நிறுவுகின்றன. முதலாவதாக, ஓர் அமைப்பாக ஐ.நா. தோற்றுள்ளது. இரண்டாவதாக அமைப்புக்குள் நடக்கும் தவறுகளைத் திருத்தவோ தடுக்கவோ இயலாத நிலையில், உலகின் பொது அமைப்பாக நடக்கும் தகைமை அதற்கு இல்லை. கசிந்த அறிக்கையும் அதற்கான எதிர்வினைகளும் செல்லரித்துப் போன ஓர் அதிகார மையத்தின் முடிவைக் கட்டியங் கூறுகின்றன.

உலக அரசியலின் திசைவழியில் அதிகாரங்கள் நிறுவப்படும் வழிமுறைகள் பல. சில அதிகாரத்தின் வலியால் நிறுவப்படுகின்றன. சில அமைதியெனும் வழிமுறையால் நிலைபெறுகின்றன.

தேவதைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் நாங்கள். அந்த நம்பிக்கையின் எச்சங்கள் இன்னும் எம்மிடம் ஒட்டிக்கொண்டுள்ளன. அவை துர்தேவதைகள் என்பதை உணர்வதற்குக் காலங் கனிந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .