2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

"இனிமேல் இந்திய அரசுக்கு "நிபந்தனை" ஆதரவு: கருணாநிதி "அதிரடி" முடிவு?

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையில் டெசோ தீர்மானங்களைக் கொடுத்து விட்டு வந்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினுக்கும், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிற்கும் மிகப்பெரிய பாராட்டுக் கூட்டம் ஒன்றை அவர்கள் சென்னை திரும்பிய அன்றே நடத்தி முடித்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். நவம்பர் 11ஆம் திகதி சென்னை திரும்பிய ஸ்டாலினை தி.மு.க. தலைவர் கருணாநிதியே நேரில் விமானம் நிலையம் சென்று வரவேற்றது, அன்று மாலையே தன் தலைமையிலேயே பாராட்டுக் கூட்டத்தை நடத்தியது எல்லாம் டெசோ மாநாட்டு நிகழ்வுகளை அப்படியே வெளிச்சத்தில் வைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி. அக்கூட்டத்தில் "ஐ.நா. மன்றம் இலங்கையில் பொதுவாக்கெடுப்புக்கு வழி செய்ய வேண்டும்" என்ற கோரிக்கை முக்கியமாக வைக்கப்பட்டிருந்தாலும், இக்கூட்டத்தின் வேறு முக்கியச் செய்திகளும் தி.மு.க.வினருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது.

தி.மு.க.விற்கும், காங்கிரஸுக்குமான உறவு ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டு செல்கிறது. மேற்குவங்க மாநில முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சி இந்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு, மத்தியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இரண்டாவது பெரிய கட்சி. ஏனென்றால் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சிக்கு இருக்கிறார்கள். கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தாலும், மத்திய அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கும் கூட்டங்களில் தி.மு.க. அதிகம் பங்கேற்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அக்கட்சியின் அமைச்சர்கள் சமீபத்தில் நடைபெற்ற "மெகா" மத்திய அமைச்சரவை மாற்றத்தில் கூட பங்கேற்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கூட பங்கேற்கவில்லை. அடுத்தபடியாக இந்திய பிரதமரின் தூதுவர் போல் அடிக்கடி பல்வேறு விடயங்களில் கருத்துச் சொல்லிவரும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்பேட்டியில், "முன்பு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தி.மு.க. ஆதரவு கொடுத்தது. இப்போது பின்வாங்கி விட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கிறது. அது போதும்" என்று மறைமுகமாக, இனி அ.தி.மு.க. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது என்ற அர்த்தம் தொணிக்கும் வகையில் பேசி விட்டார்.

இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்தப் பேட்டி வெளிவந்த அதே தினத்தில்தான் பிரதமரின் ஆலோசகர் நாயர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். "மத்திய அரசு மாநிலத்தில் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்த வந்தார் நாயர்" என்று செய்திகள் வந்தாலும், அதை தி.மு.க. தரப்பு வேறு விதமாகவே பார்த்தது. பிரதமரின் ஆலோசகர் முதல்வரை சந்திக்கும் நேரத்தில் இன்னொரு பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி இப்படி "ஜெயலலிதா ஆதரவு எங்களுக்குப் போதும்" என்ற ரீதியில் கொடுத்த பேட்டி தி.மு.க. தலைமைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை விட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, "கூடங்குளம் போராட்டக் காரர்களை அழைத்து முதலில் ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதாதானே. இது நாராயணசாமிக்குத் தெரியாதா?" என்று காட்டமான கேள்வி எழுப்பினார். உடனே அவசர அவசரமாக அறிக்கை விட்ட நாரயணசாமி, "நான் அப்படிச் சொல்லவில்லை. தி.மு.க. எங்கள் கூட்டணியில் மதிப்பு மிக்க கட்சி. கலைஞர் மீது நான் அன்பும், பாசமும் வைத்திருக்கிறேன்" என்று பல்டி அடித்தார். ஆனாலும் அரசியல் தலைவர்கள் முதலில் ஒரு கருத்தைச் சொல்வதும், அது சர்ச்சையில் மூழ்கியவுடன், "இல்லை நான் அப்படிச் சொல்லவில்லை. பத்திரிகைகள் தவறாக பிரசுரித்து விட்டன" என்று கூறுவதும் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வாதிகள் மத்தியிலேயே சகஜமாகிவிட்டதால், நாராயணசாமியின் மறுப்பை தி.மு.க. தரப்பு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

வருகின்ற நவம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. சோனியாவின் மருமகன் வதேரா மீது எழுப்பப்பட்ட புகார்கள், மத்திய சட்ட அமைச்சராக இருந்து தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராகியுள்ள சல்மான் குர்ஷித் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், கறுப்புப்பண விவகாரத்தில் "இந்திய ஊழல் எதிர்ப்பு" இயக்கத்தின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டுகள் எல்லாம் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தை ஆக்கிரமிக்கப் போகின்றன. அதேபோல் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி மீதான புகார்களையும் காங்கிரஸ் தரப்பு பதிலடிக்கு எடுக்கும் என்றே தெரிகிறது. இது தவிர முக்கியமாக சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கும் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசுக்கும், எதிர்கட்சிகளுக்கும் பெரிய கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். ஆனால் கூட்டணிக் கட்சிகளுடன் கூட காங்கிரஸுக்கு கருத்தொற்றுமை இல்லை. குறிப்பாக மத்திய அரசில் இரண்டாவது பெரிய கூட்டணிக் கட்சியாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகம் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு நுழைய அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற நாடு தழுவிய பந்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஆகவே கூட்டணிக் கட்சிகளை தாஜா பண்ணி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு விடயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தி.மு.க.வின் ஒத்துழைப்பு காங்கிரஸுக்கு டெல்லியில் தேவை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்படியொரு முக்கியமான காலகட்டத்தில் ஸ்டாலினுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் இரு முக்கிய செய்திகளை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது. ஒன்று தி.மு.க.விற்கு, இன்னொன்று காங்கிரஸ் கட்சிக்கு. தி.மு.க.விற்கு விடுக்கப்பட்ட செய்தியில் முக்கியத்துவம் "ஸ்டாலின் முன்னிலைப்படுத்துவது"! "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்ற திருக்குறளைச் சுட்டிக்காட்டி, தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்றி அவரை அவையத்தில் முந்தியிருப்பச் செய்தல்- முதல்வனாக இருக்கச் செய்தல் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்" என்று பேசினார். அப்போது அரங்கத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, "முதல்வன்" "முதல்வர்" என்ற இரு வார்த்தைகளுக்குள் "ன்" என்ற எழுத்தை நான் பயன்படுத்துகின்றபோது பொருள் வேறு. அதில் "ர்" என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் அது தருகின்ற பொருள் வேறு. அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொண்டு என்னுடையை பேச்சுக்கு புது விளக்கத்திற்குப் போகாமல் இப்பொழுது உள்ள விளக்கத்தையே நீங்கள் உங்கள் இதயத்திலே வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்றும் தெளிவுபடுத்தினார். இந்தப் பேச்சை எதிரில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த கனிமொழி கேட்டுக் கொண்டிருந்தார். ஆகவே, இந்தக் கூட்டத்தின் வாயிலாக தி.மு.க. என்ற கட்சிக்குள் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தியிருக்கிறேன். ஆனால் "முதல்வர் வேட்பாளர் நான்தான்" என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் தொண்டர்களுக்கு "மீண்டுமொருமுறை" சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தியில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தியிருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது தி.மு.க. ஆட்சியிலிருந்தும் மத்திய அரசை நிர்பந்திக்கத் தவறி விட்டது என்ற குற்றச்சாட்டை இன்றளவும் தமிழகத்தில் சந்து பொந்துகளில் எல்லாம் நின்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அது மட்டுமின்றி, "தி.மு.க. சென்ற முறை (ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1இன் காலம்)முயற்சி செய்திருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்" என்ற பிரசாரமும் இன்னமும் ஓங்கி ஒலிக்கிறது. அதிலிருந்து தி.மு.க.வை மீட்டு எடுக்கவே முதலில் டெசோ இயக்கத்தை மறுபடியும் புதுப்பித்தது தி.மு.க. அதைத் தொடர்ந்து கூட்டங்கள், ஐ.நா.மன்றத்தில் டெசோ தீர்மானங்களைக் கொடுத்தது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இன்று அதை இலங்கை தமிழர் பிரச்சினையை மையப்படுத்தியே இந்திய அரசுடன் மோதவும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளவும் முடிவு மேற்கொண்டுள்ளது தி.மு.க. அதனால்தான் ஐ.நா.சென்று திரும்பியதற்கு நடந்த பாராட்டு விழாவில், "இலங்கையில் பொது வாக்கெடுப்புக்கு நாம் ஐ.நா. மன்றத்தை தயார்படுத்த வேண்டும். அப்படி தயார்படுத்துவதற்கு நாம் தருகின்ற அழுத்தம் மாத்திரம் போதாது. அதாவது தமிழ்நாடு தருகின்ற அழுத்தமாக மட்டும் இல்லாமல், இந்தியாவே தருகின்ற அழுத்தமாக அது அமைய வேண்டும். அப்படி அமைவதற்கு இந்திய அரசு நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்கள் உறுதுணையாக இருந்தால், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம்" என்று அறிவித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

தி.மு.க. என்ற கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள ஒரு கட்சி. மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் கட்சி. தி.மு.க. தலைவரின் மகள் கனிமொழி சிறையிலடைக்கப்பட்ட போதும், அக்கட்சியின் மத்திய அமைச்சர் ராஜா திகார் சிறையில் இருந்த போதும் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த கட்சி. அப்படிப்பட்ட தி.மு.க. இப்போது முதல் முறையாக "நிபந்தனை ஆதரவு" என்ற கோட்பாட்டை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. "ஐ.நா. பொது வாக்கெடுப்புக்கு உறுதுணையாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும்" என்ற "க்ளியர் மெஸேஜ்" காங்கிரஸ் கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சமும் இருக்கிறது. நவம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார். ஐ.நா. மன்றத்திற்கு ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்ட தினம் அது. இந்த சந்திப்பிற்குப் பிறகுதான் நாராயணசாமி வெளியிட்ட பேட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இப்போது நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், "நாங்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று நிபந்தனை விதித்து இருக்கிறார். இந்த நிபந்தனையில் வேறு ஒரு விடயமும் அடங்கியிருக்கிறது. "பொது வாக்கெடுப்பு" என்ற கோரிக்கையை இந்தியா ஐ.நா. மன்றத்தில் வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அப்படியொரு கோரிக்கை வைத்தால், காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் இப்படியொரு கோரிக்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் என்பது இந்தியாவிற்கு தெரியும். அந்த வகையில் பார்த்தால் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அவரால் "நிறைவேற்ற முடியாத" கோரிக்கையை இப்போது வைத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. நவம்பர் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கும் நிலையில், முக்கியக் கூட்டணிக் கட்சியான தி.மு.க. வைத்துள்ள இந்தக் கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் முதலில் சட்ட ரீதியாக நிவாரணம் தேடிக் கொள்வோம். பிறகு காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்வோம்" என்பதுதான் தி. மு.க.வின் எண்ணமாக இருந்தது. அதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் போட்டது. "என் மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள 2-ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்று கனிமொழி அந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். இவர் மாதிரியே 2-ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அதன் மீது சமீபத்தில் அப்பீல் போன சி.பி.ஐ., "2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எதுவாக இருந்தாலும் வேறு எந்த நீதிமன்றங்களும் உத்தரவுகள் பிறப்பிக்கக்கூடாது என்று கூறியிருந்தீர்கள். இப்போது டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது" என்று சுப்ரீம் கோர்ட் முன்பு கூறியது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், "2-ஜி வழக்கு குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவிக்க போடப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்கு தடை விதித்து" உத்தரவிட்டுள்ளனர். இப்படியொரு உத்தரவு வந்து விட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழி போட்ட மனுவிற்கு விடை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இல்லையென்றால், "அலைக்கற்றை குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும்" என்று இந்திய சுப்ரீம் கோர்ட்டிற்கு போக வேண்டும். இப்படியொரு பரபரப்பான சூழ்நிலையில்தான், நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் கொடுத்த விருந்தையும் புறக்கணித்து விட்டு, "ஐ.நா. பொது வாக்கெடுப்பு"க் கோரிக்கை வைத்து, இந்திய அரசுக்கு "நிபந்தனை" ஆதரவு என்ற முடிவினை அதிரடியாக இப்போது எடுத்துள்ளது தி.மு.க.

தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவரிடம் இந்த கோரிக்கை பற்றி கேட்ட போது, "போகாத ஊருக்கு வழி சொல்கிறது தி.மு.க. அண்டை நாடுகளுடன் உள்ள உறவில் இப்படியெல்லாம் தி.மு.க. நெருக்கடி கொடுப்பது தவறு. இப்போதெல்லாம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா எங்களை "நிர்வாக ரீதியாக" மட்டுமே குறை சொல்கிறார். அரசியல் கட்சி ரீதியில் குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் எங்களுடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க. இப்படி நெருக்கடி கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸுடன் கொண்டாடும் உறவை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்'' என்றார். வருகின்ற நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரும், தி.மு.க. வைத்துள்ள "பொது வாக்கெடுப்புக்" கோரிக்கையும் தமிழக அரசியலில் தி.மு.க.வின் அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும் என்றே தெரிய வருகிறது.

இதற்கிடையில் திடீரென்று மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிப்பது தொடர்பான தி.மு.க.வின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்ததாகவும் தகவல். தி.மு.க. தலைவர் கருணாநிதியோ இந்த விடயத்தில் மத்திய அரசை ஆதரிக்கும் மனநிலையில் இல்லை. அதற்காக இப்போதே மத்திய அரசு எதிராக இந்த விடயத்தில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் "இப்போது உடனடியாக மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கமாட்டோம். ஆனால் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வரும் போது தி.மு.க. வெளிநடப்புச் செய்யலாம் என்று முதலில் யோசிக்கப்பட்டது.

ஆனால் அது அமைச்சரவையில் பங்கேற்கும் தி.மு.க. அமைச்சர்களுக்கு பிரச்சினையாக இருக்கும். ஆகவே அத்தீர்மானம் வரும் வேலையில், நாடாளுமன்றத்தில் வாக்களிக்காமல் அன்றைய கூட்டத்தொடரை புறக்கணிக்கலாம். இரண்டுமே அமைச்சர்களுக்கு தலைவலி என்றால், அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. அமைச்சர்கள் விலகலாம் என்ற ஒப்ஷனும் எங்கள் தலைவர் மனதில் இருக்கிறது" என்று கூறும் தி.மு.க. சீனியர் லீடர் ஒருவர், "டெல்லி நிகழ்வுகளை எங்கள் தலைவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலயாம் சிங் யாதவ் போன்றவர்களின் நிலைப்பாடு பற்றி மிகுந்த அக்கறையோடு விசாரித்து வருகிறார். அதை மனதில் வைத்துத்தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்குமா என்பதை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு அறிவிக்கிறோம் என்று எங்கள் தலைவர் கூறியிருக்கிறார்" என்றார் வித்தியாசமாக. தி.மு.க. அறிவித்துள்ள "நிபந்தனை" ஆதரவு மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசுக்கு பெரும் தலைவலி. அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது என்பதே இப்போதுள்ள செய்தி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .