2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்சி தான் தீர்வு’

Editorial   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:27 - 1     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

“ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை என்றும் கூறிய பிரதமர், ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டுமென்றும் அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாமென்றும்” கூறினார்.

தமிழ்மிரருக்கு வழங்கிய செவ்வியின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொழும்பிலிருந்து பலப்பிட்டிய நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது, அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: தேசிய அரசாங்கத்தின் பிரதான இரு கட்சிகளினதும் பொருளாதாரக் கொள்கைகள் மாறுபட்டவையாகக் காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில், இந்தப் பயணத்தை எவ்வாறு வெற்றிகரமாகக் கொண்டுவந்துள்ளீர்கள்?

இரு கட்சிகளும் வர்த்தகப் பொருளாதாரத்தைப் புரிந்துகொண்டுள்ளன. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்த்துக்கொண்டு பயணிக்கின்றோம். இருப்பினும், எமக்கிடையேயான புரிந்துணர்வு மாறுபடப்போவதில்லை. பயணம் மெதுவாக இருந்தாலும், இதற்குப் பின்னர், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த மூலதர்மம் மாறாது.  

கே: கட்சிகளுக்கிடையேயான மாறுபட்ட பொருளாதாரக் கொள்கை காரணமாகத்தான், நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளதாகக் கூறப்படுகிறதே?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி இல்லை. கடன் நெருக்கடி மாத்திரமே காணப்படுகின்றது. கடந்த காலத்தை விட, தற்போது இந்த நாட்டின் பொருளாதாரம் சீராகவே உள்ளது. கடன் சுமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பொருளாதாரத்துக்கான நிலையான தன்மையொன்றைப் பேணி வருகின்றோம். அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகள், 2017ஆம் ஆண்டிலேயே கிடைக்கப்பெற்றன. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில், இரு பிரதான கட்சிகளுக்கிடையே இணக்கம் காணப்படாத இடங்கள் இருக்கின்றன. அவை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, சிறந்த முறைமைகளை அமுல்படுத்தி வருகின்றோம்.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால், நன்மைகளும் உள்ளன; தீமைகளும் உள்ளன. வீழ்ச்சியின் போது, இறக்குமதிகள் அதிகரிக்கப்படுகின்றன. ஆனால், இது வாழ்க்கைச் செலவில் தாக்கம் செலுத்துகின்றது. ரூபாயின் பெறுமதி அதிகரிக்கப்படும் போது, வாழ்க்கைச் செலவும் இறக்குமதிகளும் குறைவடைகின்றன.

கே: நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு, பாரியளவில் அதிகரித்துள்ளது. இதற்கான தீர்வு என்ன?
ஆம், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதற்கு ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி தாக்கம் செலுத்தவில்லை. நாம் எதிர்பார்க்காத அளவுக்கு வரட்சியும் வெள்ளப்பெருக்கும் வந்து தாக்கியதால், விவசாயம் முற்றாக ஸ்தம்பித்துவிட்டது. மீண்டும் மீண்டும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டதால், மீள் விவசாயத்தைச் செய்ய, மக்களிடம் பணம் இல்லை. இதில், நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிப் பயிர்ச்செய்கை மற்றும் தெங்குப் பயிர்ச்செய்கை போன்றனவே நேரடியாகப் பாதிக்கப்பட்டன. இறக்குமதிகள் மூலம், அந்தப் பிரச்சினைக்கான தீர்வை, கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்செய்து வருகின்றோம்.

கடந்த ஒக்டோபர் மாதத்திலேயே, இந்தப் பிரச்சினை அதிகளவில் காணப்பட்டது. இருப்பினும், டிசெம்பர் மாதத்துக்குப் பின்னர், அந்த நிலைமை சற்றுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முதல், இந்நிலைமை மாறி, மக்களின் பொருளாதார நெருக்கடி தீரும். பிரச்சினை ஏற்பட்டது தான். அதை நான் இல்லையென்று கூறவில்லை. இது, நாட்டின் பாதீட்டிலும் சரி, வீட்டுப் பாதீட்டிலும் சரி, நேரடியாகத் தாக்கம் செலுத்தியுள்ளது.

கே: வெளிநாட்டு முதலீடுகளை, அந்தந்த நாடுகள் மீளக் கொண்டுசெல்லவுள்ளதான பிரச்சினையொன்று தோன்றவில்லையா?

இல்லை. 2017ஆம் ஆண்டில் மாத்திரம், ஒன்றரை பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு கிடைத்துள்ளது. இவ்வாறான தொகை, இதற்கு முன்னர் கிடைத்திருக்கவில்லை. இருப்பினும் அது போதாதென்றே நான் கருதுகின்றேன். இது 3, 6 பில்லியன் வரை அதிகரிக்கப்படல் வேண்டும்.

கே: பிணைமுறி விவகாரத்தை அடுத்து, வெளிநாட்டுக் கடன், முதலீடு மற்றும் உதவிகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகின்றதே?

இல்லை. இவை அதிகரித்துள்ளனவே தவிர, அப்படியொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. ஹம்பாந்தோட்டைக்கான முதலீடுகள் என்பனவும் அதிகரித்துள்ளன. (சற்று கனத்த தொனியில்) நான் அதிகரித்துள்ளதாகக் கூறும் போது, நீங்கள் குறைந்துள்ளதாகக் கூறுகின்றீர்கள்.

கே: பந்துல குணவர்தன அப்படி குற்றஞ்சாட்டியுள்ளாரே?

பந்துலவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவர், பொருளாதார வல்லுநர் இல்லையே. அவரது குற்றச்சாட்டுகளுக்கு நான் நாடாளுமன்றத்தில் கூட பதிலளிக்க மாட்டேனென்று, கடுந்தொனியில் கூறினார்.

கே: பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, உங்களிடமுள்ள திட்டங்கள் எவை?

இதற்காக, கடந்த 2001ஆம் ஆண்டிலும் நாம் ஒரு திட்டத்தை முன்வைத்திருந்தோம். முதலில், கடன் சுமையிலிருந்து விடுபட வேண்டும். அதனை ஈடு செய்யக்கூடியக்கூடிய அளவுக்கு, பொருளாதார அபிவிருத்தி ஒன்று ஏற்பட வேண்டும். 2020 - 2025ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், கடனைச் செலுத்துவதற்கான இலகு முறையொன்று கொண்டுவரப்பட்டு விடும். 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தான், அதிகளவு கடனைச் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. அதற்கிடையில் தான், பொருளாதார அபிவிருத்தி மற்றும் நாட்டின் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்.

கே: புதிய தேர்தல் முறைமை பற்றி சற்றுக் கூறினால்?

அனைத்துக் கட்சிகளும் இது குறித்து அவதானித்துக்கொண்டு இருக்கின்றன. அறிந்துகொள்வதற்கான ஆர்வமும் உள்ளது. இருப்பினும், தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தான், அதுபற்றிக் கூறமுடியும். குறைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்துகொள்வோம். நிலையான நிர்வாகமொன்றை கிராம மட்டத்தில் கொண்டுவருவதற்கே நாம் முயற்சித்துள்ளோம். ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்சினையொன்று உள்ளது. பஸில் ராஜபக்ஷவின் முறைமைக்கு அமைய பிரிப்பதற்குக் காரணம், எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, ஏனைய கட்சிகள் இணங்கவில்லை என்பதாகும். அத்துடன், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் ஒப்பிடுமிடத்து, ஆசனக் குறைப்பை மேற்கொள்ள முடியாது. இந்த முறைமையை, நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கொண்டுசெல்ல எதிர்பார்க்கிறோம்.

கே: 2015இல் நீங்கள் நாட்டைப் பொறுப்பேற்றபோது இருந்த நிலைமையிலிருந்து, நாடு எவ்வாறு மாற்றமைந்துள்ளது?

நாட்டில் இன்று சுதந்திரம் உள்ளது. ஒழுக்கம் உள்ளது. சுதந்திரமாகக் கருத்துகளைத் தெரிவிக்க முடிகிறது. தகவல் உரிமைகள் சட்டத்தின் கீழ், அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. நாடாளுமன்றம், சுதந்திரமாகச் செயற்படுகிறது. நாடாளுமன்றத்தின் இறைமை உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னைய நிலைமையை விட, நாம் முன்னுக்கு வந்துள்ளோம். தேசிய ஒற்றுமை பலப்பட்டுள்ளது. இன்னமும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத போதிலும், இனங்களுக்கிடையிலான ஒன்றுமை பலமடைந்துள்ளது. பொருளாதாரக் கொள்கையில், நிலையான தன்மையொன்று பேணப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளுடனான தொடர்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே: 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோற்பீர்கள் என்ற பயத்திலா, நீங்கள் வேட்பாளராக நிற்கவில்லை?

இல்லை. மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டுமாயின், எதிர்க் கட்சிகள், சிவில் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டுமென்ற தேவை இருந்தது. அதனால், வெளியிலிருந்து ஒருவரை நிறுத்தவேண்டிய சூழ்நிலை தோன்றியது.

கே: ஊழலற்ற அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அழைப்பை, ஜனாதிபதி விடுத்துள்ளாரே?

ஊழலற்ற அரசாங்கமொன்றை உருவாக்கவே நாங்களும் பாடுபடுகின்றோம். அதற்காக அவர்கள் ஒன்றிணைவார்களாயின், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்காக விமர்சிப்பதை நான் கணக்கிலெடுக்கப் போவதில்லை. தேர்தல் காலங்களில், வெற்றியை இலக்கு வைத்து, இவ்வாறான விமர்சனங்கள் செய்யப்படுவது வழமை தானே. தங்களது இருப்பைத் தக்கவைப்பதற்காக, எது வேண்டுமானாலும் பேசுவார்கள். அது உலக நாடுகளிலும் நடக்கின்றது.

கே: ஜனாதிபதி நாடகமாடுவதாகக் கூறப்படுகிறதே?

நான் அப்படிக் கூறவில்லை. தேர்தல் காலத்தில், அவரவர்கள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எனக்கு அதுபற்றிப் பிரச்சினை இல்லை.

கே: தேர்தலுக்குப் பின்னரும் தேசிய அரசாங்கம் தொடருமா?

ஆம். 2020 வரை தொடரும்

கே: ஒப்பந்தம் நீடிக்கப்படுமா?

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுசெல்வோம். ஒப்பந்தம் எமக்கிடையிலேயே உள்ளது. நம்பிக்கையே முக்கியம். இங்கு சட்டப் பிரச்சினையொன்றும் இல்லை.

கே: உங்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

தேர்தலுக்குப் பின்னர், அவற்றுக்கு நான் பதிலளிக்கிறேன்.

கே: நீங்கள் மௌனம் காத்தால், அது அவர்களுக்குச் சாதகமாகி விடாதா?

தேர்தல் காலங்களின் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் பேசுகின்ற விடயங்களோடு மோத வேண்டிய அவசியம் இல்லை. எமக்குப் பெரும்பான்மை இருக்கின்றது. அதோடு, ஒற்றுமையையும் நாம் பாதுகாப்போம்.

கே: பிணைமுறி விவகாரத்தில், உண்மையில் என்னதான் நடந்திருக்கிறது?
குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்கள். அந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போதே, அவை தொடர்பில் விசாரணை நடத்த ஆரம்பித்துவிட்டோம். இலங்கையில் ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கம் இப்படி நடந்துகொண்டுள்ளது? அது தான் நாம் செய்த புது விடயம். ஒருமுறை அல்ல, மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளோம்.

கே: மோசடியொன்று நடைபெற்றுள்ளதென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

நட்டமொன்று ஏற்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும், அந்த நிதி அனைத்தும் பர்பெஷுவல் ட்ரெஷரீஸ் நிறுவனக் கணக்கில் உள்ளது. அதைப் பெற்றுக்கொள்ள வேண்டிய முறை தொடர்பில், ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கே: ரவி கருணாநாயக்க எம்.பியை, உப தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு, அமைச்சர் மாரப்பன தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதே. அதனை நடைமுறைப்படுத்துவீர்களா?

அவ்வாறானதொரு விடயம் அதில் கூறப்படவில்லை. எவ்வாறாயினும், அந்த அறிக்கையின் சாராம்சமொன்றை, ஊடகங்களுக்கு வழங்கவுள்ளோம். ஊடகங்களிலேயே, அவ்வாறான விடயமொன்று கூறப்பட்டுள்ளது.

கே: குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுமா?

அதற்கான சட்ட வரைவுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். புதிய நீதிமன்றமொன்று உருவாக்கப்படும். நீதிபதிகள் மூவரடங்கிய இந்த நீதிமன்றில், அனைத்து வழக்குகளும் ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். நீதிபதிகள் மூவர் இருப்பதால், மேன்முறையீடு செய்ய முடியாது. நேரடியாக உயர்நீதிமன்றத்துக்கே வழக்கு செல்லும். அதனால், வழக்கு நடவடிக்கைகள் விரைவில் நடைபெறும். இவ்வாறான நீதிமன்றங்கள் மூன்று உருவாக்கப்படும்.

கே: புதிய சட்ட வரைவில், எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன?

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கும் வகையில், அதாவது, சட்ட மா அதிபர், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஆகியவற்றால் தான், அவ்வாறான மோசடிக்காரர்களுக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படும். அங்கு ஒவ்வொரு நாளும் வழக்கு விசாரணை இடம்பெறும். வழமையாக, வழக்கு விசாரணையொன்று இடம்பெற்று முடிய, பல வருடங்கள் ஆகும். ஆனால் இந்தச் சட்ட வரைவின் பிரகாரம், மூன்று வருடங்களுக்குள் வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும்.

கே: பிணைமுறி  விவகாரத்தால்,  எதிர்வரும் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதா?

ஊடகங்கள் தான் இதைப் பெரிதுபடுத்திக்கொண்டு இருக்கின்றன. இந்தந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்பதை நாம் நேரடியாகவே கூறி வருகின்றோம்.

கே: அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக, எவ்வாறான நடவடிக்கை எடுப்பீர்கள்?

அவர்கள் குறித்து, சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றே, அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனால் இதுபற்றி, சட்ட மா அதிபர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே: இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு, எப்போது தீர்வு கிட்டும்?

தேசிய ஒற்றுமையை நாம் மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுக்காக, அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். எமது நிலைப்பாட்டில் அனைவரும் இல்லை. அதனால், அவர்கள் அனைவரையும் ஒரே நிலைப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். சிலவேளை, இரு தரப்பினரும் இணைந்து புதிய தீர்வொன்றுக்குச் செல்லலாம். இவை குறித்துத் தான் நாம் தொடர்ந்து பேசி வருகின்றோம். இவற்றை உடனடியாகவோ ஒரேயடியாகவோ செய்து முடிக்க முடியாது.

கே: தற்போதைய நிலைமையில், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவது சாத்தியமாகுமா?

நாம் முயற்சிக்கிறோம். பார்ப்போம் யார் அதற்கு இணங்கி வருகிறார்கள் என்று. அப்போது தான், யார் எதிர்க்கிறார்கள் என்று, பொதுமக்கள் அறிந்துகொள்வார்கள்.

கே: இந்த விடயத்தில், சம்பந்தன் ஐயாவும் விரக்தியடைந்துள்ள நிலையல்லவா காணப்படுகின்றது?

உண்மை தான். அவருக்கும் பிரச்சினை இருக்கிறது. எமக்கும் பிரச்சினை இருக்கிறது. எவ்வாறாயினும், அனைவரையும் இணைத்துக்கொண்டு தான் இந்தப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இணைந்து ஆட்சி நடத்துகின்ற போதிலும், எம்மிடம் மூன்றில் இரண்டு அதிகாரம் இல்லை.

கே: அவர்கள், தேர்தல் பிரசாரங்களின் போதும், தீர்வு குறித்தே பேசுகின்றார்கள். பெடரல் (சமஷ்டி) முறை பற்றிக் கூறுகிறார்கள். அவை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

அவர்கள், பெடரல் முறைமைக்குச் சமனான தீர்வொன்றைக் கோருகிறார்கள். நாம், ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வை எதிர்பார்க்கிறோம். எனவே, இதில் பொதுக் காரணிகள் பல காணப்படுகின்றன.

கே: பெடரல் முறை குறித்த உங்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்ன?

கட்சியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு. ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை. ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டும். அப்போது நிறைய வேலைகளைச் செய்யலாம். தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாம்.

கே: புதிய அரசமைப்பு தயாரிக்கும் பணிகள் முடங்கியுள்ளனவா?

இல்லை. நாம் அறிக்கையைச் சமர்ப்பித்தோம். தேர்தலின் பின்னர், இது பற்றிய பேச்சுவார்த்தைகளை நாம் மீண்டும் ஆரம்பிப்போம்.

கே: புதிய அல்லது திருத்தப்பட்ட அரசமைப்பு தொடர்பில், சிங்களவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிங்களவர்கள் மத்தியில் மாத்திரமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையினருக்கும், இது தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்க வேண்டுமென்பதே என்னுடைய வாதம்.

கே: தமிழ் மக்கள், இந்த நாட்டில் தமக்கு சுதந்திரம் இல்லை என்பதை உணர்கிறார்கள். அந்த நிலைமையைப் போக்க என்ன செய்யவுள்ளீர்கள்?

இந்த நாட்டில், அனைத்தின மக்களுக்கும் சுதந்திரம் இருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து தெவுந்தர வரையிலும் சுதந்திரம் உள்ளது. ஜனநாயக ரீதியில் சுதந்திரம் இங்கு உள்ளது. இல்லையென்று கூறிவிட முடியாது. தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அரசியல் தீர்வொன்றுக்கு நாம் இன்னமும் வரவில்லை. சாதரணப் பிரஜையின் சுதந்திரம், இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது.

கே: காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களில் அரசாங்கம் சாதகமாக நடந்துகொள்ள வேண்டுமென, வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையுமா?

இந்த நாட்டில், அரசியல் கைதிகளென்று எவரும் இல்லை. வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களே இருக்கிறார்கள். குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களே தண்டனை அனுபவித்து வருகிறார்கள். வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒருவர், எவ்வாறு அரசியல் கைதியாவார்? இவர்களில் சிலர் முன்னெடுத்த நடவடிக்கைகள், பாரிய பிரச்சினைகளுக்குரியவை. குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவர்கள் அங்கு இல்லை. அத்துடன், அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணப்படவுமில்லை. நான் தரவுகள் குறித்து விசாரித்து தான் இருக்கிறோன். இதேசமயம், மக்கள் தேவைகளின் அடிப்படையில், வடக்கிலுள்ள பெருமளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதை எவரும் மறுக்க முடியாது. இன்னும் சில காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

கே: காணாமற்போனோர் விடயத்தில் நிலையான தீர்வொன்று இதுவரை எட்டப்படவில்லையே?

காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதன் பின்னர், உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

கே: வடக்கு, கிழக்கின் அபிவிருத்திப் பணிகள் குறித்த திட்டமேதும் உள்ளதா?

சில அபிவிருத்திகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மேலும் சிலவற்றை, உள்ளூராட்சிமன்றங்கள் மேற்கொள்கின்றன. வடக்கு என்பது, பொருளாதாரக் கட்டமைப்பு, முழுமையாக உடைந்துவிழுந்த மாகாணமாகும். ஆனால், கிழக்கில் அந்தப் பிரச்சினை இல்லை. வடக்கு, யுத்தத்தால் முழுமையாகஅழிவடைந்துள்ளது. அதை, முழுமையாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. அதுமாத்திரமன்றி, வடக்கின் சமூகக் கட்டமைப்பு முழுமையாக உடைந்துள்ள விழுந்துள்ளது. கிராமத் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் எவரும் அங்கு இல்லை. எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். அங்கு பாரிய இடைவெளியொன்று காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் என்பது, கிழக்கைப் போன்றல்லாமல், சமூகக் கட்டமைப்பு உடைந்துபோன மாவட்டமாகவே காணப்படுகின்றது. பொருளாதாரமும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொருளாதாரத்தை எம்மால் கொஞ்சம் கொஞ்சமாக அபிவிருத்தி செய்துகொள்ள முடியும். ஆனால், சமூகத்தைக் கட்டியெழுப்புவது எவ்வாறு?

கே: வடக்கு - கிழக்கு இணைப்பு பற்றி, தொடர்ந்தும் பேசப்படுகிறது. ஆனால், அதற்கான தீர்வொன்று இன்னமும் முன்வைக்கப்படவில்லையே?

அதைச் செய்வதற்கு, கிழக்கில் பெரும்பான்மையொன்று இல்லையே. வடக்கில் பெரும்பான்மையொன்று இருக்கின்றதா என்று எனக்குத் தெரியாது. ஆனால், கிழக்கில் நிச்சயம் இல்லை. அதனால், வடக்கு, கிழக்கு இணைப்பை, பலவந்தமாகச் செய்ய முடியாது.

கே: பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததே. அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?

அந்த விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக உருவாக்குவதாயின், அதற்கு பாரியளவு நிலப்பரப்பொன்று தேவைப்படும். ஆனால், காணிகளை வழங்க, பொதுமக்கள் விரும்பவில்லை. பலவந்தமாகக் காணிகளைப் பறித்து திட்டத்தை முன்னெடுக்கவும் நாம் தயாரில்லை. ஆனால், தேசிய ரீதியில் அது அபிவிருத்தி செய்யப்படும்.

கே: மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை, இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது?

நாம் எமது முன்னேற்றங்கள் குறித்து அங்கு தெளிவுபடுத்துவோம்.

கே: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை இன்னும் நீக்கவில்லை என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது? உண்மையில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதா?

அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். புதிய சட்டமொன்று உருவாக்கப்பட்டதன் பின்னர், அதை நீக்கிக்கொள்கிறோம். எவ்வாறாயினும், இலங்கைப் பிரஜைகள் எவரும் தற்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டில்லை. ஆனால் இந்தச் சட்டத்தை நாம் நீக்கினால், சர்வதேசப் பயங்கரவாதிகள் இலங்கைக்கு வரும்போது, அவர்களை நாம் எந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது? இந்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருமாறு, சர்வதேசம் வலியுறுத்துகின்றது. சரி, அதுவரையில் நாம் எதை அமுலில் வைத்திருப்பது. அதனால், புதிய சட்டங்கள் வரும் வரையில், இருக்கின்ற சட்டத்தை நாம் வைத்திருக்கத்தான் வேண்டும்.

கே: சர்வதேச தரத்துக்கமைய, அந்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவாருங்கள் என்று தான், சர்வதேசம் வலியுறுத்துகிறதல்லவா?

ஆம். நாம் சர்வதேச தரத்துக்கமைய, சட்டமொன்றைத் தயாரித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். இருப்பினும், இங்கிலாந்தில் அமுலில் அருக்கும் சட்டம் வேறு, அமெரிக்காவின் சட்டம் வேறு. எந்த நாட்டுச் சட்டங்களும் ஒன்றோடொன்று பொறுந்தவில்லை. காரணம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு, அளவுகோலொன்று இல்லை. சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அந்நாடுகளின் சட்டங்கள் மாறுகின்றன.

எவ்வாறாயினும், பயங்கரவாத ஒழிப்புச் சட்டங்கள் தொடர்பான சர்வதேசத் தரமொன்று இல்லை. குறித்த சட்டத்துக்குப் பதிலான புதிய சட்ட வரைவொன்றைக் கொண்டுவந்தோம். அதனை ஏற்க மறுத்தனர். எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், மற்றுமொரு வரைவைத் தயாரித்து வருகின்றோம். பயங்கரவாதிகள் என்போர், எல்.ரீ.ரீ.ஈயினர் போன்றோரல்லர். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவை தான், பயங்கரவாத அமைப்புகளாகக் காணப்படுகின்றன. வடக்குப் பயங்கரவாதம் தெற்குப் பயங்கரவாதமென்ற பாரம்பரிய மோதலொன்றே எமது நாட்டில் காணப்பட்டது. இவை அனைத்துக்குமான சட்டத்திருத்தமொன்றை எவ்வாறு கொண்டுவருவது? இணையத்தளமொன்றின் மூலம் ஒருவர் பயங்கரவாதியாக மாறுவதை எவ்வாறு நாம் கண்டுபிடிப்பது?

இவ்விடயங்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு தான் சட்ட வரைவொன்றை அமைக்க வேண்டும். அண்மையில், அமைச்சர்களான திலக் மாரப்பனவும் சாகல ரத்நாயக்கவும் இணைந்து, புதிய சட்டவரைவொன்றைத் தயாரித்திருந்தார்கள். இந்த விடயத்தில் நாம் கவனமாகச் செயற்பட வேண்டும். இந்தச் சட்டத்தை நாம், அனாவசியமான முறையில் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இதனால் எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவுமில்லை. இருப்பினும், கொள்கை ரீதியில், இந்தச் சட்டத்துக்கு பதிலான புதிய சட்டமொன்றைக் கொண்டுவர வேண்டிய தேவை, எமக்கு உள்ளது.

கே: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு, வடமாகாண அவைத் தலைவர் கோரியுள்ளாரே?

அந்தத் தடையை எவ்வாறு நீக்க முடியும்? அவ்வியக்கத்தினரால், தமிழ்த் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவ்வியக்கத்தினர், கொழும்புக்கு எதிராக மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்துக்கு எதிராகவும் போரிட்டனர். தமிழ்த் தலைமைத்துவத்தை, விடுதலைப் புலிகளே, முழுமையாக அழித்தொழித்தனர். இராணுவத்தினர் அல்லர். புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்தால் பரவாயில்லை, எமக்கான அரசியல் தீர்வைத் தாருங்கள் என்று தான், தமிழ் மக்கள் வேண்டுகின்றார்கள். நாட்டைப் பிரிப்பது தான் புலிகளின் கொள்கையாக இருந்திருக்க முடியாது. தமிழர் உரிமைகள், கலாசார உரிமைகள் என்பவற்றைத் தான் அவர்கள் கோரியிருப்பார்கள். எவ்வாறாயினும், அவ்வியக்கத்தினரின் முழுமையாக கொள்கைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது, மாகாணசபை உறுப்பினர்களோ ஏற்க முடியாது. அப்படி ஏற்றால், அது இலங்கை அரசமைப்புக்கு எதிரானவர்களாகி விடுவர்.

கே: மலையகத் தமிழர்களின் வீட்டுப் பிரச்சினை தவிர்ந்த ஏனைய பிரச்சினைகள் குறித்து, போதிய அவதானம் செலுத்தப்படுவதில்லை தானே?

அவ்வாறில்லை. அப்பிரதேசங்களின் கல்வி, உட்கட்டமைப்பு, போஷாக்கு, சுகாதாரம் போன்றவை குறித்து அவதானம் செலுத்தி, அவற்றுக்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அவர்களுக்கான வீட்டுத் தேவையும் கல்வித் தேவையுமே பிரதானமாகக் காணப்படுகின்றது. அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன், தோட்டப்புறங்களுக்கு வெளியே, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தப் பிரதான காரணிகள் மூன்று குறித்து, அதிக அவதானம் செலுத்தப்படுகிறது. மலையகத்தின் உல்லாசப் பயணத்துறை குறித்து அதிக அவதானம் எடுத்து, அத்துறையை அங்கு விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கைத்தொழிற்றுறையை விட, உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி தான், மலையகத்துக்குப் பொருந்தும். அத்துடன், தோட்டப் பொருளாதாரம் தான், இலங்கையின் அபிவிருத்திக்கு ஆணிவேராக இருக்கின்றது. அந்தத் தோட்டப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கே: ஐ.தே.கவின் கொள்கை என்ன?

வர்த்தகப் பொருளாதாரத்தின் ஊடாக, சமூகக் கட்டமைப்பைப்  பாதுகாத்துக்கொண்டு, பொதுநல நோக்கோடு முன்னோக்கி நகர்வதே, எமது கொள்கையாகும். இருப்பினும், கடன் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் இப்போது நாம் உள்ளோம்.

முதலில் நாம், பொருளாதார நிலைப்பாடொன்றைக் கட்டியெழுப்பியுள்ளோம். அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு, ஓரளவேனும் கடனைச் செலுத்த முடிகிறது. ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிதி போதாமலுள்ளது. புதிய வேலைத்திட்டங்களுக்காக, புதிதாகக் கடன்பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பழைய வேலைத்திட்டங்களை முடித்துவிட்டு, புதியவற்றில் கைவைப்பதே சிறந்ததென எண்ணியுள்ளோம். எடுத்த கடனை அடைப்பதற்காக, மற்றுமொரு கடனைப் பெறுவது உகந்ததல்ல. அதனால், நாட்டின் தேசிய உற்பத்தித் துறைகளை அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளோம்.

கே: நாட்டில் அமுலில் இருக்கும் சட்டங்கள், நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா?

நாட்டில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், சமூகப் பல்வகைத்தன்மையின் தொழிற்பாடுகள் காரணமாக அமுல்படுத்தப்படுவதில்லை. அவ்வாறான இடங்களில் நாம் அவற்றை அமுல்படுத்த முற்பாட்டால், சர்வாதிகார ஆட்சியை நடத்துவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கே: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

கட்சிகளிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தேர்தலுக்கு முன்னர், நாம் ஓர் இணக்கப்பாட்டுக்குள் வர வேண்டும். அவ்வாறானதோர் இணக்கப்பாடு ஏற்படவில்லையாயின், ஐக்கிய தேசியக் கட்சி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.


You May Also Like

  Comments - 1

  • சிறிகாந்தன் Thursday, 01 February 2018 02:06 PM

    அரசியல்தீர்வு,பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமான பதிலில் வழக்கமான UNPயின் சலாப்பல்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .