2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அந்த 16 பேரின் தலைவிதி

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜூன் 27 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தர்ப்பவாதமே அரசியலின் ஆணிவேராக இருக்கிறது எனலாம். கொள்கைகள் என்பவையெல்லாம், மக்களை ஏமாற்றுவதற்காக, அரசியல்வாதிகள் முன்வைக்கும் சில வார்த்தை ஜாலங்களேயாகும். 

பட்டம், பதவிகள், அதிகாரம் மற்றும் பணம் ஆகியவை தான், அரசியலின் இலக்காக இருக்கிறது. இதைப் புரிந்து கொள்வதற்கு, அரசியல்வாதிகளின் கட்சித் தாவல்கள் பெரிதும் உதவுகின்றன. 

சட்டத்துறைப் பேராசிரியரான ஜீ.எல். பீரிஸ் முதலில், ஜனாதிபதி பிரேமதாசவின் நண்பராக இருந்து, அவர் நியமித்த இளைஞர் ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்தார். 

அதன் பின்னர், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது, அவரது அரசாங்கத்தில் அரசமைப்புத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர், 2001ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க, பிரதமராகப் பதவியேற்ற போது, அவரது அரசாங்கத்திலும் நீதி அமைச்சராக இருந்தார். அதையடுத்து, சந்திரிகா குமாரதுங்கவின் கட்சியின் மூலம் ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த போதிலும், சந்திரிகாவின் எதிரியான மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து, அவரது அரசாங்கத்தில் முதலில் அரசமைப்புத்துறை அமைச்சராகவும் பின்னர், வெளிநாட்டமைச்சராகவும் இருந்தார்.   

இதேபோல், மஹிந்த சமரசிங்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சுசில் பிரேமஜயந்த, ராஜித சேனாரத்ன போன்றவர்களும் பட்டம் பதவிகளுக்காகத் தமது தலைவர்களை துக்கியெறிந்தவர்களாவர். 

பட்டம் பதவிகளுக்காக இவ்வாறு செய்பவர்கள், தெற்கைப் போல வடக்கில் அவ்வளவு இல்லையென்றாலும், கிழக்கில் கட்சித் தாவல்களைப் பற்றிய உதாரணங்கள் அதிகம் உள்ளன.   

அண்மையில், அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த, 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களும் அதே ரகத்தைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்களது நிலைமை, தற்போது மிகவும் மோசமானதாகவே தெரிகிறது.  

அவர்கள், அரசியல் அநாதைகளாவார்களோ என்ற சந்தேகமும் தற்போதைய நிலையில் எழுகிறது. அவர்கள் நினைத்ததைப் போல், மஹிந்த ராஜபக்‌ஷ அணியினரிடமிருந்து அவர்களுக்கு வரவேற்புக் கிடைக்காமையே, அவர்களது இன்றைய கவலைக்குரிய நிலைமைக்குக் காரணமாகும்.  

ஒன்றிணைந்த எதிரணி என்றழைக்கப்படும், நாடாளுமன்றத்தில் தனியாகச் செயற்படும் மஹிந்த அணியினர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கடந்த மார்ச் மாதத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய போது, ஒன்றிணைந்த எதிரணியினர், தமக்குச் செங்கம்பள வரவேற்பை வழங்குவர் என அந்த 16 பேரும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடைபெறவில்லை.   

தமது கட்சித் தலைவர்களோடு, தொடர்ந்தும் அரசாங்கத்தில் இராது, அரசாங்கத்தை விட்டு வெளியேறியதை நியாயப்படுத்த, அவர்கள் பல காரணங்களை முன்வைக்கின்றனர்.   

அவற்றில் சில காரணங்கள், நியாயமானவையாகத் தென்பட்ட போதிலும், அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறவும் எடுத்த முடிவு, உண்மையிலேயே கொள்கை ரீதியிலான முடிவு அல்ல. அது, மூழ்கும் கப்பலில் இருந்து, எலிகள் தப்பி ஓடுவதற்குச் சமமான சந்தர்ப்பவாத செயலே அல்லாது வேறொன்றுமல்ல.  

அவர்கள் எதிர்பார்த்த வரவேற்பு, ஒன்றிணைந்த எதிரணியினரிடம் இருந்து கிடைக்காமையால், அவர்கள் மீண்டும் அரசாங்கத்துடன் போய்ச் சேரவும் விரும்பலாம். ஆனால், இப்போதைக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.  

 முதலாவதாக, அவர்கள் தாமே, அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை மறந்து, மீண்டும் அரசாங்கத்துடன் சேர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ‘வெட்கம்’ என்பது, பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இல்லாததால், அதையும் செய்யலாம் தான்.   

ஆனால், ஐ.தே.க அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமே? ஐ.தே.க அதற்குத் தயாராக இல்லை. எனவே, அவர்கள் இப்போது, இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறார்கள்.  இந்த 16 எம்.பிகளும் அரசாங்கத்திலும் நாடாளுமன்றத்திலும் பதவிகளை வகிக்கும் போதுதான், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். உண்மையிலேயே, அவர்கள் ஐ.தே.க தலைவருக்கு எதிராக, இவ்வாறு செயற்பட, நியாயமான காரணங்கள் இல்லாமல் இல்லை.   

மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அடங்கியிருந்த பிரதான குற்றச்சாட்டாகும். இந்தக் காரணத்தை ஒருபுறம் வைத்துவிட்டாலும், அதற்கு முன்னரும் அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை, ஐ.தே.க கணக்கிலெடுக்கவில்லை.   

தனது பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவிக்கிரமவுக்கு, அமைச்சு அலுவலக அறையொன்றை வழங்க, அமைச்சர் கபீர் ஹாஷிம் மறுத்தமை, இதற்குச் சிறந்த உதாரணமாகும்.   

இதேபோல், ஜனாதிபதியையும் கணக்கிலெடுக்காமலேயே, ஐ.தே.க பல முடிவுகளைக் கடந்த காலத்தில் எடுத்திருந்தது. ஜனாதிபதி, அவற்றில் சில முடிவுகளை மாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  

 போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும், மனிதஉரிமை மீறல்களை விசாரிப்பதற்காக, வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக் கொள்ள, 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. பின்னர், ஜனாதிபதி அதை எதிர்த்தார். 

இதுபோன்ற மோதல்கள் காரணமாக, இந்த 16 பேரும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்ததில், ஆச்சரியம் ஏதும் இல்லை.   

ஆனால், இந்தப் பிரச்சினைகள், ஏனைய ஸ்ரீ ல.சு.க அமைச்சர்களுக்கும் பிரச்சினைகளாகவே இருந்து வந்துள்ளன. அதேவேளை, அரசாங்கத்திலிருந்து விலகுவதென்ற முடிவை, இந்த 16 பேரும் கொள்கை அடிப்படையில் எடுத்திருந்தால், அவர்கள் அதை, நீண்ட காலத்துக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டும்.   

எல்லாவற்றையும் விட, முக்கியமான விடயம் என்னவென்றால், அவர்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டும், பட்டம் பதவிகள் மற்றும் அவற்றோடு இணைந்த வசதிகளைக் கைவிட நினைக்கவில்லை. 

இவர்களோடு தொடர்ந்தும், அரசாங்கத்தில் கடமையாற்றுவதில்லை என, ஐ.தே.க தெரிவித்ததன் பின்னர், வேறு வழியில்லாமலேயே அவர்கள், தமது பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்தனர்.  

ஐ.தே.க முக்கிய இடத்தை வகிக்கும் அரசாங்கத்திலிருந்து, விலகுவதற்கு அவர்களுக்குக் காரணம் இருந்திருக்கலாம். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையை விட்டுவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையை ஏற்பதற்கான காரணங்கள் இருப்பதாக, அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறிருக்க, இவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றவுடன், மஹிந்தவின் தலைமையை ஏற்பதாகக் கூறலாயினர்.  அரசாங்கத்திலிருந்து விலகும் வரை, அவர்கள் மைத்திரியே தமது தலைவர் எனக் கூறி வந்தனர். ஒரு முறையே ஜனாதிபதியாக இருப்பேன் என, மைத்திரிபால பதவிக்கு வந்தவுடன் கூறியிருந்தார்.   

அவ்வாறிருக்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது,  ஸ்ரீ ல.சு.கவின் வேட்பாளர் மைத்திரியே என, கடந்த வருடம் ஸ்ரீ ல.சு.க மத்திய குழு தீர்மானித்தது. 

அந்த முடிவை எடுப்பதிலும், அதை நாட்டுக்கு அறிவிப்பதிலும், இந்த 16 பேரில், டிலான் பெரேரா போன்றவர்கள் முன்னணியில் இருந்தனர்.  

ஆனால், அரசாங்கத்திலிருந்து விலகியவுடன், மஹிந்தவின் சம்மதத்துடனேயே, ஸ்ரீ ல.சு.கவில் எவராகிலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என, டிலான் பெரேரா போன்றவர்கள் இப்போது கூறுகின்றனர்.   

இந்தக் குழுவில் இருக்கும் பெரும்பாலானோர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐ.தே.கவுக்கும் எதிராகச் செயற்பட்டவர்களாவார்.   

ஆனால், அவ்வாறு செயற்பட்டவர்களில் சிலர், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும், மற்றவர்கள் பொதுத் தேர்தலின் பின்னரும் அரசாங்கத்தில் சேர்ந்து, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.   

கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மஹிந்த உத்தியோகபற்றற்ற முறையில் தலைமை தாங்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 340 சபைகளில் 230க்கும் மேற்பட்ட சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட நிலையில், அவர்கள் இப்போது மஹிந்த அணியுடன் சேர முயற்சிக்கின்றனர்.  

இது தான் அரசியல். அரசியலில் தேசிய நலன்களையும் ஏனைய நலன்களையும் விஞ்சி, தனிப்பட்டவர்களின் சொந்த நலன்களே முன்னுரிமை பெறுகின்றன. தனி நபர்களின், சொந்த நலன்கள் முன்னுரிமை பெறுவதாலேயே, கூட்டு எதிரணியினர், தமது நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்துவிட்டு, அதனால், அரசாங்கத்திலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டுத் தம்மிடம் வரும், இந்த 16 பேரை ஏற்க மறுக்கின்றனர்.   

அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், அவர்களைத் தமது அணியில் சேர்த்துக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருந்தும், அவர்களுக்குத் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்க நேரிடும் என்பதால் தான், மஹிந்தவின் அணியினர் இப்போது அவர்களை ஏற்க மறுக்கின்றனர்.   

“தமது அணியில் சேர்வதாக இருந்தால், இந்த 16 பேரும், ஸ்ரீ ல.சு.கவிலிருந்து இராஜினாமாச் செய்துவிட்டே வர வேண்டும்” எனக் ஒன்றிணைந்த எதிரணியினர் இப்போது கூறுகின்றனர். தாம் சமமாக மதிக்கப்படுவோம் என்ற உத்தரவாதம் இன்றி, அவ்வாறு செய்ய 16 பேர் குழுவும் தயாராக இல்லை.   

அதேபோல், தமது அணியில் சேர வருபவர்கள், ஒரு குழுவாகவன்றி, தனித்தனியே வர வேண்டும் என்றும், வருபவர்கள் வரிசையில் கடைசியில் நிற்க வேண்டும் என்றும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.

 தாம், தனிமைப்படுவோமோ என்ற அச்சத்தால், இந்த 16 பேரும் அதற்கும் தயாராக இல்லை. இந்தக் குழுவினர், ஒன்றிணைந்த எதிரணியைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடனேயே செயற்படுகிறார்கள் என, மஹிந்த அணியின் முக்கியஸ்தரான முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம் கூறியிருந்தார்.  

இந்த 16 பேர்களில் ஒருவரான திலங்க சுமதிபால, பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து, வெற்றிடமாக இருக்கும் அப்பதவிக்கு, அக்குழுவில் ஒருவரான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே போட்டியிட்டார்.   

அவரை ஆதரிக்க வேண்டும் என, மஹிந்த ஆலோசனை வழங்கியிருந்தும் ஒன்றிணைந்த எதிரணியில் பலர், அதை ஏற்க மறுத்தனர். 

பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில்,  இந்த 16 பேரையும் ஒன்றிணைந்த எதிரணியில் சேர்க்காததை நியாயப்படுத்தியிருந்தார்.   
“இவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, அவரது அரசாங்கத்தில் பதவிகளைப் பெற்றவர்கள். இந்த நாட்டை, அழிவுப் பாதையில் இட்டுச் சென்ற கொள்கைகளை அமுலாக்கிய அரசாங்கத்தில், அவர்களும் பங்காளிகளாகவே இருந்தனர். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்தே, அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். அவர்கள் பொதுஜன முன்னணியைத் தாக்கிப் பேசினார்கள். இவர்கள், ராஜபக்‌ஷ குடும்பத்தையும் பொதுஜன முன்னணியின் தலைமையையும் கூண்டில் அடைக்க முனைந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, ஒன்றிணைந்த எதிரணியினரின் உணர்வுகள் நியாயமானவையே”என, பீரிஸ் கூறியிருந்தார்.  

எனினும், மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்கியிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமை, இந்த 16 பேருக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது. தம்மை விட்டுச் சென்று, “மஹிந்தவின் ஆசிர்வாதத்துடனேயே இனி எவரும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்று கூறிய இந்த 16 பேரை, கடந்த மாதம் ஸ்ரீ ல.சு.கவின் மத்திய குழுக் கூட்டத்துக்கு அழைத்த மைத்திரி, அவர்களில் சிலருக்குக் கட்சியின் முக்கிய பதவிகளையும் வழங்கினார்.

 மைத்திரி எந்தளவு பாரிய நெருக்கடியில் இருக்கிறார் என்றால், மஹிந்தவையும் ஸ்ரீ ல.சு.கவின் ஆலோசகர் சபையின் உறுப்பினர்களில் ஒருவராக நியமித்தார். மஹிந்த, அந்த ஆலோசனைக்குழுக் கூட்டங்களுக்கு வரப் போவதில்லை என்பது சகலரும் அறிந்த விடயம்.

 மைத்திரி கை கொடுத்தாலும் இந்த 16 எம்.பிகளின் எதிர்காலம் மைத்திரியினதும் ஸ்ரீ ல.சு.கவினதும் எதிர்காலத்தைப் போலவோ அல்லது அதைப் பார்க்கிலும் இருள் சூழ்ந்ததாகவேதான், அமையும் போல்தான் தெரிகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X