2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமெரிக்க பாதுகாப்புக் கொள்கை 2018

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மட்டிஸ், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மூலோபாய போக்கு பற்றியும் பாதுகாப்புப் பிரிவில் அமெரிக்காவின் முக்கிய முன்னுரிமைகள் பற்றியும் கடந்த மாதம் 19ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்றில் வெளிப்படுத்திய போது பின்வரும் விடையங்கள் கவனம் செலுத்தப்பட வேண்டியவையாக அவதானிக்கப்பட்டன.  

குறிப்பாக, சீனா மற்றும் ரஷ்ய பாதுகாப்பு நகர்வுகள், இராணுவக் கொள்கைகள் பற்றி குறிப்பிட்டிருந்த மட்டிஸ், சீனா மற்றும் ரஷ்யா, வேறு நாடுகளின் பொருளாதார, இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு விடயங்களில் தலையீடு செய்வதன் மூலமாகவும் ஏனைய நாடுகளின் இறையாண்மையை மீறுவதன் மூலமாகவும் உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்க முனைவதாகவும் இது குறித்த நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து நல்லுறவுகளை பேணமுடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிடும் எனவும் இவ்வாறான நிலைகள் தொடரும் பட்சத்தில் அமெரிக்கா குறித்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ வல்லமையுடன் தயாராகவே உள்ளது எனவும் தெரிவித்திருந்திருந்தார்.  

அமெரிக்க - ரஷ்ய உறவுநிலையைப் பொறுத்தவரை அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கம் ரஷ்யாவுடன் நட்பான நிலையை பேணுவதை புறத்தோற்ற அடிப்படையில் விரும்பவில்லை. இதற்கான காரணம் தொடர்ச்சியாக அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் ரஷ்யா கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடாக தலையிட்டிருந்தது என குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.  

சீனாவுடனானன சீண்டலுக்கு காரணம், சீனாவின் பொருளாதார சுரண்டலால் அமெரிக்காவின் பொருளாதாரம் உலகின் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுவதை அமெரிக்கா விரும்பாமையாகும்.  

இரண்டாவதாகக் குறிப்பிட வேண்டிய விடயம், இந்திய - பசுபிக் பிராந்தியம் தொடர்பான கருத்தாகும். ஒரு சுதந்திரமான இந்திய பசிபிக் மற்றும் கிழக்காசிய பசுபிக்கில் இணைந்த இராணுவ பலத்தை கட்டியெழுப்புவது பற்றி மட்டிஸ் குறிப்பிட்டமை, ஒன்று, சீனாவுடனான அதிகார எதிர்ப்பு போக்குடன் பார்க்கப்பட வேண்டியது என்பதுடன், இரண்டாவதாக, குறித்த பிராந்தியத்தில் இணைந்த பாதுகாப்பை பேணுவதன் மூலமாக இந்தியா, பாகிஸ்தான் தவிர்ந்த மூன்றாவதும் பலம் பொருந்தியதுமான அணுசக்தி வல்லமை உடைய நாடாக அமெரிக்காவை குறித்த பிராந்தியத்தில் தக்க வைத்தல், அதன் மூலமாக வடகொரியாவுடன் அணுவிவகாரம் தொடர்பான சர்ச்சையில் நேரடியாக தலையீடு செய்தலை மையமாகக் கொண்டதாகும்.  

மூன்றாவதாக, பயங்கரவாதத்தை எதிர்த்தல் தொடர்பான கருத்தாகும். மத்திய கிழக்கை தவிரவும் (குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அதனோடிணைந்த இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், துருக்கி பி.கே.கே மற்றும் ஈராக் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் YPG என்பன) ஜெய்ஷ்-ஈ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஈ-தொய்பா போன்ற இந்தியாவை இலக்கு வைக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை கொண்டு வந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் ஒரு பகுதியாகவே பாகிஸ்தானிய வெளிநாட்டமைச்சர் கவாஜா ஆசிப் உடனான சந்திப்பில், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் றெக்ஸ் டிலெர்ஸன், ஜெய்ஷ்-ஈ-முகம்மது, லஷ்கர்-ஈ-தொய்பா(Lashkar-E-Taiba) உள்ளிட்ட 20 பயங்கரவாத குழுக்களை பட்டியலிட்டிருந்தார் என்பதுடன் அவை தொடர்பில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இருவேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்திருந்திருந்தார்.  

மறுபுறம் இதனடிப்படையிலேயே பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த மனிதாபிமான உதவித் தொகையின் ஒரு பகுதியையும் ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தியிருந்தார். எவ்வாறிருக்கும் போதிலும் அமெரிக்காவின் மேற்குறித்த நடவடிக்கையை அடுத்து ரஷ்யாவின் பொருளாதார உதவியை பாகிஸ்தான் உட்கட்டமைப்பை விருத்திசெய்தல் தொடர்பில் நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிலையானது இந்தியாவை குறித்த பிராந்தியத்தில் தனிமைப்படுத்தும் ஒரு நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதை இந்தியா அறிந்துகொண்டுள்ளமை இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகள் இந்திய - அமெரிக்கா தவிரவும் இந்திய - ரஷ்ய உறவு வலுப்படுத்தலுக்கு அவசியமானது.  

இறுதியாக ஈரானின் அணு நிலை பற்றி ஜிம் மட்டிஸ் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. ஏற்கெனவே பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை உடைய நாடுகள் மற்றும் ஜேர்மனி ஆகியன இணைந்து ஈரானுடன் அணு தொடர்பான ஒப்பந்தத்தின் இணங்கிய பின்னராகவும் தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான கருத்தானது இஸ்ரேலின் பாதுகாப்பு சார்ந்ததாகவே பார்க்கப்படவேண்டியது. அண்மைக்காலத்தில் குறித்த விடயப் பொருளானது மத்தியகிழக்கு வெளிவிவகார கொள்கைகளில் பெருமளவில் தாக்கம் செலுத்தாது. ஆயினும், நீண்ட கால மத்தியகிழக்கின் பாதுகாப்பில் நிச்சயம் ஈரான் - அமெரிக்க முறுகல் நிலை செல்வாக்கு செலுத்தும் என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X