2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசியலில் கொள்கைகள் அல்ல புள்ளிவிவரங்களே முக்கியம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 18 பேர், அரசாங்கத்திலிருந்து விலகி, எதிர்க்கட்சியினரோடு அமர இருப்பதாக, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஒன்றிணைந்த எதிரணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். ஆனால், இன்றுவரை அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவரும் எதிர்க்கட்சியின் பக்கம் தாவவில்லை.  

தாம் கூறியவாறு அரசாங்கத்தை விட்டு, ஏன் எவரும் செல்லவில்லை என்பதை, ஒன்றிணைந்த எதிரணியினர் தெளிவுபடுத்தவில்லை.

அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினரோ, ‘ஏன் நீங்கள் கூறியவாறு எவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை’ என்று அவர்களிடம் கேட்கவும் இல்லை.  

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரும் அதை மறந்துவிட்டது போலவே, பொது மக்களும் அதை மறந்துவிட்டார்கள். அவர்களது கூற்றை, அந்த நாட்களிலாவது எவரும், அவ்வளவு பாரதூரமாகப் பொருட்படுத்தவுமில்லை. அது வெறும் வாய்ச் சவடால் என்பதைச் சகலரும் அறிந்து இருந்தார்கள் போலும்.  

அரசாங்கத்திலிருந்து சிலர் இதோ வந்துவிட்டார்கள், அதோ வந்துவிட்டார்கள் என்று, அதற்கு முன்னரும் பலமுறை ஒன்றிணைந்த எதிரணியினர் கூறியதுண்டு. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ அல்லது அரசாங்கத்திருக்கும் மைத்திரி அணியிலிருந்தோ ஒருவரேனும் எதிர்க்கட்சிக்குத் தாவவில்லை.   

பவித்ரா வன்னியாரச்சி போன்ற, கடும் மஹிந்த ஆதரவாளர்கள் ஓரிருவர், 2015 ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலுக்கு முன்னர், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றிருந்து, பின்னர் அவற்றைக் கைவிட்டுச் சென்றிருந்தார். ஆனால், அவர் கடும் மஹிந்த ஆதரவாளர் என்பதால், அதை அரசாங்கத்தின் வீழ்ச்சியாக எவரும் கருதவில்லை.  

ஆனால், இப்போது சற்று வித்தியாசமான நிலைமை உருவாகியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கத்தின் கீழ், பாரிய அளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதால், தொடர்ந்தும் தம்மால் அரசாங்கத்தில் இருக்க முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாக இருக்கும் 12 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியிருப்பதாகக் கடந்த வாரம் செய்திகள் வௌியாகின. 

அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் அந்த 12 பேர்களுக்குள் அடங்குவதாகக் கூறப்படுகிறது.   

தாம், ஏதோ இது வரை ஊழல் பேர்வழிகளோடு செயற்பட்டதே இல்லை என்றதைப் போல்த்தான் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

அண்மையில், மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில், பாரியதோர் ஊழல் இடம்பெற்ற போதிலும், மஹிந்தவின் ஆட்சியே இது வரை இலங்கையில் மிகவும் ஊழல் மலிந்த ஆட்சியாகும்.  

 அந்த ஆட்சியில், அனேகமாக சகலரும், வழிப்பறி கொள்ளையர்களைப் போல்தான் நடந்து கொண்டார்கள். ஊழல் காரணமாக, இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது எனக் கூறும் இந்த 12 பேரும், அந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருந்தவர்கள். எனவே, ஊழல்தான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது என்பதை நம்ப முடியாது.  

எவ்வாறாயினும், இதோ கட்சி தாவப் போகிறார்கள், அதோ கட்சி தாவப் போகிறார்கள் என்று, ஒன்றிணைந்த எதிரணியினர் கூச்சலிடுவதும், அதை கேட்டு ஜனாதிபதி மைத்திரிபாலவின் அணியினர் திடுக்கிடுவதும், ஒரே கட்சியாகத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், ஸ்ரீ ல.சு.க தொடர்ந்தும் ஒரே கட்சியல்ல; இரண்டு கட்சிகளே என்பதையே காட்டுகின்றது. ஆனால், உலகமே அறிந்திருக்கும் இந்த உண்மையை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள இரு தரப்பினரும் மறுக்கின்றனர்.   

சில தினங்களுக்கு முன்னர், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறையில், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை பார்வையிட்டுவிட்டுத் திரும்பி வரும்போது, ஊடகவியலாளர்களைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “தாம் இன்னமும் ஸ்ரீ ல.சு.கட்சிக்காரர்தான்” எனக் கூறியிருந்தார்.

அது மட்டுமல்ல, தாம் ஒருபோதும் ஸ்ரீ ல.சு.க தலைவர் பதவியிலிருந்து விலகவில்லை என்றும், தம்மை எவரும் அப்பதவியிலிருந்து விலக்கவும்இல்லை என்றும் தாமே இப்போதும் அக்கட்சியின் தலைவர் என்று சர்ச்சைக்குரியதும் ஆனால் ஒருவித வினோதமான கருத்தையும் வெளியிட்டு இருந்தார்.  

தாம் தான், கட்சியின் தலைவர் என மார்தட்டிக் கொள்ளும் மஹிந்த, கடந்த மூன்றாம் திகதி, கொழும்பு, கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற, 
ஸ்ரீ ல.சு.கவின் 66 ஆவது வருடாந்த மாநாட்டுக்குத் தம்மை அழைக்கவில்லை என, மைத்திரி அணியைக் குறைகூறியிருந்தார். “அழைப்பு கிடைத்தது; ஆனால் அவர்கள் விரும்பித் தம்மை அழைக்கவில்லை” எனப் பின்னர் கூறியிருந்தார்.

“அழைப்பு கிடைத்தாலும், மஹிந்த மாநாட்டில் கலந்த கொள்ள மாட்டார்” என அவரது நெருங்கிய சகாவும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் கூறியிருந்தர்.   

இக் கூற்றுகள், தாமே கட்சியின் தலைவன் என்ற மஹிந்தவின் வாதத்தை முறியடிக்கிறது. அவர்தான் கட்சித் தலைவர் என்றால், மாநாடும் அவர் தலைமையில்தானே நடத்தப்பட வேண்டும்? 

ஆனால், மஹிந்தவின் அணியினர் தனியாக மாநாடு நடத்தவில்லை. மைத்திரிபால தலைமையில் நடைபெற்ற மாநாட்டுக்கு, அழைப்பு வரவில்லை எனக் குறை கூறவே முற்பட்டனர்.   

மஹிந்த ராஜபக்ஷ அணியினர், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற பதிவு செய்யப்பட்ட கட்சியொன்றைத் தமதாக்கிக் கொண்டு, இதைத் தமது கட்சியாக, வளர்த்து வருவது சகலரும் அறிந்த விடயம். 

மஹிந்தவின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவின் தலைமையில், அக்கட்சி நாடு முழுவதிலும் அங்கத்தவர்களைச் சேர்க்கும் திட்டமொன்றை, செயற்படுத்தி வருவதும் சகலரும் அறிந்ததே. 

கடந்த வாரம், தெனியாயவில் நடைபெற்ற கூட்டமொன்றை அடுத்து, ஊடகவியலாளர்களுடன் உரையாடிய மஹிந்த, அடுத்துவரும் தேர்தல்களின், ஒன்றிணைந்த   எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பூ மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் எனக் கூறியிருந்தார்.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், மற்றொரு கட்சியை வளர்ப்பதற்காகச் செயற்படுவதும், அதற்காகப் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதும் ஸ்ரீ ல.சு.கட்சியின் யாப்புக்கு முரணான செயல்களாகும். அவ்வாறு செய்வதே ஒருவரை ஸ்ரீ ல.சு.கவிலிருந்து வெளியேற்றப் போதுமானதாகும். 

அவ்வாறு இருக்கத்தான், மஹிந்த உள்ளிட்ட அவரது அணியினர், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை வளர்த்தும் அதற்காகப் பிரசார பணிகளில் ஈடுபட்டும் வருகிறார்கள்.   

அது மட்டுமல்ல,அவர்கள் பொதுஜன முன்னணிக்காக உழைத்து வருவது, இவ்வளவு தெளிவாக இருந்தும், உத்தியோகபூர்வ ஸ்ரீ ல.சு.கவும் அதன் தலைவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். 

நடவடிக்கை எடுப்பது ஒரு புறமிருக்க, மைத்திரி அணியினர், அவர்களைத் தமது கட்சியின் 66 ஆவது மாநாட்டுக்கும் அழைத்தனர்.  

மஹிந்த அணியினர் தனியாகக் கூட்டம் நடத்தும் போதும், ஆர்ப்பாட்டம் நடத்தும் போதும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர அடிக்கடி கூறுவார். 

ஆனால், ஒரு போதும் அவ்வாறான நடவடிக்கை எடுத்ததில்லை. மஹிந்த அணியின் பலர், தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து, தூக்கியெறியப்பட்ட சம்பவங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.  

இதற்கு என்ன காரணம்? இவ்வாறு, மஹிந்த அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், கட்சி தெளிவாகவே இரண்டாகப் பிளவு படும் என்றும், அப்போது மதில் மேல் இருக்கும் பூனைகளைப் போல், இரு அணிகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் கட்சியின் எம்.பிக்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களைப் போன்றோர்கள், பெரும்பாலும் மஹிந்த அணியினருடனே சேருவர் என்றும், அதனால் தமது அணி பலவீனமடையும் என்றும், மைத்திரி அணியினர் பயப்படுகின்றனர்.   

நாடாளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஸ்ரீ ல.சு.கவின் சாதாரண உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மஹிந்த அணிக்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. 

மைத்திரி அணிக்கு, அக்கட்சியின் உறுப்பினர்களில் 10 அல்லது 15 சதவீத ஆதரவு தான் இருக்கும். எனவே, இப்போதே மஹிந்த அணிக்கும், தமது அணிக்கும் இடையில் தெளிவான பிரிவினைக் கோட்டை வரைந்தால், அது எதிர்வரும் தேர்தல்களின்போது, தமது அணியைப் பாதிக்கும் என ஜனாதிபதி கருதுகிறார் போலும். 

தேர்தல் காலத்தில், மஹிந்த அணியின் பிரபல்யம் வாய்ந்த பிரதேச தலைவர்கள் போன்றவர்களைப் பட்டம், பதவிகளைக் கொடுத்து, தம் பக்கம் இழுக்கலாம் என ஜனாதிபதி கருதுகிறார் என்றும் ஊகிக்லாம்.  

எனவே, இப்போதைக்கு அவ்வாறான தெளிவான கோடொன்றை வரைய, அவர் விரும்பவில்லை. ஏற்கெனவே, அரசாங்கத்தில் இருக்கும் சில  ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அரசாங்கத்தைப் பற்றிப் பகிரங்கமாகவே குறை கூறி வருகிறார்கள். 

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன அதற்கு உதாரணமாகும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது, அதை விமர்சித்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

ஆனால், அதைப் பொருட்படுத்தாது, பிரேமஜயந்தவும் அதே நாட்களில், அத்திட்டத்தை பகிரங்கமாகவே விமர்சித்து இருந்தார்.  

அந்த நிலையில்தான், தொடர்ந்தும் தமக்கு ஐ.தே.கவுடன் அரசாங்கத்தில் இருக்க முடியாது என, 12 ஸ்ரீ ல.சு.க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கடந்த வாரம் கூறியிருக்கிறார்கள்.

 அவ்வாறு அவர்கள் அரசாங்கத்தைப் பற்றி, மனமுடைந்து போகக் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஸ்ரீ ல.சு.க இன் அரசாங்கமொன்றைப் போல், அவர்களுக்கு இந்த அரசாங்கத்தில் அதிகாரமோ வரவேற்போ அல்லது அங்கிகாரமோ இல்லை.   

பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகள் தொடர்பான, பலம் வாய்ந்த சகல அமைச்சுகளும் ஐ.தே.க அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. அத்துறைகள் தொடர்பான சகல முடிவுகளும் ஐ.தே.க அமைச்சர்களே எடுக்கிறார்கள்.   

அதாவது, அரசாங்கத்தின் கடைசிக் காலம், நெருங்கி வருகிறதா என்று பலர் கேட்கலாம். அந்த அளவுக்கு, நிலைமை மோசமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. ஸ்ரீ ல.சு.க எம்.பிக்கள் சுமார் 40 பேர் அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் விலகிவிடுவார்கள் என்று நம்ப முடியாது.   

அவ்வாறு விலகிப் போவதாக இருந்தால், “போகிறோம் போகிறோம்” என்று கூறிக் கொண்டு இருக்காமல், போய்விட வேண்டியது தானே. ஏன் போகிறார்கள் இல்லை? தகுந்த காரணம் இருந்தால், இப்போதே போனால் என்ன? பின்னர் ஒரு நாள் போனால் என்ன? என்ன வித்தியாசம்?  

தற்போது அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், மைத்திரிபாலவின் மீதோ அல்லது புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் மீதோ, ஏற்பட்ட தெளிவோ அல்லது பாசமோ காரணமாக 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் சேரவில்லை.   

அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்கள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவையும் அதேஆண்டு ஒகஸ்ட் மாதம் பொதுத் தேர்தலின்போது, ஐ.தே.க தலைமையிலான கூட்டணியையும் தோற்கடிக்கத் தம்மால் இயன்ற அத்தனையையும் செய்தவர்கள்.  

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மைத்திரிபால, தாம் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது, மறு நாளே அவர் மேற்குலக சக்திகளினதும் தமிழ் பிரிவினைவாத சக்திகளினதும் ‘ஏஜன்ட்’ என பிரேமஜயந்த கூறினார்.   

தற்போது பிரதி அமைச்சராக இருக்கும் நிஷாந்த முத்துஹெட்டிகம, மைத்திரிபாலவின் தேர்தல் மேடையொன்றைத் தீயிட்டு அழித்தவர். 

கடந்த பொதுத் தேர்தலின்போது, தமது திட்டங்களுக்கு எதிராகச் செயற்பட்டதற்காக, ஜனாதிபதி மைத்திரிபாலவையும் பிரேமஜயந்தவையும் அனுர பிரியதர்ஷன யாப்பாவையும் ஐ.ம.சு.மு மற்றும் ஸ்ரீ ல.சு.க பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கவும் நேர்ந்தது. ஆனால், தாமே பதவிக்கு வராமல் தடுக்க முனைந்த அரசாங்கத்தில், சூழ்நிலைகளே அவர்களைச் சேரத் தூண்டியது. 

ஒருபுறம் ஐ.தே.க தலைமையிலான கூட்டணி தனியாக அரசாங்கத்தை நிறுவப் போதிய ஆசனங்களை (113 ஆசனங்களை) பெறவில்லை. எனவே, இவர்களுக்கும் அரசாங்கத்தில் சேர அவகாசம் இருந்தது.   

மறுபுறத்தில் தமக்கு எதிரான ஊழல் விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அமைச்சர் பதவிகளைப் பெற்று, மக்கள் பணத்தில் மீண்டும் சொகுசு வாழ்க்கை நடத்தவும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

அரசாங்கததில் சேர்ந்த சகல ஸ்ரீ ல.சு.ககாரர்களுக்கும் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐ.தே.கவுடன் அரசாங்கத்தில் இருக்க முடியாது என்பதும், ஊழல் காரணமாகத் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க முடியாது என்பதுமே, அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்பவர்களது வாதமாக இருக்கிறது. 

ஆனால், கடந்த வாரம் அமைச்சர் கபீர் ஹாஷிம் கூறியதைப் போல், ஐ.தே.கவுடன் செயற்பட முடியாது என்று கூற, ஸ்ரீ ல சு கவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையே எவ்வித கொள்கை வேறுபாடும் இல்லை. 

தாராள பொருளாதாரக் கொள்கையை இரு கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இரு கட்சிகளுக்கும் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையைப் பற்றி நிலையான கொள்கை இல்லை. இரு கட்சிகளும் ஒற்றையாட்சி முறையை வரவேற்கின்றன. ஆனால், அடிக்கடி சமஷ்டி ஆட்சி முறையையும் ஆதரித்து வந்திருக்கிறார்கள். இரு கட்சிகளும் தேவையான நேரங்களில் இனவாதத்தைத் தூண்டியிருக்கின்றன. இரு கட்சிகளும் பாரியளவில் நாட்டைச் சூறையாடக் கூடிய ஊழல் பேர்வழிகளைக் கொண்ட கட்சிகளாகும்.  

எனவே, கொள்கை என்று வரும்போது, இவர்களுக்கு அரசாங்கத்தை விட்டு விலகக் காரணமே இல்லை. அதேவேளை, ஊழல் விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் அவசியம் இப்போது இல்லை என்று கூற முடியாது. 

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்ற பெரும் புள்ளிகளே கூண்டில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தாம் தப்பிவிடுவோம் என்ற உத்தரவாதம் அவர்களுக்கு இல்லை.  

சரி, இவ்வனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, அரசாங்கத்திலிருந்து வெளியேறி, இவர்கள் எதைத்தான் சாதிக்கப் போகிறார்கள்? அத்தனை ஸ்ரீ ல.சு.ககாரர்களும் மஹிந்தவுடன் கூட்டுச் சேர்ந்தாலும் அவர்களிடம் 95 நாடாளுமன்ற ஆசனங்கள் மட்டுமே இருக்கும். 

ஐ.தே.கவிடம் 106 ஆசனங்கள் இருக்கின்றன. மற்றைய கட்சிகளில் இருந்து ஆட்களை விலைக்கு வாங்கி, அரசாங்கத்தை அமைப்பதாக இருந்தால், ஸ்ரீ ல.சு.கவைப் பார்க்கிலும் 
ஐ.தே.கவுக்கே அதை இலகுவாகச் செய்ய முடியும். அதுதான் நடந்தும் இருக்கிறது.  

மற்றொரு முக்கியமான காரணம் என்னவென்றால், ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அனைவரும் ஒருபோதும் மஹிந்தவுடன் கூட்டுச் சேரப் போவதில்லை. மஹிந்த அமரவீர, மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் மைத்திரியை விட்டுப் போவார்கள் என்று இப்போதைக்கு நம்ப முடியாது. எனவே அரசாங்கம் பிழைக்கும் வாய்ப்புகளே அதிகம். 

எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம் என்வென்றால், 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படி, அரசாங்கம் பதவிக்கு வந்து நாலரை ஆண்டுகள் போகும்வரை, அதாவது 2020 ஜனவரிவரை, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.  

அவ்வாறாயின் ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அத்தனை பேரும் அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் அராஜக நிலை ஏற்படுமேயல்லாது வேறு எந்தப் பயனும் கிடைக்காது. 
அமைச்சர் பதவிகளை விட்டுவிட்டு, இவ்வாறானதோர் நிலைமையையா அடைய வேண்டும்? 

எனவேதான் 2020 ஆம் ஆண்டுவரை, அரசாங்கத்தை அசைக்க முடியாது என மைத்திரிபால அடிக்கடி கூறுகிறார். 

கொள்கைகள் அல்ல, புள்ளி விவரங்களே அரசாங்கம் அமைப்பதில் முக்கியமாகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X