2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அ.தி.மு.க அரசியல்: பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் ராஜீவ் வழிமுறை

எம். காசிநாதன்   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளை; இன்னொரு புறம், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா; மூன்றாவது பக்கம், திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த, பொன் விழா ஆகும்.   

ஆனால், இந்த விழாக்களை எல்லாம், இப்போது அ.தி.மு.கவுக்குள் நடந்து கொண்டிருக்கும் ‘பேட்டிப் போர்’ மற்றும் ‘அறிக்கைப் போர்’ ஆகியன மிஞ்சி விட்டன.   

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இது எதிர்பாராத சோதனை. 

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, இப்போது டி.டி.வி தினகரனும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கி விட்டமை பெரும் அதிர்வலைகளை 
அ.தி.மு.கவுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.  

“இரு அணிகளும் இணைவதற்கு அவகாசம் கொடுத்தேன்; அது நடக்கவில்லை. ஆகவே 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார் செய்யப் போகிறேன்” என்பது டி.டி.வி தினகரனின் முழக்கம்.   

இதற்குச் சசிகலாவின் ஆதரவு இருக்கிறது என்பதை, அவரை அடிக்கடி பெங்களூர் சிறைக்குச் சென்று சந்தித்து, அ.தி.மு.கவினருக்கு உறுதிபடுத்துகிறார் தினகரன்.   

‘திஹார் ஜெயில்’ விடுதலைக்குப் பிறகு, “நான்தான் கட்சி” என்று, துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் தினகரன், போர்க்கொடி தூக்கியிருப்பது, ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு, “இணைப்புக்கு முற்படுங்கள்” என்று அழுத்தம் கொடுப்பதாக இருந்தாலும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு “நாங்கள் உங்களை இணைக்கக் கூடாது என்று கூறவில்லை” என்ற செய்தியை அறிவிப்பதுபோல் இருக்கிறது.   

ஆனால், இப்போது இணைப்புக்குத் தடையாக இரண்டு விடயங்கள் இருக்கின்றன.  முதலாவது, முதலமைச்சர் பதவி; இரண்டாவது, “எக்காரணம் கொண்டும் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை, அ.தி.மு.கவுக்குள் கொண்டு வரக்கூடாது” என்ற பாரதிய ஜனதா கட்சியின் நிபந்தனை ஆகும்.   

இந்தக் காரணங்கள் இரண்டும், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் பொருந்தும். இந்நாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் பொருந்தும்.  இது போன்ற காரணங்களால், இணைப்பு நடக்காது என்று தெரிந்தும் தினகரன் அதை முன் வைத்தே அரசியல் செய்கிறார்.   

ஏன் இணைப்பு நடக்காது? முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், அந்தப் பதவி அவருக்கு கிடைக்காத வரை, எடப்பாடி பழனிசாமியின் அணியுடன் இணைவதற்கு நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டார். ஏனென்றால், எடப்பாடி அமைச்சராக இருந்த போதே, மூன்று முறை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ஓ. பன்னீர்செல்வம்.   

அதேபோல், முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆவதையோ, அ.தி.மு.கவுக்குப் பொதுச் செயலாளர் ஆவதையோ ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்.   

இதற்கு, எடப்பாடி அணியில் உள்ள மற்றக் கட்சி நிர்வாகிகளும் காரணம். ‘கட்சியையும் ஆட்சியையும் நம் கையில் வைத்துக் கொள்வோம்’ என்பதில், எடப்பாடி அணியினர் தீவிரமாக இருக்கிறார்கள். அதனால், இரு அணிகளின் இணைப்பும் இழுபறி ஆகிக் கொண்டிருக்கிறது.  

இன்றைக்குத் தமிழகத்தில், பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும்தான் ‘எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு’ பேசப்படுகிறதே தவிர, அந்த இருவரின் அணிகளில் உள்ளவர்களில் கணிசமான எண்ணிக்கையானோர், இந்த இணைப்புக்குத் தயாராக இல்லை.   

எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாருக்கோ, அமைச்சர் தங்கமணிக்கோ, ஓ. பன்னீர்செல்வத்தை இணைத்து, அவருக்கு அங்கிகாரம் அளிப்பதில் விருப்பம் இல்லை.   

அதேபோல், ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கே.பி. முனுசாமி ஆகியோருக்கு எடப்பாடி அணியுடன் இணைய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இதற்கு, அடிப்படைக் காரணம், ஒட்டுமொத்த அ.தி.மு.க உறுப்பினர்கள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் அமோக ஆதரவு.   

ஜெயலலிதா மறைந்தவுடன், சசிகலா எதிர்ப்பில் வெளியில் வந்த ஓ. பன்னீர்செல்வத்தை, அ.தி.மு.கவில் உள்ளவர்கள் ‘ஹீரோ’வாகப் பார்க்கிறார்கள். இன்னொரு காரணமும் இருக்கிறது. தற்போது எடப்பாடி அணியில், அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் இருப்பவர்களுக்கு எதிராக, அந்தந்த மாவட்டங்களில், போட்டி அரசியல் செய்தவர்கள் அனைவரும், இப்போது 
ஓ. பன்னீர்செல்வத்துடன் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.  இவர்களுக்குள் உள்ள உள்ளூர் அரசியல், மாநில அளவில் இவர்களை ஒருங்கிணைந்து செயல்பட முடியாதவாறு தடுக்கிறது. ‘எடப்பாடி - ஓ.பி.எஸ்’ தரப்பு, ‘இனிகூடி வாழ்வதால், கோடி புண்ணியம்’ கிடைக்காது என்றே கருதுவதாகத் தெரிகிறது.   

தி.மு.கவும் - மறுமலர்ச்சி தி.மு.கவும் எப்படி இணைவது சாத்தியமில்லையோ, அந்தநிலை நோக்கிதான் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் இணைப்பு விவகாரமும் சமாந்தரக் கோடுகளாகவே பயணித்துக் கொண்டிருக்கின்றன.   

அதனால், அ.தி.மு.க அரசியல் பேட்டிகள் காரசாரமாக இருக்கின்றன. “தினகரன் பற்றி, அமைச்சர் ஜெயக்குமார் இப்படியே பேசிக் கொண்டிருந்தால், அமைச்சர் பதவியை இழக்க நேரிடும்” என்று தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி வேல் எச்சரிக்கை விடுத்தார்.   

“எடப்பாடி பழனிசாமி அரசாங்கம், ஊழல் அரசாங்கம்” என்று முதலமைச்சரின் சொந்த மண்டலமான கொங்கு மண்டலத்தில் நின்று கொண்டு, பேட்டி அளித்தார் ஓ. பன்னீர்செல்வம்.   

விழுப்புரத்தில் அதற்குப் பதிலடி கொடுத்த, எடப்பாடி ஆதரவு அமைச்சர் சி.வி.சண்முகம், “ஊழல் பற்றி பேச ஓ. பன்னீர்செல்வத்துக்கு அருகதை இல்லை” என்று கடுமையாகச் சாடினார்.   

இப்படி இரு அணிகளின் இணைப்பு விவகாரம், பேட்டிகள் மற்றும் அறிக்கைகளால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்களோ, ‘கட்சிக்கு இது என்ன புதிய சோதனை’ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

‘எடப்பாடி- ஓ.பி.எஸ்’ அணியை இணைத்து வைக்கும் கை, இப்போதைக்கு டெல்லியில்தான் இருக்கிறது. அதுதான் பாரதிய ஜனதாக் கட்சி. அ.தி.மு.கவைச் சேர்ந்த இரு அணிகள் மீதுமுள்ள ‘ஊழல் ஆயுதங்கள்’ அனைத்தும் மத்திய அரசாங்கத்திடம் இருக்கின்றன.   கரூர் அன்புநாதன் சுற்றிவளைப்பு சோதனைகள், 
ஆர்.கே நகர் தொகுதியில் வருமான வரித்துறையின் சுற்றிவளைப்பு சோதனைகள், மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி சுற்றிவளைப்பு சோதனைகள், குட்கா டைரி என்று அனைத்து விடயங்களிலும் பலவற்றில், எடப்பாடி பழனிசாமி அணியும் சிலவற்றில் ஓ. பன்னீர்செல்வம் அணியும் சிக்கிக் கொண்டிருக்கின்றன.   

ஊழல் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பா.ஜ.க இரு அணிகளையும் இணைக்க முயலலாம். ‘அ.தி.மு.க அணிகள் இணைந்த பிறகு, ஒன்றுபட்ட அ.தி.மு.கவுடன்தான் பா.ஜ.க கூட்டணி வைக்கும்’ என்று, பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவருவது இதன் பின்னனியில்தான்.   

இது உண்மையில், ராஜீவ் காந்தி கையாண்ட வழிமுறை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.கவில் ஓர் அணி, ஜெயலலிதா தலைமையிலும் இன்னோர் அணி எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலும் பிரிந்தன.   

அதை, இன்றைக்கும் ‘சேவல்’, ‘இரட்டைப்புறா’ அணி என்று அழைக்கிறார்கள். இந்த இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே அ.தி.மு.கவுடன் கூட்டணி என்று கூறி, ராஜீவ் காந்தி அப்போது ஜானகி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்க மறுத்தார்.   

ராஜீவ் காந்தியின் இந்த வழிமுறையை, இப்போது பிரதமர் மோடி விரும்புகிறார் என்று செய்திகள், அதுவும் ஆங்கில இந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.   

ஆகவே, அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க கூட்டணி வேண்டும் என்றால், “நீங்கள் முதலில் இணைந்து செயல்படுங்கள்” என்பது விடுக்கப்பட்டுள்ள செய்தி. ஆனால், இந்த ஆட்டத்தில் தினகரனோ, சசிகலா தரப்போ கலந்து கொள்ளக் கூடாது என்பது பா.ஜ.கவின் உத்தரவு.  

இணைக்கும் சக்தி, பா.ஜ.க கையில் இருக்கிறது என்றாலும் முதலமைச்சர் என்ற பதவியை, எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுப்பாரா என்பதும் அந்தப் பதவி இல்லாமல், ஓ. பன்னீர்செல்வம் இணைப்புக்குச் சம்மதிப்பாரா என்பதும், விடைகாண முடியாத கேள்விகளாகவே இருக்கின்றன.   

இந்தக் கேள்விகளுக்குத் தீர்வு காண்பது என்றால், ஒன்று இரு அணிகளும் பதவி பற்றிக் கவலைப்படாமல் இணைப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அப்படி இல்லையென்றால், அணி வகுத்து நிற்கும் ஊழல் புகார்களின் அடிப்படையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தன்னிடம் உள்ள, ஆட்சி அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலையை, அப்படியொரு நெருக்கடியை, டெல்லியில் சகல அதிகாரங்களுடனும் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி செய்யக்கூடும்.   

முதலமைச்சர் பதவி மட்டுமே இணைப்புக்குத் தடையாக இருக்கிறது என்றால், எடப்பாடியிடம் இருக்கும் ஆட்சி அதிகாரத்தை, இழக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவது ஒன்றே தீர்வு, என்று பா.ஜ.க கருதினால், பிரிந்து நிற்கும் இரு 
அ.தி.மு.க அணிகளும் வேறு வழியின்றி ஒன்று சேரும். தமிழகத்தில் தேர்தல் வரும் சூழல் ஏற்பட்டு, புதிய அரசாங்கம் உருவாகும் நிலை ஏற்படலாம். ஆனால், இந்த இணைப்பு விவகாரத்தில், தினகரனோ, சசிகலாவோ சேர முடியாது என்பதால்தான், இப்போதைக்கு தினகரன் முழக்கம் அ.தி.மு.கவுக்குள் பலமாகக் கேட்கிறது.   

ஆனால், ‘சசிகலா உறவினர்கள் அ.தி.மு.கவில் இருக்கக்கூடாது’ என்று, ஏற்கெனவே பா.ஜ.க ‘சக்கர வியூகத்தை’ வகுத்து விட்டது. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் தினகரன், இப்போதைக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் நிற்கிறார் என்பதே யதார்த்தமான நிலைமை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .