2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்

காரை துர்க்கா   / 2018 மே 13 , மு.ப. 10:45 - 1     - {{hitsCtrl.values.hits}}

உலகில் மகிழ்ச்சியான மக்களைக்  கொண்ட நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. ஐ.நா சபையின், நிலையான வளர்ச்சித் தீர்வுகள் பிணையம், இந்த அறிக்கையை, மார்ச் மாதம் 14ஆம் திகதி வெளியிட்டிருந்தது. வருமானம், சுகாதாரம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை என்பவற்றின் அடிப்படையிலேயே, இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.   

எல்லோருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்புகள், பின்லாந்தில் வழங்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவம் பேணப்படுகின்றது. இது, பின்லாந்தின் முன் மாதிரி.   

அந்தப் பட்டியலில், மொத்தமாக 156 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், நம் நாடு, 116ஆவது இடத்திலுள்ளது. இறுதியாக 156ஆவது இடத்தில், மத்திய ஆபிரிக்க நாடான புருண்டில் காணப்படுகின்றது. 
இலங்கைத் திருநாடு, கனிசமான இயற்கை வளங்களையும் போதுமான மனித வளத்தையும் கொண்டுள்ளது. ஆனாலும், இலங்கை, 116ஆவது இடத்துக்கு வந்தமைக்கான முதன்மைக் காரணமாக, இனப்பிணக்கே என, வலுவாகக் கூறலாம்.   

இலங்கையில் பெரும்பான்மை இன சிங்கள மக்கள், பொதுவான சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள, சிறுபான்மைத் தமிழ் மக்கள், அந்தப் பிரச்சினைகளுடன், மேலதிகமாக பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத பல பிரச்சினைகளைச் சுமந்துகொண்டே, 70 ஆண்டுகளாக வாழ்கின்றார்கள்.   

இலங்கை, சுதந்திரம் பெற்ற காலப்பகுதி (1948) தொடக்கம், இற்றை வரை, தமிழ்ச் சமூகம் தனது சுதந்திரத்தை, உள்ளூர உணர முடியாமல் உழன்று கொண்டு இருக்கின்றது.   

இதற்கான முக்கிய காரணமாக, இலங்கை அரசியலுக்குள், ஆன்மீகம் (பௌத்தம்) இரண்டறக் கலந்தது ஆகும்.   

பின்லாந்து நாட்டைப் போன்று,  எல்லோர்க்கும் எல்லாம் என்றக் கோட்பாடு,  நமது நாட்டில் பின்பற்றப்பட்டிருந்தால், இனப்பிரச்சினை என்றால் என்ன எனக் கேட்கும் நிலையிலேயே இலங்​ைக மக்கள் இருந்திருப்பர். நாட்டின் அரியாசனத்தில், தமிழ் மக்களுக்கும் சரி ஆசனம் வழங்க மறுத்தமையால் நம் நாட்டில் மகிழ்ச்சி மலர மறுக்கின்றது. துன்பம் துள்ளிக் குதிக்கின்றது.   

பல் இன மக்கள் குழாம் வாழும் இலங்கையில் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என, இனங்களுக்கிடையில் சகவாழ்வு நிலவ வேண்டுமெனின், ஆன்மீகப் பண்புகள் அவர்களை ஆட்கொள்ள வேண்டும்.   

ஆன்மீகத்தையும் வாழ்க்கையையும் பிரிப்பது, தாயிடமிருந்து சேயைப் பிரிப்பது போன்றதே. ஏனெனில், அன்பு, அகிம்சை இரக்கம், ஈகம், உண்மை, உறுதி, ஒழுக்கம், சத்தியம் என்பவற்றை, மனித உள்ளங்களில் வளர்ப்பதே ஆன்மீகம் ஆகும். மறுபக்கத்தில், இவையே மனித வாழ்வின் உயர் பண்புகள் ஆகும்.   

அவ்வகையில், இலங்கையில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதம் பௌத்தம் ஆகும். அரசாங்கத்தையே அரசாளும் மதமும் பௌத்தம் ஆகும். பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளே, அன்பு, அகிம்சை, இரக்கம், ஈகம், உண்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகும். இவையே, புத்தபெருமான் காட்டிய மனித ஈடேற்றத்தின் உன்னத விழுமியங்கள் ஆகும். புத்தபெருமானது வழியிலேயே, தாங்களும் நடந்து கொள்ளவதாக, ஆட்சியாளர்களும் மார் தட்டிக் கொள்கின்றார்கள்.   

ஆனால், இவ்வாறான விழுமியங்களைச் சொந்தமாகக் கொண்ட பௌத்த மதத்தை பின்பற்றுவோர், நாட்டின் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா? அல்லது ஏனைய சக இனங்களை மகிழ்ச்சியாக்க அவர்களால் முடிந்ததா? அனைத்து வளமிருந்தும் ஏன் அந்த மகிழ்ச்சிப் பட்டியலில், நம் நாட்டவரால் முன்னிலை வகிக்க முடியாமல் போனது? ஒட்டு மொத்தமாக நாட்டில், மகிழ்ச்சி மக்களின் மனதில் குடியிருக்கின்றதா? அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு பொதுவான பதில் இல்லை என்பது மட்டுமே.   

ஆகவே, உயர் பண்புகளைக் கொண்ட இனம், ஏனைய இனங்களை புண்படுத்தியதே, எழுபது வருட சுதந்திர வாழ்க்கையில் வேதனை பகிரும் விடயம் ஆகும்.   

அவ்வகையில், ஆன்மீகம் அரசியலுக்குள் புகுந்தும் அரசியல் ஆன்மீகத்துக்குள் புகுந்தும் மாறி மாறி விளையாடி, இன்று இரண்டுமே விளையாட்டாகி விட்டது.   

இலங்கையை இருட்டாக்கிய இனப்பிரச்சினைக்கு வெளிச்சம் கான கொண்டு வரப்பட்ட பல தீர்வுகளை பிக்குகள் தீர்த்துக் கட்டியுள்ளனர். பலரது கூட்டு உழைப்பால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வுப் பெட்டகங்கள், பிக்குகளால் பெட்டிப் பாம்பாகிய பல சம்பவங்கள் உண்டு. இவர்களால், பல தீர்வுப் பொதிகள் பொதியிடப்பட்டுள்ளன.   

கடந்த வருட இறுதியில் மறைந்த யாழ். நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல், யாழ்ப்பாணம் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. இராணுவத்தினரே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இன, மத பிரிவனைவாதம் இல்லாத நல்லிணக்கத்தை, யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என, இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.   

உண்மையில், இந்த தகனக் கிரியை தமிழ் மக்களது மனங்களில் ரணகளத்தையே ஏற்படுத்தியது. இது ஒருவிதமான சிங்கள பௌத்த மேலாதிக்கப் போக்கே என, தமிழ் மக்கள் எண்ணுவதை ஆட்சியாளர்கள் ஒருபோதும் பொருட்படுத்துவது இல்லை. இவ்வாறானச் செயற்பாடுகள், நல்லிணக்கத்துக்கு புள்ளி வழங்காது. மாறாக நல்லிணக்கத்துக்கு கொள்ளி வைத்துள்ளது.   

கடந்த மூன்று வருட காலப்பகுதியில், கொழும்பிலிருந்து எவ்விதமான ஆக்கபூர்வமான நல்லெண்ண சமிக்கையோ அறிகுறியோ தென்படாத நிலையில், எப்படி வடக்கு கிழக்கிலிருந்து ஆரம்பிக்க தமிழ் மக்களது மனங்களால் முடியும்.   

அன்று அன்பை போதித்த போதிமகானின் விகாரைகள் இன்று தமிழர் பிரதேசங்களில் பல தேவையற்ற விவகாரங்களை உண்டாக்கி வருகின்றது. அரச மரத்தைக் கண்டாலே, அச்சப்படும் நிலையில், சிறுபான்மை மக்கள் உள்ளனர்.  

ஏனெனில் நேற்று அரசமரம். இன்று விகாரை. நாளை சிங்கள பௌத்தக் குடியேற்றம், அடுத்த நாள் ஊரின் பெயர் மாறும், அடுத்து அது வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்படும் என ஆக்கிரமிப்புப் பட்டியல் நீளும். இவ்வாறே வடக்கு கிழக்கில் பல கிராமங்கள் பறி போய் விட்டது. இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் தமிழ் மக்களது மனங்களை நாளாந்தம் கறையான் போல அரித்தக் கொண்டே இருக்கின்றது.   

தங்களது ஆற்றாமையாலும் ஆட்சியாளர்களது ஆக்கிரமிப்பாலும் பிறந்து வளர்ந்த தம் ஊர்கள் தங்கள் கண் முன்னாலே கை நழுவிப் போகின்றமை பெரும் மன உளைச்சல் ஆகும். இதனையிட்டு நாட்டில் உள்ள மற்றும் புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் கவலையில் உறைந்துள்ளான். மறுபுறம் நல்லிணக்கம் கை நழுவுவதாக நல்லாட்சி நினைக்காமையை எண்ணி இரட்டிப்பு வேதனை.   

இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் வடக்கு கிழக்கில் உச்சம் பெற்றிருந்தது. கடந்த காலங்களில் யுத்தம் நடத்திய கரங்கள், இம்முறை வெசாக் கூடுகள் கட்டியது. அண்ணா வாங்க, அக்கா வாங்க என அழைத்து தானம் வழங்கினர். வடக்கு கிழக்கின் முக்கிய நகரங்கள் பௌத்த மயமாகியிருந்தது.   

மாவீரர் தினம் கார்த்திகை 27ஆம் திகதி கடைப்பிடிக்கப்படும். இவ்வாறான நிலையில், யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கார்த்திகை விளக்கீட்டை மாவீரர் தினம் என படையினர் எண்ணுவர். ஆதலால், விளக்கீட்டைக் கூட களவாக அனுட்டித்த வரலாறு தமிழ் மக்களுக்கு உண்டு.  

முக்கிய பௌத்த தலைவர்களது கோரிக்கைகளுக்கு அமையவே, மே தினம் மே மாதம் 7ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டதாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்பேற்பட்ட தினத்தைக் கூட மாற்றக் கூடிய சர்வவல்லமை பௌத்த தலைவர்களுக்கு உள்ளது.   

இலங்கையில் உள்ள அனைத்து பௌத்த மத பீடங்களும் ஒருமித்து இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உரிய தீர்வை உடனடியாககக் காண வேண்டும் என அரசாங்கத்தக்கு அழுத்தம் கொடுத்தால் அடுத்த நாள் நிச்சயமாகக் தீர்வு பிறக்கும். அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களும் விரும்பியோ விரும்பாமலோ தலை அசைப்பர். கேள்விக் குறியாகிய இனப்பிரச்சினையை ஆச்சரியக் குறியுடன் பார்க்கும் நிலையை இவர்களால் எற்படுத்தலாம்.   

மகிழ்;ச்சியாக சிரித்த முகத்துடன் இருப்பவர்களை அணுக நோய் அச்சம் கொள்ளும். மனித வாழ்வின் அடிப்படையே மகிழ்ச்சி ஒன்றே. அதைத் தேடியே மனித சமூகம் தினம் தினம் பல படிப்பினைகளுடன் முன் நோக்கி பயனித்துக் கொண்டிருக்கின்றது.   

ஆனால் ஈழத்தில் தாய் மண்ணில் தமிழ் இனம் எதிர்பார்ப்புக்களுடனும் ஏமாற்றங்களுடனும் அங்கலாய்ப்புக்களுடனும் மகிழ்ச்சியைத் (சுதந்திரம்) தொலைத்து விட்டு நெடு நாட்களாய்...  


You May Also Like

  Comments - 1

  • ஜே. ஜி. எட்வேட் பீரிஸ் Tuesday, 15 May 2018 12:25 AM

    அன்பான பதிப்பாசிரியருக்கு. 13.05.2018 ஞாயிறு வெளிவந்த தமிழ் மிரர் இதழில் பிரசுரமான "ஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்" என்ற கா. துர்க்கா அர்களின் கட்டுரையை வாசித்தேன். காலத்திற்கேற்ற கருத்துச் செறிந்த பதிவு அது. அவருக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள். இதில் குறிப்பிடப்படும் அவலங்களுக்கு இனப் பிரச்சினையே அடிப்படைக் காரணம் என்பதை அறிவோடும் தெளிவோடும் சிந்திக்கும் அனைவரும் ஏற்றுக் கொள்வர். எனினும், இக் கருத்து அனைவரையும், குறிப்பாகச் சகோதர மொழி பேசும் பெரும்பான்மை மக்களையும் சென்றடைந்தால் மட்டுமே ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வழி பிறக்கும். இக்கருத்து தங்களுக்கு ஏற்புடையதாயின், முதற் படியாக, இக்கட்டுரையை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து, உங்கள் நிறுவனம் வெளியிடும் ஏனைய மொழிப் பத்திரிகைகளிலும் உடனடியாகப் பிரசுரியுங்கள். செய்வீர்களா? நன்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .