2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியாவின் மாறுபாடான இராணுவ கொள்கைகள்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

சோவியத் ஒன்றியத்துக்கும் அதன் பின்னர் ரஷ்யாவுக்கும் இராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாட விற்பனை தொடர்பான  முக்கிய இறக்குமதியாளராக இருந்த இந்தியா, இன்றைய காலப்பகுதியில் ரஷ்யாவுக்கு நிலையற்ற மற்றும் நம்பமுடியாத ஒரு பங்காளியாக மாறியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்தியா, ரஷ்யாவுடனான உறவுகளில் பரஸ்பர ஆர்வத்தை கொண்டிருந்தாலும், அவ்வாறான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்டாலும், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுடனான பயனுள்ள தொடர்புகளுக்கான வழிகளையே இந்தியா இன்று தீவிரமாக நாடுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விற்பனையாளர்கள் இருப்பதால், இந்தியா கொள்வனவை குறைந்த விலையில் பெற முனைவதும், மேலும் தமது ஆயுதக் கொள்வனவுகள் மூலம், நாட்டின் இராணுவ மற்றும் வெளிவிவகார கொள்கையில் ஐரோப்பிய மற்றும் ஐக்கிய அமெரிக்காவை முன்னிலைப்படுத்துவதும், ரஷ்யாவை ஒருவிதமாக ஓரம்கட்டும் செயல் என்றே கருதவேண்டி உள்ளது. இதன் ஒரு படியாகவே, இந்தியா அண்மையில் தங்கள் வான்படையின் தேவைகளுக்காக, ரஷ்ய எஸ்-30 எம்.கே.ஐ போர்விமானங்களுக்கு பதிலாக, பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு விமான தயாரிப்பாளர் டசால்ட் ஏவியேஷன் இதுவரை மொத்தம் மூன்று ரஃபேல் மல்டிரோல் போர் விமானங்களை இந்திய வான்படைக்கு ஒப்படைத்துள்ளதாக இந்திய அரசு கடந்த மாதம் 20ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மூன்று விமானங்களும் பிரான்ஸிலுள்ள இந்திய வான்படை விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

நான்கு ரஃபேல் விமானங்களின் முதல் தொகுதி அடுத்தாண்டு மே மாதம் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதினெட்டு ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலா விமானப்படை நிலையத்தில் உள்ள இந்திய வான் படையின் 17 படைப்பிரிவில் பணியாற்றும். 18 விமானங்களின் இரண்டாவது தொகுதி வடகிழக்கு இந்தியாவின் ஹசிமாரா விமானப்படை நிலையத்தில் உள்ள இந்திய வான்படையின் 101 படைப்பிரிவில் பணியாற்றும். எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் முதல் படைப்பிரிவு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த நாட்டிடம் கொள்வனவை மேற்கொள்ளுதல் என்பதற்கான தேர்வு பொதுவாக விலை மற்றும் அரசியல் காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இதுவே ரஷ்ய நிபுணர்களை குழப்பத்துக்குள் உள்ளாக்கியுள்ளது. விலையைப் பொருத்தவரை, ரஷ்யாவில் எஸ்-30 வாங்குவது ஒரு விமானத்துக்கு சுமார் 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஆகும். ஆனால், ஒவ்வொரு பிரெஞ்சு ரஃபேலுக்கும் (நான்காவது தலைமுறை) இந்தியாவுக்கு 218 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவாகிறது.அதாவது, 36 பிரெஞ்சு ஜெட் விமானங்களுக்குப் பதிலாக குறைந்தது 95 ரஷ்ய எஸ்-30களை இந்தியா பெற முடியும். இதனடிப்படையில் பார்க்கப்போனால், விலை வெளிப்படையாக, தேர்வை பாதிக்கவில்லை என்ற முடிவுக்கு வரமுடியும்.

அரசியல் பார்வையில், "பிரெஞ்சு தேர்வு" ரஷ்யாவுக்கு இன்னமுமே தெளிவானதாக இல்லை. அண்மையில் விளாடிவோஸ்டோக்கில் நடந்த கிழக்கு பொருளாதார மன்றத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்இருவரும் இராணுவத் துறையில் இரண்டு நாடுகளின் பெரும் ஆற்றலைக் பாராட்டியிருந்தனர். அவர்கள் மேலும், தமது நாடுகளுக்கு இடையிலான இராணுவ வல்லமை சார்பான வியாபாரங்களை வளர்த்தல் தொடர்பிலேயே ஆராய்ந்தும் இருந்தனர். இவ்வற்றின் அடிப்படையில் பார்க்கப்போனால், ரஷ்ய வல்லுநர்கள் இந்தியாவின் ஆயுத கொள்முதல் முறை மிகவும் சிதைந்துள்ளது அல்லது இந்திய அதிகாரிகள் அத்தகைய தேர்வுகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றே கணிக்கின்றனர்.

மேலும், 13 எம்.கே 45 கடற்படை துப்பாக்கிகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் 1.02 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்ட செலவில் இந்தியாவுக்கு சாத்தியமான வெளிநாட்டு இராணுவ விற்பனைக்கு ஒப்புதல் அளிக்க ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த சாத்தியமான விற்பனையை காங்கிரஸுக்கு அறிவிக்கும் தேவையான சான்றிதழை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் கடந்த மாதம் 19ஆம் திகதியன்று வெளிவிவகார செயலகத்துக்கு வழங்கியிருந்தது.

இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது, இந்தியா நேரடியாகவே ஐரோப்பிய - ஐக்கிய அமெரிக்க இராணுவ உதவிகளை பெற முனைதல் - அவை தொடர்பானதொழில் நுட்பங்களை கொள்வனவு செய்தல் என்பனவற்றால் ஐக்கியஅமெரிக்க - ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பில் தம்மை ஒரு மூலோபாய பங்காளியாக உருமாற்றம் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படவேண்டியது. இதன் காரணமாக, ரஷ்யாவின் வரலாற்று ரீதியான இராணுவ உறவு நாடாக இருந்த நிலையை இந்தியா இழக்க தயாராக உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கும் இந்தியா தயாராக உள்ளது என்பதே பதிலாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X