2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் - விறுவிறுப்பான பின்னணிகள்

எம். காசிநாதன்   / 2018 பெப்ரவரி 12 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தேர்தல் திருவிழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் இந்திய நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற முழக்கம் வலுப்பெற்று வருகிறது.   

பா.ஜ.கவின் சார்பில் பிரதமர் நரேந்திரமோடி முதல், பிற கட்சிகளின் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வருகிறார்கள்.   

‘ஒரே நாடு- ஒரே வரி’ என்பது போல் ஒரே தேர்தலா என்று இந்த முழக்கத்தைக் கிண்டலடித்தாலும், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் எழுந்த கால கட்டம் சற்று வித்தியாசமானது.  

1996 முதல் 1999 வரையிலான காலகட்டம் மிகவும் கவலைக்குரிய காலகட்டம். 1996 இல் பிரதமரான, அடல் பிஹாரி வாஜ்பாய் 13 நாட்களில் இராஜினாமாச் செய்தார். அவருக்குப் பிறகு, தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகிய இருவரும் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாமல், 1998 இல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.   

 1998இல் வெற்றி பெற்று வந்த வாஜ்பாய், 13 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆதரவை வாபஸ் பெற்று, சோனியாவும் மறைந்த ஜெயலலிதாவும் ஒரு ‘தேநீர் விருந்துபசாரம்’ மூலம் வாஜ்பாய் அரசாங்கத்தைக் கவிழ்த்தார்கள். 1999இல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.  

மூன்று பிரதமர்களை மூன்று வருடங்களுக்குள் பார்த்து விட்ட இந்திய ஜனநாயகம் மூச்சுத் திணறி நின்றது. நிலையான ஆட்சி இல்லாத சூழ்நிலை உருவானது. 1980 மற்றும் 1989 களில் ஏற்பட்ட, ஸ்திரமற்ற தன்மை மீண்டும் 1999இல் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தில் ஓர் அரசாங்கத்தின் மீது கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் பற்றியே விமர்சனங்கள் எழுந்தன.   

 ஓர் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் முன்பு, மாற்று அரசாங்கம் பற்றிய ஏற்பாட்டைக் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் வாதப்பிரதிவாதங்கள் இந்திய அரசியலில் ஓங்கி ஒலித்தன.  

 ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு மாநிலத் தேர்தல் நடைபெற்ற நிலை மாறி, 1977, 1980, 1996, 1998, 1999இல் நாடாளுமன்றத் தேர்தலே அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டது. தேர்தல் பிரசாரங்களில்,“நிலையான ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று ஒவ்வொரு கட்சியும் பிரசாரமே செய்தது.   

அரசியல் கட்சிகளின் கொள்கையற்ற கூட்டணிகள், ஜனநாயகத்தின் கோவிலாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தின், ஐந்து வருட ஆயுள் மீது தாக்குதல் நடத்தின.

கூட்டணி அரசாங்கங்களால் இந்திய ஜனநாயகத்துக்கு இந்த ஆபத்து, நிலையற்ற தன்மை என்பதை உணர்ந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி முறை வேண்டும் என்றும், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும்  சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் குரல் எழுந்தது.  

சட்டமன்றங்களைப் பொறுத்தமட்டில், மத்திய அரசாங்கத்திடம் உள்ள ஆட்சியைக் கலைக்கும் அதிகாரமான அரசியல் சட்டப் பிரிவு 356, மாநிலங்களில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியது. மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு விசுவாசம் இல்லாமல் இருக்கும் மாநில அரசாங்கத்தை, அற்ப காரணங்களுக்காகக் கலைக்கப்படும் நிலை ஏற்பட்டது.  

 தேர்தல் தோல்வி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கட்சி தாவல், எம்.எல்.ஏக்கள் மத்தியில் குதிரை பேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநில ஆளுநரின் பரிந்துரையின் பேரில், ஆட்சிகள் கலைக்கப்பட்டன. 

பணிப்புறக்கணிப்பு நடக்கிறது என்று கூறி கேரளாவில் நம்பூதிரிபாடு தலைமையிலான அரசாங்கம், மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. அரசியல் சட்டப்பிரிவு 356இன் கீழ், முதல் மத்திய அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் கலைப்பு இதுதான்.  

 ஆளுநர் அறிக்கை இல்லாமலேயே அரசியல் சட்டத்தில் உள்ள, ‘அதர்வைஸ்’ பிரிவைப் பயன்படுத்தி, கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசாங்கம் 1990களில் கலைக்கப்பட்டது. இந்த மாதிரி 100க்கும் மேற்பட்ட முறை, இந்த அரசியல் கலைப்பு அதிகாரம் மாநில சட்டமன்றங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. ஆகவே, மாநிலத்தில் சட்டமன்றம் முழு ஆயுளும் நீடிக்க முடியவில்லையென்றால், அதற்கு முதல் காரணம் மத்திய அரசிடமிருந்த ஆட்சிக் கலைப்பு அதிகாரம்.   

மத்திய அரசாங்கத்திடமுள்ள ஆட்சிக் கலைப்பு அதிகாரம் பயன்படுத்தப்படுவதால், மாநிலத்தில் உள்ள சட்டமன்ற ஆயுள் பாதிக்கப்பட்டு, ஆட்சியின் ஸ்திரத்தன்மை பறிபோனது. இரண்டுக்கும் தேர்தல் நடைபெறும் போது, பல ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவு, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளால் அரசாங்க நிர்வாகம் முடங்குவது போன்றவை, அன்றாட நிகழ்வுகளாகி விடுகின்றன.  

இதுபோன்ற சூழ்நிலைகளில்தான், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முழக்கம், இந்தியாவில் எங்கும் கேட்டது. பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் கேட்டது.   

முதலில் இந்தியச் சட்ட கமிஷன், 1999ஆம் வருடம், மே மாதத்தில் அளித்த அறிக்கையில், இந்த ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ குறித்து விளக்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம், தனது 170 ஆவது அறிக்கையில், நாடாளுமன்றத்துக்கும்  சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நாட்டில் ஒரு நிலையான ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகளை அளிக்கும் என்று வாதிட்டிருக்கிறது.   

தேர்தல் முடிவுகள் தொடர்பாக, தொடரப்படும் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்று 1995இல் சட்ட ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்தப் பரிந்துரையின் ஓர் அங்கமாகவே இந்த, ஒரே நேரத்தில் தேர்தல் பற்றியும் அப்போது, இந்திய சட்ட ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.  

 ஆனாலும், அப்போதே, “நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கொள்கை முடிவை, ஒரே இரவில் அடைந்து விட முடியாது” என்று எச்சரிந்தார் ஜீவன்ரெட்டி.  
 1999இல் கொடுத்த அந்த அறிக்கைக்கு, இப்போது 19ஆவது வருடத்தில் மீண்டும் விவாதத்துக்கு வந்திருக்கிறது.  

ஆனால், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று, 1999இல் முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு இருந்த காரணங்கள், இப்போது இல்லை என்றே கூறலாம். இன்றைக்கு மத்தியில் பா.ஜ.க தலைமையில் நிலையான ஆட்சி நடைபெறுகிறது.   

மக்களவையைப் பொறுத்தமட்டில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிறது. அங்கு கூட்டணிக் கட்சிகளின் தயவுக்காக பா.ஜ.க எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. அதனால் மக்களவையின் ஆயுளுக்கோ, மத்தியில் நிலையான ஆட்சிக்கோ இப்போது எவ்வித பிரச்சினையும் இல்லை.   

இன்னும் சொல்லப்போனால், எதிர்க்கட்சிகள் எல்லாம், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், “எதேச்சதிகார ஆட்சி நடைபெறுகிறது” என்றே குற்றம் சாட்டும் அளவுக்கு, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துக்குச் சுதந்திரமாகச் செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. 

அது மட்டுமின்றி, மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களைக் கலைக்கும் அரசியல் சட்டப் பிரிவு 356இன் கீழ் உள்ள அதிகாரத்தையும் இப்போது மத்திய அரசாங்கம் தன் விருப்பப்படி, பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது.   

குறிப்பாக, உச்சநீதிமன்றம், ‘எஸ்.ஆர் பொம்மை வழக்கில்’ வகுத்துக் கொடுத்த வழிகாட்டுதலின் காரணமாக, மாநில அரசாங்கங்களைக் கலைக்கும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் மிகவும் குறைக்கப்பட்டு விட்டது என்றே கூறலாம்.   

ஆகவே, மத்தியில் நிலையான ஆட்சிக்கும் பாதிப்பு இல்லை; மாநிலத்தில் சட்டமன்றங்களைக் கலைக்கும் அதிகாரத்தையும் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாகப் பயன்படுத்திவிட முடியாது என்ற சூழ்நிலையில், ஏன் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.   

அதனால்தான் இந்த கோரிக்கையில் அரசியல் இருக்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.  அதுஎன்ன அரசியல்? மக்களவை- மாநிலங்களவை ஆகிய இரண்டில் மாநிலங்களவையில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. தான் விரும்பிய சட்டங்களைக் கொண்டுவர இயலவில்லை.   

ஜி.எஸ்.டி வரி விதிப்புச் சட்டத்துக்காகப் போராடியதும் இப்போது முத்தலாக் சட்டத்துக்கு மக்களவையும் ஒப்புதல் பெற முடியாமல் திணறுவதும் மத்திய அரசாங்கத்துக்கு மாநிலங்களவையில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வது குறித்த கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

மாநில சட்டமன்றங்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால் பிரதமர் மோடியின் இமேஜை முன்வைத்து ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும்  சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றால் மாநிலங்களவையிலும் தனிப் பெரும்பான்மையைப் பா.ஜ.க பெற்றுவிட முடியும் என்பதுதான் இந்த ஒரே நேரத்தில் தேர்தல் என்பதன் பின்னனியாக இருக்கிறது.   

அதனால்தான், எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றன என்பதே உண்மை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .