2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இப்போது புரிகிறதா அரசாங்கத்தின் நிலைப்பாடு?

கே. சஞ்சயன்   / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று, பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர்.  

பிரேஸில் உள்ளிட்ட ஐந்து நாடுகளில், தமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, அதனை நிராகரித்த, ஜெனரல் ஜகத் ஜயசூரிய, போருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தால், இந்த விவகாரம் அப்படியே ஓய்ந்திருக்கும்.  

ஆனால் அவர், போரை கொழும்பில் இருந்து வழிநடத்தியது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான், அவர்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று, கொழும்பு வந்தவுடன் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.  

அதற்குப் பின்னரே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, செய்தியாளர்களைக் கூட்டி, ஜெனரல் ஜயசூரிய, போர்க்காலத்தில் குற்றங்களை இழைத்தார் என்றும், அவருக்கு எதிராக விசாரணை நடத்தினால், சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.  

அதற்குப் பிறகு, போர் நடவடிக்கையில் இருந்து தன்னை, சரத் பொன்சேகா ஒதுக்கியே வைத்திருந்தார் என்றும், அதுதொடர்பாக அவர், எழுத்துமூலம் அளித்த கடிதம் தன்னிடம் இருப்பதாகவும் ஜெனரல் ஜயசூரிய கூறினார்.  

இவ்வாறாக, இருவருக்கும் இடையிலான கருத்துப் போர் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.  

இன்னொரு புறத்தில், இரண்டு பேருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி, சங்கடங்களைத் தவிர்க்க, உயர்மட்ட முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  
மற்றொரு புறத்தில், சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், துரோகம் செய்து விட்டார் என்றும் கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன.  

அதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  
இரண்டு முன்னாள் தளபதிகளுக்கு இடையில், போர்க்காலத்தில் தொடங்கிய புகைச்சலும் பனிப்போரும், இன்னமும் தொடர்வதன் வெளிப்பாடுதான் இது.  

இது, அவர்களைச் சுற்றி மாத்திரம் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை, அவர்களைச் சார்ந்திருப்பவர்களையும், அவர்களைச் சார்ந்து இயங்கியவர்களையும் அவர்களை இயக்கியவர்களையும், பிரச்சினைகளில் மாட்டி விடக் கூடும் என்ற அச்சத்தினால்தான், இந்த விவகாரம் இந்தளவுக்கு பூதாகாரமாகி வருகிறது.  

ஜெனரல் ஜயசூரிய, இந்தக் குற்றச்சாட்டுகளால் மிகவும் அச்சமடைந்து போயிருக்கிறார், வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று பயந்து போயிருக்கிறார் என்பதை, அவரது ஒவ்வொரு பேட்டியும் தெளிவாக உணர்த்துகின்றது. 

ஜெனரல் ஜெயசூரியவைப் போலவே, இந்த விவகாரத்தினால், தமக்கு ஏதும் சிக்கல்கள் உருவாகுமோ என்று இராணுவ உயர் அதிகாரிகள் மாத்திரமன்றி, அரசியல் தலைமைகளும் அச்சமடைந்திருக்கின்றன.   

அதேவேளை, ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.  

ஏற்கெனவே, அமெரிக்காவில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும், சுவிற்சர்லாந்தில், மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராகவும் வழக்குகள் தொடுக்கப்பட்ட போதோ, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக, பிரித்தானிய அதிகாரிகளிடம் குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்ட போதே, இந்தளவுக்குப் பதற்றத்தை, கொழும்பில் ஏற்படுத்தியிருக்கவில்லை.  

போரை நடத்திய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே, அப்போது ஆட்சியில் இருந்தது என்பது, அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். இப்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம், எங்கே தம்மைக் காட்டிக் கொடுத்து விடுமோ, கைவிட்டு விடுமோ என்ற அச்சங்கள் அரசியல் மட்டத்தில் உள்ளவர்களுக்கும், இராணுவ மட்டத்தில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது.  

அதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராகச் சாட்சியம் அளிக்கத் தயார் என்று அறிவித்தார். எல்லாவற்றையும் விடக் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

ஏனென்றால், இதற்கு முன்னர், இராணுவ அதிகாரிகள், அரசியல் அதிகார மட்டத்துக்கு எதிராகச் சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்தும், தமிழர் தரப்புகள் அல்லது மனித உரிமை அமைப்புகளால்தான் முன்வைக்கப்பட்டிருந்தன.  

ஆனால், முதல் முறையாக, இராணுவத் தரப்பில் இருந்தே, மற்றோர் இராணுவ அதிகாரிக்கு எதிராகப் போர்க்குற்றச்சாட்டுகள், பகிரங்கமாக முன்வைக்கப்பட்டுள்ளன. இது மிகவும் முக்கியமான விடயம்.  

ஏற்கெனவே, இராணுவ அதிகாரிகள் சிலர், வெளிநாடுகளில் போர்க்குற்ற சாட்சியங்களை அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. சரத் பொன்சேகா கூட, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளிடம், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராகச் சாட்சியங்களை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

அந்த சந்தேகம்தான், பின்னாளில் அவருக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளுக்கும் காரணமாயிற்று.  

இருந்தாலும், பகிரங்கமாக, இராணுவத் தளபதி ஒருவருக்கு எதிராக, மற்றோர் இராணுவத் தளபதி, போர்க் குற்றச்சாட்டை முன்வைத்தது, இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பம்தான்.  

இரண்டு பேருமே இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய தளபதிகளாக இருப்பதும், குற்றம் சாட்டப்பட்ட ஜகத் ஜயசூரியவின் மேலதிகாரியாக, சரத் பொன்சேகா இருந்தமையும் இந்தக் குற்றச்சாட்டை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.  

“ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது. அவருக்கு எதிராக விசாரணை செய்ய முற்பட்டபோது, அது தடுக்கப்பட்டது” என்றெல்லாம், சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.  

ஜெனரல் ஜயசூரிய, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமாக இருந்தவர். இதுதான் முக்கியமான பிரச்சினை. ஒன்றிணைந்த எதிரணியினர் கலங்குவதும் இதற்காகத்தான்.  
எங்கே, ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கடைசியில் கோட்டாபய ராஜபக்ஷவை மாட்டி வைத்து விடுவாரோ என்று, அவர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள்.  

இந்த விவகாரம், உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதன் பின்னணியும் கூட, இதுவாகத்தான் இருக்கும்.  

போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு, இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.  

அதன் விளைவாகத்தான், ஜெனீவாவில், அடுத்தடுத்த தீர்மானங்களைச் சந்திக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.  

கடைசியாக, தற்போதைய அரசாங்கமும் கூட, “மீறல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. அதை நிராகரிக்கவில்லை. அதுபற்றிய ஆதாரங்கள் கிடைத்தால், விசாரணை செய்வோம். குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நம்பகமான விசாரணைகளை நடத்துவோம்” என்றெல்லாம், வாக்குறுதிகளைக் கொடுத்துத்தான், ஜெனீவா அழுத்தங்களில் இருந்து விடுபட்டிருக்கிறது.  

ஆனால், அதே அரசாங்கம், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மாத்திரமன்றி, இப்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்க முனைந்திருக்கிறது.  

ஜெனரல் ஜயசூரிய மீது, சரத் பொன்சேகா குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது, அதைத் தனிப்பட்ட பகைமையின் வெளிப்பாடாக முன்னிறுத்தவே அமைச்சர்கள் முற்பட்டனர். 

“இல்லை, அவ்வாறு எந்தக் குற்றமும் அவர் இழைக்கவில்லை” என்று பாதுகாக்கவும் முனைந்தனர்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, “ஜயசூரியவை மட்டுமன்றி, எந்தவொரு படையினர் மீதும், உலகில் எவரும் கைவைக்க விடமாட்டேன்” என்றார். இவையெல்லாம், எதை உணர்த்தியிருக்கின்றன?  

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுவதை ஏற்காமல், போர்க்குற்றச்சாட்டுகளை மறுத்து, அதை மறைப்பதற்குத் துணை போவதில், அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதையே இது உணர்த்தியிருக்கிறது.  

இங்கு சரத் பொன்சேகா, போர்க்குற்றம் இழைக்கவில்லையா? ஜெனரல் ஜயசூரிய தவறுகளை இழைத்தாரா என்பது இரண்டாவது பட்சமான விடயம்.  

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, அதை நியாயமான முறையில் ஓர் அரசாங்கம் விசாரிக்க நடவடிக்கை எடுப்பதுதான் முறை. ஆனால், அரசாங்கம் அதற்குத் தயாராக இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை.   

குற்றச்சாட்டுகளை நியாயமாக விசாரித்தால், பொன்சேகா கூறும் குற்றச்சாட்டுகளையும் தாண்டி, இந்த விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சம் அரச தரப்பில் உள்ளவர்களுக்கு இருக்கிறது. 

முன்னைய ஆட்சியாளர்களைக் காப்பாற்ற இப்போதைய ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள் என்பதில், எந்தச் சந்தேகமும் இல்லை.  

சரத் பொன்சேகா, குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, ஒட்டுமொத்த இராணுவத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடியவற்றை எப்பொழுதும் தவிர்க்கவே முனைவார். ஏனென்றால், அது தனக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும்.  

அதனால், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், தனியே அவரையோ, அவருக்குப் பின்னால் இருந்தவர்களயோ மட்டும், அவரது ஆதாரங்கள், குற்றவாளிகளாகச் சுட்டும் என்பதில் சந்தேகமில்லை.  

இது அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்காது. ஒட்டுமொத்த இராணுவமும் தவறு செய்யவில்லை , சிலர் தவறு செய்திருக்கலாம் என்று முன்னர் கூறிய அரசாங்கம், அந்தச் சிலரை அடையாளம் காணும் முயற்சிகளையாவது, சரத் பொன்சேகாவின் சாட்சியங்களின் ஊடாக முன்னெடுத்திருக்கலாம்.  

ஆனால், யாரையும் அவ்வாறு விசாரணைக்கு இழுக்க, அரசாங்கம் தயாரில்லை. இது இப்போது தெளிவாகியிருக்கிறது.   

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை, ஒருபோதும் தானாக முன்னெடுக்காது என்பது, சர்வதேசத்துக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .