2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரு தரப்புகளாலும் போர்க்குற்றங்களா?

Gopikrishna Kanagalingam   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மீது கடந்த சில மாதங்களாகக் காட்டும் அதிகபட்ச கரிசனை தொடர்கிறது. பிரதமர் விக்கிரமசிங்கவின் அண்மைய வடக்கு விஜயம், இந்த நிலைமை தொடர்வதையே காண்பித்திருக்கிறது. ஆனால், கடந்த சில விஜயங்களைப் போலல்லாது இவ்விஜயம், சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

இறுதிக்கட்டப் போரில், நாட்டின் இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என, பிரதமர் விக்கிரமசிங்க மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் விடயம் தான், இச்சலசலப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. “கடந்தகாலக் கடினமான வரலாற்றை மறந்தும் மன்னித்தும், இலங்கைச் சமூகங்கள் முன்கொண்டு செல்வதற்கான நேரமிது. தவறுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொள்வது அவசியம். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் மன்னித்து, நல்லிணக்கத்தை அடைய வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.  

அவரது இக்கருத்து, மேம்போக்கான கருத்தாக அமைந்த போதிலும், அமைச்சரவையில் “உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு”வை அமைப்பதற்காக அமைச்சரவையில் முன்மொழிவை வைத்த பின்னணியிலும், தவறுகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையால் பயன் கிடைக்காது என்ற அவரது கருத்து மூலமாகவும், போர்க்குற்றங்கள் பற்றியும் அவரது கருத்து அமைந்திருக்கிறது என்பது தெளிவு.  

அவரது இக்கருத்துத் தொடர்பாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், பிரதமரின் கருத்தை, இரு தரப்புகளும் குற்றங்களைப் புரிந்தன என்று எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதெனத் தெரிவித்திருந்தார்.  

அதேபோல், பிரதமரால் இக்கருத்து வெளியிடப்பட்டுச் சில நாள்களில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஓரளவுக்கு நேரடியாகவே, இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைப் புரிந்தன என ஏற்றுக்கொண்டிருந்தார்.  

“இறுதிக் கட்டப் போரில் பொதுமக்களின் உயிர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை” என்று, மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களைப் பொறுத்தவரை, முக்கியமான மாற்றமாக, பிரதமரினதும் அரசாங்கத்தில் இன்னமும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பலத்துடன் காணப்படும் முன்னாள் ஜனாதிபதியினதும் கருத்துகள் அமைந்திருக்க வேண்டும்.  

ஆனால், அவர்களின் கருத்துகள், குறிப்பாகப் பிரதமரின் கருத்து, தொடர்பில், ஒரு வகையான நம்பிக்கையீனதும் விமர்சனமும், தமிழ் மக்களில் ஒரு தரப்பினரால் எழுப்பப்பட்டிருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, “இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைச் செய்தன என்று சொல்லிவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளை மாட்டிவிட்டுத் தப்பிக்கும் முயற்சி” அல்லது “இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைச் செய்தன என்பதால், இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாயின் விடுதலைப் புலிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதால், போர்க்குற்ற விசாரணையைத் தமிழ் மக்கள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் இப்படிச் சொன்னார்” போன்ற வகையான கருத்துகளைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.  

சுயாதீனமான நீதித்துறையின் விசாரணைகளின்றி உறுதியாக எதையும் கூறுவது பொருத்தமாக அமையாது. ஆனால், இறுதிக்கட்டப் போரில், இரு தரப்புகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டன என்பது தான், இதுவரையிலும் காணப்படும் ஆதாரங்கள் சொல்கின்ற விடயங்களாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள், இரு தரப்புகள் மீதும் பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றன. அதை மறைக்க முனைவது அப்பட்டமான கபடத்தனம்.  விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள், தமிழ் அரசியல் பரப்பில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. விடுதலைப் புலிகள் இருக்கும் போது மரணமோ, அச்சுறுத்தலோ பதிலாகக் கிடைத்தது. அவர்களின் முடிவின் பின்னரும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகவே விடுதலைப் புலிகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், இது நியாயமற்ற நிலைமை.  

ஏனெனில், விடுதலைப் புலிகளின் தவறுகளை மாத்திரம் பெரும்பான்மையினத் தரப்புச் சொல்வது போல, இராணுவத் தரப்பின் தவறுகளை மாத்திரம் தான் தமிழ் மக்களும் கதைப்பார்கள் என்றால், இரு தரப்புகளுமே ஒன்றாகிவிடாதா? எந்தத் தவறைச் செய்தாலும் இராணுவத்தைத் தண்டிக்கப் போவதில்லை என்று தெற்கு இருப்பதைப் போல, என்ன ஆதாரம் இருந்தாலும் விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை அனுமதிக்கப் போவதில்லை என்று வடக்கு இருக்குமாயின், இரு தரப்புகளுக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்?  

நாட்டின் சட்டபூர்வமான இராணுவம் என்ற அடிப்படையில், இலங்கை இராணுவத்தை, விடுதலைப் புலிகளுக்கான அதே மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டுமா என்பது நியாயமான கேள்வி. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உருவான அமைப்பு என்றாலும் கூட, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தவறு செய்தார்கள் என்பதற்காக, இராணுவம் தவறு செய்வதையும் நியாயப்படுத்த முயன்றால், அது கேலிக்குரிய ஒப்பீடாக அமையும். அதேபோல், இறுதிக்கட்டப் போரில், இரு தரப்புகளும் ஒரேயளவிலான குற்றங்களைப் புரிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில், இல்லையென்று தான் அமையும். விடுதலைப் புலிகளோடு ஒப்பிடும் போது, படையினர் மீதான குற்றச்சாட்டுகள் மிக அதிகமானவை. அதற்காக, விடுதலைப் புலிகள் மீது விசாரணைகளே இருக்கக்கூடாது என்பது நியாயமில்லை.  

இத்தனைக்கும், நாமெல்லோரும் அதிகமாகக் கலந்துரையாடும் 30/1 தீர்மானத்தில் ஒரு பிரிவு, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளைப் பற்றியும் அவற்றுக்கான பொறுப்புக்கூறலைப் பற்றியும் மாத்திரம் உரையாடுகிறது. அதற்கு முன்னைய பிரிவு, “அனைத்துத் தரப்புகளினதும்” பாரிய குற்றங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.  

எனவே, உண்மையான பொறுப்புக்கூறலொன்று ஏற்படுத்தப்படுமாயின், இரு தரப்புகளின் தவறுகளும் ஆராயப்படுமென்பது இயற்கை; அது தான் நீதியும் கூட. இதில் புதிதாக வியப்படைய எதுவுமில்லை.  
ஆனால், “இரு தரப்புகளும் தவறு செய்தன. எனவே, இரு தரப்பின் தவறுகளையும் மன்னிப்போம்” என்ற “இணக்கப்பாட்டு” கதைகளை, தமிழ் மக்கள் மாத்திரமன்றி, இலங்கையர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும். இப்படியான கதைகளை, பிரதமர் மாத்திரமன்றி, அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோரும் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. “பழையதைக் கிளறி என்ன நடக்கப் போகிறது?” என்பது தான் அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், உண்மையைக் கண்டறியாமல், மன்னிப்புக்கு இடமிருக்கக்கூடாது. அப்படியான மன்னிப்பு, நிலையான சமாதானத்தையோ, நல்லிணக்கத்தையோ கொண்டுவராது. ஏனென்றால், என்ன நடந்தது அல்லது என்ன செய்தார்கள் என்றறியாமல், எதற்காக ஒருவரை மன்னிக்க முடியும்? யார் செய்தார்கள் என்று தெரியாமல், குறித்த சம்பவத்துக்காக யாரை மன்னிக்க முடியும்.  

இதனால் தான், உலகம் முழுவதிலும் இவ்வாறான ஆயுத முரண்பாடுகள் முடிவடைந்த பின்னர், உண்மையைக் கண்டறிவதை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார்கள். தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, பரிபூரணமானது என்றில்லை. அதன் மீதும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆனால், அங்கு ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கத்தில் மிக முக்கியமான ஒரு விடயமாக, உண்மையைக் கண்டறிதல் என்பது காணப்பட்டது. எனவே தான், இலங்கை விடயத்திலும், உண்மையைக் கண்டறிதலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.  

அது, இராணுவத்தால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; விடுதலைப் புலிகளால் தமிழ் மக்கள் மீதும் படையினர் மீதும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; விடுதலைப் புலிகளால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; முஸ்லிம் ஆயுதக் குழுக்களால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் என்று, அனைத்து வகையான குற்றங்களைப் பற்றியும் ஆராய்வதாக இருக்க வேண்டும். 

அக்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட பின்னர், மன்னிப்பதைப் பற்றி ஆராய முடியும். அதை விடுத்து, அதற்கு முன்னர் மன்னிக்குமாறு விடுக்கப்படுகின்ற எந்தக் கோரிக்கையும், பூசி மெழுகுவதற்கான முயற்சியே. அவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதென்பது, முழு இலங்கைக்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .