2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா?

Johnsan Bastiampillai   / 2021 ஜனவரி 22 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கவிதா சுப்ரமணியம்

இராணுவத்துக்கு கட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் நடைமுறை, பண்டைய மெசொப்பெத்தேமியா காலத்துக்கு, அதாவது ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ஆனால், அண்மைய நவீன வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, பிரெஞ்சுப் புரட்சியில் இருந்தே ஆரம்பமாகின்றது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், பிரஸ்ஸியா, சுவிட்ஸர்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளாலும் கட்டாய இராணுவ சேவை வலியுறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. 

இலங்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, கட்டாய இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக, மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் கட்டாய இராணுவப் பயிற்சி தொடர்பான  கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. 

சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமான  சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்த யோசைனை முன்வைக்கவுள்ளதாகவும்  அதற்காக, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, இராணுவப் பயிற்சி வழங்கும் முன்மொழிவை கொண்டு வரவுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,  தெரிவித்திருக்கிறார்.  

“நாட்டில், ஒழுக்கம் என்பது கிடையாது. கடந்த டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல்,  இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், போக்குவரத்து விதிமுறைகளை மீறியமையால், சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். 180க்கும் மேற்பட்டோர், நிரந்தரமாக விசேட தேவையுடையோராக மாறிவிட்டனர். இது, சமூகத்தில், ஒழுக்கம் இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. இதனாலேயே, 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கவேண்டும் என்று முன்மொழிவைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளேன். இராணுவப் பயிற்சி என்றவுடன், யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இராணுவப் பயிற்சியைப் பெற்றவுடன், ஒருவரால் உறுதியாக இருக்க முடிவதுடன், தலைமைத்துவத் திறன், தன்னிடமுள்ள மேலதிக திறன்களை வளர்த்துக்கொள்ளமுடிவதுடன் சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமானதும் பொறுப்புள்ள குடிமக்கள் நாட்டுக்குள் இருப்பதையும் உறுதி செய்யும்” என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார். 

இதேபோன்ற உத்திகளைப் பயன்படுத்திய நாடுகள், இத்தகைய திட்டங்களின் பலன்களைப் பெற்றுள்ளன என்றும், பாடசாலைகளில் இருந்து வெளியேறும் அனைத்து 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு, ஆறு மாதகால தொடர் பயிற்சி அளிப்பதே போதுமானது என்று தான் எண்ணுவதாகவும் அத்துடன், இது நடைமுறைக்கு வருவது குறித்து முடிவெடுப்பது, பாராளுமன்றத்தின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்தத் திட்டம் தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல தரப்புகள் மத்தியில் இருந்து, காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அந்தவகையில்,  கருத்துத் தெரிவித்திருந்த தேசிய ஒற்றுமை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, “18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டமானது, இராணுவமயமாக்கல் மனநிலையை வௌிப்படுத்தி இருக்கிறது” எனத்  தெரிவித்திருந்தார்.

“இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு முன்னர், குடிமக்களின் குழம்புகளில் போடுவதற்கு, ஒரு துண்டு மஞ்சளைக் கொடுக்கும் திட்டத்தை முதலில் கொண்டு வரவேண்டும். அவ்வாறு இராணுவப் பயிற்சி வழங்கவேண்டும் என்றால், அதற்கான பணம் எவ்வாறு கிடைக்கும்” என்றும், ஐக்கிய குடிமக்கள் அமைப்பின் தலைவர் சமீர  பெரேரா தெரிவித்திருந்தார்.

அத்துடன், ‘18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இந்தப் பயிற்சிக்கான வயது வரம்பைக் குறிப்பிடவில்லை என்றும் ஏராளமான மக்களுக்கு, இராணுவப் பயிற்சி அளிக்கத் தேவையான அடிப்படை ஏற்பாடுகள், வசதிகள் குறித்து எந்தவொரு விளக்கமும் வழங்கப்படவில்லை’ என்றும் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, “இது போன்ற திட்டத்தை, இராணுவம்  அறிந்திருக்கவில்லை. இது குறித்து ஆயுதப்படைக்கோ, எமக்கோ அறிவிக்கப்படவில்லை. அப்படி எதிர்காலத்தில் செய்யவிருப்பின், இது தொடர்பில்  அறிவிக்க வேண்டியது  அரசாங்கத்தின் கொள்கை ஆகும்” என்றும் தெரிவித்திருந்தார்.

மற்றைய நாடுகளின் முறைமைகள் 

குடிமக்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கும் முறைமைகள், சில நாடுகளில் இப்போது பின்பற்றப்படுகின்றன. 

தென்கொரியாவில், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள அனைத்து ஆண்களும், இராணுவத்தில் 21 மாதங்கள், கடற்படையில் 23 மாதங்கள், விமானப்படையில் 24 மாதங்கள் பயற்சியைப் பூர்த்தி செய்திருக்கவேண்டும். பொலிஸ் படை, கடலோர காவல்படை, தீயணைப்புப் படை, சில சிறப்பு நிகழ்வுகள் உட்பட அரசாங்கத் துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எனினும், விளையாட்டு மூலம் நாட்டுக்கு புகழ் தேடிக்கொடுக்கும்  குடிமக்களுக்கு, இந்தப் பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

உலகில் மிக நீண்ட, கட்டாய இராணுவச் சேவையை வடகொரியா கொண்டுள்ளது. இதில், ஆண்கள் இராணுவத்தில் 11 வருடங்களும் பெண்கள் இராணுவத்தில் ஏழு வருடங்களும் பணியாற்ற வேண்டும். 

எரித்திரியாவில், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் அனைவரும், இராணுவத்தில் 18 மாதங்கள் பணியாற்றி இருக்கவேண்டும். எனினும் பொதுமக்களுக்கான இராணுவப் பயிற்சியும் பொறுப்புகளும் சரியான நேரத்தில் முடிவடையாது என்பதால், மனித உரிமை அமைப்புகளின் கூற்றுகளின் படி, எரித்திரியாவில் இருந்து பலர் வெளியேறி, ஐக்கிய இராஜ்யத்தில் தஞ்சம் கோரி வருகின்றனர். 

சுவிட்ஸர்லாந்தில், 18 முதல் 34 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு, இராணுவ சேவை கட்டாயமானதாகும். இராணுவ சேவையை இரத்துச் செய்யக் கோரி, 2013ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதும், 73 சதவீதமானோர், இந்த இராணுவ சேவை அவசியமானது என வாக்களித்திருந்தனர். கட்டாய இராணுவ சேவைக்குள் பெண்கள் உள்ளடக்கப்பட்டவர்கள் அல்லர் எனினும், தன்னார்வத் தொண்டுக்காக, இராணுவத்தில் இணையலாம். 

பிரேஸிலில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இராணுவ சேவை கட்டாயமானது. இந்தச் சேவை 10 - 12 மாதங்களுக்கு நீடிக்கும். சுகாதார காரணங்கள் இருப்பின், பயிற்சியில் விதிவிலக்குண்டு. பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெற்ற ஒருவர், இராணுவப் பயிற்சியைத் தாமதப்படுத்திக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கும்  உண்டு.

இஸ்‌ரேலில் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் கட்டாய இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மூன்று ஆண்டுகளும் பெண்கள் இரண்டு ஆண்டுகளும் இராணுவத்தில் பணியாற்றியிருத்தல் வேண்டும்.

சிரியாவில், அனைத்து ஆண்களுக்கும் இராணுவ சேவை கட்டாயமானது. இராணுவ சேவையைத் தவிர்க்கும் அரசாங்க ஊழியர்கள், வேலையை இழக்க நேரிடும். அச்சேவையில் இருந்து வெளியேறியவர்களுக்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இவை அனைத்துக்கும் மேலாக, சமீபத்திய ஆண்டுகளில், இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு, பல நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. 

ஜேர்மனை நாம் பின்பற்றுகிறோமா? 

இராஜாங்க  அமைச்சர் வீரசேகரவின் திட்டம், சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இதேபோன்ற நடவடிக்கைகளை முன்வைக்கும் ஓர் அரசியல்வாதி இவர் மாத்திரமல்ல என்பது கவனிப்புக்குரியதாகும். 

ஜேர்மன் ஆயுதப் படைகளுக்கான புதிய ஆணையாளர் ஈவா ஹாக்ல், கடந்த ஆண்டு ஒரு திட்டத்தை முன்வைத்திருந்தார். 2011ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட கட்டாய இராணுவ சேவையை, மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது தொடர்பானதாகவே அத்திட்டம் அமைந்திருந்தது.  ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சர் அன்னெக்ரெட் கிராம்ப்கரன்பவுர், கட்டாய இராணுவச் சேவை யோசனையை நிராகரித்திருந்தார்.  

உலகெங்களிலும் உள்ள ஜனநாயக நாடுகளில் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் காரணமாகக் கட்டாய இராணுவ சேவையைக் கைவிட்ட சில மேற்கத்தேய நாடுகள், இப்போது அந்தத் திட்டத்தை மீள் பரிசீலனை செய்து வருகின்றன. 

கடந்த சில வாரங்களாக, ஐரோப்பிய,  அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. பனிப்போரின்போது, பல மேற்கத்தேய நாடுகள், ஆண்களுக்கான இராணுவ சேவையைக் கட்டாயமாக்கியது. 

இது, நாட்டுக்குச் சேவை வழங்கும் ஒரு பொதுக் குறிக்கோளுடன் இளைஞர்கள் ஒன்றிணைந்ததாக நம்பப்படுகின்றது. எனினும் ஒரு தேசத்தைப் பாதுகாப்பதற்கு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேவையில்லை என்பதால், பிரான்ஸ், ஜேர்மன், சுவீடன் போன்ற நாடுகள், 1990களுக்குப் பின்னர், கட்டாய இராணுவ சேவைத் திட்டத்தைக் கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்கத் தொடங்கின.

நமக்கு என்ன தேவை? 

இராஜாங்க அமைச்சர் வீரசேகரவின் முன்மொழிவின்படி, ஒழுக்கமான இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு, பலர் ஆதரவைத் தெரிவித்திருந்தாலும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக  அமைந்திருக்கவில்லை. 

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளரும் சமூக ஆர்வலருமான வ்ரே பல்த்தசார், “ஒரு நாடு என்ற வகையில்,  இலங்கை ஒழுக்கமானதாகவே இருக்கின்றது. நம் பிள்ளைகளுக்கு, பாடசாலைகளை எவ்வாறு தெரிவு செய்கின்றோம் என்பதில், ஒழுக்கமே அடிப்படையாக உள்ளது. அரசியல் பிரசாரங்களில் உருவாக்கப்பட்டு வெல்லப்பட்டதும் ஒழுக்கமாகும். இந்த எண்ணக்கருவுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். ஏனென்றால், பல ஆண்டுகளாக, தலைமுறைகளை அடிப்பணியச் செய்தாலும், அதாவது உருவகமாகவும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். டென்மார்க், சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளில், இந்தக் கட்டாயத் திட்டம் விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அந்த நாடுகளில், கடந்த 30 வருடங்களாக, எந்தவோர் உள்நாட்டுப் போரும் இருந்திருக்கவில்லை”. 

“ஆம்! எங்களுக்குப் பயிற்சி வேண்டும். ஆனால், அது 18 வயதுக்கு மேற்பட்ட இராணுவப் பயிற்சி இல்லை. இது, ஆரம்பக் கல்வி நடவடிக்கையிலேயே வழங்கப்படல் வேண்டும். பாடத்திட்டத்தை மாற்றுவதன் மூலம், இதைச் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும். வெவ்வேறு சமூகப் பின்னணிகளைச்  சேர்ந்தவர்களுடன் நேர்மறையான செயற்பாடுகளில் பங்கேற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் இது சாத்தியமாகும்” என்று தெரிவித்திருந்தார். 

பெண்கள் பற்றி என்ன? 

கட்டாய இராணுவ சேவை சட்டத்தைக் கொண்ட பெரும்பாலான நாடுகள், அதை ஆண்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், இது ஆண்களுக்கு மாத்திரம் உரித்தானது அல்ல என்பதை, பல நாடுகள் எடுத்துக் காட்டியுள்ளன.இந்தக் கட்டாயச் சேவை உள்ள சுமார் 60 நாடுகளில், 11 நாடுகளில் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் கட்டாயமாக இராணுவ சேவையைப் பெற்றிருத்தல் வேண்டும். 

கட்டாயப்படுத்தலின் உளவியல் 

30 ஆண்டுகால உள்நாட்டுப் போரால் துன்புறுத்தப்பட்ட ஒரு நாடு என்ற வகையில், மோதலின் உளவியல் சுமை இன்னும் உணரப்படுகின்றது. புனர்வாழ்வுக்கான போதிய வசதிகள் இன்மை, பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட உளவியல் சேவை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு, இளைஞர்களை இராணுவப் பயிற்சிக்கு அனுப்புவதன் அர்த்தம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.ஆயுதங்களை அணுகுவது, பயிற்சியின் தீவிரம், கால அளவு குறித்து இந்தத் திட்டம் தெளிவாக இருக்கவேண்டும். இது, பல உளவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

அமெரிக்காவின் நோவா பல்கலைக்கழகத்திலும் சான் ஆண்ட்ரெஸ் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில்,  தங்களை முழுதாக இராணுவமாகவே மாற்றிக்கொண்ட சூழல் ஏற்படுகின்றமை தொடர்பாக கண்டறியப்பட்டது. அத்துடன், குறிப்பாக, கட்டாயத்தின் பேரில் இராணுவத்தில் சேர்க்கப்படும் ஆண்கள், நாட்டிலுள்ள வன்முறையைத் தீர்ப்பதற்கு, தான் இராணுவச் சேவையில் கட்டாயமாக இருக்கவேண்டும் என்று நம்புவதாகவும் ஆயுதங்களைத் தாங்குவதை ஆதரிக்கத் தொடங்கியிருந்ததாகவும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X