2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஈகச் சுடரும் வெற்றி முழக்கமும்

Editorial   / 2020 மே 23 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் பன்நெடுங்கால வரலாற்றை கொண்ட சித்திரை வருடப்பிறப்பு நாளன்று, தமிழர் சக்கரைப்பொங்கல் பொங்கிக் கொண்டாடுவர்; சிங்களவர் பால்சோறு சமைத்துக் கொண்டாடுவர். இது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான பண்டிகை நாளாகக் கருதப்படினும், சைவர்களும் பௌத்தர்களும் தவிர்ந்த வேறு மதத்தவர் கொண்டாடுவது அரிது. எனினும் அவர்கள் கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் பங்குகொள்வதுண்டு. இன ரீதியான, மதரீதியான வேற்றுமைகளைக் களைந்து இலங்கையராக ஒன்றுசேரும் மகிழ்வான தருணம் இது.

சித்திரை புதுவருடம் முடிந்து ஒரு மாதம் ஐந்து நாள்களுக்குள் மீண்டும் பால்சோறு பொங்கிக் கொண்டாடும் நிகழ்வொன்று சிலவருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் மத்தியில் உருவாகியது. இதன் பின்னணியில் 2009 மே18ஆம் நாளன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட, முப்பதாண்டுகால தமிழின விடுதலைப் போராட்டமும் அதில் தோற்கடிக்கப்பட்ட தமிழர்களின் செந்நீரும் கண்ணீரும் தாராளமாகவே நிறைந்திருக்கின்றன.

இறுதியுத்த காலப்பகுதியில் பலிகொடுக்கப்பட்ட தமது பிள்ளைகளையும் உறவுகளையும் நினைவுகூரும் முகமாக, ஈகச்சுடரேற்றி மௌன அஞ்சலி செய்வதற்கு இன்றுவரை தமிழர்கள் மீது பல்வேறு கெடுபிடிகள் உள்ளன. குறிப்பாக இம்முறை கொரோனா வைரஸ் பீதியை முன்னிலைப்படுத்தி இந் நிகழ்வுக்கு நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றுக் கொள்வதற்கு, யாழ்ப்பாண பொலிஸார் முயன்றிருக்கிறார்கள். தகுந்த சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உட்படச் சில இடங்களில் அனுஷ்டிக்கப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வுகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அராஜகமாக நடந்துகொண்டதுடன் ஈகச்சுடரைத் தட்டிவிழுத்திய சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது. தவிர, முள்ளிவாய்க்காலில் வருடந்தோறும் இடம்பெறும் ஈகச்சுடரேற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ‘வடபுல’ அரசியல் பிரமுகர்கள் பலர் பொலிஸாரால் தடுக்கப்பட்டு, திருப்பியனுப்பப் பட்டிருக்கின்றனர். மீறிக் கலந்துகொண்டவர்கள் சிலருக்கு பதின்நான்கு நாள்கள் ‘கட்டாய சுயதனிமைப்படுத்தல்’ கட்டளை வழங்கப்பட்டு, நகர்த்தல் மனுமூலம் மீளப் பெறப்பட்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்க, மறு நாளாகிய மே19 அன்று ‘பயங்கரவாதிகள் மீதான வெற்றி’யைக் கொண்டாடும் விதமாக ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பதினொரு வருடங்களாகக் கொண்டாடப்பட்டுவரும் ‘தேசிய போர்வீரர்கள் தின’மானது, கொரோனா தொற்று அதிகமாகவுள்ள ‘சிவப்பு வலயமாகப்’ பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் கொழும்பு மாநகரிலுள்ள பத்தரமுல்லை பிரதேசத்தில் எவ்வித இடைஞ்சல்களுமின்றி நடைபெற்றுள்ளது.

முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகையின்போது பங்குபற்றிய இரண்டு கடற்படை வீரர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, ‘தென்புல’ அரசியல்வாதிகள் பங்குபற்றிய அந்த நிகழ்வு, திட்டமிட்டவாறே நடந்தேறியது. பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் போராட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பதாக’ சமிக்ஞை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ உள்ளிட்ட 14,617 வீரர்களுக்கு இந் நிகழ்வில் பதவியுயர்வு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தேசிய போர்வீரர்கள் தினமானது, முதலாம் உலக மகாயுத்தத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நவம்பர் 11ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அது நாடுகளுக்கிடையேயான போர். பாரிய தேசங்கள் எண்ணிலடங்கா படைவீரர்கள் பங்குபற்றிய கொடும் போர். இதுவே தமது மண்ணில் தமது மக்களுடன் நடந்த ஓர் ஆயுதப் போராட்டத்தை அடக்கிவிட்டு, சொந்த மக்களின் மீதான மிலேச்சத்தனமான அழிப்பைக் கொண்டாடி மகிழ்வது எத்தகைய மனோநிலை? ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்று சதா கூவிக்கொண்டு, மறுபுறத்தில் இரு தேசங்களுக்கிடையேயான மரபுரீதியானபோர் என்பதாக அரசாங்கம் காட்ட விளைகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

போரினால் ஏற்பட்ட உளவியல் தாக்கங்களிலிருந்து படைவீரர்களை மீட்டுகொண்டுவரும் ஒரு முயற்சியாக வெற்றிக் கொண்டாட்டங்களைக் கருத இடமுண்டாகிலும், அரசின் நோக்கமானது ‘உலகின் மிகம்பெரும் சக்திவாய்ந்த பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்திருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுவது’ மட்டுமேயாகும். இதன் காரணமாகவே ஈகச்சுரடேற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு ‘நாம் கொன்றது பயங்கரவாதிகளை மட்டும்தான்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த முனைகிறது.

‘சமாதான பேச்சுவார்த்தை மூலமான தீர்வை விடவும் இராணுவ வெற்றியின் மூலமே நீடித்த அமைதியை உருவாக்க முடியும்’ என்ற நோக்கோடு இலங்கை அரசாங்கம், போராளிகளையும் அவர்கள் கூடவே இறுதிவரை பயணித்த மக்களையும் தீவின் விளிம்புவரை தள்ளிச்சென்று, மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் அடைபட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது கொத்துக் குண்டுகளைவீசி, மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

தார்மீகமற்ற போரியல் தெரிவுகள் மூலமாகப் பெறப்படும் வெற்றியானது, இனப்படுகொலைக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, 1975இல் அமெரிக்க ஆதரவுடன் இருந்த ஆட்சியை அகற்றிய பின்னர், கம்போடியாவில் ஆட்சிக்கு வந்தவர்களால் தமது அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அழிக்கப்பட்டனர். இதேபோலவே முதல் வளைகுடா போர், அல்ஜீரியா, மொசாம்பிக் என்று அதன் தொடர்ச்சியாக இலங்கையில் நடந்த இறுதியுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டனர். இதன்போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட இரசாயன வெடிமருந்துகளின் பாவனை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பலரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் மிகமோசமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கான காணொளி ஆதாரங்கள் பல கிடைக்கப்பெற்றிருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந் நிலையில் வெற்றிக் கொண்டாட்டங்களின் மூலமாக, அதிலும் குறிப்பாக ஈகச்சுடர் ஏற்றுவதைத் தடை செய்து நிகழ்த்தப்படும் வெற்றிக் கொண்டாட்டங்களினூடாக அரசாங்கம் எதனை நிரூபிக்க முனைகிறது?

போர் முடிந்து ஒரு சகாப்தம் கடந்துவிட்ட பின்னரும் கூட, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு முறையான கட்டமைப்பு அரசாங்கத்திடம் இல்லை. மக்களாகச் சென்று தமது பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுத்து அரசாங்கத்தைக் கேள்விகேட்க முயன்றாலுமே எதற்கெடுத்தாலும் ‘பட்டியலைக் கொண்டுவாருங்கள் பார்க்கலாம்’ என்ற எகத்தாளமான பதிலே கிடைக்கப்பெறுகின்றது. பாதிக்கப்பட்டவர்களைச் சரிவர அடையாளப்படுத்தி, சுயமாகப் பட்டியலிட முடியாத அரசாங்கம் தான், போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சிறப்புறப் பட்டியலிட்டு சர்வதேச தடைகளையும் மீறி, வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தூதரகங்களில் உயர் பதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இவையெந்தப் பட்டியல்களிலாவது சம்பந்தப்பட்ட நபர்களின் உளவியல் தாக்கங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறதா?

போரில் வென்றவர்களாயினும் சரி, தோற்றவர்களாயினும் சரி ஈடுபட்ட வீரர்கள் பலர் ‘பிந்தைய மனஉளைச்சல் சீர்கேட்டால்’ (PTSD) அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடையே போர் அனுபவங்களுடன் தொடர்புடைய உளவியல் அதிர்ச்சியின் தொடர்ச்சியாகக் குற்றவுணர்வு, அவமானம், கோபம் மற்றும் தனிமைப்படுதல் ஆகிய உணர்ச்சிககளின் வெளிப்பாட்டை மிகுதியாக அனுபவிக்கின்றனர். ‘வெகுசிலர் பாதிப்புகளை வெளிக்காட்டாதவிடத்தும், சில நேரங்களில் அவை பல தசாப்தங்களாக நீடிக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக’ ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் சான் பிரான்சிஸ்கோ படைவீரர் சுகாதார பராமரிப்பு அமைப்புடன் இணைந்து செயல்படும் மனநல மருத்துவ பராமரிப்பின், இணை இயக்குநரும், மனநல சுகாதார இயக்குநருமான ஷிரா மாகுவென் கூறுகிறார்.

இறுதிப் போரினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் தமிழர் தாயகப் பகுதிகளில் மட்டுமன்றி, தென்னிலங்கை வரை நீண்டிருப்பதைக் கடந்த காலங்களில் பதிவாகிய இராணுவத்தினரின் தற்கொலைகளும் குடும்ப வன்முறைகளும் காட்டுகின்றன. மேலும் போரில் காயமடைந்த வீரர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை வழங்கியளவுக்கு, நிகரான உளவியல் ஆற்றுப்படுத்தல்கள் வழங்கப்படவில்லை.

பிற நாடுகளில், இத்தகைய போரின் பின்னரான ‘பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு’ (PTSD) காரணமாக பாதிப்புள்ளானவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு ‘அறிவாற்றல் நடத்தை ஒருங்கிணைப்பு சிகிச்சை’ (Cognitive Behavioral Conjoint Therapy) எனப்படும் நடத்தை முறை மூலம் சிக்கலான சிந்தனைமுறைகளில் தலையீடு செய்யக்கூடிய உளவியல் சிகிச்சை வழங்கப்படுகிறது. போர், சித்திரவதை மற்றும் அடக்குமுறை ஆகியவற்றின் விளைவுகள், பல சந்தர்ப்பங்களில் இவற்றுக்கு நேரடியாக முகம் கொடுக்காதவர்களுக்கும் கடத்தப்படுகின்றது. நெருங்கிய உறவினர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் அங்கவீனமடைதல், மரணமுறல் அல்லது காணாமல் போதல் போன்றவைகள் கூட ஒருவருக்கு ‘பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு’ உருவாகுவதற்கு வழிவகுக்கும். தவிர, பொருளாதார கஷ்டங்கள் போன்ற மறைமுக அழுத்தங்கள், புவியியல் இடப்பெயர்வு மற்றும் அன்றாட வாழ்வின் தொடர்ச்சியான இடையூறுகள் போன்றவையும் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தவல்லன. எனவேதான் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் இத்தகை மறைமுக பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் ஆற்றுப்படுத்தல் வழங்கவேண்டிது அவசியமாகிறது.

சிபீடி (CBT) எனப்படும் ‘அறிவாற்றல் நடத்தை சிகிச்சை’யானது (Cognitive Behavioral Therapy), முதலில் மனச்சோர்வுக்கான சிகிச்சை முறையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலுமே ‘பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு’ போன்ற மனநிலை சிக்கல்களுக்கு இது பயனுள்ள சிகிச்சை அணுகுமுறையாக நிரூபணமாமாகியுள்ளது. இதன் மூலம் புதிய நேர்விதமான சிந்தனைகள், திறன்கள், பழக்கங்களைக் கற்றுக்கொடுப்பதனால், பழைய தவறான நம்பிக்கைகள், சிந்தனை சிதைவுகள் மற்றும் தவறான நடத்தைகள் காரணமாக உருவாகிய உளவியல் சீர்கேடுகள் குறைக்கப்படுகின்றன. ஒருவருடைய உணர்வுகள், எதிர்வினை நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர்களுடைய எண்ணங்கள், நம்பிக்கைகள் என்பன வலுவாகப் பாதிக்கின்றன. ஒருவர் என்ன சிந்திக்கிறார் என்பதுதான் அவர் எப்படி உணர்கிறார் என்பதைத் தீர்மானித்து, அதன்மூலம் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதையும் தீர்மானிக்கிறது.

கறுப்புக் கண்ணாடியணிந்துகொண்டு உலகைப் பார்த்து எல்லாமே கருமையாகிவிட்டது என்பதுபோல, ஒருவரின் எதிர்மறையான எண்ணங்களால் தினசரி வாழ்க்கையில் அவர் காணும் நிகழ்வுகளைப்பற்றிய புரிந்துகொள்ளல் மாறுபடுகின்றது. இது அவரது நடவடிக்கைகள் மற்றும் எதிர்வினைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. ‘அறிவாற்றல் நடத்தை சிகிச்சை’ மூலம் இத்தகைய தவறான நம்பிக்கைகளைத் திருத்தி ஒருவருடைய உணர்வு நிலையை முன்னேற்றும்போது, அவர் உலகைப் புரிந்து வைத்திருக்கும் விதமும் மாறுகிறது. இதன் மூலமாக ஒருவரின் உளவியல் சிக்கல்கள் தீர்க்கப்படுவதன் பயனாகக் குடும்பக்களுக்கிடையே மட்டுமன்றி குழுக்களுக்கிடையேயான இணக்கப்பாட்டைக் கூடக் கொண்டுவர முடியும்.

பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான பரஸ்பர, ஆத்மார்ந்த, வெளிப்படைத்தன்மை மிக்க கலந்துரையாடல்கள், கதை சொல்லல்கள் மூலமாக அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளை இலகுவில் அடையாளம் காணமுடியும். அவற்றுக்கான தீர்வுகள், மாற்றுத்தீர்வுகளை முன்வைத்து, விவாதங்களை நடாத்துவதன் மூலமாக நன்மை, தீமைகளைத் தாமாகவே எடைபோட உதவும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தீர்வைப் பாதிக்கப்பட்ட இருவேறு சமூகத்தவர் ஒருவர் நிலையிலிருந்து மற்றவர், ஒத்திகைபோல முயன்று பார்க்கலாம். தவிர இனங்களுக்கிடையே பொதுவான இலக்குகளை வரையறை செய்வதன் மூலமாக, அவற்றை அறிவார்ந்த சிந்தனை மூலம் படிப்படியாக அடைவதற்கான செயன்முறைகளை உருவாக்கலாம். இதன் மூலமாக இனங்களுக்கிடையே காணப்படும் தேவையற்ற பயம் மற்றும் அழுத்தங்கள் குறைக்கப்பட்டு, நேரான எண்ணங்களை மேம்படுத்த முடியும்.

எனவே, வெற்றி முழக்கங்கள் கொண்டும் ஈகச் சுடரைத் தட்டியணைப்பதன் மூலமும் படையினரதும் மக்களதும் உளவியல் தாக்கங்களை மூடிமறைப்பதை விடுத்து, கொடிய யுத்தத்தால் அனைத்து சமூகங்களும் இழந்தவற்றைப் பரஸ்பரம் புரிந்து கொள்ளலும் அவற்றை ஒருவர்க்கொருவர் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு முன் நகர்தலுக்குரிய வழிமுறைகளைக் கண்டடைதலுமே தற்போதைய சூழ்நிலையில் தேவையானதும் மிக அவசியமானதும் கூட.

-கௌரி நித்தியானந்தம், உளவியல் ஆலோசகர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .