2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஈரான் கிளர்ச்சி: அரங்கேறாத ஆட்டம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2018 ஜனவரி 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரங்கேறுவதற்காகவே ஆட்டங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால், ஆட்டங்கள் எல்லாம் அரங்கேறுவதில்லை.   

ஆட்டங்கள் பலவகை; அதில் அரங்காடிகள் பலவகை. ஆட்டங்கள் அரங்கேறுவது அவ்வளவு இலகல்ல. அதற்கு அரங்காடிகளின் பங்களிப்பு முக்கியம்.   

அரங்காடிகள் இருந்தாலும் ஆட்டம் அரங்கேறும் என்பதற்கான உத்தரவாதம் எதையும் தரவியலாது. அரங்குகள் சரியில்லாவிடின் ஆட்டம் அரங்கேறாது.   

ஆட்டம் அரங்கேறுவதற்கு விருப்பு மட்டும் போதாது. அதற்குப் பல அம்சங்கள் ஒருங்கே அமைய வேண்டும். அடி சறுக்கினால் ஆட்டமே ஆட்டங்காணும்.   

ஈரானில் பலநாட்கள் நீடித்த மக்கள் கிளர்ச்சி, இவ்வாண்டை வரவேற்றது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பிரதான நகரங்களில், பல நாட்கள் நீடித்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பாதுகாப்புப் படைகள், கிளர்ச்சியாளர்கள் உட்பட 21பேரின் உயிரைக் காவு கொண்டது.  ஈரானிய ஆட்சிக்கெதிரான மக்களின் போராட்டங்கள் எனவும், ஈரானிய மக்களின் ஜனநாயகத்துக்கான கோரிக்கையின் முதற்படி எனவும், மேற்குலக ஊடகங்கள் இக்கிளர்ச்சியை வர்ணித்தன.  

2009 ஆம் ஆண்டு, ஈரானின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, மேற்குலகின் ஆதரவுடன் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் மக்கள் கிளர்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.   

இக்கிளர்ச்சி, ஈரானில் ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றபோதும், இது தோற்கடிக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், மேற்குலக ஆதரவுக் குழுக்கள் வருடந்தோறும் டிசெம்பரில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றன.   

இம்முறை அவ்வாறு நடைபெற்ற போராட்டம், பல நகரங்களில் ஒழுங்கு செய்யப்பட்டதோடு, அது வன்முறையாகவும் மாறியது.  நாட்டின் சில பகுதிகளில், அரசாங்க அலுவலகங்கள் சூறையாடப்பட்டன; வங்கிகளும் தாக்குதலுக்குள்ளாகின; பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.   

போராட்டங்கள் வன்முறையாக மாறும் வரை, ஈரான் அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. வன்முறைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஈரானின் சிறப்புப் படைகள் களத்தில் இறங்கி, சில நாட்களில் இக்கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தன.   

“போராட்டக்காரர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்பட்டது கண்டிக்கத்தது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஒடுக்குமுறை ஆட்சிகள் என்றுமே நிலைத்ததில்லை. ஈரான் மக்களின் பேச்சுரிமையைத் தடை செய்யக்கூடாது. அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களது விருப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான நாள், ஒருநாள் வரும். அந்நாளை இந்த உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது’ எனக் குறிப்பிட்டார்.  

ஈரான் நாட்டில் நிலவிவரும், அசாதாரண சூழல் தொடர்பாக விவாதிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என அமெரிக்கா சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.   

அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நாவுக்கான ரஷ்யத் தூதுவர், “ஈரான் போராட்டம் தொடர்பாக, ஐ.நா சபை அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்காவின் செயல்பாடு, அந்நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடும் செயலாகும்” என்றார்.   

ஈரானின் போராட்டங்களுக்கு, மேற்குலகின் குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவு இருந்துள்ளமை நிரூபிக்கப்பட்டள்ளது. அதேவேளை, இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் டுவீட்டுகள், சவூதி அரேபியாவில் இருந்து பதிவுசெய்யப்பட்டவை என்பது, இப்போராட்டத்தை, சமூக வலைத்தளத்தில் சவூதி மையக் குழுக்களே இயக்கின என்பதும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.   

மத்திய கிழக்கின் முக்கியத்துவம், உலக அரசியல் அரங்கில் முக்கியமானதாக மாறியுள்ள இவ்வாண்டில், ஈரானில் தமக்கு ஆதரவான ஓர் ஆட்சியை நிறுவ அமெரிக்க - சவூதி அரேபிய - இஸ்‌ரேலியக் கூட்டணி விரும்புகிறது.   

சிரியாவில், அமெரிக்கா முன்னெடுத்த ஆட்சி மாற்றம் தோல்வியடைந்தமைக்கும், அமெரிக்க ஆசீர்வாதத்துடன் உருவாக்கி, இயக்கப்பட்ட ஐ.எஸ் அமைப்பு, பாரிய பின்னடைவைச் சந்தித்தமைக்கும் சிரிய -ஈரானிய - ஹிஸ்புல்லாக் கூட்டணியே பிரதான காரணம். அவ்வகையில் ஈரானின் ஆட்சியைக் கவிழ்ப்பது அமெரிக்காவுக்குப் பிரதான தேவையாகவுள்ளது.   

ஈரான், ஷியா முஸ்லிம்களைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத நாடு எனவும், 1979 ஆம் ஆண்டுப் புரட்சியின்பின், மிகவும் பிற்போக்குத்தனமான மதகுருமார்கள் ஆண்டுவரும் நாடு எனவும், ஈரான் பற்றிய ஒரு விம்பம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  

மத்திய கிழக்கின் இஸ்லாமிய முடியாட்சி நாடுகளைப் போல, ஈரானையும் பார்க்குமாறு ஊடகங்கள் நம்மைப் பழக்கியுள்ளன. மத்திய கிழக்கின் அனைத்து முடியாட்சிகளும் சுன்னி முஸ்லிம் ஆதிக்கத்திலுள்ளன என்பதும், ஷியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு ஈரான் என்பதும் வசதியாக மறக்கப்படுகிறது. 

 இன்றைய உலக அரசியலின் மையமாக, மத்திய கிழக்கு உள்ளதால், மத்திய கிழக்கு அலுவல்களிலும் உலக அலுவல்களிலும் தவிர்க்கவியலாது ஈரான், ஒரு முக்கிய அரங்காடியாகியுள்ளது.   

மேற்காசிய நாடான ஈரான், ரஷ்யா உட்பட்ட சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டதாலும் உலகின் இரண்டாவது பெரிய உறுதிபட்ட இயற்கைவாயு வளத்தைக் கொண்டிருப்பதாலும் நான்காவது பெரிய பெற்றோலிய இருப்பைக் கொண்ட நாடென்பதாலும் ஈரானில் நிகழும் மாற்றங்கள் முக்கியமானவை.   

மத்திய கிழக்கில் மிக விருத்திபெற்ற முற்போக்கான பண்புகளுடைய நாடாக ஈரான் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. தனது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஈரான் வளர்ச்சியடைந்த சமூகத்தைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது.   

கல்வியறிவு, தொழில்நுட்பம், சமூக நலத் திட்டங்கள் என்பவற்றில் உயர்நிலையில் உள்ள நவீன நாடுகளுக்கு ஈடுகொடுக்குமளவுக்குக் கடந்த மூன்று தசாப்தங்களில் ஈரான் முன்னேறியுள்ளது.  

ஈரானின் மீதான அமெரிக்க ஆதிக்கத்துக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே அத்திவாரமிடப்பட்டது. அமெரிக்க - பிரித்தானிய முயற்சியால் 1953இல் ஈரானின் ஆட்சித் தலைவர் மொஹமட் மொஸாடெக் கொலையுண்ட பின், ஈரானில் ஷா முடியாட்சி நிறுவப்பட்டது.  

இதையொத்த பயங்கர சர்வாதிகாரக் கொடுங்கோன்மை, ஆசியாவில் வேறெதுவும் இல்லை, என்று கூறுமளவுக்கு அந்த ஆட்சி,சகல எதிர்ப்பாளர்களையும் கடும்கண்காணிப்பு, ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை என்பன மூலம் கட்டுப்படுத்தியது.  இந்தச் சர்வாதிகார ஆட்சியை 1979இல் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சி தூக்கி எறியும் வரை, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக ஈரான் இருந்தது.  

பெரும்பான்மைனயான மக்கள், ஈரானின் மதவாத ஆட்சியின் தவறுகளுக்காக அதை வெறுத்தாலும், அதைக் கவிழ்க்க, ஈராக்-ஈரான் போரைத் தூண்டி, சதாம் ஹுஸைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு, முடிவில் இஸ்லாமிய மதவாதிகளின் கைகளை வலுப்படுத்தின.   

ஈரானின் பொருளாதாரம், அமெரிக்காவின் நெருக்குவாரங்களால் ஒரு புறமும் ஈரானிய ஆட்சியின் பழைமைவாதப் போக்கால் இன்னொரு புறமும் பல சிக்கல்களை எதிர்நோக்கியது. இதுவும் ஈரானின் தேர்தல் முடிவுகளை விளங்க உதவும்.   
மத்திய கிழக்கில், அமெரிக்க ஆதிக்கத்துக்கும் சீனாவைச் சுற்றி வளைத்துத் தனிமைப்படுத்தும் முயற்சிக்குத் தடையாகவும் உள்ள வலுவான, முக்கியமான ஆசிய நாடாக ஈரான் உள்ளது.  

அமெரிக்காவின் ஒரு மைய உலகின் சரிவும், ரஷ்யாவினதும் சீனாவினதும் எழுச்சியும் ஈரானின் கைகளை வலுப்படுத்தியுள்ளன. இன்று, மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியமான பங்காளியாக ஈரான் உள்ளது.   

சீனாவும் ஈரானும் 25 ஆண்டுகால மூலோபாய உடன்படிக்கை செய்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பிற நாடுகள் போலன்றி, ஈரான் சுதந்திரமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகும். ஏனைய நாடுகள் அமெரிக்காவின் தேவைகளுக்கமையவே தமது எண்ணெய் வர்த்தகக் கொள்கைகளை வகுக்கின்றன.   

தன்னுடனான வணிக உறவுகளுக்குப் புறம்பான விடயங்களை, ஈரான் கருத்தில் கொள்வதில்லை. அத்துடன், அண்மையில் நீக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்குப் பின், ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதிக்குச் சந்தைகளைத் தேடுகிறது.   

மறுபுறம், சீனாவுக்குச் சவாலான செயற்பாடுகளை அமெரிக்கா தொடர்கிறது. சீனாவின் எண்ணெய் இறக்குமதி தடைப்படின் அது சீனப் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, அமெரிக்கா கட்டுப்படுத்த இயலாத, தொடர்ச்சியாக எண்ணெய் விநியோகிக்கக்கூடிய நம்பகமானதொரு கூட்டாளி சீனாவுக்குத் தேவை.   

இங்கு இரு நாடுகளும் ஒரு பொதுப் புள்ளியை எட்டுகின்றன. இன்னொரு வகையில், மேற்குலகை நம்பாத அயலுறவுக் கொள்கைகளை உடைய இரு நாடுகளின் ஒன்றிணைவாகச் சீன - ஈரானியக் கூட்டணியைக் கூறலாம்.  

மத்திய கிழக்குக்கான பட்டுப்பாதையின் முதலாவது நகர்வைச் சீனா 2016 ஆம் ஆண்டு, ஈரானை மையப்படுத்தியே தொடங்கியது என்பது கவனிப்புக்குரியது. சீனாவின் வடமேல் மாகாணமான சின்ஜியாங்கிலுள்ள வர்த்தக நகரான யொ-ஹவோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கான சரக்குப் புகையிரதம் பயணிக்கிறது. சீனாவையும் மத்திய கிழக்கையும் புகையிரதப் பாதையால் இணைக்கின்ற முதலாவது முயற்சி இதுவாகும்.   

இப்பயணமானது சீனாவின் யொ-ஹவோவில் தொடங்கி கசக்ஸ்தான், துர்க்மனிஸ்தான் ஆகிய நாடுகள் ஊடாக மேற்கு ஆசியாவைக் கடந்து 14 நாட்களில் 10,400 கிலோமீற்றர் கடந்து, ஈரானின் தலைநகர் தெஹ்ரானை அடைகிறது.   

இதேவேளை, சீன நகரான யொ-ஹவோ ஏலவே, ஜேர்மனியின் டுயிஸ்பேர்க், ஸ்பெய்னின் மட்ரிட் ஆகிய நகரங்களுடன் புகையிரதப்பாதை     வழியாக இணைந்துள்ளது.   

தரைவழியிலும் கடல் வழியிலும் 15 நாடுகளுடன் நேரடி எல்லைகளைக் கொண்ட நாடான ஈரான், சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்துக்கு மிக முக்கியமானது. பட்டுப்பாதைக்காக ஈரான் 2016 ஆம் ஆண்டு முதல் 2022 வரையான ஆறு ஆண்டுகளுக்கு ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.   

ஈரானின் பொருளாதாரம், அதன்மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் காரணமாக, பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உலகில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரான் முக்கியமானது.  அதிலும் குறிப்பாக, எரிவாயு உற்பத்தியில் ஈரானின் இடம் பிரதானமானது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உலகில் இயற்கை வாயுகளை அதிகம் கொண்ட நாடு ஈரான் ஆகும்.   

பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானால் இவற்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளுக்கு விற்க முடிவதில்லை. 2015 ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஈரான் அணுசக்தி உடன்படிக்கையின் பின்னரே, அத்தடைகளின் தீவிரம் குறைந்தது. இருந்தபோதும் வேலையின்மை, குறைந்த வருமானம், சமூக நலத் திட்டங்களின் பாரிய குறைபாடுகள் என்பன மக்கள் மத்தியில் ஆட்சி குறித்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.   

குறிப்பாகக் கடந்தாண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெற்று, மீண்டும் ஜனாதிபதியான ஹசன் ரோஹானி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பே இப்போராட்டமாகியது.   

மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய அமெரிக்க - சவூதிக் கூட்டணியானது, போராட்டங்களைத் திசைதிருப்பியது. குறிப்பாக, ‘ஜனாதிபதி ரவுஹானி பதவி விலக வேண்டும்’; ‘ சிரியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரச்சினைகள் குறித்துக் கவலைப்படாமல் ஈரான் மக்களின் நலன் குறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும்’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.   

இயல்பான மக்கள் எழுச்சியானது, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு, வலிமையின் உதவியுடன் அடக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு தவறுகள் நிகழ்ந்துள்ளன. முதலாவது, எல்லா மக்கள் போராட்டங்களும், அமெரிக்க ஆதரவுடன் அரங்கேறுகின்றன என்ற கருத்தை உறுதியாக விதைத்தன் மூலம், நியாயமான மக்கள் போராட்டங்களுக்கு சேறுபூசுவதற்கு வழிவகுத்துள்ளது.   

இரண்டாவது, இக்கிளர்ச்சி வன்முறையாக மாற்றமடைந்ததும் அதற்கெதிரான அரசாங்கத்தின் வலிமைப் பிரயோகமும் இயல்பான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் மீதான நம்பிக்கையைச் சிதைத்துள்ளன.   

இன்னொரு ‘நிறப்புரட்சி’ போன்றவாறான ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா முன்னெடுக்க முனைந்தமை, இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இருந்தபோதும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க, ஈரான் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்காதவரை, கிளர்ச்சி மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.   

இதேவேளை, ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து, அமெரிக்கா விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. அவ்வகையில், அமெரிக்க - ஈரான் உறவுகள் மேம்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.   

ட்ரம்பின் நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில், இஸ்‌ரேலிய, சவூதி அரேபிய நலன்கள் உள்ளன. அவ்வகையில் ஈரானுடனான கடும்போக்கு தவிர்க்க இயலாதது.   

இதேவேளை, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மான், “ஈரானின் பிராந்திய அலுவல்கள், முன்னிலை வகிப்பதை அனுமதிக்க முடியாது. நாம் அவர்களை அந்நாட்டிலேயே சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார். இது சவூதி - ஈரான் உறவின் இன்னொரு கட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளது.   

அமெரிக்காவும் சவூதியும் ஈரானில் ஆடவிரும்பிய ஆட்டத்தை, ஆட இயலவில்லை. அதற்கு அரங்கின் பொருத்தப்பாடின்மையும் அரங்காடிகளின் பங்கும் முக்கிய காரணமாகும்.   

ஆனால், ஈரான் என்ற அரங்கில் ஆட்டமொன்றை ஆட அமெரிக்கா விரும்புகிறது என்பது மட்டும் உறுதி. மறுபுறம், ஈரானைக் காக்க ரஷ்யாவும் சீனாவும் முன்னிற்கின்றன. மத்திய கிழக்கில் இவ்விரண்டின் பங்காளியைத் தக்கவைக்கும் சவால் அவர்களுடையது.   
ஆட்டுவார் ஆட்டின் ஆடாதார் இல்லையாம். ஆட்டுவோர் யார், ஆடுவோர் யார் என்பதே தொக்கி நிற்கும் கேள்வி.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .