2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘எங்களை ரணில் நம்புவதில்லை’

காரை துர்க்கா   / 2019 ஜூலை 09 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தங்களை (கூட்டமைப்பை) நம்புவதைவிட, முஸ்லிம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

கடந்த மாத இறுதியில் (ஜூன் 26), வவுனியா - பாலமோட்டை பகுதியில், அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் ஊடவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறாகக்  கூறியுள்ளார். 

இது, வெறுமனே சராசரியாக விட்டுவிடக் கூடிய கருத்து அல்ல. அத்துடன், சாதாரண நபர் கூறிய கருத்தும் அல்ல. தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய விடுதலை அமைப்பின் (தமிழீழ விடுதலை இயக்கம்-ரெலோ) முன்னாள் தலைவர்களில் ஒருவர். தமிழ் அரசியல் கட்சியின் இன்னாள் தலைவர்களில் ஒருவர். இதற்கு மேலதிகமாக, நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எனப் பல்வேறு வகிபாகங்களைக் கொண்ட அவரது கருத்து, கவனம் குவிக்க வேண்டியதும் ஆராய்ந்து நோக்க வேண்டியதும் ஆகும். 

இதோ புதிய அரசியல் அமைப்பு வருகின்றது, அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்களுக்குப் புதிய வாழ்வும் வசந்தமும் வருகின்றது என, ரணிலை மலையாக நம்பியே கூட்டமைப்புத் தமிழ் மக்களுக்கு வாக்குக் கொடுத்து நம்பிக்கை ஊட்டியது. அவ்வாறாயின், கூட்டமைப்பை நம்பாது ரணிலை நம்புமாறு, கூட்டமைப்பே தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது என, தமிழ் மக்கள் ஏன் கருதக்கூடாது?  

2015 ஜனவரி அரச தலைவர் தேர்தலில், மைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. மஹிந்த மீதான வெறுப்பும் அதனையொட்டி மாற்றம் ஒன்றை வேண்டியும், கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கும் இணங்கியும், தமிழ் மக்களும் மைத்திரிக்கு வாக்களித்தனர். அவரும் வென்றார். 

ஆனால் அதற்குப் பிற்பட்ட காலங்களில் கூட்டமைப்பு, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூடுதலாக இணைந்துப் பயணித்தது. ஏன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கியமாக இருந்தது எனக் கூறினாலும் மிகையில்லை. மறுபுறம், தமிழ் மக்களும் இதனைச் சகித்துக் கொண்டார்களே தவிர இரசித்துக் கொள்ளவில்லை என்பதையும் கூட்டமைப்பினர் உணர வேண்டும்.  

தமிழ் மக்களைப் பொறுத்த வரை, பிரதமர் ரணில் தங்களுக்கான உரிமைகளை வழங்குவார். ஐனாதிபதி மைத்திரியும்  முன்னாள் ஐனாதிபதி மஹிந்தவும், உரிமைகளைத் தடுப்பார்கள் என்று ஒரு போதும் கருதியது கிடையாது.  

இலங்கைத் தீவின் எந்தவோர் அரச தலைவரும், தாமாக முன்வந்து உரிமைகளை ஒருபோதும் வழங்கமாட்டார் என்பதில், தமிழ் மக்கள் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளார்கள். 

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் விடயத்திலும், கூட்டமைப்பு கடுமையாக உழைத்ததாகவும் இவ்விடயத்தில் கூட, பிரதமர் ரணில் எல்லோரையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டையே முன்னெடுத்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார். பிரதேச செயலக விடயத்தில் கடுமையாக உழைத்த கூட்டமைப்பே, கோட்டை விட்டுவிட்டது. அவ்வாறாயின், அவ்விடயத்தில்கூட கூட்டமைப்பை ரணில் ஏமாற்றிவிட்டார். 

அப்படியாயின், தமிழ் மக்களின் முப்பது ஆண்டுகால கோரிக்கையான கல்முனை உபபிரதேசச் செயலகத்தை, தனியான பிரதேச செயலகமாகத் தரம் உயர்த்தும் செயற்பாட்டிலேயே எல்லோரையும் ஏமாற்றிய பிரதமர், புதிய அரசமைப்பைக் கொண்டுவந்து, எல்லோரையும் திருப்திப்படுத்துகின்ற அலுவல்களை நிறைவேற்றுவார் எனக் கூட்டமைப்பு எவ்வாறு நம்பியது? 

இந்நிலையில், கூட்டமைப்பு என்ன அடிப்படையில் ரணிலை அதிகப்படியாக நம்பியது. அதிகப்படியாக நம்பிய ரணிலிடமிருந்து, என்னத்தை அதிகப்படியாகப் பெற்றது. வேண்டுதல்கள் அற்ற பிரார்த்தனை போல, எதனையும் பேரம்பேசி காரியத்தை முடிக்காது, நாட்களை வாரங்களை மாதங்களை ஆண்டுகளை என ஐந்து ஆண்டுகளைக் கழித்து விட்டார்கள். வீணாக்கி விட்டார்கள். 

கூட்டமைப்பு, தென்னிலங்கை ஆட்சியாளர்கள் எவருடன் ஐக்கியமாக இருந்தாலென்ன, அந்நியமாக இருந்தாலென்ன? எவருமே தமிழ் மக்களது உரிமைகளை வழங்கப் போவதில்லை. இந்நிலையில், கூட்டமைப்பு ரணிலுடன் சற்று சாய்ந்துச் செயற்பட்டது, எவ்விதத்திலும் மைத்திரிக்கு பிடிக்காது. பிடிக்கவுமில்லை.   

இவ்வாறான சூழ்நிலையில், ரணில் - மைத்திரி என இருவருடனும் ஐக்கியமாக இருந்துகொண்டு, தமிழ் மக்களது உரிமை சார்ந்த விடயங்களுக்கு சற்றும் பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழ் மக்களை வளப்படுத்தும் அபிவிருத்தி சம்பந்தமான காரியங்களையாவது ஆற்றியிருக்கலாம் என்பதே தமிழ் மக்களது ஆதங்கம் ஆகும். அதாவது, கூட்டமைப்பானது, அரசியலுக்குள் அரசியல் செய்யத் தவறி விட்டது. 

தற்போது, தமிழ் மக்களது சமூகப் பொருளாதார விடயங்களை, கூட்டமைப்பு ஓரளவு ஆற்றியிருந்தாலும், அது தமிழ் மக்களிடையே பெரிதாகப் பேசப்படவில்லை உணரப்படவில்லை. குறிப்பிட்டுப் பெயர்ச் சொல்லும்படியாகக் காணப்படவில்லை. பனை நிதியம் கூட வீழ்ந்த வாக்கு வங்கியை நிமிர்த்தும் காரியமோ எனத் தமிழ் மக்கள் உள்ளூரச் சந்தேகம் கொள்கின்றார்கள்.  

ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்பின் போது, கூட்டமைப்பே ரணில் அரசைக் காப்பாற்றியது. இதனை, கடந்த மாத ஆரம்பத்தில், கிளிநொச்சியில் நடைபெற்ற சமூர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், அமைச்சர் தயா கமகே பெருமையாகக் கூறியுள்ளார். 

இது, ஜனநாயக ரிதீயான வெற்றி. ஐனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றாலும், அதனூடாக தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது? ஜனநாயகத்துக்கு வெற்றி கிட்டி; தமிழ் மக்களுக்கு வெறுமை கிட்டியது; ஐனநாயகத்துக்கு வாழ்வு கிடைத்து அதனை நிறைவேற்றிய தமிழ் மக்களுக்கு தாழ்வே கிட்டியது.  

இந்நிலையில், கூட்டமைப்பை ரணில் நம்புவதில்லை. கூட்டமைப்பை நம்பாத ரணில், 2005 ஜனாதிபதித் தேல்தலையும் அதில் தனக்கு மயிரிழையில் ஏற்பட்ட தோல்வியையும், அதற்குக் முழுமையான காரணமான தமிழ் மக்களையும், ஒருபோதும் நம்பப்போவதில்லை. அத்துடன், தென்னிலங்கை ஆட்சியாளர்கள், எப்போதும் தமிழ் மக்களை நம்பப்போவதுமில்லை விரும்பப் போவதுமில்லை. இதற்கிடையே, ரணிலையும் கூட்டமைப்பையும் தமிழ் மக்கள் நம்புவதில்லை. 

இவ்வாறாக, ஒருவரை ஒருவர் நம்பாத தன்மை உச்சம் தொட்டிருக்கின்றது. ஆகவே, கடந்தகால அனுபவங்களின் வாயிலாகத் தமிழ் மக்களது மனங்கள், நம்பிக்கையால் ஆளப்படுவதை விடுத்து, அவநம்பிக்கைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. 

சரியாகச் செய்வது முக்கியம். ஆனால்; சரியானதைச் செய்வது அதனைக் காட்டிலும் அதி முக்கியமானது. இந்நிலையில், கூட்டமைப்பு சரியாகவும் செய்யவில்லை சரியானதையும் செய்யவில்லை என்றே தமிழ் மக்கள் கவலை கொள்கின்றனர். 

இன்று இந்த ஆட்சி நீடிப்பதற்கு, தமிழ்க் கூட்டமைப்பு பலவழிகளிலும் உதவியிருக்கின்றது; உதவுகின்றது. பல விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்திக் கொண்டாலும், ஏமாற்றமே மி(வி)ஞ்சி உள்ளது. 

நிதர்சனத்திலிருந்து தப்பித்துச் செல்லல் சற்றுக் கடினமானது. கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மெதுவாகத் தப்பித்துச் செல்ல முயற்சித்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உள்ளதை உள்ளவாறாகத் தெளிவாக, தமிழ் மக்களுக்குக் கூறியிருக்கின்றார். இது பாராட்டுதலுக்கு உரியது. 

சரி. கூட்டமைப்பை ரணில் நம்பாவிட்டால் பரவாயில்லை. இது தென்னிலங்கையின் பரவணிக்குணம். ஆனால், கூட்டமைப்பை தமிழ் மக்கள் நம்ப வேண்டும். அதற்கு, தமிழ் மக்கள் முழுமையாக நம்பக்கூடிய வகையில் கூட்டமைப்பு நடந்துகொள்ள வேண்டும். கூட்டமைப்பு, தங்கள் மீது படிந்துள்ள கறைகளை அகற்ற வேண்டும். இது வரை காலமும் பக்குவம் இல்லாது பயணம் மேற்கொண்டவர்கள், இனியாவது சிகரம் நோக்கிய பயனம் மேற்கொள்ள வேண்டும். இது எளிதான காரியம் அல்ல. 

நீண்டகால அரசியல் அனுபவங்களைக் கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தீர்வு இன்றேல் போர் வெடிக்கும் என அடிக்கடிக் கூறுவது, அவருக்கும் அவரது கட்சிக்கும், அவர் சார்ந்த சமூகத்துக்கும் ஆரோக்கியமானதல்ல. இவ்வாறான அர்த்தமில்லாத, பிரயோசமில்லாத வேடிக்கையான வெட்டிப் பேச்சுகள், அடியோடு அகற்றப்பட வேண்டும். 

இது, இனப்பிணக்கின் வடிவத்தை மாவை எவ்வாறு பார்க்கின்றார் எனக் காட்டுகின்றது. அத்துடன், அதற்கு எவ்வாறு பரிகாரம் காண விளைகின்றார் என்பது தொடர்பில், தலைவரே முற்றிலும் குழம்பிப் போயுள்ளதையே காட்டுகின்றது. 

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களைத் தூங்கவிடாமல் செய்வது என அப்துல் கலாம் கூறியுள்ளார். தமிழ் மக்கள், தங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என இருக்கையில், அவர்களது தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல கதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். 

ஏற்றுக்கொள்ளல் (பொறுப்பு) என்பது, உயர்ந்த பண்பு ஆகும். கூட்டமைப்பினரும் தங்களது அரசியல் பிழைகளை, தவறுகளை, இயலாமைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களது பிழையான வழிமுறைகளால், 2009ஆம் ஆண்டு வரையும்  போராட்டத்தின் பிரதான பங்குதாரர்களாக இருந்த எம்மக்களை, வெறும் பார்வையாளராக்கி விடாதீர்கள். இது கொழும்புக்குப் பொன்னான வாய்ப்பாகி விடும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .